‘இனம்’ அல்ல இழிவு!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு களங்கம்;கொலைகார புத்த பிட்சுகளுக்கு மகுடம்-கேரள இயக்குநரின் ஈனத்தனமான வேலை

வைகோ அறிக்கை

‘இனம்’ (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார். ‘பயங்ரவாதி’ என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது.

இப்பொழுது அவர் இயக்கிய ‘இனம்’ எனும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அதுகுறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.

ஈழ விடுதலைப்போரையும், அங்கு ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.

சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வதாகவும் எடுக்கப்பட்டுள்ள விதம் காம இச்சையைத் தூண்டும் வகையில் கீழ்த்தரமாக அமைந்துள்ளன. அச்சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயச் சூழ்நிலை இருந்ததாகவும் படம் கூறுகிறது.

பாடசாலை வகுப்பு நடக்கும்போது, கரும் பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு அபாண்டமான பொய்யை காட்சியாக்குகிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, ஒரு இளந்தமிழ் பெண் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டதாக ஒரு காட்சியை அமைத்துவிட்டு, அதன் பிறகு கால்களின் மூட்டுகளுக்கு மேல் அந்த அபலைப் பெண்ணின் அங்கங்களை பெருமளவுக்கு காண்பித்துவிட்டு, அப்பெண் நீரால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதாக அமைத்துள்ள காட்சி வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குளத்துத் தண்ணீரில் அந்தப் பெண் நிற்கும்போது உடைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலையின் தலையும் முகமும் கரையில் தெரியும் வகையில் காட்டப்பட்டுள்ளது..

இனியொரு காட்சியில், ஓடையில் வரும் நீரை, குடிப்பதற்காக குவளையில் புத்த பிட்சு நிரப்புவதாகவும், குடுவையின் வாயில் துணியை வைத்துப் பிடிப்பதாகவும், குடுவையின் வாய்ப் புறத்துத் துணியில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் ஓடை நீரிலேயே உயிருடன் நீந்த விட்டுவிடுவதாகவும் காட்சி சித்தரிக்கிறது.

இதன் நோக்கம் என்ன? புத்த பிட்சுகள் மனிதாபிமானிகள் என்றும், தமிழர்கள் புத்தர் சிலையையே உடைப்பவர்கள் என்றும் தமிழ் இனத்தின் மீது களங்கம் சுமத்துவதுதான் நோக்கம் ஆகும்.

இலங்கையில் கடந்த 66 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கும், போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டதற்கும், ஐ.நா. சபை பிரதிநிதிகள் தாக்கப்பட்டதற்கும், இரத்த வெறிபிடித்த புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.

2170 இந்து கோயில்களை சிங்களவர்கள் இடித்துத் தகர்க்க புத்து பிட்சுகளே ஏவினார்கள்.

கிறித்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டதற்கும், அண்மைக் காலமாக இசுலாமிய மசூதிகள் தாக்கப்படுதற்கும் முழுக்க முழுக்க புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.

இத்திரைப்படத்தில் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிக்கிறது.

மொத்தத்தில் சிங்களக் கொலைகார அரசின் மறைமுகப் பின்னணியில், அந்த அரசின் கைக்கூலியாக கேரளத்து சந்தோஷ்சிவன் படத்தை இயக்கி உள்ளார்.

சமீப காலத்தில் வெளியான சில காணொளிகள் எப்படி எல்லாம் ஈழத் தமிழ் பெண்களும், இளைஞர்களும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நிருபிக்கின்றன. அதிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கோர காட்சிகளை கண்களால் காண முடியாது. அந்த சம்பவம் பற்றி நாவால் கூற முடியாது. காதுகளால் கேட்க முடியாது.

நெஞ்சு கொதிக்கிறது. தன்மானத் தமிழ் இரத்தம் துடிக்கிறது. மலையாளிகளைக் கொச்சைப்படுத்தி, இதுபோன்ற திரைப்படத்தைத் தயாரித்து கேரளத்தில் வெளியிட யாராவது முனைவார்களா?

தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? சொரணையற்ற ஜென்மங்களா?

இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்.

