‘இனம்’ திரைப்படத்தை புறக்கணிப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஈழத்தமிழர்களையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருக்கும் ‘இனம்’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.inam anti tamil movie

‘இனம்’ திரைப்படத்தை தமிழகத்தில் தடைசெய்ய வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசுவரன் தலைமையில் சென்றவர்கள் இந்தக் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்கள்.

லிங்குசாமி தயாரிப்பில் சந்தோசு சிவன் இயக்கத்தில் ‘இனம்’ என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்தப்படத்தில் ஈழத்தமிழர்களையும், அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் உள்ளது. படத்தின் கருவே தவறாக உள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் இழிவுபடுத்துவதாக அந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவத்துக்கு ஆதரவாக உள்ள அந்தப் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் படத்தை திரையிடும் திரையரங்குகள் முன்பு சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படும். மேலும் படத்தை தயாரித்து இயக்கிய லிங்குசாமி, சந்தோசு சிவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்கள் தவிர தமிழகத்தில் பரவலாக தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் திட்டமிட்டவாறு நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் ‘இனம்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள காமராசர் சாலையில் உள்ள திரையரங்கத்தில் ‘இனம்’ திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ்ஈழ ஆதரவு அமைப்புகள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரையரங்கத்தின் முன் ஒன்று கூடி திரையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்டப்பட்ட விளம்பரச் சுவரொட்டிகள், பதாகைகளை கிழித்தும் கறுப்பு மை பூசியும் விளம்பரத் தட்டியை தீவைத்து கொழுத்தினர். தொடர்ந்து பரபரப்பு அதிகரித்துச் சென்றதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திரையரங்கத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறித்த திரையரங்கின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.

தமிழீழ ஆதரவாளர்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்துள்ளனர். அதையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவர போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் தடியடியை அடுத்து சிதறி ஓடியவர்கள் சிறிது நேரத்தில் திரையரங்கத்தின் முன்பாக ஒன்று திரண்டு அங்கிருந்த காவல்துறையினருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார்கள். கடும் தள்ளு முள்ளுகளுக்கு இடையில் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள். இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து சில மணிநேரங்களிற்கு பாதிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ ஆதரவாளர்களது கடும் எதிர்ப்பினை அடுத்து குறித்த திரையரங்கத்தில் ‘இனம்’ திரைப்படம் நீக்கப்பட்டு வேறு படம் காண்பிக்கப்பட்டது.

‘இனம்’ திரைப்படம் முழுக்க முழுக்க ஈழ விடுதலைப் போராட்டத்தையும் எமது மக்களையும் இழிவுபடுத்தி சிங்கள இராணுவத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தைப் பார்த்துள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் இவர்களிற்கு பணஉதவி வழங்கி அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படமாகவே அமைந்துள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்கள்.

இதையடுத்து ‘இனம்’ திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ஐந்து காட்சிகளை நீக்கி வெளியிடுவதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

போர் உக்கிரமாக நடைபெற்று வரும் காலப்பகுதியில் பள்ளிக்கூத்தில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கையில் இடைநடுவில் நுழையும் போராளிகள் கரும்பலகையின் மீது வெள்ளைத் துணியை போர்த்தி போர்க்களக் காட்சிகளை ஒளிபரப்பி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அமைந்துள்ள காட்சி..

இந்தக் காட்சியில் வகுப்பாசிரியரை நிர்பந்தித்து புலிகள் கற்றல் செயற்பாடுகளிற்கு இடையூறை ஏற்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு போராட்டத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதாக அந்தக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மக்கள் போரில் இருந்து தப்பித்து காட்டுவழியே செல்லும்போது பௌத்த துறவி ஒருவரை சந்திக்கின்ற போது அவர் மாதுளம் பழம் ஒன்றை அவர்களுக்கு கொடுத்துச் செல்வதாக அமைந்துள்ள காட்சி..

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் செல்லும் வழியில் பௌத்த துறவியை சந்திப்பதற்கு வாய்ப்பு அற்ற நிலையில் பௌத்த துறவியை காருண்யம் மிக்கவராக காட்டுவதற்காக அந்தக் காட்சி வலிந்து சேர்க்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகள் சிறிலங்கா அரசியல் வரலாற்றிலும் தமிழினப் படுகொலையிலும் எவ்வகையான நிலையில் உள்ளார்கள் என்பதை உலகமே அறிந்துள்ள நிலையில் இது திட்டமிட்டு சேர்க்கப்பட்ட காட்சியமைப்பாகும்.

இறந்து கிடக்கும் சிங்கள இராணுவத்தின் கையில் குழந்தையின் படம் இருப்பது போன்ற காட்சி..

