கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன்

Lt Col-Stepan

போராளிகளின் மனங்களை புரிந்த சிறந்ததோர் தோழமையாளன் கப்பல் கப்டன் லெப்.கேணல் ஸ்ரிபன்.

ஒரு போராளியின் வரலாற்றை தொடங்கும் போது அவன் பணியாற்றிய சூழ்நிலையின் சூழல் விபரம் தெளிவானால் அவனின் பணி எப்படியானதாக அமைந்திருக்கும் என புரிந்துகொள்ள முடியும்.

லெப்.கேணல் ஸ்ரிபன் அவர்களின் மீது அதிக அன்பும் பாசமும் நிறைந்தமையால் ‘ ஸ்ரிபன் அண்ணா ‘ என்ற மதிப்புடன் எழுதும் ஓர் போராளியின் சுவடு…

விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் கருதியும் அதன் காப்புக் கருதியும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தாலும், மதிநுட்பத்தாலும் உருவாக்கப்பட்டது கடற்புலிகளின் படையணி ஆகும். சின்ன விதையாகப் போட்ட விடுதலைப்பயிர் இன்று ஓர் விருட்சமாக கால் பதித்து நிற்கிறது.

அதிலே ஆழக்கடலோடிகளின் வீரம் செறிந்த தியாக அர்பணிப்பு சற்று மாறுபட்ட வரலாறாகி நிற்கிறது.

கடலோடிகளின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு வினாடிகளும் எப்படியான ஓர் நிலையில் அமையும் என்பதை எழுத்துருவில் வடித்துவிடலாகாது, ஆயினும் காலவோட்டத்தில் நாம் அவர்களைப் பற்றி அறிந்தோமேயானால் அவர்களின் தியாகத்தையும் தியாகத்தின் உச்சத்தையும் புரிந்தவர்களாகவும் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போமானால் அவர்களின் கனவை நனவாக்கி வீரத்தின் வரலாற்றில் நிலைக்கலாம்.

கிட்டண்ணாவின் காலம் தொடக்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்களின் போராளிகளுடன், சில மக்களும் இருப்பார்கள், அவர்கள் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக ‘விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்’. இப்படியாக சில மக்கள் தங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியா தியாகத்தின் உச்சமாக அளப்பரிய கடமைகளை விடுதலைப் போராட்டத்தில் செய்தார்கள். பின்நாட்களில் மாமனிதராக, நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்கள். அப்படியாக கடலிலும் தங்கள் பணியை முழு மூச்சுடன் செய்து முடித்தார்கள் வரலாறு ஓர் நாள் தன்னேட்டில் பதிவாக்கும் என்பதில் ஜயமில்லை.

அவர்கள் கப்பலில் கப்பல் கப்டனாக, இயந்திர பொறியியலாளராக, மாலுமியாக(கடலின் தகமை, மாற்றல்கள், காலநிலை) அறிந்தவர்களாக, சமையலாளராக இருப்பார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் போது போராளிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து அவர்களின் உயிரைக் காப்பற்றிய வரலாறுகளும் உண்டு.

ஓர் சாதாரண கப்பலின் வாழ்விலிருந்து எத்தனையோ மடங்கு வித்தியாசப்பட்டது தான். எம் கடலோடிகளின் அதாவது போராளிகளின் கப்பல் வாழ்வு அதில் அவர்கள் எம் நாட்டிற்கு தேவையான வளங்களை எப்படி சேகரிக்கின்றார்களோ அதற்கு எத்தனயோ தியாகங்களைத் தாண்டி எம் தேசத்தின் கரையை அடைகிறது.