உன்னதமான திரைக் காவியங்களை நான் பெரிதும் மதிப்பவன். ஏன், மலையாள மொழியில் வெளியான தகழி சிவசங்கரன் பிள்ளையின் ‘செம்மீன், வடக்கன் வீரகதா 1921, நாயர் ஷாப், துலாபாரம், பழசிராஜா’ போன்ற படங்கள், சிறந்த கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால் நடித்த திரைப்படங்கள் போன்றவற்றின் பரம இரசிகன் ஆவேன் நான். மனித குலத்துக்கு நல்வழிகாட்டும் திரைப்படங்களை பெரிதாக மதிப்பவன் நான்.

ஆனால், திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’ எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ

*
பொதுவாக ஒரு சில படைப்பாளிகள் உண்மை சம்பவங்களை படம் எடுக்கும்போது நிஜமான உண்மையை நிழல் போல் எடுத்து விட்டு, நிழல் போல் பொய்யை உண்மை போல் சித்தரிக்க பார்க்கிறார்கள்.

அந்த வகையில் நிஜமான சம்பவத்தை பொய்யான வடிவில் செதுக்கியுள்ள படமே இனம்.

இந்த மாதிரியான உண்மை சம்பவத்தை படம் எடுக்கவோ, எண்ணவோ இங்கு யாருக்காவது துணிவு இருக்கா என்று கேட்பதை விட அறிவு இருக்கா என்ற கேட்டால் நல்லது என நினைக்கத் தோன்றுகிறது.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இனப் படுகொலை கதையை இனக்கலவரம் என்ற பெயரில் எடுத்து இருக்கும் படம் தான் இனம்.

இந்த படத்தை இயக்கியிருப்பவர் உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இனம் ரிலீசிக்கு பல மாதங்கள் காத்து இருக்க ,கரம் போல் கை நீட்டினார் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு ரிலீஸ் ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க இன்று உலக அளவில் வெளியாக உள்ளது.

இனம் என்ன சொல்ல வருகிறது?

“அதாம் பா நானும் இம்மா தடவை யோசிக்கிறேன் என்று நினைக்க வைக்குது”. பொதுவாகவே கற்பனை கதையை காட்டினாலே குறை சொல்லும் இந்த உலகில் ஒரு இனம் சார்ந்த மக்களின் துயரங்களை காட்டும் போது எவ்வாறு உண்மை அங்கு பிரதிபலிக்க வேண்டும், அதுவும் இங்கு இல்லை.

சரி என்ன தான் கதை

உலகம் அறிந்த உண்மை கதை தான் என்றாலும் ஒரு பெண்ணின் பாதையில் இருந்து தான் கதை நகர்கிறது, ஈழத்திலிருந்து தப்பி தமிழகத்துக்கு வரும் ஒரு சிறுமியை தமிழக அதிகாரி ஒருவர் விசாரிக்கிறார். அந்த பெண் ஈழத்தில் என்ன நடந்துது, நாங்கள் இங்கே எப்படி வந்தோம், என்பதை அந்த அதிகாரியிடம் விவரிக்கிறார்.

அவள் கதையை கேட்டு மனம் உடைந்த அந்த அதிகாரி அவளை விட்டுவிடுகிறார். அவள் எழுந்து செல்கிறாள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் நிறைவடைகிறது.

கண்டிப்பாக இனம் மக்களின் உண்மையான ரண வலியை காட்டிய சந்தோஷ் சிவனுக்கு பாராட்டுக்கள், ஆனால் ஏன் எண்டு கார்டில் போரில் இறந்தவர்கள் 40 ஆயிரம் பேர்தான் என்று தவறாக செய்தி சொல்லி இருக்கிறார், உண்மையில் ஆயிரக்கணக்கில் தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்தவையா?

இனப் படுகொலையை, இனம் கலவரம் என்ற வசனமாக மாற்றி ஆங்காங்கே படத்தில் கேட்கவைப்பதற்கான நோக்கமென்ன?

ஏன் போராளியாக சித்தரிக்கப்பட்ட நபர்கள், பருவத்தை தாண்டாதவராகவே இருக்கின்றனர். ஒருத்தருக்கு கூட மீசை அரும்பாத வயது, சிறுவர், சிறுமிகளை மட்டுமே போராளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

அதிலும் படத்தில் ஒரு காட்சியில் சரியாக சாப்பிட்டு ரொம்ப நாளானது என்று ஒரு போராளி சொல்வது போல காட்சி அமைத்து, தங்களது இனத்திற்காக போராடும் போராளிகளை ரொம்பவே அசிங்கப்படுத்திவிட்டது இப்படம்.

