காணாமல்போன மகனை மீட்க போராடிய தாய் கைது: சனல்-4 ஊடகம்

jeyakumari-vipoosikaஇலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தனது மகனை மீட்டு தருமாறு போராடி வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதான மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடந்த நவம்பர் மாதம் சென்றிருந்த போது காணாமல் போனவர்களின் குடும்பங்கள், காணாமல் போன தமது உறவினர்களை தேடி தருமாறு கோரி நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு பின் ஜெயக்குமாரி அச்சுறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட்டிருந்ததாக சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களில் தமது மகனை தேடி போராட்டத்தை முன்னெடுத்து வந்த அவரும் அவரது 13 வயதான மகளும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜெயக்குமாரி மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளின் தாயாவார். மூத்த மகன் போர் நடைபெற்ற போது இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரண்டாவது மகன் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தார். 15 வயதான மகிந்தன் என்ற அவரது இளைய மகன் விடுதலைப் புலிகளால் இறுதிக்கட்டப் போரின் போது அவர்களின் படையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்த போது அவரது மகனும் சரணடைந்தாக ஜெயகுமாரி தெரிவித்தார்.

இறுதியில் அவரும் அவரது மகளும் மட்டுமே குடும்பத்தில் எஞ்சியிருந்தனர். தனது மகன் காணாமல் போயுள்ளதாக ஜெயக்குமாரி முறைப்பாடு செய்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.

இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் ஜெயக்குமாரி மகனும் உள்ளடக்கப்பட்டார். இலங்கையில் 6 ஆயிரம் பேர் காணாமல்போனதாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் பலர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜெயக்குமாரியும் அவரது மகளும் தனது மகிந்தன் சரணடைந்தமை குறித்து அரச அதிகாரிகளிடம் தெரியப்படுத்த அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளதுடன் அவர் தடுப்பு காவலில் இல்லை எனக் கூறிவந்தனர்.

எனினும் அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் அவரது மகனது புகைப்படம் இருந்தாகவும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதை கப்டன் ஒருவர் காட்டியதாகவும் கைதிகளான முன்னாள் போராளிகளில் தனது மகனும் இருந்ததாக ஜெயக்குமாரி கூறியுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது எனவும் ஜெயக்குமாரிக்கும் அவரது மகளுக்கு சத்தமாக அழுது தமது குமுறுலை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது.

பொதுநலவாய நாடுகளில் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

பொலிஸார் எவரையும் அவர் அருகில் செல்ல இடமளிக்கவில்லை. எனினும் பொலிஸாரின் தடையையும் தாண்டி அழுது புலம்பிய காணாமல் போனவர்களின் உறவினர்களை பிரதமர் சந்தித்தார்.

இதன் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு செய்தியாளர்களிடம் நேரடியாக தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் குறித்து உண்மையை அறிய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் காணாமல் போனவர்கள் பற்றிய சாட்சியங்களை வழங்குபவர்கள் அச்சுறுத்தப்படும் தகவல்கள் ஏராளம். சாட்சியம் அளிப்பவர்களை பாதுகாக்க திட்டங்கள் இல்லாத நிலையில், சாட்சியாளர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயக்குமாரி இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் கொடூரமான இந்த சட்டத்தின் கீழ் அவரை நீண்டகாலம் தடுத்து வைக்க முடியும். அவரது மகள் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் ஜெயக்குமாரி எனக்கு காணொளி மூலமான கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போது இனந்தெரரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாகவும் பாரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் உயிர் பாதுகாப்புக்கு தொடர்பில் அச்சத்துடன் இருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார்.

காணாமல் போனவர்கள் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து தாம் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் போது பலர் தம்மை புகைப்படம் எடுப்பதாகவும் அவர்களில் பலரை தமக்கு தெரியாது எனவும் ஜெயக்குமாரி தெரிவித்திருந்தார்.

