சிறிலங்கா: ஜெனிவா தீர்மானம் வலிமையற்றதாக உள்ளது – ஊடகவியலாளர்

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பலவீனமான தீர்மானமானது நாட்டில் மேலும் வன்முறையைத் தூண்டி நாட்டை சீர்குலைக்குமே தவிர, சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த உறவைப் பேண வழிவகுக்காது.uno dead org

இவ்வாறு Asian Correspondent இணையத்தளத்தில் ஊடகவியலாளர் JS Tissainayagam எழுதியுள்ள Sri Lanka: Weak UN resolution will endanger justice கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கடந்த காலத்திலும் தற்போதும் இடம்பெற்ற, இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யக் கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தற்போதைய பரிந்துரையில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை வலிமையற்றதாக உள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போரிலிருந்து மீண்ட சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் மனித உரிமையை பலப்படுத்துவதற்கான பணிகளில் அனைத்துலக சமூகம் ஈடுபடுவதாகவும் இந்தவேளையில் சிறிலங்காவின் பலவீனமான விசாரணைப் பொறிமுறை வினைத்திறனற்றதாக உள்ளதாகவும் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகளால் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கு இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக உள்நாட்டில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைப்பதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆர்வம் காண்பித்தார். ஆனால் இவ்வாறான உள்ளக விசாரணையானது தன்னையும் தனது அரசாங்கத்தையும் குற்றவாளியாக அடையாளங் காட்டும் என்பதால் இந்த விடயத்தை நிறைவேற்றுவதில் ராஜபக்ச தயக்கம் காண்பித்தார்.

போருக்குப் பின்னான சூழலில் சிறிலங்காவின் முன்னாள் போர் வலயமான வடக்கில் தொடர்ந்தும் இராணுவமயமாக்கல்கள் இடம்பெறுவதால் இங்கு காணாமற் போதல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட மீறல் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு அனைத்துலக விசாரணை மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதப்பட்டது. இந்த விசாரணையின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்பளிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சிறிலங்கா தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதற்கு நம்பகமான உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்ளத் தவறினால் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படும் என 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டன. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் இந்தக் கோரிக்கையைத் தட்டிக்கழித்ததுடன், தொடர்ந்தும் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டதால் 2014ல் ஜெனிவாவில் இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தொடரில் அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறான சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் முதலாவது நகல் போதுமானதா அல்லது இல்லையா என்பது தொடர்பாக வாதிடப்பட்டது. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தின் ஊடாக விசாரணை ஒன்றுக்கு சிறிலங்காவை அழைப்பதானது பேரவையால் அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைப்பதால் ஏற்படுகின்ற விளைவை விடக் குறைவான பெறுபேற்றையே வழங்கும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் அண்மையில் வடகொரியா மீது விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவானது வெற்றிகரமான பெறுபேற்றை வெளிப்படுத்துயுள்ளது எனவும் ஆனால் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தால் ஜெமன் நாட்டின் மீது விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு தனது விசாரணையில் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக இந்தத் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் அதாவது இன்னும் சில வாரங்களில் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பது தெரியாது. ஆனால் இந்தத் தீர்மானம் இம்மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் வாக்களிப்புக்காக விடப்படவுள்ளது.

இவ்வாறான ஒரு பலவீனமான தீர்மானம் இலங்கையர்களின் நம்பிக்கையையோ அல்லது அனைத்துலக சமூகத்தின் நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டையோ பெற்றுக் கொள்ளாது என்பதே உண்மையாகும். மிகவும் நலிவடைந்த மூன்று தரப்பினர்களுக்கு மேலும் பாதிப்பை உண்டுபண்ணும்.

மனித உரிமை மீறல்களால் பாதிப்பிலிருந்து மீண்டெழுந்தவர்கள் முதலாவது தரப்பினராவர். தமது காணாமற் போன உறவுகளைத் தேடுகின்ற சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண்கள் இவ்வாறான ஒரு பலவீனமான தீர்மானத்தால் மேலும் நலிவடைந்து விடுவார்கள். இவர்கள் காணாமற் போன தமது அன்பிற்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இவர்கள் காணாமற் போன தமது உறவுகள் தொடர்பாக அனைத்துலக உயர் மட்டப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்து வருகிறது.

