தமிழ் மக்களை முற்றாகப் புலம்பெயர நிர்ப்பந்திக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்!

ஜெனிவாவை திசை திருப்பவே அரசாங்கம் புலி நாடகங்களைப் போடுகின்றது என்று வட மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.missing-person-wife

சரியான நேரத்தில் அவர் ஒரு சரியான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பதற்கும் அப்பால், ஜெனிவாவை மட்டமே கருத்தில் கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் அரச பயங்கரவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள் என்பதாக நாம் முடிவு செய்துவிட முடியாது.

அதற்கும் அப்பால், பிரச்சினைகளின்மூலத்தை இல்லாமல் ஆக்குவதும் இந்த நாடகங்களின் இலக்காக உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போரின் அவல முடிவுக்குப் பின்னர், தமிழ் மக்களது புலப் பெயர்வுகள் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போருடனும், விடுதலைப் புலிகளுடனும் நொருக்கமானவர்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டார்கள். அல்லது, வெளியேறி வருகின்றார்கள்.

அதற்கும் அப்பால், தமது பிள்ளைகளை சிங்கள ஆட்சியாளர்களாலும், அவர்களது படையினராலும் ஊக்குவிக்கப்படும் கலாச்சாரச் சீரழிவுக்குள்ளும், வன்முறைக் கெடுபிடிக்குள்ளும் வாழ வைக்க முடியாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக இளைய வயதினரும் பெற்றோரால் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கள அரசு இப்போது முழுமையாக இறங்கியுள்ளது.

அதாவது, பலத்த அச்சுறுத்தல் அல்லது உயிராபத்து என்ற சூழலை வலிந்து தமிழ் மக்கள் மீது திணிப்பதன் மூலம் உள்ளூர் இடப்பெயர்வு என்பதற்கு இடமே இல்லாத அவர்களை, வேகமாகப் புலம்பெயர வைக்கும் திட்டம் ஒன்றும் இதன் மூலம் அரங்கேற்றப்படுகின்றது.

இந்த வேகமான புலப்பெயர்வு உருவாக்கும் வெற்றிடம் இலங்கைத் தீவின் இன விகிதாசார குடிபரம்பல் சமநிலையை முற்றாகக் குழப்பிவிடும். அதாவது, மனித வளமற்ற பகுதியாகத் தமிழர் நிலம் மாற்றமடைந்துவிடும்.

அது தமிழர் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், நில அபகரிப்புக்களையும் எதிர்ப்பு இல்லாத காலத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும்.

தமது நியாயங்களுக்காகப் போராடும் மக்களது மனித வளம் நிர்மூலமாக்கப்படும் போது, சரணாகதி நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். வேகமாகக் குறைந்து வரும் அரசியல் பலமும் அடியோடு சாய்ந்துவிடும்.

அதன் பின்னர், சிங்கள தேசத்தை அச்சுறுத்தி வரும் தமிழினத்திற்கான நீதி கோரலுக்கான தேவை என்பதே இல்லாமல் போய்விடும். சிங்களவர்களது மகாவம்சக் கனவுக்கு எந்த இடையூறும் அதன் பின்னர் உருவாகக் காரணமே இல்லாமல் போய்விடும்.

கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும் தென் தமிழீழம் சிங்கள ஆட்சியாளர்களது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், நில அபகரிப்புக்களாலும் நிலை மாற்றம் அடைந்துவிட்டது.

மாகாணத்தின் பெரும்பான்மையினராக பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களால், இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, தற்போது மற்ற இனங்களின் இனப்பரம்பலுடன் போட்டி போட முடியாத உளவியல், பொருளாதார காரணங்களால் மூன்றாம் இடம் நோக்கி நகர்ந்து வருகின்றது.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் தமிழர்களிடமிருந்து பறி போனதையும் நாம் இந்த இடத்தில் கணக்கில் கொள்ள வேண்டும்.

கிழக்கின் அரசியல் பலம் தமிழர்களிடமிருந்து அகன்றதற்கு எதுவெல்லாம் காரணமாக இருந்ததோ, அதுவெல்லாம் சிங்களத்தால் வடக்கில் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றது.

அதன் எதிர்ப்பு நிலையிலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்தும் முயற்சியாகவே தமிழ் மண்ணில் ‘புலி’ நாடகத்தை நடாத்துகின்றது சிங்களப் படை.

அதாவது, பிரச்சினைக்கான இன முரண்பாடு என்ற அடிப்படையையே இல்லாமல் ஆக்குவது சிங்களத்தின் நோக்கமாக உள்ளது.

சிங்களத்தின் இந்தப் ‘புலி’ நாடகத்தில் துப்பாக்கிச் சூடுகள், அதன் தொடர்ச்சியான கைதுகள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் மட்டுமல்ல, குண்டு வெடிப்புக்கள், அரசியல் படுகொலைகளும் அரங்கேற்றப்படும்.

அவை எல்லாவற்றிற்கும் காரணமாக சிங்களத்தால் உருவாக்கப்பட்ட புலிகளே மாயாவிகளாக வலம் வருவார்கள். விடுதலைப் புலிகளது மீள் இணைவே இதற்குக் காரணம் என்று ஐ.நா. மன்றத்திலும் பதில் அறிக்கை வாசிக்கப்படும்.

இப்போது ஆரம்பிக்கப்படும் அரச பயங்கரவாதம் இந்த இலக்கை நோக்கியதே. திட்டமிட்டு நடாத்தப்படும் இந்தப் அரச பயங்கரவாதம் தமிழ் மக்களை மீண்டும் ஒரு வேகமான புலம்பெயர்வுக்கு நிர்ப்பந்தப்படுத்தப் போகின்றது.

இதை, எப்படிக் கையாளப் போகின்றோம் என்பதே, தற்போது எமக்குமுன் உள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

– கரிகாலன்