ஜெனீவாவினில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையினை கூட்டமைப்பு கோரவில்லை! அம்பலப்படுத்தினார் அனந்தி!!

தமிழத் தேசியக் கூட்டமைப்பு சார்பினில் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பினில் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை.TNA

என்னையும் ஏதும் பேச அனுமதிக்கவில்லையென அம்பலப்படுத்தியுள்ளார் அனந்தி சசிதரன். யாழ் ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பினில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணசபையினில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பினில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வகையினில் தமிழரசுக் கட்சியின் அனுசரணையுடன் நான் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியினில் ஜெனீவா சென்றிருந்தேன்.

அங்கு சென்று இறங்கியதுமே தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப்புலிகளது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன் என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற்றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

18 நாட்டு ராஜதந்திரிகள் சகிதம் கடந்த பெப்ரவரி 13 இனில் இடம்பெற்ற ஜெனீவா சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டிருந்த சுமந்திரன் போர்க் குற்ற விசாரணை தொடர்பாகவோ இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை.வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன்.குறுக்கிட்ட அங்கு பேசியிருக்க முடியுமாயினும் ராஜதந்திரிகளிடையே கௌரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி மற்றொரு கேள்விக்கு அங்கு பதிலளித்தார். ஏதாவதொரு பிரேரணையினை கொண்டுவந்தால் போதுமென்பதே அவரது நிலைப்பாடாகவுமிருந்ததெனவும் அவர் தெரிவித்தார்.

ஜெனீவாவினில் ஓர் போர்க்குற்ற விசாரணை வருமென நம்பிருந்த எமது மக்கள் விரக்திக்குள்ளாகியிருக்கிறார்கள். காணாமல் போனோர் தொடர்பினில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது. எமது மக்கள் கடும் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளார்கள். இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராதென எமது இளம் சமுதாயம் கருதி மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அகிம்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்குமெனவும் அனந்தி தெரிவித்தார்.

**

அனந்தியின் ஜெனீவாப் பயணம் மறைக்கப்பட்ட உண்மைகள்!

கடந்த மாதம் 27ம் திகதி வடக்கு மாகாண சபையின் அமர்வு இடம்பெற்றபோது ஜெனீவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வடமாகாண சபை உறுப்பினர்களும் செல்லவேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்திருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக இரு தினங்களின் பின்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கிய வட மாகாணசபை, ஜெனீவாவுக்குச் செல்வதற்குப் பொருத்தமானவர் அனந்தியே என்றும் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், திடீரென ஜெனீவாவிற்குப் புறப்பட்டுச்சென்ற அனந்தி அவர்கள் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. வடமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு அமைய அதன் பிரதிநிதியாக வடமாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைமப்பின் ஏற்பாட்டில் ஜெனீவாவுக்கான இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த அனந்தி, ஜெனீவாவில் நடந்த சந்திப்பின்போது, இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக ஜெனீவா சென்று திரும்பியதன் பின்னர் யாழ் குடாவிலிருந்து ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

‘சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், ஜெனீவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து, போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளூர் விசாரணைகள் என்ற கண்துடைப்பு நடவடிக்கை தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக’ அவர் தெரிவித்திருந்தார்.

அனந்தியின் ஜெனீவாப் பயணம் குறித்து சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தன. அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்த பல்வேறு கைங்கரியங்களையும் மேற்கொண்டன. பயங்கரவாதத்திற்கு துணைபோனவராக அவரைக் குற்றஞ்சாட்டி, சுவிச்சர்லாந்து அரசு அவருக்கு விசா வழங்கக்கூடாது என்பது வரைக்கும் சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துப் பிரச்சாரம் செய்திருந்தன. ஆனாலும் அவரது பயணம் இடம்பெற்றது. இலங்கையில் இருந்து அவர் இரகசியமாக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கமுடியாது. இவரது பயணத்தின் பின்னர் சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் எவையுமே கண்டனங்களையோ எதிரான பிரச்சாரங்களையோ முன்னெடுக்கவில்லை என்பதில் இருந்து இந்தப் பயணம் குறித்த பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. இது குறித்து ஆராய முற்பட்டபோதே சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன.

