நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்

இலங்கையில் படையினரும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை வரைபு நேற்று விநியோகிக்கப்பட்டது.obama vs mahinda

இலங்கைக்கு எதிராக நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கும் மூன்றாவது வரைபு இதுவாகும்.

இதில் உள்ளூர் ஆணைக்குழுக்களின் விசாரணைகளில் திருப்தி வெளியிடப்படாத நிலையில் குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் விசேட நிபுணர்களின் உதவிகள் பெறப்பட வேண்டும் என்று தமது வரைபில் பிள்ளை கோரியுள்ளார்.

இந்த வரைபின் மூலம் ஐக்கிய நாடுகளின் விசாரணை பொறிமுறை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையினை வாசித்த மனித உரிமை ஆர்வலர்களும், நோக்கர்களும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் அதிர்ந்து போயுள்ளனர்.

இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் தீவிரமான விசாரணை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வடிவத்தில் இந்தப் பிரேரணை இருக்கும் என்று பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இலங்கையில் நடைபெற்றவை தொடர்பில் விசாரிக்கச் சர்வதேச விசாரணைகளை பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு இந்த அமர்வில் முன்முயற்சி எடுக்கப்படும் என்று பலரும் நம்பியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் அதனையே பரிந்துரை செய்தும் இருந்தார்.

ஆனால், பிரேரணையின் நகல் வடிவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இன்னமும் உள்நாட்டுக்குள் எடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் பற்றியே அது பேசுகின்றது.

அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மதிப்பீடு செய்து 2014 செப்ரெம்பரில் நடைபெறும் 27 ஆவது கூட்டத்தொடரில் வாய் மூலமும், 2015 மார்ச்சில் நடைபெறும் 28 ஆவது கூட்டத்தொடரில் விரிவாக எழுத்து மூலமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்போதைய பிரேரணை வடிவம் சிபாரிசு செய்கிறது.

இந்தப் பிரேரணை வடிவம் யுத்தம் முடிந்தும் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் மேலும் ஒருவருட காலத்தை இலங்கை அரசுத் தரப்புக்கு இழுத்தடிப்பதற்கு வழங்கப்போகின்றது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான சூழலில் இலங்கை தொடர்பான தமது பிரேரணையின் நகல் வடிவத்தை அமெரிக்கா, பிரிட்டன், மொண்டாரிகோ, மெஸிடோனியா, மொறீஸியஸ் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து பல தரப்பினரதும் பார்வைக்காகச் சுற்றுக்கு விட்டன.

உள்கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புதல், கண்ணிவெடியகற்றுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் போன்றவற்றில் இலங்கை அரசின் செயற்பாட்டை வரவேற்றுள்ள இந்த வரைவு, நீதி நிலைநாட்டப்படல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், இராணுவ மயப்படுத்தலை நீக்குதல், வாழ்வாதாரங்களை மீள உருவாக்குதல், இந்த விடயங்களில் சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினரை முழுப் பங்காளர்களாக்குதல் போன்ற அம்சங்களில் இன்னும் பெருமளவு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றது.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலையும் அதில் வாக்காளர்கள் அதிகளவில் பங்குபற்றியமையும் வரவேற்றுள்ள இந்தப் பிரேரணை, அதேசமயம் தேர்தல் வன்முறைகள், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டுகின்றது.

ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது அவரைச் சந்தித்தோர் உட்பட சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறித்து முன்மொழிவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அல்லது பால் இனத்துவ வன்முறைகள், பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்தல், சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் கூட்டுச் சேருதல் மற்றும் அமைதியாக ஒன்று கூடுதல் போன்றவற்றுக்கும் எதிரான மீறல்கள், மனித உரிமைகளை பாதுகாப்போர், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது பதிலடி நடவடிக்கைகள், நீதிச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான மிரட்டல்கள் என்பன மோசமான விதத்தில் அதிகரித்து வருகின்றமை குறித்து இந்த வரைவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சமய நம்பிக்கைகளுக்கு எதிராக – குறிப்பாக இலங்கையில் சிறுபான்மையின மதப் பிரிவினரான இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு எதிராக திடீரென மோசமாக அதிகரித்து வரும் வன்முறைகள் அபாய எச்சரிக்கையை எழுப்புவதாக பிரேரணை வெளிப்படுத்துகிறது.

