ஈழப்போராட்டத்தில் தென்னாபிரிக்காவின் வகிபாகமும் காத்திருக்கும் பொறியும்

மார்ச் மாதம் 3ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடர், ஆரம்பத்திலேயே தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை அழித்துள்ளதாக, தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் உள்ள தொடர்புகளினூடாக அறிய முடிகிறது. தமிழர்களின் அபிலாசைகளையும் மனத்குறைகளையும் கவனத்திற்கொள்ளாமையே இதற்கான காரணமாகும். இருப்பினும், ஜெனிவா களத்தையும் பூகோள அரசியலையும் புரிந்தவர்களுக்கு இந்த தீர்மான வரைபு அதிர்ச்சிகரமானதல்ல.uno dead org

ஆயினும், வெளிவந்துள்ள தீர்மான வரைபு, சாதாரண தமிழ் மக்களின் மனோதிடத்தை பாதிக்கச் செய்துள்ளது. ஆனால், போராடும் இனமொன்று, இந்த பாதிப்பிலிருந்த விடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில், தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு போன்ற மாதிரி தோற்றப்பாட்டுடன், ஈழத்தமிழர்களுக்கு மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது. சாவால்களை முறியடிக்க தமிழர்கள் தாமதிக்கின்ற ஒவ்வொரு கணத்திலும், எதிரிகளின் நிகழ்ச்சி நிரல் வலுவடைகிறது. இந்த நிலை தொடர்ந்தால், முடிவற்ற கட்டமைப்பு சார் இனஅழிப்புக்குள் சிக்கியுள்ள தமிழினம், முற்றுமுழுதாக அழிவது தடுக்க முடியாததாகிவிடும். ஆகவே, தமிழர் தேசத்துக்கு எதிராக பின்னப்பட்டுள்ள சதிவலையும், அது தொடர்பாக மாயைகளை உருவாக்குவோரையும் இனம் கண்டு, அவற்றை முறியடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு முன்னுள்ளது.

அந்த அடிப்படையில், இலங்கைத் தீவின் இனகுழும மோதுகையில் தென்னாபிரிக்காவின் வகிபாகம் எத்தகையது, தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பின்னணியையும் அதன் மாதிரி ஏன் இலங்கைத் தீவில் வெற்றியளிக்காது என்பதையும் ஆராய முற்படுகிறது இந்த பத்தி.

இலங்கைத் தீவின் இனகுழும மோதுகையில் தென்னாபிரிக்காவின் வகிபாகம்

நிறவெறி ஆட்சி (Apartheid) நிலவிய 1980களின் இறுதிக் காலப்பகுதியிலும் 1990களின் ஆரம்பத்திலும் சிறீலங்கா இராணுவத்துக்கு பவள் ரக கவசவாகனங்களை வழங்கியதனூடாக, தென்னாபிரிக்காவிற்கும் சிறீலங்காவிற்குமான உறவு முக்கியத்துவமடைந்தது. இந்த பவள் ரக கவச வாகனங்கள், நடை ரோந்து சென்ற சிறீலங்கா இராணுவத்தினர் மீது தொடர்ச்சியாக இடம்பெற்ற தாக்குதலால் உளவுரண் பாதிக்கப்பட்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினருக்கு புத்தென்பை அளித்திருந்தது. கிழக்கு மாகாணத்தித்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினர் பவள் கவச வாகனத்தை அதிகமாக பயன்படுத்தியதாக அறியமுடிந்தது. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மேஐர் அழகன் தலைமையிலான அணி, வவுனியாவில் பவள் கவச வாகமொன்றை கைப்பற்றியதுடன் விடுதலைப் புலிகளின் மனோதிடம் மீள அதிகரித்ததாக வரலாற்றியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு இராணுவ ரீதியிலான மனோதிடம் சூழற்சி முறையில் நகர்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில், தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆயினும், சிறீலங்காவுக்கும் தென்னாபிரிக்காவிற்குமான உறவுகள் சராசரியாக தொடர்ந்தன.