காணாமற் போனவர்களின் உறவுகள் அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவி பிள்ளையைச் சந்தித்து தமது பிரச்சினைகளைக் கூற முற்பட்டபோது சிறிலங்கா அரசாங்கத்தால் தடுக்கப்பட்டனர். “சிறிலங்கா அரசாங்கம் தனது சொந்த மக்களைக் கண்காணித்தல் மற்றும் சித்திரவதை மேற்கொள்ளுதல் போன்றன சிறிலங்காவை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. விமர்சகர்கள் தாக்கப்படுகின்ற அல்லது இவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற நாடாக சிறிலங்கா காணப்படுகிறது” என கடந்த ஓகஸ்ட்டில் சிறிலங்காவுக்கான தனது பயணத்தைத் தொடர்ந்து நவி பிள்ளை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த நவம்பரில் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெற்ற போது அதில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூனை, காணாமற் போன மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இவ்வாறான தடை இருந்த போதிலும் காவற்துறையின் கண்காணிப்பு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிலைப்பாடுகள் தொடர்பாக கமறூனின் யாழ்ப்பாண வருகையைப் பதிவாக்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கையளித்தனர்.

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சிறிலங்காவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பொறிமுறையின் ஊடாக மட்டுமே பொறுப்பளிக்கப்பட்டு நீதி எட்டப்பட முடியும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான ஒரு பலவீனமான தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தை உண்டுபண்ணாது. இதன் மூலம் நீதி எட்டப்படமாட்டாத. பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது நிலை தொடர்பாகக் கூற அச்சப்படுகின்றனர். இது தமது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.

சிறிலங்காவில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்கள் இவ்வாறான ஒரு பலவீனமான தீர்மானத்தால் பாதிக்கப்படும் இரண்டாவது தரப்பினர்கள் ஆவர். இவர்களின் செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தலையீடு செய்கிறது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான குகன் முருகானந்தன் மற்றும் லலித் வீரக்குமார் காணாமற்போயுள்ளனர். காணாமற் போன குடும்பங்களுக்காகவும் மீன்பிடி உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்த சுனேஸ் சூசை போன்றவர்கள் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண சபை இவ்வாறான ஒரு பலவீனமான தீர்மானத்தால் பாதிக்கப்படும் மூன்றாவது தரப்பாகும். செப்ரெம்பரில் புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண சபையானது சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர்கள் வடக்கு மாகாண சபையை நிர்வகித்து வருகின்றனர். வடக்கு மாகாண சபையானது நிர்வாக, அரசியல் மற்றும் அவசியப் பிரச்சினைகளை ஆராய்ந்து வரும் ஒரு அமைப்பாகும். சிறிலங்காவில் இவ்வாறான பலவீனமான தீர்மானத்தால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் ஒன்றை முன்வைத்த வடக்கு மாகாண சபை தொடர்பாக சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் தப்பான அபிப்பிரயாம் நிலவ வாய்ப்பு ஏற்படலாம்.

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மீளிணக்கப்பாடு சாத்தியப்படலாம் என அனைத்துலக சமூகம் கூறிவருகிறது. இது உண்மையெனில் முதலில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பளிக்கப்பட வேண்டும். இவ்வாறான ஒரு பலவீனமான தீர்மானமானது நீதி கிடைக்கப் பெறுவதற்குத் தடையாக இருக்கும். இது மீளிணக்கப்பாட்டிற்கான சாத்தியப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பலவீனமான தீர்மானமானது நாட்டில் மேலும் வன்முறையைத் தூண்டி நாட்டை சீர்குலைக்குமே தவிர, சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த உறவைப் பேண வழிவகுக்காது.

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மீளிணக்கப்பாடு சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தும் அனைத்துலக சமூகமானது தமிழ் மக்களுக்கு ஏதேனும் பயனுள்ளதைச் செய்யவேண்டுமானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆரோக்கியமான தீர்மானம் ஒன்றை முன்வைப்பதற்கான அனைத்து நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

புதினப்பலகை- நித்தியபாரதி.

 

Advertisements