தூக்குத்தண்டனை ரத்து! 7 பேர் விடுதலை!- தமிழக மக்களின் கருத்துக்கணிப்பு

அணிகள் மாற்றம், கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல் எனத் தேர்தல் வைபவம் மாறி, கடந்த வாரம் தமிழக அரசியல் அப்படியே தடம் மாறியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும், அதைத் தொடர்ந்து ‘ஏழு பேர் விடுதலை’ என ஜெட் வேகத்தில் ஜெயலலிதா காட்டிய பாய்ச்சலும் அதற்காக எழுந்த ‘வரவேற்பு – எதிர்ப்பு’  மாற்றங்களும், தமிழக அரசியல் களத்தில் அரங்கேறிய திடீர் திருப்பங்கள். முக்கியமான இந்த விவகாரத்தில் மக்களின் மனநிலையை அறியாமல் இருந்தால் எப்படி?

தூக்குத் தண்டனை ரத்து, ஏழு பேர் விடுதலை, ஜெயலலிதாவின் செயல்பாடு… இவை குறித்து மக்களின் கருத்தறிய ‘தூக்குத் தண்டனை’ என்ற தலைப்பில் சர்வே படிவங்களோடு தமிழகத்தை வலம் வந்தார்கள் ஜூ.வி. செய்தியாளர்கள்.

சூட்டோடு சூடாக எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 6,372 பேர் பங்கேற்றனர். இதில் பெண்கள் மட்டும் 2,264 பேர்.
murugan
மக்கள் மனசு உங்கள் பார்வைக்கு!

தூக்குத் தண்டனை தேவையா?’ என்ற கேள்விக்கு ‘குற்றத்தின் அளவைப் பொறுத்து வழங்கலாம் என்று நிறைய பேர் கருத்து சொன்னார்கள். அதற்கு அடுத்து, ரத்துசெய்துவிடலாம் எனச் சொன்னவர்கள்தான் அதிகம்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ததை 64 சதவிகிதம் பேர் ‘வரவேற்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ராஜீவ் வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை தமிழக அரசு விடுதலைசெய்வதாக அறிவித்தது ‘சரிதான்’ என 36 சதவிகிதம் பேர் ‘டிக்’ அடித்திருக்கின்றனர். சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவித்திருக்கலாம் என 25 சதவிகிதம் நபர்களும், பொறுமையாக செயல்பட்டிருக்கலாம் என 15 சதவிகிதம் நபர்களும் கருத்துப் பதிவுசெய்தார்கள்.

ஏழு பேரை ஜெயலலிதா விடுதலைசெய்வதாக அறிவித்தது உணர்வுபூர்வமானது அல்ல; ‘தேர்தல் ஸ்டன்ட்’ எனப் பெரும்பான்மையினர் சொல்லியிருக்கின்றனர்.

ஈழப் பிரச்னையில் தன்னுடைய நிலைப்பாட்டை ஜெயலலிதா மாற்றிவருவதையும் சர்வேயில் கேள்வியாகக் கேட்டிருந்தோம். ஈழப் பிரச்னையில் ‘ஜெயலலிதா நிலைப்பாடு உறுதியாக இல்லை’ என 60 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கின்றனர்.

ஏழு பேர் விடுதலை விவகாரம் வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வாக்குகளை அள்ளித்தருமா? என்பதையும் கேள்வியாக எழுப்பியிருந்தோம். ‘சிறிய அளவே பலன் இருக்கும்’ என்று அதிகம் பேர் சொல்லியிருக்கின்றனர்.

ஏழு பேரை விடுதலைசெய்யக் கூடாது என காங்கிரஸ் நடத்தும் போராட்டம் பற்றிய கேள்விக்கு ‘அவர்களுக்கு வேறு வழியில்லை’ என 43 சதவிகிதம் பேர் கருத்துப் பதிவுசெய்திருந்தனர்.

ஈழப் பிரச்னையில் உறுதியாக இருக்கும் கட்சி எது?’ என்கிற கேள்வியை எழுப்பி சர்வேயில் ஒன்பது கட்சிகளைக் குறிப்பிட்டிருந்தோம்.

இதில் ம.தி.மு.க-வுக்குதான் மார்க் அதிகம் விழுந்தது. 36 சதவிகிதம் பேர் ம.தி.மு.க. என ‘டிக்’ அடித்தனர். அதற்கு அடுத்த இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளும் இந்த விவகாரத்தில் தடம் மாறின என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது சர்வே.

[ விகடன் ]

Advertisements