சனல்-4 வின் புதிய காணொளி! ,எதுவும் தெரியாதென்கிறது ஐ.நா –

srilanka execution_war crimesஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை சித்தரித்துக் காட்டும் சனல் 4 தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய புதிய காணொளி குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் காணொளி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் புதிய பேச்சாளரான ஸ்ரிபன் துஜாரிக் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை குறித்து கடந்த ஒரு சில தினங்களாக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் மாற்றமேதும் காணப்படவேயில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான குறித்த காணொளியை நான் இதுவரை பார்க்கவேயில்லை. முன்னாள் ஐ.நா. வின் பேச்சாளரான மார்ட்டின் இலங்கை விவகாரம் பற்றியும் அது குறித்து செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடு குறித்தும் விரிவான முறையில் பேசியுள்ளதாகவே நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான விடயத்தில் பலத்த வாதங்கள்! முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்பட கடும் அழுத்தம்

இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளின் வாதங்கள் பலமடைகிறது. அமெரிக்காவின் அறிக்கை தொடர்பில் கனடா, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கிறது என பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் நிக்சன் ஆகியோர் தெரிவித்தார்

இலங்கை தொடர்பில் ஐ.நாடுகள் சபையில் அறிக்கைகளில் பாரிய நெருக்கடி, வெல்வதில் மாற்றமில்லை என பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் சனல் 4 இன் ஆதாரம் தொடர்பிலும் இன்னும் பல ஆதாரங்கள் எம்மிடம் உண்டு என பிரித்தானிய தமிழர் பேரவையின் வெளிவிவகாரங்களுக்கான இணைப்பாளர் நிக்சன் ஆகியவர்கள் ஐநாவில் உள்ள லங்காசிறி வானொலியின் விசேட கலையகத்தில் வழங்கிய செவ்வியில் தெரிவித்தனர்.

இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையிடம் ஒப்படைக்கும் போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க முடியும் என்பது தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற விவாதங்களில் ஆராயப்பட்டன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் கடந்த வெள்ளியன்று நடந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்த விவாதங்கள் நடந்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கை மீது விசாரணை நடத்துவதற்கு ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு அதிகாரங்கள் இல்லை. அதற்கான நிதிவளம் ஆணையத்திடம் இல்லை என்றும் வாதிட்டுள்ளன.

நவநீதம்பிள்ளையின் அறிக்கை இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்துகின்ற நிலையில், அந்த விதமான ஏற்பாடுகள் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வாதிட்டுள்ளன.

கால நீடிப்பு வழங்கினால் இருக்கும் ஆதாரங்களும் அழிந்து விடும் என கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கக் கூடிய மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்ணான்டோ மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.uno dead org

**

இலங்கைக்கு மேலும் எவ்வளவு காலம் வழங்குவது?: சீனாவிடம் கேள்வி எழுப்பிய கனடா

இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்கனவே மூன்று வருட கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் எனினும் நாட்டின் மனித உரிமைகளை மீறிய நபர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரவில்லை எனவும் கனடா தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தலைமையில் 5 நாடுகள் கொண்டு வரும், இலங்கை அரசாங்கம் சம்பந்தமான தீர்மானம் தொடர்பில் நேற்று நடைபெற்ற இரண்டாவது கலந்துரையாடலில் கனடா இதனை கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாம் நோக்குவதாகவும் மேலும் எவ்வளவு காலம் காத்திருப்பது என்றும் கனடா கேள்வி எழுப்பியுள்ளது.

30 வருடகால போர் முடிவுக்கு வந்த 5 வருடங்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் சீனா முன்வைத்த யோசனை தொடர்பில் பதிலளிக்கும் போது கனடா இந்த கேள்வியை எழுப்பியது.

சீனாவின் தர்க்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இதனை பாதிக்கப்பட்டவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் போர் முடிந்த 5 வருடங்களாக நியாயத்திற்காக காத்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போன தமது உறவினர்களை தொடர்பில் 10 வருடங்களுக்கு மேலாக நியாயத்தை கோரி வருகின்றனர்.

இலங்கையின் ஆளும் அரசாங்கம் மனித உரிமைகளை மீறிய நபர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர எந்த நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால், அவர்களுக்கு மேலும் எவ்வளவு காலம் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கனடா கேள்வி எழுப்பியது.