அதில் ஓர் சிறு வட்டத்திற்குள் நாளும் எத்தனையோ வேலைகள் அலுவலகங்களைப் போல் அன்றாடம் நீளும் கடமைகள், இதற்கும் மத்தியில் சில கப்பல்களில் போராளிகளே நாளாந்த ஓர் அட்டவணையின்படி அன்றாட உணவு சமைக்கும் முறையும்வரும். சில கப்பல்களில் அதற்குரிய சமையலாளர்கள் ஒருவர் இருப்பார் அவர் ஓர் மாவீரனின் குடும்பத்தை சேர்ந்தவராகவும், அல்லது எம் தேசத்தின் விடுதலைக்காக நாளும் உருகி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஓர் குடும்பத்தின் அங்கத்தவராக இருப்பார் அவருக்கு மாதாந்த உதியமும் வழங்கப்படும். ஆயினும் அவரும் போராளிகளின் வாழ்வுடன் ஒன்றிக் கலந்தவராக அந்த வாழ்வுச் சுற்றோடு சேர்ந்து செல்வார்கள்.

அப்படியாக இருக்கையில் நாட்டில் பல களங்களில் தீரமுடன் களமாடி சுழன்ற ஓர் போராளி, தேசியத் தலைவரிடமும், தளபதிகளிடமும் நம்பிக்கை கொண்டவனாகத் திகழ்ந்தவன். கப்பல் நடவடிக்கைக்காகத் தேர்வு செய்யப்பட்டு போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் பணியேற்று கப்பல் நடவடிக்கையில் உள்வாங்கப்பட்டு மன நிறைவுடன் தன் கடமையைச் செய்கிறான்.

காலம் செல்லச் செல்ல தன் ஆற்றல்களைத் தினம் தினம் வளர்த்து கப்பல் வாழ்வில் கப்பல்களைப் பற்றி அறிவூட்டம் பெற்றான். பின்நாட்களில் ஓர் கப்பலும் சில போராளிகளும் அவனின் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது.

அந்தக் கப்பல் கப்டனாக திகழ்ந்து அவனின் தலைமையில் பல விநியோக நடவடிக்கை நடைபெறுகின்றது. 14.06.2003 அன்று இரு கப்பல் மக்களுக்கு உரிய அத்தியாவசியப் பொருட்களுடன் ஸ்ரிபன் ஒருங்கமைப்பில் தாயகம் நோக்கி செல்கிறது…..!

அப்போது எதிரியின் முற்றுகையில் எம்.ரி.சொய்சின் என்ற கப்பல் முற்றுகைக்கு உள்ளாக 5 கடல் மைல் இடைவழியில் ஸ்ரிபனின் கப்பலும் பயணிக்கிறது. எம்.ரி.சொய்சின் கப்பலையும் ஸ்ரிபனே வழிநடத்தி செல்கிறார். உடனே முற்றுகையின் தருணத்தை எம்.ரி.சொய் கப்டன் நிர்மலன் ஸ்ரிபனுக்கு அறிவிக்கிறார். ஸ்ரிபன் உடனே நாட்டுக்கு அறிவிக்கிறார். உடனே நாட்டிலிருந்து ஸ்ரிபனின் கப்பலை திருப்புமாறு நாட்டிலிருக்கும் பொறுப்பதிகாரி ஸ்ரிபனுக்கு கட்டளை வழங்குகின்றார்.

எதிரி எம்.ரி.சொய்சினை தாக்க கப்பல் பற்றி எரிகிறது…. நாட்டிலிருந்து கட்டளை பிறக்கிறது ஸ்ரிபனின் கப்பலை திருப்புமாறு அதற்கு எதிராக ஸ்ரிபனின் முடிவு அன்று இருந்தது.

ஸ்ரிபன் உடனே அந்தக் களச்சூழலை உணர்ந்து தானே முடிவெடுக்கிறார்.

கப்பலை உடனே திருப்பினால் எதிரி சந்தேகத்துடன் பின்தொடர்ந்து தாக்கக்கூடும் என்பதை உணர்ந்தும் அதிலிருந்தவர்கள் மிக முக்கிய விலை மதிப்பில்லாத போராளிகள் அவர்களின் சாதனைகள் பின்னைய நாட்களில் உலகம் அறிந்ததாக இருந்தது. அன்று ஸ்ரிபன் அண்ணா அந்த முடிவுவை எடுத்திராவிட்டால் பின்னாளில் பல சாதனைகள் எம் ஈழத்தின் வரலாற்றில் பதியாமலேயே போயிருக்கும்.