அனந்தி, ஜெனீவாவில் உள்ள பிரமுகர்களைச் சந்தித்தபோது அவரது மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருந்திருக்கின்றார். மனித உரிமை அமைப்புக்களின் பிரமுகர்கள், மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் சிலர் இவர்கள் சந்தித்திருந்தனர். இவர்களைச் சந்தித்த அந்தப் பிரமுகர்கள் பின்னர் தெரிவித்த கருத்துத்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கும் அந்தப் பெண் (That lady) எதனையுமே வாய் திறந்து கதைக்கவில்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இறுதிப்போரின் ஒரு கண்கண்ட சாட்சியாக மட்டுமல்லாமல், இராணுவத்தினரிடம் சரணடைவதற்காகத் தனது கணவனை நேரடியாகக் கையளித்தவர்களில் ஒருவர், பல தகவல்களைக் கூறுவார் என எதிர்பார்த்த அவர்கள், அனந்தி எதனையுமே கூறாமையால் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இவர்கள் சந்தித்த பிரமுகர்களே, ‘என்ன இவர்கள் இவ்வாறு கதைக்கின்றார்கள்?’ என்று ஆச்சரியப்பட்டு, பின்னர் தங்களைச் சந்தித்த தமிழ்ப் பிரமுகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இலங்கையில் இருந்து எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜெனீவா வந்த அனந்தி, எதற்காக மௌனமாக இருந்தார். சிறீலங்காவில் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கருத்துக்களை வெளியிட்டுவரும் அவர், ஜெனீவா வந்து மௌனமாக இருந்திருக்கமாட்டார். இதனை ஆராய்ந்தபோதுதான் அவர் மௌனமாக்கப்பட்ட நிலைமையை அறியமுடிந்தது.

அனந்தியின் கணவரான எழிலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவராவார். விடுதலைப் புலிகளை மேற்குலக நாடுகள் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் நிலையில் அனந்தியையும் அவ்வாறே நோக்குவார்கள் எனவும், சந்திப்புக்களில் அனந்தியை வாய் திறக்க வேண்டாம். அவர் சார்பாக தானே கதைப்பதாகவும் கூறிய சுமந்திரன், இந்தச் சந்திப்புக்களின்போது அவரே அனந்தியின் சார்பாக உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்புக்களின்போது ‘சிறீலங்கா மீது சர்வதேச விசாரணைகள் தேவையில்லை என்றும் உள்நாட்டில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்துள்ள உள்ளக விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுத்தால் போதும்’ என்று அவர் கூறியுள்ளதாக அறியமுடிந்தது. அதாவது சிறீலங்கா அரசு எவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதோ அதற்கு ஆதரவான பிரச்சாரங்களையே சுமந்திரனும் மேற்கொண்டிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படும் தீர்மானங்களின் மூலம் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், சிறீலங்காவின் தமிழின அழிப்பை சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்வதற்கும், சிறீலங்காவின் முகத்திரையைக் கிழிப்பதற்கும் இங்கு கொண்டுவரப்படும் தீர்மானங்கள் உதவும் என்பதால், தமிழர்கள் இதற்கு பெரும் ஆதரவு கொடுத்துவருகின்றார்கள். சர்வதேச விசாரணைக்குச் சிறீலங்காவைத் தள்ளிவிடுவதன் ஊடாகவே சிங்கள தேசம் புரிந்த இனப்படுகொலை அம்பலத்திற்கு வருவதுடன், தமிழர்களின் நியாயத்தையும் வெளிக்கொண்டுவரமுடியும். இதற்கான கடும் முயற்சிகளைத் தமிழ் மக்கள் மேற்கொண்டிருக்கையில், அதனை முறியடிக்கும் வகையில் சிறீலங்கா தனது நேசநாடுகள் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்தநிலையில்தான், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்தவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுமந்திரன் சிறீலங்காவிற்கு ஆதரவாக ஜெனீவாவில் கதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரமுகர்களுடனான முக்கிய சந்திப்புக்கள் அனைத்திலும் எப்போதும் இரா.சம்பந்தனும், சுமந்திரனுமே கலந்துகொண்டு வருவதை அவதானிக்க முடியும். இந்த சுமந்திரன் 2009ற்கும் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்நுழைக்கப்பட்டவர். நியமன நாடாளுமன்ற உறுப்பினராக உள்நுழைந்த இவரது நடவடிக்கைகளுக்கும், கருத்துக்களுக்கும் எதிராகத் தமிழர் தாயகத்தில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் கடந்தகாலங்களில் எழுந்திருந்தன. இவரது உருவப்பொம்மையைக்கூட தூக்கிலிட்டுத் தமது எதிர்ப்பையும் தாயக மக்கள் பதிவாக்கியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பின்கதவு வழியாக உள்நுழைந்த இவரது செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருப்பதை அவ்வப்போது ஊடகங்களும் சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றன. இந்நிலையில், ஜெனீவாவில் இவர் செயற்பட்டவிதம் பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது.

2005ம் ஆண்டு டிசெம்பர் 25ம் திகதி தேவாலயத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஒட்டுக்குழுவின் சாதாரண ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கொள்ளமுடியாது. இதற்குப் பின்னால் உள்ள சூட்சுமக் கயிறு குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் பின்னணியைப் புரிந்துகொள்ளமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சர்வதேசத் தலைவர்களுடன் ஆளுமையைப் பேணக்கூடியவராக இருந்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அகற்றப்பட்டதும், அந்த வெற்றிடத்திற்குள் மொழி ஆளுமை என்ற பெயருடன் சுமந்திரன் நுழைக்கப்பட்டதற்கான விடை கிடைக்கமுடியும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

Advertisements