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 பெப்ரவரி மாதம் கைத்சாத்திட்ட பின்னர், அதி உயர் பாதுகாப்பு வலய விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. அதனை தீர்ப்பதற்காக, சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் முன்னால் மூத்த இராணுவ அதிகாரியான சதீஸ் நம்பியாரை ஆலோசனைக்கு அழைத்தது. அவருடைய அறிக்கை அதி உயர் பாதுகாப்பு வலய சர்ச்சையை சீராக்க உதவவில்லை. ஆதலால், பாதுகாப்பு மறுசீரமைப்பில் (Security Sector Reform) நிபுணத்துவமும் பக்கசார்பற்றவருமான தென்னாபிரிக்காவின் றொக்கி வில்லியமஸ் அவர்கள் அழைக்கப்பட்டார். றொக்கி வில்லியம்ஸ் தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் இராணுவப்பிரிவில் ஒரு இராணுப் பொறுப்பதிகாரியாக பணியாற்றியவர். பின்னர், தென்னாபிரிக்கா பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு கொள்கைகளுக்கான பணிப்பாளராக செயற்பட்டவர். இலங்கைத் தீவுக்கு வந்த அவர், வடக்கு கிழக்கு பகுதிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் சிறீலங்கா இராணுவத்திடமும் கலந்துரையாடி, பூர்வாங்க அறிக்கை சமர்ப்பித்த போதும், அதி உயர் பாதுகாப்பு வலய சர்ச்சை தீரவில்லை. இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவானவர் என்ற கருத்து சிங்கள இனவாதிகள் மத்தியில் அக்காலப்பகுதியில் நிலவியதாக அறியமுடிந்தது.

இத்தருணத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஒரு தளம் தென்னாபிரிக்காவில் இருந்ததும், அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள், போர்நிறுத்த காலப்பகுதியில் தென்னாபிரிக்கா சென்று, ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் உட்பட்ட தரப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தென்னாபிரிக்காவின் தற்போதைய பிரதி வெளிவிவகார அமைச்சராக உள்ள இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிம் அவர்கள் 2002 சமாதான முன்னெடுப்புகள் தொடர்புபட்ட விடயங்களின் பிரகாரம் இலங்கைத் தீவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது, பல்வேறு தரப்புகளோடும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். தற்போது சிறீலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்சவுடன் இருக்கும் நெருக்கத்திற்கான அடித்தளம் அப்போது இடப்பட்டது என்ற குற்றச்சாட்டு இன்றும் நிலவுகிறது. 2009 பின்னர், இலங்கைத் தீவில் அரசியல் தீர்வுக்கு அனுசரணை வகித்தல் என்ற பெயரில், சிறீலங்கா அரசாங்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றுடன் பல சந்திப்புகளில் இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிம் முக்கிய பங்கினை ஆற்றுகிறார் என்ற செய்திகள் கசிகிறது. இந்த முத்தரப்புகளுக்கு மத்தியில் ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் மார்ச் 7ம் திகதி அதிகாலை இறுதியாக கிடைத்த தகவலின் படி, பிரதி வெளிவிவகார அமைச்சராக உள்ள இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிம், ஆளும் ஆபிரிக்கா தேசிய கொங்கிரஸின் பிரதி சனாதிபதி சிறில் ரமபோச மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆபிரிக்கா தேசிய கொங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைத் தீவில் சமாதானத்துக்கும் நீதிக்குமான ஒருமைப்பாட்டு குழுவுக்கும் இடையில் டேர்பன் நகரிலுள்ள சிறீ மாரியம்மன் பண்பாட்டு நிலையத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், நிலையான அரசியல் தீர்வை இலங்கைத் தீவில் உருவாக்கும் முகமாக, விசேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோச அவர்களும் மற்றும் இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிம் அவர்களும் இலங்கைத் தீவுக்கு சென்று, இனகுழும மோதுகையோடு சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளுடனும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிம் சிறீலங்காவில் அதிக முதலீடுகளை கொண்டுள்ளதோடு, மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவை பேணுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ள பின்னணியிலே, இன்றைய சந்திப்பில் தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கும் ஆபிரிக்கா தேசிய கொங்கிரஸின் உறுப்பினர்களிற்கும் விளக்கமளித்த தமிழர் பேரவையின் செயலாளர் பிறெகஸ் படையாச்சி;, சிறீலங்காவிற்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பாக தாம் கரிசனை செலுத்துவதாக குறிப்பிட்டார். அடக்கு முறையும் மனித உரிமை மீறல்களும் நடைபெறுகின்ற, நில அபகரிப்பும் பெண்கள் மீதான வன்முறையும் தொடருகின்ற ஒரு நாட்டோடு, பெறுமானங்கள், கொள்கை மற்றும் தார்மீகத்தை பேணுகின்ற நாம் வர்த்தக உறவை மேற்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

இத்தருணத்தில், கடந்த நவம்பர் மாதம் பொதுநலவாய மாநாடுகளின் அரச தலைவர்களின் கூட்டத்துக்கு சென்றிருந்த தென்னாபிரிக்க சனாதிபதி ஜக்கொப் சூமா அவர்களுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பில், சிறீலங்கா தரப்பே தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தொடர்பாக பிரேரித்ததாகவும், தாம் நிலையான அரசியல் தீர்வு தொடர்பாக மட்டுமே பேசியதாகவும் இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிம் இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

இந்த அடிப்படையில் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் 25ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர், சிறீலங்காவின் விசேட குழு ஒன்று தென்னாபிரிக்க சென்று சிறீலங்காவுக்கான விசேட தூதுவராக றியமிக்கப்பட்டுள் சிறில் ரமபோசவை சந்தித்ததையும், விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்க வரவுள்ளதாகவும் சிறில் ரமபோசவும் இப்ராகிம் இஸ்மயில் இப்ராகிமும் இந்த சந்திப்பில் வெளிப்படுத்தினார்கள். இவை, இலங்கைத் தீவின் இனகுழும மோதுகையில் தென்னாபிரிக்காவின் முக்கிய வகிபாகங்களில் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பின்னணியில், தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தொடர்பாக ஆராய்வோம்.

உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு

நிறவெறி ஆட்சிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், 1995ல் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம், தென்னாபிரிக்காவில் தேசிய ஒருமைப்பாட்டையும் மீள் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது. ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பக்கத்துணையாக விளங்கிய பெருந்தலைவர் நெல்சன் மண்டேலா, மன்னிப்பேன் ஆனால் மறக்க மாட்டேன் எனக் கூறியமையும் இத் தருணத்தில் நினைவிற் கொள்ளப்பட வேண்டியது.
Image
1960 – 1994 வரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பது, நஸ்டஈடு வழங்குவதும் புனர்வாழ்வும் மற்றும் பொது மன்னிப்பு ஆகிய விடயங்களின் அடிப்படையில் மூன்று குழுக்கள் அமையப்பெற்ற ஆணைக்குழுவிற்கு, கிறிஸ்தவ மத அனுட்டானங்களும் நம்பிக்கையும் பக்கத்துணையாக விளங்கின. இதன் தலைவராக செயற்பட்ட வணக்கத்திற்குரிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்கள், சர்ச்சைக்குரியதாக விளங்கும் பொதுமன்னிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது, உண்மைக்காக சுதந்திரம் பரிமாற்றப்பட்டது என குறிப்பிட்டிருந்தார். கெறிபேட் அடம் என்ற கல்வியிலாளர் பொதுமன்னிப்பு தொடர்பாக கருத்துரைக்கும் போது, உண்மைக்கா நீதி விற்கப்பட்டது என அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கும் பெரும்பான்மை கறுப்பினத்தவருக்குமிடையில் மோதுகை நிகழ்ந்த போதும், இரு தரப்பினரதும் மதம் ஒன்றாகவே காணப்பட்டது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, உண்மைகளை வெளிப்படுத்துவதனூடாக மீள் நல்லிணக்கத்தை உண்டாக்குவதை இலக்காக கொண்டு செயற்பட்டது தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு. இந்த ஆணைக் குழுவின் செயற்பாட்டிற்கமைய, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இது, பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு கடும் அதிருப்திதையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியது. சர்வதேச ரீதியாக தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒப்பீட்டளவில் சிறந்ததாக கூறப்பட்டாலும், உள்நாட்டில் தற்போதும் இந்த ஆணைக்குழு தொடர்பாக விமர்சனங்கள் நிலவுகிறது.

தென்னாபிக்கா மாதிரியிலான உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஏன் இலங்கைத் தீவுக்கு பொருத்தமற்றது?

இலங்கைத் தீவில் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், மோதுகை (Conflict) இன்னும் முடிவுக்கு வரவில்லை. இனக்குழும மோதுகைக்கு (Ethno-political Conflict) காரணமான விடயங்களுக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த போர் சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும், சர்வதேச மனித உரிமை சட்டத்தையும் மீறியே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையிலேயே, இறுதிக் கட்டப்போரில் போர்க் குற்றங்களும், மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களும், மற்றும் போரின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரையான முழுக் காலப்பகுதியையும் கருத்தில் கொள்ளும் போது, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு இனஅழிப்பும் நிகழ்த்தியதாக பதிவுசெய்யப்படுகிறது. அவற்றிற்கும் அப்பால், தற்போது தமிழர் தேசம் கட்டமைப்புசார் இன அழிப்பை எதிர்கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில், இவை சாதாரண மனித உரிமை மீறல்கள் இல்லை. மேற்குறித்த சர்வதேச சட்டங்கள் பாரதூரமாக மீறப்பட்ட சம்பவங்கள். ஆதலால், தென்னாபிக்காவின் உண்மை மற்றும் மீள் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு போன்ற உள்நாட்டு பொறிமுறையால் இத்தகைய விடயத்துக்கு தீர்வு காணமுடியாது. அத்துடன், சிறீலங்கா அரசின் நீதிமன்றங்கள் தமிழர் தேசத்துக்கு நீதியை வழங்காதென்பது வரலாறு கற்றுத் தந்துள்ள பாடம். அதேவேளை, சிறீலங்கா அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்துமே, சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தப்புவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு நாடகங்களே. அதேவேளை, குறித்த ஆணைக்குழுக்களுக்கு குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சட்டக் கடப்பாடுகளும் இல்லை.

