‘சிறிலங்காவின் தவறுகளுக்கு அனைத்துலக விசாரணைக்குழு அமைப்பதே ஒரே வழி’

– மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்Who Ordered the execution of the child  was it Gotha or  Mahinda or Sonia

சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும்.

இவ்வாறு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘The New York Times’ என்னும் ஊடகத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் Louise Arbour* தனது கருத்தை பதிவு செய்துள்ளார். Let the U.N. Unmask the Criminals of Sri Lanka’s War[ New York Times ]

அதன் முழுவிபரமாவது:

2009ன் முற்பகுதியில், 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் போரில் அகப்பட்ட பொதுமக்கள் மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சிறைப்படுத்தப்பட்டனர். இந்த மக்கள் மீது எவ்வித தயவு தாட்சண்ணியமுமின்றி எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குற்றங்கள் தொடர்பில் எவரும் பொறுப்பளிக்க முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் தற்போதும் கடந்த காலத் தவறுகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொள்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும்.

திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை சந்திக்கும் போது இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இது சிறிலங்காவில் நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த நகர்வாகக் காணப்படும்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட 26 ஆண்டு கால யுத்தத்தில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தொடர்ந்தும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். இங்கு சிறிலங்கா அரசாங்கப் படைகள் பல்வேறு படுகொலைகளை மேற்கொண்டனர். அதேபோன்று தமிழ்ப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் எனப் பல மீறல்களில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணமானது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டதிலிருந்து இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெறும் இடமாக மாறியுள்ளது.

இங்கு வாழும் பொதுமக்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவப் படைகள் பல்வேறு மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்ற நிலையில், நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு இன்னமும் நீண்ட காலம் தேவை என சிறிலங்கா அதிகாரிகள் கூறுகின்றனர். அனைத்துலக விசாரணை என்பது சிறிலங்காவை மேலும் சீர்குலைக்குமே தவிர வேறெந்த முன்னேற்றமும் ஏற்படாது என சிறிலங்கா அதிகாரிகள் வாதிடுகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவி பிள்ளையின் அண்மைய அறிக்கை தொடர்பில் சிறிலங்கா ஆத்திரம் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் போருக்குப் பின்னான கொள்கைகள் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் இன மற்றும் மத முரண்பாட்டை மேலும் ஆழமாக்கியுள்ளதாக, அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைப் பேரவையால் முன்வைக்கப்படும் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை காலமும் நிராகரித்து வந்துள்ளது. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை முன்வைப்பதானது மிகச் சிறந்த நகர்வாகும். இத்தீர்மானத்தை பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகள் மிகப் பலமாக ஆதரிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பளிப்பதில் மேலும் காலதாமதத்தை உண்டுபண்ணுவதற்கான உத்திகள் மற்றும் சிறிலங்காவின் பொது உறவுகளை எதிர்த்தல் போன்றவற்றில் பேரவையின் உறுப்பு நாடுகள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறான ஒரு விசாரணைக்கான அடித்தளம் தற்போது கட்டப்படுகிறது. சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை பெப்ரவரியில் அமெரிக்க செனற்றர் பற்றிக் ஜே. லீகி தலைமையில் ஆறு அமெரிக்க செனற்றர்கள் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களச் செயலர் ஜோன் கெறிக்கு அனுப்பியிருந்தனர். இதற்கு மூன்று நாட்களின் பின்னர் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்று அமெரிக்க செனற்றரில் முன்வைக்கப்பட்டது.

சிறிலங்கா தனது சொந்த மக்கள் மீது இழைத்த மீறல்களுக்கு பொறுப்பளிக்கத் தவறியுள்ளது என்பதை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன், ஐரோப்பாவின் மூத்த அரசியல்வாதிகள், இந்திய அதிகாரிகள் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சிறிலங்காவின் வடக்கு மாகாண சபையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது.

இவ்வாறான அனைத்துப் பரிந்துரைகளையும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது. சிறிலங்காவின் சொந்த மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு, போர் மீறல்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூட இன்னமும் நிறைவேற்றவில்லை. சிறிலங்கா அதிபர், நாட்டில் நீதிச் சேவையைப் பலவீனப்படுத்தும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். அதாவது கடந்த ஆண்டு சிறிலங்காவின் பிரதம நீதியரசராக இருந்த பெண் நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டு சிறிலங்கா அதிபரால் இவர் பதவிநீக்கப்பட்டார்.

சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்களை மனித உரிமைகள் பேரவை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோன்று தமிழ்ப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கான சாட்சியங்களும் காணப்படுகின்றன. சிறிலங்காவில் மீண்டும் தமிழர்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்வார்கள் என சிங்களவர்கள் அச்சம் கொள்கின்றனர்.

சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பை மனித உரிமைகள் பேரவை கொண்டுள்ளது. இந்த வாய்ப்பை பேரவை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலி, கொஸ்ரா றிசா, பொற்ஸ்வானா, தென்னாபிரிக்கா, சியாராலியோன், மொறோக்கோ, மசிடோனியா போன்ற மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடுகள் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் நீதி எட்டப்படாது மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது என்கின்ற முட்டாள்தனமான வாதத்தை சிறிலங்கா தரப்பு முன்வைக்கும் அதேவேளையில், அனைத்துலக சமூகம் காலப்போக்கில் தன் மீதான கவனத்தை இழந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் தனது தரப்பில் மீறல்களுக்குப் பொறுப்பளிக்காது காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. இவற்றின் விளைவுகளை சிறிலங்காவுக்குப் பாதகமாகவே அமையும் என்பதை கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்கா சந்தித்து வரும் அழுத்தங்கள் சுட்டிநிற்கின்றன.

*Louise Arbour, a former United Nations high commissioner for human rights, is the president of the International Crisis Group.

புதினப்பலகை

மொழியாக்கம் – நித்தியபாரதி.

Advertisements