நல்லிணக்கத்துக்கு மிக அடிப்படையான அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவது, நாட்டின் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை அனுபவிப்பது ஆகியவை உட்பட தான் பகிரங்கமாக ஒப்புக் கொண்ட அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுமாறு இலங்கை அரசை மேற்படி பிரேரணை முன்மொழிவு வேண்டியுள்ளது.

பரவலாக இடம்பெற்ற சட்டவிரோதக் கொலைகள், பலவந்தமாக ஆட்களைக் கடத்திக் காணாமற் போகச் செய்தல் ஆகியன தொடர்பில் நம்பகமான விசாரணை செய்தல், வடக்கு இலங்கையை இராணுவ மயத்திலிருந்து விடுவித்தல், காணிப் பிணக்கு விடயங்களில் பக்கச்சார்பற்ற தீர்வுக்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான கொள்கைகளை மீள மதிப்பீடு செய்தல், முன்னர் செயற்பட்ட சுயாதீன சிவில் நிறுவனங்களை மீளவும் வலிமைப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் அரசியல் தீர்வை எட்டுதல், எல்லோருக்குமுரிய கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்திப் பாதுகாத்தலும், சட்ட ஆட்சியின் மறுசீரமைப்புக்கு வழிசெய்தலும், போன்ற விடயங்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இந்தப் பிரேரணை முன்மொழிவு வரவேற்றிருக்கின்றது.

ஆனால் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசு வரைந்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டம் அந்த பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்குப் போதுமானதேயல்ல என்பதை இந்தப் பிரேரணை முன்மொழிவு வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதேசமயத்தில், இந்த பிரேரணை முன்மொழி சில விடயங்களை தெளிவாக வலியுறுத்த முற்பட்டிருக்கின்றது.

தனியாட்களுக்கு எதிரான நீதி விசாரணை, இழப்பீடுகள் வழங்கல், உண்மையைக் கண்டறிதல், நிறுவனமயப்பட்ட மறுசீரமைப்பு, பொது ஊழியர் மற்றும் ஊழியர்களை ஒருநிலைப்படுத்தல் போன்றவை உட்பட பரந்தளவில் நீதியை நிலை நாட்டுவதற்காக சட்டமுறையான மற்றும் சட்ட வழியற்ற ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதன் மூலம் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த வேண்டும். நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிட்டவேண்டும்,

நல்லிணக்கமும் முரண்பாடு நீங்கலும் மேம்படுத்தப்பட வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் சுயாதீன முறைமை ஸ்தாபிக்கப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொள்ளும் முறைமை மீள உருவாகக்கபபட வேண்டும், அத்தோடு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாக சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்த வேண்டும். – இப்படியெல்லாம் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தின் போது சுற்றுக்கு விடப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பின்வரும் விடயங்களை அந்த முன்மொழி மீள நினைவூட்டி, மீளச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

– உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைத் திட்டம்.

– மனித உரிமை மீறல்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைமைகள், போக்குகள் அவற்றைக் கண்டறிவதன் மூலம் சரியான நீதி விசாரணைத் திட்டத்துக்கு வழி செய்தல்.

– மோசமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்டோருக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்து விலக்களிப்பதை முடிவுக் கொண்டு வந்து, அவர்களை சரியான நீதி விசாரணைகளின் முன் நிறுத்துவதில் அரசுக்கு உள்ள பொறுப்பு.

– உண்மையைக் கண்டறிந்து, நிலைநாட்டி, நீதி எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதில் தேசிய பொறிமுறை தொடர்ந்து தவறிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, ஆகவே, அத்தகைய மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் குறித்து மேலும் விசாரிக்க மனித உரிமைகள் கவுன்ஸில் தானாகவே ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை ஸ்தாபிப்பதோடு, உள்நாட்டில் பொறுப்புக் கூறுவது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனையும் கண்காணிக்க வேண்டும் என முடிவு செய்து அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள பரிந்துரை.

