சென்னையில் ஐ.நா. அலுவலகத்துக்கு பூட்டு: கொடியை கிழித்தெறிந்த மாணவர்கள்! [

சென்னை: சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்குள் புகுந்த மாணவர்கள், அலுவலக வாயில்களுக்கு பூட்டு போட்டதோடு, கொடியையும் கிழித்து எறிந்தனர்.student protest un 2

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்குள் இன்று காலை 11 மணியளவில் உள்ளே புகுந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், 20 அடி கம்பத்தில் பறந்து கொண்டிருந்த ஐநா சபையின் கொடியை இறக்கி கிழித்துப் போட்டனர். மாணவர்களின் திடீர் நுழைவால் ஐநா அலுவலகமே அல்லோலப்பட்டது.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஐநா அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்தனர். தொடர்ந்து, ஐநா அலுவலகத்தின் வாயிற் கதவுகளை பூட்டுப் போட்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கையில் பொதுவாக்கெடுப்பை ஐநாவே கொண்டுவர வேண்டும். தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்ற கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இத்திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மாணவர்களுடன் ஐநா சபை ஊழியர்கள் சமாதானம் பேசினர். தங்கள் உயரதிகாரிகளுக்கு இந்த தகவலை எடுத்துச் செல்வதாகவும் உறுதி கூறினர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த போதும், உடனடியாக பூட்டுக்களை உடைத்துக் கொண்டு அவர்களால் ஐநா அலுவலகத்தின் உள்ளே வர முடியவில்லை. கஷ்டப்பட்டு போராடி உள்ளே நுழைந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்து பெசன்ட்நகர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரபாகரனிடம் பேசியபோது, “ஐநாவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுக்கவே இன்றைய போராட்டத்தினை முன்னெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வேண்டி தமிழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் உறுதியான போராட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐநா அமர்வுகளில் நிச்சயம் எதிரொலிக்கும். எங்களது உறுதியான நிலைப்பாடுகளை பலமுறை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லிவிட்டோம். அதற்கேற்ப ஐநா சபை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.

செ.கிரிசாந்
விகடன் ][ Mar 13 10:10 GMT ]

Advertisements