அவ்வேளை ஸ்ரிபன் அண்ணா எரிந்து கொண்டிருக்கும் எம் கப்பலுக்கு அருகாமையில் சில பாகை (திசையை) மாற்றி தனது கப்பலை செலுத்திக் கொண்டிருந்தார். சென்ற பாதை ஓர் நாட்டுக்குச் செல்லும் சட்டரீதியான கடல் பாதை அதாவது ( கடல் ரூட் ) போராளிகளின் கண்ணெதிரே எம் போராளிகள் தீயில் வெந்து கடலில் சங்கமித்து காற்றுடன் கலந்து கொண்டிருந்தார்கள் அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

எம் விழிகள் நீரை மட்டுமே வடித்துக் குமுறிக்கொண்டிருந்தது வேறு என்னதான் செய்யமுடியும்? அத்தருணங்களில், நாட்டிலிருந்து பொறுப்பதிகாரி கட்டளையை பிறப்பித்தும் ஸ்ரிபன் அண்ணா கேளாதது அவர்கள் கண்டிப்புடன் கூறியவண்ணம் இருந்தார்கள்.

பின்னர் அதிக தொலைவு வரை எல்லை தாண்டி இன்னொரு நாடுவரையும் சென்று இடையில் கப்பல் வழமையான இடம் நோக்கித் திருப்பப்படுகிறது. பின் நாட்டிலிருந்த பொறுப்பதிகாரி கண்டிக்கிறார்.

தேசியத் தலைவரிடம் இருந்து ஸ்ரிபன் அண்ணாவுக்கு பாராட்டு வந்தது. பின் ஸ்ரிபன் அண்ணாவை அனைவரும் பாராட்டி இன்னும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது அனைவர் மத்தியிலும்.

அவ்வுறவு ஓர் தாயைப் போல, தந்தையைப் போல, ஓர் சகோதரனாக, தோழனாக உறவு நீள்கிறது. கப்பலில் இருந்த போராளிகளுக்கு ஸ்ரிபன் அண்ணா அழைக்கும் போது வார்த்தையில் ஓர் பாசம் கலந்திருக்கும் அதிலிருந்து ஓர் மரியாதையும் கலந்திருக்கும் என் மனம் இத் தருணத்தில் சிலிர்கிறது ஸ்ரிபன் அண்ணா என்று பெயர் உரைக்கையிலே ஓர் தனி உவகை என்னில்….

பின்னைய நாளில் 2005ம் ஆண்டளவில் தேசியத் தலைவரின் அழைப்பையேற்று நாடு செல்கிறார். அன்று கடலின் சூழ்நிலைகளும், போராளிகளிகளின் நிலைகளைப் புரிந்தவர் என்பதினால் தேசியத் தலைவரிடம் கூறுகின்றார். பின்பு புலத்தேசங்களில் இருந்த சில பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாததை ஸ்ரிபன் அண்ணா தேசியத் தலைவர் முன் நிலையில் சூட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்தும் போராளிகளின் மனங்களை வெல்கின்றார்.

ஸ்ரிபன் அண்ணா மேல் தேசியத் தலைவரின் நம்பிக்கையும், அன்பும் அதிகரிக்கிறது. ஸ்ரிபன் அண்ணா தேசியத் தலைவரிடம் ஓர் மருத்துவர் வேண்டும் கப்பலுக்கு என வேண்டுகோள் வைத்தார். பின்னாளில் 2006ம் ஆண்டு மருத்துவர் கஜேந்திரன் அவர்கள் அனுப்பப்படுகிறார். அவரும் 2007ம் ஆண்டு லெப்.கேணல் கஜேந்திரனாக எம்.வி.கோசியாவில் சில போராளிகளுடன் கடலிலே காவியமானார்.