இவ்வளவு விடயங்களையும் அப்பட்டமாக – வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் உரிய பரிந்துரைகளை முன்வைப்பதில் பெரும் தவறிழைத்திருப்பதாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரும் நோக்கர்களும் கருதுகின்றார்கள்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், நீதியின் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான மீறல்கள் குறித்து விலாவாரியாக – விவரமாக – கோடிகாட்டிய இந்தப் பிரேரணை மீண்டும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வாக தேசிய மட்டத்தில் நடைபெறும் விசாரணைப் பொறிமுறை குறித்தே பிரஸ்தாபித்திருக்கின்றமை ஆச்சரியத்துக்குரியதாகும்.

தேசிய மட்ட விசாரணைப் பொறிமுறை நடவடிக்கை தெளிவான பெறுபேற்றைத் தரத் தவறுமிடத்து சுயாதீனமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணையே அவசியம் என்ற முடிவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தமது பரிந்துரையில் குறிப்பிட்டிருப்பதை இந்த முன்மொழிவு வரவேற்றுள்ளது. ஆனால் அதை உடனடியாக முன்னெடுக்கும்படி அது குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக -பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் தேசிய மட்ட (அதாவது நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும்) நடவடிக்கைகள், இரு தரப்புகளினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை குறித்து கண்காணித்து, மதிப்பீடு செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை இந்தப் பிரேரணை வடிவம் கோரியிருக்கிறது.

அதேநேரம் இந்த மதிப்பீடு குறித்து தனது அவதானிப்பை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் (2014 செப்டெம்பரில்) வாய் மூலமும், 28 ஆவது கூட்டத் தொடரில் (2015 மார்ச்சிலும்) அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆணையாளரைக் கோருகிறது இந்த முன்மொழிவு.

இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவின் வடிவத்திலேயே இந்தப் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படுமானால் அது இரண்டு விடயங்களை வெளிப்படுத்தி நிற்கும்.

1. இலங்கையில் யுத்த காலத்தில் இழைக்கப்பட்ட கொரடூரங்களுக்கு சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணைப் பொறிமுறை இப்போதைக்கு இல்லை. தற்போதைக்கு நாட்டுக்குள் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படக்கூடிய விசாரணைப் பொறிமுறையே தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

2. இவ்விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டு பிடித்தால் கூட அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை – அதாவது அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு – இலங்கை எதிரான அழுத்தமான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பது இப்போதே தெளிவாகிவிடும்.

இதே சமயம் இந்த ஆண்டு இறுதியுடன் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த வருடம் மார்ச்சில் இலங்கை விவகாரம் எடுக்கப்படும் போது புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பதவியேற்றிருப்பார். அவரின் கீழ் இதே உத்வேகத்தோடு இவ்விடயம் எடுக்கப்படுமா என்பதும் சந்தேகமே.

இந்த வரைபை நேற்று அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.

இதில் இதுவரையில், மேற்கொண்ட விசாரணைகளின் போது இலங்கைப் படையினர் வெலிவேரியாவில் தண்ணீர் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் பிள்ளையின் வரைபில் கோரப்பட்டுள்ளது.

மதத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் வடக்கில் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு 13வது அரசியல் அமைப்பின் முழுமை அதிகாரங்களையும் வழங்கல் போன்ற கோரிக்கைகளும் பிள்ளையின் வரைபில் அடங்கியுள்ளன.

***

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கி​றது!- பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை

அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும்.

ஐ. நா. மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்தப்படி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்திரமான நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ராஜபக்ச அரசே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்தவும் பாதிக்கப்படட மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.

ஆனால் இத்தீர்மானங்களை ராஜபக்ச அரசு கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மீண்டும் அவருக்கு இரண்டாண்டு காலம் அவகாசம் கொடுப்பது என்பது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களை அழிப்பதற்கு துணை போவதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அடுத்து இந்தத் தீர்மானத்தில் 13வது சட்டத்திருத்தத்தின்படி வடக்கு மாநில முதலமைச்சருக்கு தேவையான அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

13-ஆவது சட்டத்திருத்தத்தையே உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்ச சாகடித்து விட்டார். இப்போது 13வது சட்டத்திருத்தமே இல்லை. அதன்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது நடக்கப்போகாத ஒன்றாகும்.

அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.

***

இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறை, காணாமற்போதல், படுகொலை சித்திரவதைகள்!- ஐ.நாவில் அமெரிக்கா காட்டம்

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சமந்தா பவர் விபரிப்பார் என்று நேற்றைய தினம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவ்வுரை இடம்பெறவில்லை என்பதுடன் சமந்தா பவரும் வருகை தரவில்லை.

உக்ரேன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடி குறித்து ஆராய, நியுயோர்க்கில் நேற்று நடந்த ஐ.நா பாதுகாப்புச்சபை விசேட கூட்டத்தில் பங்கேற்றதால், சமந்தா பவர் ஜெனிவா வரவில்லை.

இதற்கிடையே, அமெரிக்கா சார்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலராக உள்ள சாரா சீவோல் உரையாற்றினார்.

இதற்கு முன்னர் உரையாற்றிய டென்மார்க் நாட்டின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் எச்.ஈ மிஸ்டர் ஜோனாஸ் பெரிங் இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான செயலுக்கு சர்வதேச பெறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.

பல பகுதிகள் நீக்கப்படலாம். கடந்த முறை முதலில் வழங்கப்பட்ட நகலுக்கும் இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் இறுதி வடிவத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருந்தது. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் அழுத்தம் காரணமாக பல பகுதிகள் நீக்கப்பட்டன.

கடந்த முறை அமெரிக்க கொண்டு வந்த பிரேரரணையும் கூட்ட ஆரம்பத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அது தொடர்பாக அமெரிக்கா நாடுகளுடன் அறைகளில் கூட்டங்களை நடத்தியிருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான, பிரேரணையின் நகல் அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ, மொறிசியஸ் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டு வந்துள்ளன.

இந்த பிரேரணையின் நகல் வடிவத்தின் முழு விபரம்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்த தீர்மான வரைவு, இலங்கை நம்பகமான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளத் தவறியுள்ளதால், சுதந்திரமான, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்குமாறும், இருதரப்பினாலும் போரின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்குமாறும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தை இந்த தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

மீள்கட்டுமானம், உட்கட்டமைப்பு, கண்ணிவெடிகள் அகற்றல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்களை மீளக்குடியேற்றியது போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரவேற்கத்தக்கது.

ஆனால், நீதி, நல்லிணக்கம், படைக்குறைப்பு, மற்றும் வாழ்வாதாரங்களை மீளஆரம்பித்தல், போன்றவற்றில், கணிசமான முன்னேற்றங்கள் காணப்படவில்லை.

இவற்றில், உள்ளூர் மக்களினது குறிப்பாக, சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினரின் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும். வடக்கு மாகாணசபைக்கு கடந்த ஆண்டு தேர்தலை நடத்தப்பட்டதையும், அதில் மூன்று மாவட்டங்களிலும் அதிகளவு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதையும் வரவேற்கின்ற அதேவேளை, வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பாகுபாடு காட்டப்பட்டது உள்ளிட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றது கவலையுடன் சுட்டிக்காட்டத்தக்கது.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணத்துக்கு வசதிகளை செய்து கொடுத்து, அவரை வரவேற்றதற்கு மதிப்பளிக்கின்ற அதேவேளை, நவநீதம்பிள்ளையை சந்தித்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் மிரட்டப்பட்டதும், பதிலடிக்குள்ளானதும் கவலை தருகிறது.

இலங்கையில் தொடர்ந்தும் பாலியல் அடிப்படையிலான வன்முறைகள். கட்டாயமாக காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், சித்திரவதைகள், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், இணைதல் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுல் உரிமைகள் மீறப்படுவது, சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளியாகும் அறிக்கைகள் கவலை தருகின்றன.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் துரிதமாக அதிகரித்து வருகின்றன.