சனல் 4 தொலைக்காட்சியில் தமது நேர்காணல் வெளியானதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் தாம் இனந்தெரியாத நபர்களினால் பின் தொடரப்பட்டதாகவும் மகளுடன் கிராமத்தில் வாழும் தான் அங்கு அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் ஜெயக்குமாரி குறிப்பிட்டிருந்தார் என கெலும் மக்ரே கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் நடவடிக்கை குழுவின் கூட்டத்தின் பின்னர் லண்டனில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.

பொதுநலவாய நாடுகளின் தலைமை பதவியை இலங்கை தற்போது வகித்து வருகிறது.கருத்து சுதந்திரம் உட்பட பொதுநலவாயத்தின் மதிப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆனால் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுக்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.

மேற்படி கைது சம்பவம் குறித்தும் பொதுநலவாயத்தின் மதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் நாம் கேள்வி எழுப்பிய போது, சம்பவம் பற்றி ஆராயமல் பதிலளிக்க முடியாது எனக் கூறினார்.

இதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். இலங்கையில் நீதித்துறையின் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உண்மையை புறநிலையாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து பார்க்காது ஒரு முடிவுக்கு வருவது தவறானது என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஜெயகுமாரி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் சட்டத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் அவர் காலவரையறையின்றி, தடுத்து வைக்கப்படலாம் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும் எனவும் கெலும் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

***

பருவமடைந்து பத்து நாளான சிறுமி விபூசிகாவை கைது செய்து இலங்கை அரசு பாவச்சாதனை!- மனோகணேசன்
காணாமல் போன தனது அண்ணனைத் தேடி ஆர்ப்பாட்டம் செய்து வந்த விபூசிகா பாலேந்திரா என்ற சிறுமியையும், அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திராவையும் கைது செய்து இலங்கை அரசு பாவச்சாதனை படைத்துள்ளது.

இவர்களது கைது மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும், இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த வருடம் அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும், வடக்குக்கு சென்ற போது அங்கு நடைபெற்ற காணாமல் போனோரது குடும்ப அங்கத்தர்களின் ஆர்ப்பாட்டங்களில் சிறுமி விபூசிகாவும், அவரது தாயாரும் பிரதான பங்கு வகித்திருந்தனர்.

இதை தொடர்ந்து தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், ஜெயகுமாரி பாலேந்திரா மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு தகவல் அனுப்பி இருந்தார்.

அதுபோல் அவர் தனது நிர்க்கதி நிலைமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும், கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கும் அறிவித்திருந்தார் என்பதும் எமக்கு தெரியும்.

தங்கள் இலங்கை விஜயங்களின் போது கதறியழுது, தங்கள் துன்பங்களை சாட்சியமாக எடுத்து சொன்ன சிறுமி விபூசிகா பாலேந்திரா மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோர் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கும் இருக்கின்ற சாட்சிகளை பாதுகாக்கும் கடப்பாட்டை நாம் இங்கே கடுமையாக சுட்டி காட்ட விரும்புகிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக மாநாட்டில் மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளாரான மனோ கணேசனுடன், சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி, சிறிதுங்க ஜயசூரிய, அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன, ஜமமுவின் உப செயலாளர் சண். குகவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

திட்டமிட்ட நடவடிக்கை

காணாமல் போன தம் உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் செய்யும் குடும்ப அங்கத்தவர்களை கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கையாகவே நாம் இதை கருதுகிறோம்.

அரசு சட்ட விரோத சந்தேக நபர்களை தேடி கைது செய்வதை நாம் தடுக்க முனையவில்லை. ஆனால், பயங்கரவாதிகளை தேடி அழிக்கின்றோம் என்ற போர்வையில், காணாமல் போன தம் உறவுகளை தேடி அலைபவர்களையே நீண்ட நாள் வேவு பார்த்து, அச்சுறுத்தி கைது செய்வதை நாம் ஏற்க முடியாது.