சிங்கள இராணுவத்தால் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது என்பது நாடறிந்த உண்மை, அவர்கள் கண்ணில் கண்டவனையெல்லாம் சுட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் இங்கோ ஒரு காட்சியில் தமிழ் பெண்களின் உடலை தடவி, அழுத்தி சோதனை செய்கிறார்கள். இதனை கண்ட கருணாஸ் பொங்கி எழுந்து கட்டையை கொண்டு துப்பாக்கி ஏந்தியவனை அடிக்கிறார். (மற்ற ராணுவத்தினர் வேடிக்கை பார்க்கிறார்களாம்.) இன்னொரு சிங்களவன் கருணாஸை அடிக்க துப்பாக்கியை தூக்கி வருகிறான். (துப்பாக்கியால் சுடாமல் அடிக்க தான் வருகிறானாம்).

அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் போராளி துப்பாக்கியை கொண்டு சிங்களவனை சுடுகிறாள். அங்கே இரு தரப்புக்கும் சண்டை நடக்கிறது. (அதாவது இவர்கள் தாக்கியதால் தான் அவர்கள் தாக்கினார்களாம்) சண்டையில் இருதரப்பினரும் மறைந்து நின்று தாக்கிகொள்கிறார்கள்.

அதாவது, ஆயுதம் இல்லா பொதுமக்கள் அனைவரும் சிங்களவர்களின் பின்னால் மறைந்து நிற்கிறார்கள். அதில் ஒருவன் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புறபடுத்துகிறான்.

போராளி துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சிங்கள ராணுவத்தின் பின்னால் இருக்கும் தமிழ் சிறுவன் காலை பதம் பார்க்கிறது. (அச்சிறுவன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன்) (சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை பாதுக்காக்க சண்டையிட்டார்களாம், போராளிகள் தான் தாக்கினார்களாம்) ஆக போராளிகளை குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறார் சந்தோஷ் சிவன்.

நாடு அறிந்த உண்மை சம்பவத்தை ஒரு கலையாக பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் இயக்குனர் சந்தோஷன் சிவன்.

இருந்தாலும் படமாக பார்த்தால், ஒளிப்பதிவும், வசனங்களும் நச், மென்மையான இசை கொடுத்த விஷால் சந்திரசேகர் ஒரு படி முன்னேறுகிறார்.

படத்தில் நடித்து இருக்கும் ரஜினி மற்றும் நந்தன் ஆகிய இரு கதாபாத்திரங்கள் நெஞ்சில் நிற்கிறார்கள், குறிப்பாக நந்தன் தன் இயல்பான நடிப்பாலும் நம்மை கவருகிறார்.

மொத்தத்தில் இனம் நிஜம் இல்லை!
**
லிங்குசாமிக்கு கண்டனங்கள்!

இனம் படத்தினை வெளியிட்ட திருப்பதி பிறதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில், இயக்குனர் லிங்குசாமி மக்களின் உணர்வுகளைத் தன்னால் புரிந்துக் கொள்ள முடிவதனால், தனக்க ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டங்களையும் பொருட்படுத்தாது, இன்று அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

லிங்குசாமியின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்ஸ்ரூடியோ அருண் தனது பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றார். கண்டனத்திற்காக அவர் முன் வைத்திருக்கும் காரணங்கள் பலவும் கருத்திற் கொள்ளத்தக்கன என்பதனால், அக் கண்டனப் பதிவினை, அவருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம்.

