மேஜர் யாழிசை

தமிழீழத்தில் முல்லைத்தீவு மாங்குளத்தில் பிறந்த துவாரகா இவள் விளையாடித் திரிந்த வீதிகள் எங்கும் பகைவனின் காலடிகளும், நகரில் பகைவனின் இனவெறி தாண்டவங்களும் நிறைந்திருந்த காலம். சில வேளைகளில் எதிரியானவன் தமிழர்களை வீதிகளில் அடிப்பதும் சித்திரவதை செய்வது அவ்வப்போது அந்த நகரில் நடக்கும் வழமை ஆகியது.Maj Yaazhisai

தமிழீழ நிலமெங்கும் சிறிலங்கா அரசின் போர் இனவெறிகளும், அடக்குமுறைகளும் சூழ்ந்திருந்த காலங்களில் விடியலின் சுவாசக்கற்றை எதிர்கால சந்ததியினரும், தமிழீழ மக்களும் சுவாசிக்க தமிழீழத் திசையெங்கும் இருந்து ஆயிரம் ஆயிரம் இளைஞர் – யுவதிகள் விரைந்தனர். அப்படியாக தானும் ஓர் தமிழ்த் தாயின் மகளாய் தமிழீழ விடுதலைப் போரிற்கு 2001ம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பில் துவாரகாவும் இணைத்து கொண்டாள். அங்கே யாழிசையாக பயிற்சிப் பாசறையில் ஓர் சிறந்த போராளியாக அவளை உருவாக்கியது.

தாய்மண்ணையும், தமிழீழத் தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், மக்களையும் நேசித்து, விடியலின் கனவை நெஞ்சில் சுமந்து தமிழீழத் திசையாவும் பயணித்த யாழிசையை முதலில் 2ம் லெப்.மாலதி படையணி உள்வாங்குகின்றது. அந்தப் படையணியில் சிறப்புத் தளபதி, பொறுப்பாளர்கள், போராளிகளின் ஆளுகையின் கீழ் கடமைகளை பொறுப்புனர்சியுடன் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று அதன் பிறகு பல போர்க்களத்திலும் பல சாதனைகளை தாய்மண்ணின் நினைவுடன் புரிந்தாள்.

சில காலம் பின் விக்டர் கவச எதிர்ப்பு படையணியில் கடமை மாற்றம் செய்து அங்கும் தன் பணிகளை தொடர்ந்தாள். மன்னார் மற்றும் முகமாலையிலும் . மணலாறிலும் கடமை மாற்றங்களுடன் தமிழீழத் திசையாவும் இவளின் தடம் பதிகிறது அங்கும் யாழிசையின் சாதனைகள் நீள்கிறது.

படையணிகள் ரீதியாகவும், திறமைகள் அடிப்படையிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டுதல்களைப் பெற்ற போராளிகளில் யாழிசையும் உள்ளடக்கம்.

தமிழீழத்தில் சமாதான மேகம் சூழ்ந்த வேளைகளிலும் இவளின் பணி போர்க்களத்தில் இருப்பது போன்று தமிழீழ எல்லைகளில்த்தான் இருந்தது. எதிரியானவனின் ஊடுருவலைத் தடுத்தும் சோர்வே அற்ற கலவாழ்வு போல் இருந்தது. எல்லைகளைக் காவல் செய்வது எவ்வகையான கடினம் என்பது சொல்லில் இலகுவில் புரிய வைத்துவிட முடியலாகாது.

இப்படியாக நின்ற இவளது விடியலின் பயணம் இறுதியாக சிங்கள இனவெறி எல்லை மீறி எம்மினத்தை நாளும் நாளும் கொன்றுகுவித்து தமிழீழ தேசத்தின் சில மாவட்டங்களில் தினம் தினம் ஒப்பாரி ஓலங்களும் தமிழீழ வாசலெங்கும் சோகத்தை விதைத்தது.

எதிரியானவனுக்கு தக்க பதிலடிகள் தக்க நேரத்தில் எம்மவர்கள் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி கொடுக்க மறந்ததில்லை அப்படியான ஓர் களம்….

அதாவது முன்னேறி வந்த சிங்கள இராணுவத்திற்கு முல்லை மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் தக்க பதிலடி கொடுத்தார்கள் வேங்கைகள். எதிரியானவனுடன் நடந்த அந்த நேரடிக் களத்தில் 25.03.2009 அன்று சில மாவீரர்களுடன் யாழிசையும் ஒருத்தியாக தமிழீழத் தாயின் மகவையாக சரிதம் வரைந்து போனாள்.

– நினைவுப் பகிர்வு :- இசைவழுதி

Advertisements