நாங்கள் வெற்றி பெற்றவர்கள். வெற்றிபெற்றவர்கள் வரலாற்றில் தண்டிக்கப்படுதில்லை என்ற மமதை ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையிலும் நீடிக்கிறது. இனஅழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்டவர்கள், அதற்கு கட்டளை வழங்கியவர்கள் எல்லாம் தண்டனைகள் அளிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களோ தொடந்தும் இனஅழிப்புக்கு முகம்கொடுத்தபடியுள்ளனர். இத்தகைய சூழலில், மீள்நல்லிணக்கம் என்ற மாயையை உருவாக்க சிறீலங்காவம் அதன் நேச சக்திகளும் முற்படுகின்றன.

அத்துடன், போரில் மரணமடைந்த தமது உறவுகளை நினைவுகொள்வது, போரில் உயிர்நீர்த்தவர்கள் தொடர்பான கல்லறைகள், நினைவுத் தூபிகள் போன்றவற்றை பேணிப் பாதுகாப்பது போன்றவை மீள்நல்லிணக்க முன்னெடுப்பில் முக்கியமானவை. ஆனால், தமிழ்மக்களுக்கோ முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் உச்சக்கட்டமான மே மாத நடுப்பகுதியில் கூட தமது உறவுகளை நினைவு கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிங்கள தேசமோ குறித்த காலப்பகுதியை வெற்றிவிழாவாகக் கொண்டாடுகிறது. மேலும், அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும், நினைவுத் தூபிகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறீலங்கா படைகளுக்கு நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட, இறுதிப் போர் நடைபெற்ற பிரதேசங்கள் சுற்றுலா மையங்களாகவும், உல்லாச விடுதிகளாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியான அனுபவங்களின் அடிப்படையிலும், மீள்நல்லிணக்கம் தொடர்பான கற்கைநெறிகளின் அடிப்படையிலும் மேற்கூறியது போன்ற செயற்பாடுகள் இதயசுத்தியான மீள்நல்லிணக்கத்திற்கு மிகப் பாதகமான விடயங்கள். அத்துடன், தமிழ் மக்களுக்கு உள்நாட்டில் தொடர்ச்சியாக நீதி மறுக்கப்பட்டுவருகிறது. ஆதலால், மீள்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உகந்த சூழலோ, அதற்கான அடிப்படையோ உருவாக்கப் படவில்லையென்பது கள யதார்த்தம்.

இத்தகைய சூழலில், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பாணியில், இலங்கைத் தீவில் ஒரு பொறிமுறை உருவாக்கப் போவதென்பது, சர்வதேச அழுதங்களை தவிர்ப்பதற்கான வெறும் ஏமாற்று வித்தையே அன்றி வேறொன்றுமில்லை. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கதற்திற்கான ஆணைக்குழுவின் உண்மை முகம் வெளியே தெரியவர, சிறீலங்கா அரசாங்கத்தின் மீது மென்மையான அழுத்தம் ஒன்று உருவாகிறது. இதனை முறியடிப்பதற்கும், சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்குமான ஒரு சிறந்த மார்க்கமே, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவினை அமைக்கப் போகிறோம் என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் பிரச்சாரம்.

தமிழர் தேசத்தின் மீது இனஅழிப்பை மேற்கொண்டிருப்பர்கள், சர்வதேச சட்டங்களிலிருந்து தப்புவதற்காக தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவினை ஒரு கவசமாக பாவிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆகவே, இத்தகைய முயற்சிக்கு எத்தகைய ஒரு தரப்பும், எந்தக் கட்டத்திலும் துணை போகக்கூடாது. குறிப்பாக, தமிழத் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று கடமையை உணர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட வணக்கத்திற்குரிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களே, சுதந்திரமான சர்வதேச விசாரணையே இலங்கைத் தீவில் நீலையான சமாதனத்திற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில், அவரோடிணைந்து அந்த மனுவில் கையொப்பமிட்டுள்ள ராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்த முனைகின்ற உள்நாட்டு பொறிமுறைக்கு துணைபோகக்கூடாது. அதனையும் தாண்டி மகிந்த ராஐபக்க அரசாங்கத்தை காப்பாற்ற யாராவது முனைந்தால் அவர்களுக்கு பொருத்மான பதிலை வழங்குவதற்குகான செயற்திறன் மிக்க மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மனச்சாட்சியுள்ள தலைமைகள் முன்வரவேண்டும்.

குறிப்பு: இந்தக் கட்டுரை முதன்முதலாக 2014 மார்ச் 09ம் திகதி ஞாயிறு தினக்குரலிலும், 2014 மார்ச் 10ம் திகதி குளோபல்தமிழ்நியுஸ் இணையதளத்திலும் பிரசுரிக்கப்பட்டது.

 

Advertisements