பின்பு ஸ்ரிபன் அண்ணா நாட்டில் சில காலம் தங்கியிருந்து சில கடற் தாக்குதலுக்கும் தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்திலிருந்து போராளிகள் வன்னி நோக்கி ஏற்றும் நடவடிக்கைக்கு கட்டளை அதிகாரியாக ஓர் பொறுபாளனாக நியமிக்கப்பட்டும் கடமையைச் செய்கிறார்.

பின்பு மீண்டும் சர்வதேசக் கடற்பரப்பில் ஓர் நடவடிக்கைக்கு கொஞ்ச போராளிகளுடன் அனுப்பபட்டு வந்த தருணம் ஸ்ரிபன் அண்ணா மீண்டும் வந்து எங்களைப் பார்த்ததும் மனம் அடைந்த சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. பின்பு எம்முடன் இருந்த போராளிகளையும் அழைத்து மீண்டும் தாயகம் நோக்கி செல்லும் போது பிரிவின் துயர் எம்மை வாட்டியதுதான் ஆனால் கடமை எங்கள் பாசத்தை பகிர முடியாது தடுத்தது. கடடையின் முன்னால் அனைவரும் மௌனமானோம். எம்மிடமிருந்து விடைபெற்று ஸ்ரிபன் அண்ணாவின் பயணம் ஆரம்பமானது.

ஆனால் இயற்கையின் மாறுதலால் கடல் தனது தோற்றத்தை மாற்றியவண்ணம் இருந்தது. அவர் கொண்டு சென்ற படகு சில கோளாறுடன் இருந்தது. தொழில்நுட்பக் கோளாறை சீர்படுத்தி அதை நேரத்தியான திசையில் செலுத்தும் வல்லமை ஸ்ரிபன் அண்ணாவுக்கு மட்டுமே இருந்தது. செல்ல வேண்டிய திசை சற்று கடலின் இயற்கை சீற்றம் அதிகரித்ததால் திசையும் மாறியது.

எதிரியின் கண்காணிப்பு கருவியில் படகும் தெரிய எதிரியின் முற்றுகைக்கு உள்ளாக எதிரியுடன் தாக்குதல் மூள்கிறது. எதிரியின் சூடு படகின் இயந்திரப் பகுதியை தாக்கி படகை நிலைகுலைய செய்து இயந்திரம் இயங்க மறுத்து படகு கடல் சீற்றத்தில் தள்ளாடுகிறது.

அவ்வேளை குறுகிய கடல்மைல் தூரத்தில் எங்களின் கப்பல் நிற்பது ஸ்ரிபன் அண்ணாவுக்கு தெரியும் ஆதலால் கப்பலுக்கும், நாட்டிற்கும் உடனே நிலைமையை அறியப்படுத்தினார்.

லெப்.கேணல் லிங்கவேந்தன் அண்ணா அந்த படகின் பொறியியலாளராக இருந்தார். அவர் இயந்திரத்தை சரிசெய்ய முயன்றார். மற்றையவர்கள் எதிரி தொடுத்த தாக்குதலுக்கு முகம் கொடுத்து எதிர் தாக்குதலை நடத்தினர். அதில் கடற்கரும்புலி லெப்.கேணல் அந்தணன் அண்ணா அவர்கள் வீரச்சாவைத் தழுவ உடனே நிலைமையை ஸ்ரிபன் அண்ணா கப்பலுக்கு அறியப்படுத்தினார்.