தமிழர்களிற்கு எதிராக நடபெற்ற போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையின் காரணமாக சிங்கள அரசாங்கத்தால் ஆசைகாட்டப்பட்ட அதிகப்படியான சம்பளத்திற்காகவும் இதர சலுகைகளிற்காகவும் இணைந்து கொண்டவர்கள் என்பதும், அவர்களும் தத்தமது குடும்பங்களை நினைத்து கவலைப்பட்டதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தாலும் இறுதிப் போரில் தமிழர்களை கொன்று குவித்து நரவேட்டையாடும் கொடூர இரத்தவெறியர்களாக சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டதை இன்று உலகம் கண்டு அதிர்ச்சியில் இருப்பது தான் உண்மையாகும்.

தலைவர் கொல்லப்படும்போது தான் அங்கு நின்றதாக காயமடைந்த போராளி சொல்லும் காட்சி..

தலைவர் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு ஒரு பொம்மை உடலைக் காட்டியதோடு நிறுத்திக் கொண்டது. அதனைப்பார்த்து உடனடியாக தமிழ் மக்கள் கலங்கியபோதும் தற்போது உண்மையை உணர்ந்து தமக்காண கடமையை ஆற்றிவருகின்றனர். இந்நிலையில் காட்சி அமைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் இடைச்செருகலாக இந்தக்காட்சியை அமைந்துள்ளமை அவர்களது நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

திரைப்படத்தின் நிறைவில் 38000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வசனம் இடம்பெறுவதாக அமைந்த காட்சி..

மேற்குறித்த ஐந்து காட்சிகளும் நீக்கப்பட்டு ‘இனம்’ திரைப்படம் திரையிடப்படும் என இயக்குநர் லிங்குசாமி அறிவித்திருந்தாலும் இன்று அவை நீக்கப்படாமலே தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவாறு கதையின் அடிப்படையே தவறான கருத்தோட்டதில் அமைந்துள்ளது. விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக வைத்து சண்டையிடுவதாகவும் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் தான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் தமிழினத்தின் காவல் அரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தும்வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்திடம் சரணைந்த மக்களோடு மக்களாக புலிகள் மறைந்துவந்து இராணுவத்தை தாக்குவதாகவும் அதில் தமிழர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்களை சிங்கள இராணுவம் காப்பாற்றி அரணாக நின்று போரிடுவதாகவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தீராத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர் முதல் சிறுவர்கள் வரை எந்தநேரமும் காம விளையாட்டுகளில் ஈடுபடுவதாகவும் அதே எண்ணத்தில் வாழ்வதாகவும் தமிழர்களை காம வெறியர்களாக அதுவும் குறிப்பாக சிறுவர்களை காட்டியுள்ளமை எம்மை இழிவுபடுத்தும் காட்சிகளாகும்.

சின்னஞ்சிறுவர்கள் சிறுமிகளிடம் முத்தம் கேட்டு அலைவதாகவும் மனநிலை தவறிய நிலையில் கூட ஒரு சிறுவன் முத்தம் வேண்டும் என சிறுமியிடம் அடம்பிடிப்பது போன்று காட்சிகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திடம் சரணடையும் தமிழ் பெண்களை உடல் சோதனை என்ற பெயரில் சிங்கள இராணுவத்தினர் செய்யும் பாலியல் சேட்டைகள், அகப்பட்ட தமிழ்ப் பெண்களை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்குவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை வக்கிர நோக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவே மேற்சொல்லும் காட்சி அமைப்புகள் நிரூபித்து நிற்கின்றன.

‘இனம்’ திரைப்படம் தமிழினத்தை இழிவுபடுத்தும் ஆயுதம்! இதனை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தத் திரைப்படம் உலகின் எந்த மூலையில் வெளியிடப்பட்டாலும் வலிமை கொண்டு எதிர்த்துப் போராட தமிழர்களே தயாராகுங்கள்.

ஈழதேசம்

***

இனம் – ஒரு பார்வை!

ஈழத்தில் நடந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லாத சூழ்நிலையில் போரின் போது கைக்கைட்டி வேடிக்கைப் பார்த்த உலக சமுதாயத்தின் முகத்தில் அறைவது போல இனம் என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது.

இனம் படத்தைப் பொறுத்தவரை, அதை ஒரு கதையாக வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. அது ஒரு வலி! அடையாளத்தை இழந்து, குடும்பத்தை இழந்து, உடமைகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்து இதயத்தில் ரணங்களையும், வலிகளையும் மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளின் சொல்ல முடியாத சோகத்தை பதிவு செய்த ‘இனம்’ படத்தை வெளியிட முன் வந்த லிங்குசாமிக்கு ஒரு பெரிய சல்யூட்!

