தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்!

வெற்றி என்பது ஒரே நாளில் அடைந்து விடுகிற விடயம் அல்ல. படிப்படியாக பல தளங்களில் போராடி உறுதிசெய்யப்படும் ஒரு விடயம் அது.

அமெரிக்காவினது தீர்மானமும் நவிபிள்ளை அம்மையாரின் அறிக்கையும் பெரும்பாலான தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது தேவையற்ற அதிர்சியும் கவலையும். ஏனென்றால் இது எதிர்பார்த்த ஒன்றுதான்.protest-uno - tamilnadu students

தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளியாகவும் மேற்குலகத்தை குறிப்பாக அமெரிக்காவை இரண்டாவது குற்றவாளியாகவும் நாம் தொடர்ந்து பேசி வருவதன் அடிப்படையையும் அதன் இராஜதந்திர பரிமாணத்தையும் புரிந்து கொண்டிருந்தால் இந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது.

எம்மை அழித்தொழிக்க வேண்டும் என்ற கொலைவெறியில் இருந்த இந்திய அதிகாரவர்க்கத்திற்கும் சிங்கள இனஅழிப்பு அரசுக்கும் தெளிவான பாதையை வரைந்து கொடுத்தது மேற்குலகம்தான். அதை மவுனமாக அங்கீகரித்தது ஐநா மன்றம்.

எனவே நாம் தொடர்ந்து போராடுவதற்கு இந்த புரிதல் அவசியம். மக்களை போலி நம்பிக்கைக்குள் தள்ளிய தமிழ் அமைப்புக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தீர்மான நகல் வெளியாகிய பின்னரும் கூட அமெரிக்காவை ஐநாவை வெளிப்படையாக கண்டிக்க முடியாமல் தமக்குள்ளாக முணுமுணுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வழமைபோல் தமிழக மாணவர்கள்தான் அமெரிக்க தூதரகத்தை முற்றுககையிட்டதுடன் அமெரிக்காவை தமிழ் மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டிவரும் என்று எச்சரித்து விட்டு திரும்பியிருக்கிறார்கள்.

இதுதான் நமக்கு தேவை. இந்த பேரம் பேசும் வல்லமையும் யாரையும் எதிர்த்தும் களமாடுவேம் என்ற செய்தியை எதிரிகளிடமே போய் கூறிவிட்டு வரும்துணிச்சலும்தான் எமக்கு வெற்றியை பெற்று தரும்.

நேற்றைய அமெரிக்க தூதரக முற்றுகை ஒரு சிறிய விடயமாக பலருக்கு தெரியலாம். ஆனால் அது தமிழர் விடுதலை தொடர்பாக மேற்குலக நகர்வு சார்ந்து எழுதியிருக்கும் இராஜதந்திர செய்தி கனதியானது. இதை தற்போது உணர முடியாது. வரலாறு அதை விரைவில் எழுதும்.

தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்து அது உச்சம் பெற்ற போது அதை பெரிதாக கொண்டாடியவர்கள் கூட அது படிப்படியாக தளர்ந்தபோது விரக்தியுற்றார்கள்.

ஆனால் அந்த மாணவர் போராட்டத்தின் வீச்சையும் கனதியையும் இன்றைய நாளில் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த கணத்தில் பலர் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

ஏனென்றால் தமிழின அழிப்பின் இந்திய முகமான காங்கிரசை தமிழ்நாட்டில் கூட்டணியில் சேர்க்க ஒரு கட்சிகூட தயாராக இல்லை. தேர்தல் நடக்காமலேயே காங்கிரசை தோற்கடித்து தமிழ்நாட்டிலிருந்து தூக்கி எறிந்த பெருமை தமிழக மாணவர்களையே சாரும். இதுதான் மாணவர் போராட்டத்தின் வெற்றி

இது தமிழீழ விடுதலை சாhந்து இந்திய கொள்கை வகுப்பாளர்களை நிச்சயம் சிந்திக்க தூண்டும்.

இப்படி படிப்படியாக அடையும் சிறிய வெற்றிகளை ஒன்று சேர்த்து இறுதி வெற்றியை இலக்கை அடைவதுதான் போராட்டம். அந்த வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் மெச்சத்தக்கது.

தமிழகத்தை போல் தாயகத்திலும் புலத்திலும் கூட தமிழ் அரசியல்வாதிகளை தாண்டி மாணவர்கள் போராட்டத்தை கையெலெடுக்க வேண்டும். அதுதான் சரியானது மட்டுமல்ல நாம் தொடர்ந்து ஏமாற்றுப்படாமல் அனைத்துலக மட்டத்தில் பல இராஜதந்திர வெற்றிகளை குவிக்கவும் வழி செய்யும்.

இந்த உலக ஒழுங்கை எதிர்கொண்டு எமது விதலையை நெருங்க எமக்கு இருக்கிற சாத்தியமான வழியும் அதுதான்.

முடிவாக அமெரிக்க தூதரகத்தை முற்றுககையிட்ட காங்கிரசை தமிழகத்தில் இருந்து தூக்கி எறிந்த தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்!

ஈழம் ஈ நியூஸ்.

*******

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா மாற்றம் கொண்டுவராவிட்டால் அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம். மாணவர்கள் எச்சரிக்கை.

இன்று அமெரிக்க தூதரகத்தில் மாணவர்கள் மீண்டும் சென்று மனு ஒன்றை கையளித்தனர் . ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதாக சொல்லி இலங்கைக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை இந்திய அரசின் துணையுடன் அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது . இதில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றியோ போர்குற்றம் பற்றியோ குறிப்பிடாமல் வெறும் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக கூறியுள்ளது அமெரிக்கா . மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் என்றும் குறிப்பிடாமல் , சிறு பான்மை மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மனித உரிமை மீறல் செய்துள்ளது என்ற வகையில் தனது தீர்மானத்தில் தெரிவித்து உள்ளது. இது எந்த வகையிலும் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்காது.

இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கைக்கு கால அவகாசம் வேறு கொடுத்துள்ளது . போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை , அதிகாரமும் கிடைக்கவில்லை . தமிழர்களுக்கு நேர்ந்த இந்த கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் நேர்ந்தது இல்லை . இவ்வளவு கொடுமைகள் நடந்த பின்பும் இந்திய அரசும் அமெரிக்க அரசும் இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன . இதனால் தமிழர்களுக்கு அநீதி இழைத்த இலங்கை ஒவ்வொரு ஆண்டும் தான் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கலாமல் தப்பித்து வருகிறது.

இதை புரிந்துகொண்ட மாணவர்கள் இன்று அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் ஒரு மனுவை கொடுத்து , அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இனப்படுகொலை, போர்குற்றம் மற்றும் தமிழீழ மக்களிடம் பொது வாக்கெடுப்பு ஆகிய அம்சங்களை சேர்க்க வேண்டும் எனவும் , சர்வதேச விசாரணைப் பொறிமுறையை அமெரிக்க வகுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர் . இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்க அரசு தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை எனில் தமிழகத்தில் அமெரிக்க பொருட்கள் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . இந்தியாவை நம்பி பயனில்லை இனி அமெரிக்காவிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று எண்ணி அமெரிக்க தூதருக்கு கடிதம் கொடுத்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

Advertisements