நவிபிள்ளையின் அறிக்கையில் பாலச்சந்திரன் – இசைப்பிரியாவின் விடயங்களும் உள்ளடக்கம்!

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இறுதிப்போரின் போது படைகளிடம் சரணடைந்த போராளிகள், புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், கேணல் ரமேஷ், புலிகளின் ஊடக தொடர்பு பிரிவு பணியாளர் இசைப்பிரியா மற்றும் பலர் கொலையுண்ட விடயங்கள் தொடர்பாகisaippriya 1

சனல்-4 வெளியிட்ட ஆவணப்படங்கள், அவைகள் தொடர்பான இலங்கை அதிகாரிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பான இலங்கை அரசின் செயற்பாடுகள் திருப்தியில்லாமையால் சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று அமைக்கப்படும் பட்சத்தில் இவை பற்றியும் விசாரணைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

சிறைக் கைதிகள் மற்றும் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-

2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் போரின் இறுதிக்கட்டச் சம்பவங்கள் தொடர்பான ஒளிப்படங்களும் வீடியோப் படங்களும் வெளியாகியுள்ளன. அவை கைதிகள் சரணடைந்த பின்னர் அல்லது பாதுகாப்புப் படைகளின் காவலில் இருந்த போது அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் காண்பிக்கின்றன.

2011 ஜூன் மாதம் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மனித உரிமைகள் சபைக்கு தொழில்நுட்ப அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். 2009 ஓகஸ்ட் 4ம் திகதி சனல்-4 வெளியிட்ட வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவதாக அது இருந்தது.

இந்த விடயம் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண ஆணைக்குழுவானது உண்மைத்தன்மை குறித்து ஒரு முடிவுக்கு வராத நிலையில் மேற்கொண்டும் ஆய்வுகள் நடத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த விடயம் இப்பொழுது இராணுவ நீதிமன்றத்தின் ஆய்வில் இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது. அதன் முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை.

பாலச்சந்திரன் பற்றிய படங்கள்

2013 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கைப் படைகளின் காவலில் பதுங்கு குழியொன்றின் மேல் உயிருடன் அமர்ந்திருப்பதைக் காட்டும் படங்களும், அதன் பின்னர் இறந்த நிலையிலான அவரது உடல் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த படங்களும் தொடர்ச்சியாக வெளிவந்திருந்தன. ஒரு சில மணிநேரம் முன் பின்னராக ஒரே கமராவால் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

கேர்ணல் ரமேஷ் தொடர்பான படங்கள்

சனல்-4 மற்றும் வேறு வகையான வீடியோ மற்றும் புகைப்படங்களில் ரி.துரைராஜசிங்கம் (கேர்ணல் ரமேஷ்) இலங்கை இராணுவத்தினரால் விசாரிக்கப்படுவது காட்டப்படுகின்றது. பின்னர் அவரது சிதைவுற்ற உடலின் படம் வெளியாகியுள்ளது. கேணல் ரமேஸின் நிலைமை குறித்த சாட்சியங்களும் ஆதாரங்களும் அவர் பாதுகாப்புப் படைகளின் காவலில் இருந்த போதே கொல்லப்பட்டார் என்பதாக காட்டுகின்றன.

இசைப்பிரியாவின் படுகொலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்திரிகை மற்றும் தொடர்பாடல் பிரிவின் உயர்மட்ட உறுப்பினர் சோபனா (இசைப்பிரியா) வின் கொலை பற்றிய சனல்-4 புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் அவர் விசாரணையின்றி அந்த இடத்திலேயே படையினரால் கொல்லப்பட்டார் என்பதைக் காட்டுவதாக இருக்கின்றனவென்று சிறப்பு அறிக்கையாளர் அறிவித்துள்ளார். வீடியோ மற்றும் படங்களில் காட்டியிருப்பதன்படி அவரது மேலாடைகள் இழுத்து ஒதுக்கப்பட்டு அவரது வெறும் மேனி தெரியும்படி செய்யப்பட்டிருந்துள்ளது. 2013 நவம்பரில் சனல்-4 வெளியிட்டபடங்களில் இராணுவத்தால் அவர் உயிருடன் பிடிக்கப்படுவது காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் அரசு வெளியிட்ட கருத்துக்களில் குறித்த படங்களும் நிகழ்வுகளும் உறுதிபடுத்தப்படாமலும் நிரூபிக்கப்படாமலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடி சம்பவங்கள்

2009 மே 18ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்க உயர்மட்டத் தலைவர்கள் பத்திரமாக சரணடையலாம் என்று அரசு உறுதி வழங்கியிருந்த நிலையிலும் சட்டவிரோதமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு ஆராய்ந்துள்ளது.

அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் பொதுக் கூட்டங்களிலும், சர்வதேச மேடைகளிலும் இது பற்றி முரண்பாடான விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் பற்றிய பின்புலம் தெளிவில்லாது போனாலும் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சரணடைய விரும்பினார்கள் என்பதான முடிவுக்கு நிபுணர்குழு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் தற்போது நாட்டுக்கு வெளியிலுள்ள தரப்புகளிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.

வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தர்க்க ரீதியில் அலசவோ புலனாய்வு செய்யவோ தவறியிருக்கிறது. ஆனால் இராணுவ ஜெனரல்கள் மற்றும் அரச அதிபர்களின் சாட்சியங்களை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்கள்.

இதுபற்றி அரசு வெளியிட்ட கருத்தில் நம்பகமான சாட்சியங்கள் இல்லாமையால் மேற்கொண்டும் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று அறிவித்துள்ளது.

முழு அறிக்கை இணைப்பு

Sri Lanka – OCHR

Advertisements