சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது

போர் இடம்பெற்ற வலயத்திற்கு தற்போது சென்றால் அங்கே போர்க் குற்றங்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளைக் காணமுடியாது. இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கம் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது.SRI LANKA-UNREST-BRITAIN-MEDIA-FILES

இவ்வாறு கரைமுள்ளிவாய்க்காலில் இருந்து thestar.com என்னும் ஊடகத்திற்காக Josh Wood எழுதியுள்ள Sri Lanka turns killing fields into tourist attraction

செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வங்களா விரிகுடாவின் ஒடுங்கிய கரையோரத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்ப் புலிகள் மீது மிகவும் முக்கியமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த ஒடுங்கிய சதுப்பு நிலப் பகுதிக்குள் அகப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக இந்த வலயங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் இங்கு தங்கியிருந்த மக்கள் குறிவைக்கப்பட்டனர். போரின் இறுதிக்கட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போர் இடம்பெற்ற பகுதிக்குள் அகப்பட்டனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு படுகொலைகள், மக்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை போன்றன உள்ளடங்கலாக சிறிலங்கா இராணுவப் படைகள் பல்வேறு போர் மீறல்களைப் புரிந்துள்ளதற்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அடுத்த மாதம் அமெரிக்கா அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துலக விசாரணை இடம்பெற வேண்டும் என்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையும் தனது ஆதரவை வழங்கிவருகிறார். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற மீறல் சம்பவங்களுக்கு தனது உள்ளக விசாரணையின் மூலம் பொறுப்புக்கூற முனைந்தாலும் இந்த முயற்சி அதிகம் வெற்றி பெறவில்லை.

போர் இடம்பெற்ற வலயத்திற்கு தற்போது சென்றால் அங்கே போர்க் குற்றங்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளைக் காணமுடியாது. இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கம் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது. தமிழ்ப் புலிகள் இறுதியாக அழிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிடும் பௌத்த சிங்களவர்கள் இங்கு காணப்படும் போர் வெற்றிச் சின்னங்களை ஒளிப்படம் எடுக்கின்றனர். இதேபோன்று சிறிலங்கா இராணுவத்தினர் முன்னால் போர் வலயத்தில் குளிர்களிகள் மற்றும் சிற்றுண்டிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் உணவகங்களை நடாத்துகின்றனர். இவர்கள் மதுபான விற்பனை நிலையத்தையும் நடாத்துகின்றனர். விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிவித்தது. போர் முடிவடைந்த பின்னர் தமிழ்ப்புலிகளின் நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் போன்றவற்றை சிறிலங்கா அரசாங்கம் அழித்தது. தமிழ்ப் புலிகள் பல்வேறு ‘மீள்புனர்வாழ்வுத்’ திட்டங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமுல்படுத்தியிருந்தனர். சிறிலங்காப் படைகள் போரின் பின்னர் தமிழ் மக்களின் வாழிடங்களில் போர் வெற்றிச் சின்னங்களை உருவாக்கினர். பொதுமக்களின் பார்வைக்காக பல மையங்களை உருவாக்கினர்.

பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காது வீரம்மிக்க இராணுவ வீரர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக நந்திக்கடலுக்குக் குறுக்காக உள்ள பாலத்தின் முன்னால் நாட்டப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னார் புலிகளால் நீச்சல் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆழமான நீச்சல் தடாகத்தில் ‘பயங்கரவாதிகளின் நீச்சல் தடாகம்’ எனவும் புதுக்குடியிருப்பு போர் அருங்காட்சியகத்தில் காணப்படும் படகுகளில் ‘பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படகுகள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் போர் வலயங்களில் சுற்றுலா மையங்கள் முற்றாக நிர்மாணிக்கப்பட்டு இவற்றைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற போதிலும் இதற்கு அருகிலுள்ள கிராமங்களில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படவில்லை. தமிழ் மக்களின் காணாமற் போன உறவுகள் தொடர்பில் இன்னமும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

புலிகள் அமைப்பின் அரசியற் தலைவர்களில் ஒருவராக இருந்த தனது கணவர் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கப் படைகளிடம் சரணடைந்ததாகவும் ஆனால் இன்று வரை இவரின் தொடர்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் இவர் அரசாங்கத்தின் இரகசிய தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரபலமான தமிழ் அரசியல்வாதி அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி நினைவுச் சின்னங்களை அமைப்பதில் ஈடுபடுகிறது. ஆனால் இங்கு வாழும் தமிழ் மக்கள் போரில் கொல்லப்பட்ட தமது அன்புக்குரிய உறவுகளுக்காக அழக்கூட முடியவில்லை” என அனந்தி சசிதரன் கூறுகிறார்.

புதினப்பலகை

மொழியாக்கம் – நித்தியபாரதி.