அனைத்து மக்களும் நல்லிணக்கம் மற்றும் மனிதஉரிமைகளை அனுபவிக்கும் வகையில், அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

இலங்கையின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, அங்கு அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்யத்தக்கதாக இருக்கும்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமற்போனவர்கள், வடக்கில் படைக்குறைப்பு, காணிப் பிரச்சினைகளை நடுநிலையாக தீர்ப்பதற்கான பொறிமுறைகள், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கை குறித்து மீள்மதிப்பிடு, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசியல் தீர்வின் மூலம் சுதந்திரமான சிவில் கட்டமைப்பை வலுப்படுத்தல், எல்லா மக்களினதும் கருத்து சுதந்திரத்தை ஊக்குவித்தல், மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தல் உள்ளிட்டவை ஆக்கபூர்வமான பரிந்துரைகளாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை சிறிலங்கா அறிமுகப்படுத்திய போதிலும், எல்லாப் பரிந்துரைகளுக்கும், கண்டறிவுகளுக்கும் தேசிய செயற்திட்டம் பொருத்தமான முறையில் பதிலளிக்கவில்லை.

ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணிகளுக்கு பரந்தளவில் பதிலளிக்க இலங்கை ஊக்குவிக்கப்படுகிறது.

அதேவேளை, அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த மோசமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசிய செயற்திட்டமோ, நல்லிணக்க ஆணைக்குழுவோ பொருத்தமான பதிலை அளித்தக் தவறியுள்ளன.

உண்மை மற்றும் நீதிக்கான தேசிய பொறிமுறை ஒன்றை உருவாக்க இலங்கை தவறியுள்ளதால், மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக விசாரிக்கவும், எந்தவொரு தேசிய பொறிமுறையை கண்காணிக்கவும், ஐ..நா மனிதஉரிமைகள் பேரவை அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் அறிக்கை அளித்துள்ளார்.

தொழில்நுட்ப உதவிகள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துடன் தனது பேச்சுக்களையும் ஒத்துழைப்புகளையும் அதிகரித்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.

1. இலங்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால், 2013 செப்ரெம்பர் 25, 2014 பெப்ரவரி 24ம் நாள்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் வரவேற்கத்தக்கன.

2. அனைத்துலக மனிதஉரிமை மற்றும மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக நம்பகமான,சுதந்திரமான விசாரணை நடத்தி, அத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கவும், தொடரும் மனிதஉரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

3. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், எல்லா இலங்கையர்களும் நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எல்லா சட்ட கடப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

4. தனிநபர்கள், குழுக்கள், ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள், மீதான எல்லாத் தாக்குதல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படுவதுடன், மதவழிபாட்டு இடங்கள், ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், மத சிறுபான்மை குழுக்கள், ஏனைய சிவில் சமூகப் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

5. வெலிவெலியவில் ஆயுதம் தரிக்காத போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல், மற்றும் 2013ம் ஆண்டின் இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் முடிவுகளை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

6. 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில், வடக்கு மாகாணசபைக்கும், அதன் முதலமைச்சருக்கும் தேவையான வளங்களையும், ஆட்சியை நடத்துவதற்கான அதிகாரங்களையும் இலங்கை அரசாங்கம் வழங்குவதை ஊக்குவிக்கிறது.

7. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களை வரவேற்று வசதிகளை அளித்த இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, ஏனைய நிலுவையிலுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வது தொடர்பான சிறப்பு ஆணையர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும் இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்கப்படுகிறது.

8. நம்பகமான தேசிய செயல்முறை உருவாக்கத் தவறியுள்ளதால், நம்பகமான சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது, மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், குறித்த தேசிய செயல்முறைகள் தொடர்பாக கண்காணிக்கவும், இலங்கையில் இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை நடத்தவும், ஐ.நா மனித உரிமை ஆணையம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் பரிந்துரைகளும், முடிவுகளும் வரவேற்கத்தக்கது.

இது தொடர்பான, முன்னேற்றங்கள் குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 27வது அமர்வில் வாய்மூல அறிக்கையையும், தற்போதைய தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான முழுமையான அறிக்கையை 28வது அமர்விலும் சமர்ப்பிக்க வேண்டும்.

9. மேலே சுட்டிக்காட்டப்பட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, வழங்கி ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரும், ஏனைய சிறப்பு ஆணைபெற்றவர்களும் ஒத்துழைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

10. இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐ.நா மனித உரிமை ஆணையருடன் ஒத்துழைக்கும்படி இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

***

Advertisements