அது மட்டுமல்லாமல், தனது அரசியல் இராணுவ கபட நோக்க நடவடிக்கைகள் அனைத்துக்கும், புலிகளை கைது செய்கிறோம் எனக்கூறி நியாயம் கற்பிப்பதையும் ஏற்க முடியாது.

பெண்கள் கைது செய்யப்படும்போது பெண் அதிகாரிகள் இருக்கவில்லை

கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள். அதிலும் ஒரு சிறுமி, சமீபத்தில் பருவம் எய்தினவர். இந்நிலையில் இவர்கள் கைது செய்யப்படும் போது பெண் அதிகாரிகள் இருக்கவில்லை என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இது கொடூரமானது.

சாட்சி கூறிவிடுவார்கள் என அரசு அச்சம்

சிறுமி விபூசிகா பாலேந்திரா மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோர் ஐநா மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சாட்சியம் ஏதும் அளித்து விடுவார்களோ என்ற அச்சம் இந்த அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

அதனாலேயே தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா கூறியிருந்தார்.

அண்ணன் உயிருடன் இருப்பதாக கண்டுபிடிப்பு

விபூசிகா பாலேந்திராவின் கடைசி அண்ணன் இராணுவத்திடம் சரணடைந்தவர் என்றும், அதன்பிறகு அவர் காணாமல் போயிருந்தார் என்றும், சமீபத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு வெளியிட்ட புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் புகைப்படத்தில் அவர் உயிருடன் இருக்க காணப்படுகிறார் எனவும், அவரை தங்களுக்கு காட்டுங்கள் எனவுமே விபூசிக்கா பாலேந்திரா, அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திராவுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

சாட்சிகள் பாதுகாப்பு

நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக சாட்சியம் கூறி, சர்வதேச சமூகத்துக்கு தங்கள் துயர்களை எடுத்துச் சொல்லும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நியதி.

இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இதையே சொல்லி சென்றுள்ளார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும், பிரித்தானிய பிரதமருக்கும் இருக்கின்ற கடப்பாடு

தங்கள் இலங்கை விஜயங்களின் போது கதறியழுது, தங்கள் துன்பங்களை சாட்சியமாக எடுத்து சொன்ன சிறுமி விபூசிகா பாலேந்திரா மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோர் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கும் இருக்கின்ற சாட்சிகளை பாதுகாக்கும் கடப்பாட்டை நாம் இங்கே கடுமையாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அண்ணனைத் தேடிய சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார்

காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா படையினரால் அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

காணாமல்போன தனது அண்ணனுக்காக தனது தாயாருடன் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்திருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளா நவிப்பிள்ளை மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் ஆகியோரது யாழ்ப்பாண பயணத்தின் போது, காணாமல்போனவர்களது உறவினர்களின் போராட்டத்தில் கதறியழுது, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றிருந்தவர்.

இந்நிலையில் கிரிமினல் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி சிறிலங்கா அரச படையினர் அச்சிறுமியின் வீட்டினைச்சுற்றி வளைத்திருந்தனர்.

பிந்திய செய்திகளின்படி அச்சிறுமி மட்டுமே சிறிலங்காப் படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காவல்துறை ஒருவர் காயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண, சிறிலங்கா இராணுவத்துக்கு இதில் தொடர்பு கிடையாது என சிறுமியின் கடத்தலை மூடிமறைத்துள்ளார்.

சிறுமியின் கதை :

என் அண்ணாவ தாங்கோ .., ” ” என் அண்ணாவ எங்கே மறைச்சு வைச்சிருக்கிறீங்க… “என காணாமல்போனவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் ஒரு சிறுமி கதறி அழுவாள் .

அந்த சிறுமி மூன்று அண்ணன்களுக்கு நான்காவதாக பிறந்தவள். முதல் இரண்டு அண்ணாகளையும் பறிகொடுத்து விட்டாள் மூன்றாவது அண்ணனை தொலைத்து விட்டு தன் தாயுடன் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றாள்.

