நிலை கொள்வதற்கான நியாயங்களைத் தேடும் சிங்களப் படைகள்!

பயங்கரவாதம் முற்றாகத் துடைத்து அழிக்கப்பட்டு விட்டது என்று சிங்கள அரசு அறிவித்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரும் யுத்தத்தின் இறுதி நாட்களிலும், அதன் பின்னரான காலங்களிலும் வடிகட்டப்பட்டு, சிங்களப் படைகளால் பிடித்துச் செல்லப்பட்டு, அவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதைகள் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாhகள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் பலமிழக்க வைக்கப்பட்டு, நடைபிணங்களாக உலாவ விடப்பட்டனர். கட்டுக்குள் கொண்டுவரப்பட முடிந்தவர்கள் உளவாளிகள் ஆக்கப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் அச்சுறுத்தல் மேற்கொள்வதற்கும், குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.jaffna_protest_2013_Ms Jeyakumari

இராணுவ மயமாக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சிங்களப் படைகளின் பெரும் பகுதியினர் நிலை கொண்டுள்ளனர். வடக்கில் மட்டும் வயது வந்த 5 தமிழர்களுக்கு ஒரு படையினன் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இறுக்கமான முற்றுகைக்குள் இன்றுவரை அந்தப் பிரதேசங்களில் அரச பயங்கரவாதம் மட்டுமே அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. இத்தனை கெடுபிடிகளின் மத்தியிலும், படுகொலைகள், காணாமல் போதல், பாலியல் வன்முறைகள், கொள்ளைகள், வழிபறிகள், கப்பங்கள்… என எண்ணிலடங்காத குற்றச் செயல்கள் அரங்கேற்றப்பட்டிருந்தாலும், அது குறித்து, சிங்கள தரப்பு இதுவரை அலட்டிக்கொள்ளவில்லை. யாரும் கைது செய்யப்படவும் இல்லை.

தமிழ் மக்களிடையே கலாச்சார சீரழிவுகள் படையினரால் ஊக்கப்படுத்தப்பட்டன. இளைய தலைமுறையினரைக் குறிவைத்து போதைப் பொருள் விநியோகமும் நடாத்தப்படுகின்றது. இளைஞர்கள் மத்தியில் வன்முறை சிந்தனைகள் விதைக்கப்பட்டு, கோஷ்டி மோதல்கள் தூண்டப்படுகின்றன. அதன் உச்ச கட்டமாக, யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரிகளுக்குள் நடாத்தப்பட்ட கிரிக்கட் போட்டியில் சென்ஈ பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான 23 வயதான ஜெயரட்ணம் நெல்சன் அமலன் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அனைத்துலக அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்களுக்கு, இப்போது மீண்டும் விடுதலைப் புலிகளது வருகை தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கும் கோத்தபாயவின் திட்டம் கடந்த வருட இறுதியில் வெளிவந்தது. அது பிசுபிசுத்துப் போன நிலையில், முன்னாள் போராளிகள், அவர்களது குடும்பங்களை இலக்கு வைத்து மீண்டும் ஒரு கதை பின்னப்படுகின்றது.

கடந்த வாரத்தில்;, தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி, அவரது மகள் விபூசிகா ஆகியோரின் கைதும், அதற்கான காரணமாகச் சொல்லப்பட்ட சம்பவமும், அதற்குச் சில நாட்கள் முன்னதாக திருமலையில் நான்கே மாத குழந்தையின் தாயான 7 மாத கர்ப்பவதி பாலகுருபரன் தர்மிலாவின் கைதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களான றுக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீண் கைதும் ஒரு திட்மிட்ட நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்ற வருகின்றன என்பதை யாரும் நிராகரிக்க முடியாது.

இதனோடு, வன்னியில் தொடரும் தேடுதல்களும், அதற்காக வெளியிடப்படும் புகைப்படங்களும், அறிவித்தல்களும் அங்கு இன்னொரு யுத்தம் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சிங்களப் படையினரின் முயற்சியே. மன்னாரில், இரு இளைஞர்களது புகைப்படங்களுடன், அவர்கள் குறித்துத் தகவல் தருபவர்களுக்கு ஐந்து இலட்சம் டூபாய் சன்மானம் தருவதாகவும் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட படங்கள் யுத்தத்தின் இறுதியில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளது படங்களாகவும் இருக்கலாம். அல்லது, தமிழ் மக்கள் மத்தியில் உளவு பார்த்து, தகவல்களைத் திரட்டுவதற்காக சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட புலிகளாகவும் இருக்கலாம். ஏனென்றால், சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்றைய சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கும், குவிக்கப்பட்டுள்ள சிங்களப் படைகளை தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பதற்கும் சிங்கள தேசத்திற்கு விடுதலைப் புலிகளது வருகை மட்டுமே கைகொடுக்கும்.

அதுவரை, சிங்களப் படைகள் டம்மி யுத்தம் ஒன்றைத் தமிழர்கள் மேல் மேற்கொள்ளப் போகின்றது. இதில் பல நூறு தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் பலி கொள்ளப்பட உள்ளனர். கைது செய்யப்பட்டு சிறைகளிலும், சித்திரவதைக் கூடங்களிலும் அடைக்கப்பட உள்ளனர். குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தப்படும். அப்பாவித் தமிழாகளது அழிவுக்கு விடுதலைப் புலிகளது மீள் வருகையே காரணம் என்று உலக நாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

தாங்கள் தொடர்ந்தும் தமிழ் மண்ணில் நிலை கொள்வதற்கான நியாயங்களுக்காக சிங்கள அரசும், அதன் படைகளும் புதிய சூத்திரத்தை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே முறியடிக்க முடியும்!

– சுவிசிலிருந்து கதிரவன்-

Advertisements