லிங்குசாமிக்கு கண்டனங்கள்…

தமிழர்களை மிக சுலமாக உணர்ச்சிகளால் தூண்டிவிட்டு, அவர்களை எளிதில் ஒடுக்கிவிடலாம் என்பதைத்தான் தொடர்ச்சியாக பார்த்துவருகிறேன். தங்களது ஒட்டுமொத்த புகழும், வாழ்க்கை வரலாறும் ஒரே திரைப்படத்தில் சீரழிந்து போகப்போகிறது என்று நினைக்கும் ஒரு இனம்தான், கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே, முன்தோன்றி மூத்த இனம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது. படைப்புகளை விமர்சனத்தின் வழியாக, அல்லது அதை தவறென்று, சித்தரிக்கும் இன்னொரு படைப்பின் வழியாகத்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தவறு என்று நினைக்கும் படைப்பை தடை செய்வதன் வாயிலாக அல்ல. சென்னை பலகலைக் கழக பாடத்திட்டத்தில் இருந்து, புதுமைப்பித்தன் சிறுகதை நீக்கப்படுவதை எதிர்த்து போராடியவர்கள் கூட, இந்த படைப்பிற்கு எதிராகக் கோரப்படும் தடையை எதிர்த்து எதுவும் பேசாமல் இருப்பது, இது உணர்ச்சி தொடர்புடைய விஷயம் என்பதைத்தான் காட்டுகிறது. இந்த படைப்பை, தடை செய்யக்கூடாது என்று சொல்பவர்கள் எல்லாரும், தமிழின துரோகிகள் மாதிரி சித்தரிக்கப்படுவார்கள் என்கிற அச்சத்தின் காரணத்தாலேயே எல்லாரும் வாய்மூடி கிடைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் எந்த படைப்பையும் தடை செய்யவேண்டும் என்கிற கோசத்தை அறவே வெறுக்கிறேன். தடை செய் என்கிற கோஷம் ஒருவகையிலான பாசிஷமே. இனம் திரைப்படத்தை, விமர்சனங்களால் கிழித்தெறிந்து தூக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் அந்த படைப்பை ஒட்டுமொத்தமாக தடை செய் என்று கூறுவதெல்லாம் எந்த வகையில் நியாயம். தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யலாம். மாறாக, வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது. இந்த படத்தை, யாருமே பார்க்காமல் புறக்கணிக்கலாம். ஆனால் யாருமே பார்க்ககூடாது என்று தடை விதிக்க கூடாது. லிங்குசாமி இந்த படத்தை திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெற்றது, மிக மோசமான வரலாற்று நிகழ்வு. லிங்குசாமி, தன்னுடைய படத்தில் ஒளிப்பதிவாளர் என்கிற நிலையில் இருந்து சந்தோஸ் சிவனை தூக்கி எறிந்திருந்தால் கூட, பிரச்சனையில்லை. ஆனால், தன்னுடைய அடுத்தப் படம், அவர் தயாரித்துக் கொண்டிருக்கும் கமலின் படம் போன்றவற்றின் வியாபாரத்தை மனதில் வைத்துதான், இந்த படத்தை திரையரங்கில் இருந்து திருமப் பெற்றுக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஏன் இந்த திரைப்படத்தை, வாங்கும்போது, தனியாக பலருக்கும் திரையிட்டுக் கான்பிக்கும்போதேல்லாம் தெரியவில்லையா, இந்தப் படம் தமிழர்களுக்கு எதிரானப் படமென்பது. தமிழ்நாட்டில் வியாபாரத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையே லிங்குசாமியின் இந்த அறிக்கை காட்டுகிறது. இந்த படத்தின் நஷ்டத்தை விட, அவரது அடுத்த இரண்டு பெரிய படங்களின் வியாபாரம் மிக முக்கியமானது. இந்த படத்தை திரும்பப் பெறுவதன் வாயிலாக, தமிழர்களுக்கு உற்ற தோழன் என்கிற அந்தஸ்தும், மரியாதையும் கிடைத்துவிடும். அடுத்தப் படங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கிவிடுவார்கள். சின்ன படத்தை பலியாக்கி, பெரிய படங்களை வியாபாரம் செய்தது போலாகிவிடும். எத்தனை மோசமான மனநிலை இது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை, திருமப் பெரும் லிங்குசாமியின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

உண்மையை, நேர்மையை, நியாயத்தை, அறத்தை அது போலியாக இல்லாத பட்சத்தில், எந்த படைப்புகளும், எந்த சக்தியும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை நான் பெரிதும் நம்புகிறேன். தமிழ்நாட்டில் நடக்கும் இந்த மாரல் பொலிசிங்கை வன்மையாக கண்டிக்க வேண்டிய சமயம் இது. அரசு பாசிசமாக நடந்துக் கொள்வதைக் காட்டிலும் மிக மோசமானது, தனிமனிதர்களும், அமைப்புகளும் பாசிசமாக நடந்துக்கொள்வது. தமிழ்நாட்டில் அறம் பற்றி போதித்துக்கொண்டிருப்பவர்கள், எல்லாரும் தேர்தல் வேளைகளில், பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதால், இந்த திரைப்படத்தின் தடை பற்றியோ, அதன் போலித்தனத்தை பற்றியோ பேச நேரமில்லாமல் இருக்கிறது போல. என்ன பேசினாலும், ஒட்டு பாதிக்கப்படும் என்பதுதான் நிஜம்.

நன்றி: தமிழ் ஸ்ரூடியோ அருண்