ஈழத்தமிழர்களின் வாழ்வில் யூதர்கள் போன்றதொரு வசந்தம் வீசுமா?

உலகிலேயே அதிக இன்னல்களை எதிர்கொண்டவர்கள் யூதஇனத்தைச் சேர்ந்த மக்கள் எனக் கூறுவார்கள். இவர்கள் தமக்கென ஒரு தாயகம் இல்லாத நிலையில் உலகின் பல நாடுகளிலும் தங்கி வாழ வேண்டியதொரு நிலை அன்று காணப்பட்டது.Sri-Lanka_war

இயற்கையாகவே கடின உழைப்புக்கும், புத்திக் கூர்மைக்கும் பெயர் பெற்ற யூதர்கள், தாம் வாழ்ந்த நாடுகளின் அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னணியில் திகழ்ந்தனர். இதன் காரணமாக சுதேசிகளின் வெறுப்புக்கும் உள்ளானார்கள்.

இந்த நிலையில் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்தில் எழுந்த தேசிய வாத எழுச்சியின் எதிர் விளைவாக யூதர்களின் சியோனிய அரசியல் அமைப்பு உருவானது. மேலும் அவர்களது அரசியல் சிந்தாந்தம் கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளை அடியயாற்றியதாகக் காணப்பட்டதால் யூதர்களின் புனித நூலான தோரா, கிறிஸ்தவர்களால் அவர்களது மத நூலான பைபிளில் பழைய ஏற்பாடு என்ற பெயரில் இணைக்கப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்த இயேசு கிறிஸ்துநாதர் கூட யூத இனத்தையே சேர்ந்தவர் என்பது இன்று கூடப் பலருக்கும் தெரியாத ஒரு விடயமாக உள்ளது. யூத இன மக்கள் உலகின் சகல பாகங்களிலும் பரந்து வாழ்ந்தனர்.

தமக்கென ஒரு தாயகம் இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு யூதனின் மனத்திலும் நிறைந்து காணப்பட்டது. ஆனால் அதனை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது அப்போது அவர்களுக்குப் புரியவில்லை. அதற்கான பலமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை.

ஆனால் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையே அவர்கள் தமது தாயகமாக நம்பினர். அங்கு போய் நிரந்தரமாகக் குடியேறுவதே தமது இனத்தின் மீட்சிக்கு உதவுமென்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். இதனால் உலகம் முழுவதும் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ரஷ்யாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சார் மன்னன் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிகழ்த்தினான். இதில் ஏராளமான யூத மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதனால் பயமும், வெறுப்பும் அடைந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை விலை கொடுத்து வாங்கி அங்கு குடியமர்ந்தனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட யூத கிராமங்கள் துரித வளர்ச்சி பெற்றன. இந்த நிலையில் இரண்டாவது உலக மகாயுத்தமும் ஆரம்பமானது. ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது வஞ்சினத்தைத் தணிக்கும் பொருட்டு அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். இதுவே இஸ்ரேல் என்ற யூதர்களின் நாடு சுதந்திரமாக உதயமாவதற்கு அடிகோலியது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான யூதர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட தமது தாயகத்துக்கு வந்து குவிந்தனர். இன்று இஸ்ரேல் என்ற தேசம் உருவாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. யூதர்கள் இன்னமும் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்தாலும் இஸ்ரேல் தமது தாய் வீடு என்று பெருமிதம் கொள்கின்றார்கள்.

சொந்தமாக நாடு இல்லாது ஏனைய நாடுகளின் ஆதரவில் தொங்கிக் கிடப்பவர்கள் யூதர்கள் என்ற அவலப் பெயர் துடைத்தெறியப்பட்டதில் யூதமக்கள் ஆத்மதிருப்தி அடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இதே யூதர்களுடன் ஈழத் தமிழர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தாங்கொணாத வேதனைதான் ஏற்படுகின்றது. அந்நியரின் வருகைக்கு முன்னர் தமிழர்களுக்கென ஆட்சி, அதிகாரங்கள் அமைந்திருந்தன.

தாயகப் பூமி வடக்கு, கிழக்கில் நீண்டு விரிந்து கிடந்தது. இது எமது தாய் மண் என்ற உணர்வு தமிழர்களின் மனங்களில் பரவசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடைந்ததால் யூதர்களின் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது.

ஆனால் இதுவே தமிழர்களுக்கு அனலை அள்ளிக் கொட்டு வதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் அன்றைய தினமே இங்குள்ள தமிழர்களின் கரங்கள் இரும்புத்தளை கொண்டு பிணைக்கப்பட்டு விட்டன.

ஆட்சி இழந்து, அதிகாரம் இழந்து, மண்ணையும், மொழி உரிமையும் இழ்ந்து நடுத்தெருவில் விடப்பட்ட அந்தநாள் தமிழர்களால் எப்போதுமே மறக்கப்படக்கூடியதல்ல. தமிழர்கள் ஏனைய மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை. மற்றவர்களின் மொழி மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் ஏனோ இன்று ஆழம் காண முடியாத பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

யூதர்கள், தமிழர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் அளவுக்குக் கூட பொருத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றனர். தாம் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து தம்மை அண்டி வாழும் பாலஸ்தீன மக்களை வதைப்பதிலேயே யூதர்கள் குறியாக உள்ளனர்.

மேற்குலக நாடு களின் செல்லப்பிள்ளையான இஸ்ரேல் என்ற நாடு ஏனைய சிறுபான்மை இனங்கள் கொடுமைகளுக்கு ஆளாகும் போது ஒருபோதுமே அனுதாபம் காட்டியதில்லை. எமது நாட்டில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டங்களை ஒழிப்பதில் இஸ்ரேலின் பங்கும் கணிசமாக உண்டு.

ஆயுத உதவி, இராணுவ நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகள் என்பவற்றை இஸ்ரேல் அரசு தாராளமாகவே இலங்கை அரசுக்கு வழங்கியது. ஒரு சிறுபான்மை இனம் வதைபடுகின்றதே என்ற சிறு அளவிலான அனுதாபம் கூட யூதர்களிடம் காணப்படவில்லை. தமிழர் பகுதியயங்கும் இராணுவத்தால் மண் அணைகள் அமைக்கப்பட்டமை கூட இஸ்ரேல் இராணுவத்தின் ஆலோசனையின் பிரகாரமே எனத் தெரியவருகிறது.

யூதர்களும் ஒரு காலத்தில் தாம் மோசமாகப் பாதிக்கப்பட்டதை அறவே மறந்து விட்டதாகவே தெரிகின்றது. ஆனால் மேன்மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் யூதர்கள் எதிர்கொண்டதைப் போன்றதொரு வசந்தம் வீசுமா என்பது இதுவரை கனவாகவே காணப்படுகின்றது.

[ உதயன் ]