கனடாவின் இந்த கேள்வியை கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஏனைய நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா தலைமையில் 5 நாடுகள் கொண்டு வரும் தீர்மானம் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடல் ஜெனிவா நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் தீர்மானம் பற்றிய முதல் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றதுடன் நேற்றைய தினம் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொறிமுறை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தீர்மானத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு மட்டுமல்லாது அனைத்து மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று லத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டு திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் தீர்மானத்தின் 10 பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த பரிந்துரைகளில் இரண்டாவது பரிந்துரையில் இலங்கை உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் எட்டாவது பரிந்துரையில் ஜ.நா மனித உரமை ஆணைக்குழு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடானது என பாகிஸ்தான் சுட்டிக்காட்டியதை ஏனைய பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளின் பிரதிநிதிகள் அதில் முரண்பாடுகள் இல்லை எனவும் இலங்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உள்நாட்டில் விசாரணைகளை நடத்தினால் அதற்கு உதவியளிக்கப்படும் எனவும் அப்படியான விசாரணை நடத்தப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

தீர்மானத்தின் இரண்டாவது பரிந்துரையை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தினால் 8வது பரிந்துரை அவசியமற்றது என்றும் அந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இதன் பின்னர், சர்வதேச விசாரணையில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பங்களிப்பு எப்படியானதாக இருக்க வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.

இந்த விசாரணைகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட குழுவினால் நடத்தப்பட வேண்டுமா?. அல்லது பிரதிநிதி ஒருவரின் கீழ் நடத்தப்பட வேண்டுமா? எனவும் அதற்கான வழிவகைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அப்படியான அதிகாரங்கள் இல்லை என பாகிஸ்தானும் கியூபாவும் இதன் போது தெரிவித்தன.

இதற்கு பதிலளித்த இத்தாலி, சுவிஸர்லாந்து, கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், இதற்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு வேறு நாடுகளில் இப்படியான விசாரணைகளை நடத்திய விதத்தை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினர்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் கூட இவ்வாறான விசாரணைகளை நடத்துவதற்காக வழிவகைகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், ஊடக சுதந்திரம், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் குறித்து ஆராய ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 8 பிரதிநிதிகள் இலங்கைக்கு செல்ல அனுமதி கோரப்பட்டிருந்த போதும் இலங்கை இதுவரை இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் 8 பிரதிநிதிகளும் இலங்கை செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை ஒஸ்ரியா கொண்டு வந்தது.

இதன் பிறகு இலங்கையின் சிவில் அமைப்புகள் சார்பில் சட்டத்தரணி நிமால்கா பெர்ணான்டோ உரையாற்றினார்.

இலங்கையில் மனித உரிமை மீறப்படும் மண்ணில் இருந்து தான் வந்துள்ளதாக அவர் கூறினார்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கில் இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் எவ்விதமான நியாயமான விசாரணைகளை ஆட்சியாளர்கள் நடத்துவதில்லை என்பதால் தான் சர்வதேச விசாரணைகளை கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கின் சிவில் அமைப்புகள் சார்பில் கூட்டத்தில் பேசிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தின் உதவி அவசியம் எனக் கூறினார்.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரும் அமெரிக்கா, பிரித்தானியா, மொண்டிநீக்ரோ, மெசிடோனிய மற்றும் மொரீசியஸ் ஆகிய 5 நாடுகளின் பிரதிநிதிகள் தலைமை தாங்கியமை முக்கிய அம்சமாக இருந்தது.

ஆனால் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மூன்று நாடுகள் மட்டுமே தலைமை தாங்கின.

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சார்பாக இந்த கலந்துரையாடலிலும் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் குரல் கொடுத்தன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல் கொடுத்தன. இந்திய நேற்றைய தினம் மௌமாகவே இருந்தது. மாலைதீவு ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. தென் கொரியா நடு நிலை வகித்தது. மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து குறித்து மட்டுமே பேசின. ஆப்பிரிக்க நாடுகள் அமைதியாகவே இருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேற்றைய கலந்துரையாடலில் ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே கலந்து கொண்டதுடன் அவர் எதுவும் பேசவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனிவா மாநாட்டுக்கு வந்துள்ள பிரதிநிதிகளில் சிலர் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ளாது சுவிஸ் சொக்லட்டுகளை கொள்வனவு செய்ய கடை கடையாக ஏறி இறங்குவதை காணக் கூடியாதாக இருந்தது.

அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் ஜெனிவாவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை காணமுடிந்தது.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் மீதான திருத்தங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இன்றுடன் முடிவடைகிறது. இறுதி தீர்மானம் ஒரு வாரத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை தொடர்பில் இன்று (11) நடைபெறும் கலந்துரையாடலில் இலங்கையின் ஜனநாயகம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

Advertisements