இவள் காணாமல் போனவர்களின் உறவுகளால் நாடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் அண்ணாவை மீட்பதற்காக கதறி அழுவாள்.

புளியம்பொக்கணை முசுறன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி தர்மபுரம் மகா வித்தியாலையத்தில் தரம் 8 லில் கல்வி கற்று வருகிறாள்.

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் மூன்று அண்ணன்களுக்கு நான்கவதாக பிறந்தவளே விபூசிகா என்னும் அந்த சிறுமி.

இவள் சிறு வயதாக இருந்த போதே தகப்பனார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் .அதன் பின்னர் இவளது தாயார் கூலி வேலை செய்தும் வீட்டில் இருந்து கடைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தும் அதன் மூலம் வரும் வருமானத்திலையே இவர்களை வளர்த்து வந்தார்.

இந் நிலையில் சிறுமியின் மூத்த அண்ணன் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2006ம் ஆண்டு 10 மாதம் 20 ம் திகதி வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்ப்பட்டார்.

அதன் பின்னர் திருகோணமலையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என கருதி அந்த சிறுமியின் தாய் தன் ஏனைய மூன்று பிள்ளைகளுடனும் வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறினாள்.

பின்னர் யுத்தம் காரணமாக ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு 5ம் மாதம் 5ம் திகதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த போது அங்கு வீசப்பட்ட எறிகணைக்கு தனது இரண்டாவது அண்ணனையும் பறிகொடுத்தாள்.

அதன் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற வேளை 2009ம் ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி தன் மூன்றாவது அண்ணனையும் தொலைத்து விட்டாள்.

அதன் பின்னர் தனது தாயுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டாள். தன் மூன்றாவது அண்ணனனையும் பறிகொடுத்து விட்டதாக நினைதிருந்த வேளையில் தான் L.L.R.C புத்தகத்தில் தன் அண்ணனின் படம் இருப்பதாக அறிந்து கொண்டாள்.

அவள் அந்த புத்தகத்தை பார்த்த போது புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் என சில இளைஞர்கள் உடல் பயிற்சி செய்யும் படம் இருந்தது. அந்த இளைஞர்களுக்குள் தனது மூன்றாவது அண்ணனும் இருப்பதை கண்டாள்.

அதன் பின்னரே தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவனை தேடி அலைந்து கொண்டும் அண்ணனை மீட்பதற்காகவும் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்.

கணவனையும் இழந்து மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்து மூன்றாவது ஆண் மகனையும் தொலைத்து விட்டு நான்காவது பெண் பிள்ளையுடன் சேர்ந்து தொலைந்து போன தன் மூன்றாவது மகனை பற்றிய தகவல் அறிய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமியின் தாய்.

தொலைந்த தன் மூன்றாவது மகனை பற்றிய தவல்களை அறிய அந்த தாய் செல்லாத இடம் இல்லை எங்கும் அவனை பற்றிய தகவல்களை அந்த தாயால் அறிய முடியவில்லை.

தன் மகன் இன்றும் உயிருடன் ஏதோ ஓர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றே அந்த தாய் நம்புகிறாள்.

தன் மகனை உடனே விடுதலை செய்யாவிட்டாலும் அவனை பற்றிய தகவல்களையாவது தெரிவியுங்கள் என்று கோரியே அனைத்து போராட்டங்களிலும் அந்த தாய் கலந்து கொண்டு கதறி அழுகிறாள்.

அதேவேளை அந்த தாய் தனது நான்காவது பிள்ளையான அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றியும் கவலையுடன் இருக்கிறாள்.

குறித்த சிறுமி பற்றி தாய் கூறுகையில்

இவள் அண்ணா வேணும் என்று அழுது கொண்டு இருக்கிறாள். படிப்பில் கவனம் செலுத்துகிறாள் இல்லை. வீட்டிலும் வெறித்து பார்த்து கொண்டு இருப்பாள். திடீர் திடீர் என அண்ணா வேணும் என அழுவாள்.