பின் சிறிது மணி நேரம் கப்பலுடன் தொடர்பு கொண்டு ஸ்ரிபன் அண்ணா கூறியவை…

மச்சான் நாங்கள் சரணடைய மாட்டோம் சண்டை நடக்கிறது. நீங்கள் இங்கால வரவேண்டாம் உடனே நீங்கள் இந்த இடத்தை விட்டு ஓடுங்கள் இதில் நீற்காதீர்கள். இலக்கம் மற்றும் தரவுகளை (பிஸ்) மாற்றுங்கள். எல்லோரையும் கேட்டதாக கூறுங்கள். என்று கூறி நீங்கள் கவனம் கவனம் கவனம் என்று மீண்டும் கூறி….!

சுடர்மணியிடம் கதைத்தார் (ஸ்ரிபன் அண்ணாவின் நெருங்கிய தோழன்) சகோதரியிடம் சில வார்த்தைகள் கூறும்படி கூறவும் என்று சிலவிடயம் கூறினார். ஆனால் பின்னாளில் 2007 அன்று நடத்த கப்பல் தாக்குதலில் மேஜர் சுடர்மணியாக கடலிலே கரைந்து காவியமானர். ஸ்ரிபன் அண்ணா கூறியவை வார்த்தைகளும் அவருடன் கரைந்து போனது….!

பின்பு தாக்குதல் நீடிக்க எதிரியானவன் கடலோடிகளுடன் நடந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் வான்முலம் விமானத் தாக்குதலை நடத்தினான். கீபிர் குண்டுவிமானம் அவர்களின் படகில் வந்து குண்டுவீசியது. படகு தீ மூட்டியெரிந்தது. அப்போது தொலைத்தொடர்பு சாதனத்தில் தொடர்பு கொள்ள ஒரே ஓர் குரல் ஒலித்தது. அது கடற்கரும்புலி லெப்.கேணல் விதுசன் அண்ணா (வெள்ளை) என எல்லோராலும் அழைக்கப்படுபவர். அவர் கூறினார் எல்லாரும் வீரச்சாவு நானும் காயம் என தணிந்தது. ஆனால் தொலைத்தொடர்பு சாதனம் இயங்கிய வண்ணம் இருந்தது. அந்த கடற்கரும்புலியின் குரலுடன் ஓய்ந்தது.

எம்நெஞ்சம் அனல் தீயில் வெந்தது அலைகடலில் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது வானும், கடலும் அவர் திருமுகத்தை மேனி தடவிச்சென்றது. சிங்கள தேசம் பாட்டும் கூத்துமாக அவர்கள் மகிழ்ந்து உலாவித் திரிந்தார்கள். அப்போது தான் அவர்கள் அந்த காட்சியை வெளியிட்டார்கள். எம் தாயகம் நோக்கி விரைந்த கடலோடிகள் மீது தொடுத்த தாக்குதல் காட்சி அது….!

பார்த்தோம் நிலவும், வானும், கடலும் சேர்ந்து நாமும் அழுதோம்… லெப்.கேணல் ஸ்ரிபனாக வரலாறு ஆனார். அவர் விதைத்த தடம், அவரின் வார்த்தைகள் இன்றும் என் காதோரம் ஒலித்தவண்ணம் தான் உள்ளது.

இன்று விடுதலைப் புலிகளின் படையணிகளின் வீரத்தையும், ஆழக்கடலோடிகளின் அர்பணிப்பையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களைக் கொண்டு வந்து சேர்க்கவும் அடக்குமுறையாளர்களின் அல்லலுறும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து கரை சேர்க்கவும் கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பெங்கும் உள்ள கடலெல்லாம் சென்று வருகின்றது.

வெளியே மட்டும் தெரிந்ததுமாய், உள்ளே மட்டும் அறிந்ததுமாய் அளப்பரிய பணிகளை இந்த கடலோடிகள் சேர்ந்து முடிக்கின்றனர். எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் மூலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்க முடியாத பெரும் தீயாகி எரிகின்றது. அதற்கு லெப்.கேணல் ஸ்ரிபன் போல் ஆயிரம் ஆயிரம் போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றும் அழியாத நினைவாகி தடம் பதித்து நிற்கின்றது.

– கடலோடிகளின் நினைவில் இசைவழுதி.