ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானமும் சிறிலங்காவின் எதிர்வினைகளும் – சி.என்.என்

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் செயற்படும் மனித உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என மனித உரிமை அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. போரின் இறுதியில் சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழனன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.sl used chemical 2

சிறிலங்காவுக்கு எதிராக மிக அண்மைய ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட மூன்றாவது தீர்மானமாக இது அமைந்துள்ள போதிலும், சுயாதீன விசாரணை கோருகின்ற முதலாவது தீர்மானமாக இது காணப்படுகிறது. இத்தீர்மானமானது ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செயலகத்தால் முன்வைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்திற்கு பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவு வழங்கின. இதனை 12 நாடுகள் எதிர்த்ததுடன், 12 நாடுகள் இதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது புறக்கணித்தன.

இத்தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாகவும், தேசிய மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த இது ஒருபோதும் உதவாது எனவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்க இணையத்தளம் ஒன்றில் தெரிவித்திருந்தார். கற்றுக் கொண்ட பாடங்களுக்கான மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் அமைதியை உண்டுபண்ணுவதற்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதையே அரசாங்கம் விரும்புவதாகவும் இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை, திட்டமிட்ட படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை அனுப்புவதற்குத் தடைவிதித்தமை போன்ற பல மீறல்களில் சிறிலங்கா அரசாங்கப் படைகள் ஈடுபட்டன. இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழ்ப் புலிகளும் பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சிறுவர்களைப் படையில் இணைத்தமை, போரில் அகப்பட்டுத் தவித்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, போர் வலயத்திலிருந்து தப்பி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்றவர்களைக் கொன்றமை போன்ற பல மீறல்களில் தமிழ்ப் புலிகள் ஈடுபட்டனர்.

சிறிலங்காவில் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளில் தலையிடுதல், காணாமற்போதல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற பல்வேறு மீறல் சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கெதிராக முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. மீண்டும் நாட்டின் வடக்கில் தமிழ்ப் பிரிவினைவாதிகள் செயற்படத் தொடங்கிவிடுவார்களோ என்கின்ற அச்சம் உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் சில பயங்கரவாதத்திற்குத் துணைபோவதாகக் குற்றம்சுமத்தி 15 வரையான அமைப்புக்கள் இவ்வாரம் தடைசெய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் பிரகாரம் அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் தமிழர் அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணுவதற்கு இச்சட்டம் தடையாக உள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்ப்ளின்ரர் தெரிவித்துள்ளார். “இந்த அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணும் எவரும் பயங்கரவாதத்திற்கு துணைபோனதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவர்” என பீற்றர் ஸ்ப்ளின்ரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்கின்றன. சிறிலங்காவில் பாதிக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது புதிய நம்பிக்கையைத் தருகின்றது. அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அனைத்துலக ரீதியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இது காணப்படுகிறது” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய-பசிபிக்கிற்கான துணை இயக்குனர் டேவிட் கிறிபிதிஸ் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முதன்மை மனித உரிமையாளர் றுக்கி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மகேசன் அடிகளார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமையானது சிறிலங்காவில் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதைச் சுட்டிநிற்கின்றன. இதனை சிறிலங்கா அரசாங்கமே மேற்கொள்கிறது” என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சமாதானம் மற்றும் நீதிக்கான சிறிலங்காப் பரப்புரையாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவுக்கு வெளியில் வாழும் மக்கள் உண்மையில் இங்கு என்ன நடந்தது என்பதை அறியாதிருப்பதற்காகவே இவ்வாறான பரப்புரைகளில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்து தலையீடு செய்தல் மற்றும் அடக்குமுறைக்கு உட்படுத்துதல் போன்றன இடம்பெறுகின்றன. இதன் ஒரு கட்டமாகவே எமது கைது அமைந்துள்ளது என நான் நம்புகிறேன்” என கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஊடகங்களிடம் எவ்வித கருத்துக்களும் கூறக்கூடாது என பெர்னாண்டோ மீது அரசாங்கத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளவர்களுடன் இணைந்து இவர் செயற்பட்டுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கம் தன் மீதான அனைத்துலகப் போர் விசாரணைக்கு முகங்கொடுக்கத் தவறின் சிரியா மற்றும் வடகொரியாவில் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் ஈடுபாடு இல்லாது இடம்பெற்றதைப் போன்று விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டியேற்படும்” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்ப்ளின்ரர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : By Tim Hume, CNN-Groups warn of backlash as U.N. calls for probe into Sri Lanka civil war abuses
மொழியாக்கம் : நித்தியபாரதி

Advertisements