ஏம்மா அண்ணாவை விடுனம் இல்லை ? அண்ணாவை எங்கே தடுத்து வைச்சிருபாங்கள் ? அண்ணாவை இன்னுமா சித்திரவதைப்படுத்துவாங்க ? எப்ப அம்மா அண்ணாவை விட்டுவாங்க ? என்றெல்லாம் கேட்டு அழுவாள் எனக்கு என்ன சொல்லுரதேன்றே தெரியாமல் இருக்கும்.

பள்ளிக்கூடம் போகாமல் என்னோடு போராட்டங்களில் கலந்து கொண்டு அண்ணா வேணும் என்று அழுகிறாள். பள்ளிக்கூடம் போய் படி என்றா அண்ணா முதல்ல வரட்டும் அப்புறம் படிக்கலாம் என்கிறாள்.இப்ப இவளை நினைச்சு இவள் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது.என அன்று ஒருநாள் அவள் தாயார் கூறினார்.

அந்த சிறுமியோ என் அண்ணா எங்கே ? என் அண்ணாவ எங்கே வைச்சிருக்கிறீங்க ? ஏன் என் அண்ணாவை என்கிட்ட இருந்து பிரிச்சு ஏன் என்னை அநாதை ஆக்கினீங்க ? எனக்கு என் அண்ணா வேணும் என கதறி அழுது கொண்டே இருந்தவள் இன்று அவளும் கடத்தப்பட்டு விட்டாளாம்.

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பெண் பூஸா முகாமில் அடைப்பு! [ பி.பி.சி ]

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் வியாழனன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் நேற்று வெள்ளியிரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தாயாராகிய ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கவலை

இதேவேளை, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விஜயக்குமாரியின் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றிவளைப்பு காரணத்தினாலும் பெண்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலை நீடித்திருந்ததாலும், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதாக, அங்கு சென்று திரும்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.

காணாமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரி, விபூசிகாவை விடுதலை செய்யக்கோரி இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்[ சனிக்கிழமை, 15 மார்ச் 2014,  ]

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரி அவரது மகள் விபூசிகாவையும் விடுதலை செய்யக்கோரி இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரும்புரம், கிளிநொச்சியிலுள்ள முசலம்பிட்டி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி, மற்றும் அவரது மகள் விபூசிகா பாலேந்திரன்(13வயது) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் 13 ஆம் திகதியன்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது நீதிக்குப் புறம்பான கைதுகளைக் கண்டித்தும் அவர்கள் இருவரதும் உடனடியான விடுதலைக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டம் வவுனியா பஸ் தரிப்பு நிலையம் முன்பாக காலை 11.00 மணி – 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் சகல வேறுபாடுகளையும் மறந்து அனைவரையும் கலந்து கொண்டு ஜெயக்குமாரியினதும் அவரது சிறிய மகளுடையதும் விடுதலைக்கு வலுச் சேர்க்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும், சட்டவிரோத கைதுகளை கண்டித்தும், காணாமல் போனோர் தொடர்பில் சிறீலங்கா அரசை பதிலளிக்குமாறு கோரியும், வவுனியா நகரப்பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச்செயலர் பாஸ்கரா, மனித உரிமை செயல்பாட்டாளர் பிரிட்டோ, பெண்கள் மனித உரிமை அமைப்பினர், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், ரவிகரன், தியாகராசா, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் செபமாலை அடிகளார்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி.தேவராசா, வவுனியா மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடும் சங்கத்தலைவி பாலேஸ்வரி, மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் மகேந்திரம், காணாமல் போன தம் உறவுகளை தேடும் குடும்பங்கள், தம் பிள்ளைகளின் விடுதலைக்காக ஏங்கும் குடும்பங்கள், அரசின் ஜனநாயக மறுப்பு சம்பவங்களால், ஏதேச்சதிகாரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமுக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பை பலமாக வெளிப்படுத்தினர்.

Advertisements