அங்கே நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான அடிப்படை விஷயங்களோ, காரணங்களோ படத்தில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அங்கே நடந்ததும்… நடந்துகொண்டிருப்பதும் இனப்படுகொலை என்ற உண்மையை பதிவு செய்த இனம் படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான சந்தோஷ் சிவனுக்கு நம் நன்றியை பதிவு செய்வதே தர்மமாகும்.

படம் எப்படி இருக்கிறது என்று நான்கு வரிகளில் விமர்சனம் எழுத இது வழக்கமான சினிமா இல்லை. ஈழத்தமிழரின் அவலங்கள் கடலாய் இருக்க, அதில் ஒரு துளியை பதிவு செய்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அந்த ஒரு துளியின் ஒரு துளிதான் இந்த வார்த்தைகள்…

கடல்தாண்டி அகதியாய் வந்த ஒரு பெண் தன் கடந்தகாலக் கொடுமைகளையும் தனக்கு நேர்ந்த அவலங்களையும் பகிர்ந்துகொள்வது போலத்தான் படத்தின் கதை அமைகிறது. நான்கு புறமும் குண்டுமழை… எப்போது சாகப்போகிறோம் என்று தெரியாத நிலை… என்றாவது ஒரு நாள் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பு… என கனவுகளை சுமந்து கொண்டு வாழும் ரஜினி என்ற பெண். அவளுடன் குடும்பத்தைத் தொலைத்தவர்கள் பலரும் ஒரு குடும்பமாய் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிஞ்சுப் பூக்களை அரவணைத்து பாதுகாப்பவர் சுனாமி அக்கா எனும் சரிதா. அந்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஸ்டான்லியாக கருணாஸ்.

கடற்கரையில் கையில் சின்னக் கத்தியுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடக்க, அவனை சுனாமி அக்காவின் காப்பகத்திற்கு கொண்டுவருகிறார்கள் பிள்ளைகள். கையில் கத்தி வைத்திருந்தாலும் அவன் பேச்சு வெகுளியாய் இருக்கிறது. ஆட்டிஸத்தோடு இருக்கும் விஷேசக் குழந்தை எனத் தெரியவருகிறது. அவன் பெயர் நந்தன். அங்கே நடக்கிற அத்தனை விஷயங்களையும் நந்தனின் பார்வையிலேயே பதிவு செய்வதுபோல அமைகிறது காட்சிகள். ரஜினிக்கு அவன் மீது தனி அக்கரை ஏற்படுகிறது. மற்ற பிள்ளைகள் அவனை கிண்டலும் கேலியும் செய்யும்போது கூட ரஜினி அவர்களை கண்டித்து அவன் மேல் கரிசனத்துடன்நடந்துகொள்கிறாள்.

அதே முகாமில் இருக்கும் ஒரு வாலிபனோடு காதலில் விழுகிறாள் ரஜினி. அந்த நிலை நீடிப்பதற்குள்ளாகவே தான் காதலித்தவன் விடுதலை போராட்டத்தில் ஈடுபட காப்பகத்தில் இருந்து வெளியேறி விடுகிறான். பெண் மீது வைத்திருக்கும் காதலைவிட, மண் மீது வைத்த காதல் தான் மேன்மையானது என்று நினைத்ததே காரணமாக இருந்திருக்கலாம்.

ஆகாயத்தில் விமானங்கள் பறக்கும்போதும் குண்டு சத்தங்கள் கேட்கும்போதும் வெட்டிய குழிகளில் பதுங்கிக் கொள்ளும் தன் பிள்ளைகளை பார்த்து இதயம் கொதிக்கும் சுனாமி அக்கா, கோபத்தின் உச்சத்தில் ‘என் பிள்ளைகளுக்கு நான் கல்யாணம் செய்துவைக்கப் போகிறேன்’ என்ற முடிவெடுக்கிறார்! பூமியில் அமைதி பூக்கும்… காதலன் என்றாவது ஒரு நாள் திரும்புவான்… என்ற ஏக்கங்கள் கண்களில் மிதக்க, தன்னை காப்பாற்றிக்கொள்ள நந்தனை தன் கணவனாக தேர்ந்தெடுக்கிறாள் ரஜினி.

தாய்மை உள்ளத்தோடு நந்தனை நேசித்தாலும் இதயமெல்லாம் காதலனே நிறைந்திருக்கிறான். காட்சிகள் நகர… இலங்கை இராணுவத்தினர் அவளை பரிசோதனை என்ற பெயரில் உடலை விரல்களால் தடவிப்பார்க்க, அவளை விட்டுவிடுங்கள் என கருணாஸ் கையில் கிடைத்த ஒரு கம்பைக் கொண்டு மிரட்ட, வேறு வழியில்லாமல் தமிழர்கள் துப்பாக்கியால் பேசுகிறார்கள்… தப்பி செல்ல நினைத்த ரஜினி ஒரு சிங்கள வெறிநாயிடம் சிக்கிக்கொள்ள, அந்த நாய் அந்தப் பெண்ணை சின்னாபின்னமாக்குகிறது. அந்த கற்பழிப்புக் காட்சியை தன் செல்போனில் பதிவு செய்வது இன்னொரு சிங்கள நாய்.

ஒரு மருத்துவ முகாமில் தான் லீடர் என அழைக்கும் தம்பியை பார்த்துவிட்டு தப்பிசெல்ல ரஜினியோடு படகின் அருகில் வரும் நந்தனுக்கு தன் தம்பியின் நினைவு வர, ரஜினி எவ்வளவோ அழைத்து திரும்பிப்பார்க்காத நந்தன் மறைந்த இடத்தில் ஒரு குண்டுவிழுவதப் பார்க்கிறாள் ரஜினி…

மனிதர்களையும் தாண்டி குண்டு வெடிக்கும் நேரத்தில் அலரித் துடிக்கும் பறவைகளையும் விலங்குகளையும் தன் கேமராக் கண்கள் கொண்டு பதிவு செய்த சந்தோஷ் சிவன் அந்தக் காட்சிகளில் மனதை உருக்குகிறார்.

இங்கிருந்து போகவேண்டாம் என்று வெள்ளைக்காரர்களை தமிழ் மக்கள் கெஞ்சும் காட்சியில் மீன்களுக்கு நடுவில் கேமராவை நகர்த்துவது பிரம்மிப்பு. அந்தக் காட்சியின் முடிவில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பதிவு செய்வது சந்தோஷ் சிவனின் துணிச்சல்.

‘எல்லா நாட்டிலும் தான் வெடி செய்கிறார்கள், ஆனால் எல்லாம் இங்கே தானே வெடிக்கிறது’ என்பது வசனமல்ல நிஜம் என்ற உண்மையை நிரூபிக்கிறது இனம். ‘பாட்டன் முப்பாட்டன் காலத்துல தொடங்கிய சண்டை இப்போ குழந்தைங்க சத்தமே கேக்குறதில்லை…’ என சரிதா சடலங்களுக்கு நடுவில் புலம்புகிறாரே… அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரல்.

சிங்கள ராணுவம் இரக்கமில்லா மிருகங்களாக மாறும்போது, கையில் கிடைத்த கம்பைக் கொண்டு, என் குடும்பத்தை காப்பாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என புலியாய் உருமுகிறாரே ஸ்டான்லியாக நடித்திருக்கும் கருணாஸ்… இதைத் தீவிரவாதம் என்று சொல்கிறவன் முட்டாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்.

தமிழுணார்வு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டியதை சந்தோஷ் சிவன் செய்திருக்கிறார். ஈழ விடுதலைக்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் இந்தப் படைப்பில் எங்கே சொல்லப்படுகிறது என்ற விமர்சனங்கள் கண்டிப்பாக எழும்… இப்படி நடந்தது என்ற உலகத்துக்கு ஒரு பதிவை செய்ய ஒருவர் வேண்டுமல்லவா… அந்த விதத்தில் இனம் படத்தை ஆதரிப்பது நியாயம் என்றே தோன்றுகிறது!

ஈழ விடுதலைப் போராட்டத்தோடு பயணித்தவர் அல்ல என்பதை வைத்து அந்தப் படைப்பை கொச்சைப்படுத்துவது நியாயமில்லை. இத்தனை கொடுமைகள் நடந்தும் நீயும் நானும் என்ன செய்தோம், இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் சந்தோஷ் சிவனுக்கு வந்திருப்பதில் என்ன தவறு!

என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தை நான் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் ஈழத்தின் திசை நோக்கிப்பார்க்கும் இறுதிக்காட்சி நமக்குள்ளும் அதே நம்பிக்கையை விதைக்கிறது!

இனம் – வலியின் ஒரு துளி…!

————-

இனம் – நீக்கப்பட்ட காட்சிகள்?

சந்தோஷ் சிவன் தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள இனம் திரைப்படம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் 28.03.14 அன்று ரிலீஸானது.

ஈழவிடுதலைப் போரின்போது இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் தங்களால முடிந்தவரை உலகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக இனம் திரைப்படத்தை வெளியிட்ட லிங்குசாமி, படத்தைப் பார்த்த தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க

* பள்ளிக்கூடக் காட்சி.

* புத்தமதத் துறவி தமிழர்களுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி.

* சிங்கள ராணுவத்தான் குழந்தை ஃபோட்டோ வைத்திருக்கும் காட்சி.

* தலைவர் கொல்லப்பட்டார் என்ற வசனம்.

* படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் இடம்பெறும் காட்சி.

ஆகிய ஐந்து காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.

நக்கீரன் இதழ்

Advertisements