ராஜீவ் பெயரில் நிகழும் பச்சைப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம், ஒன்று திரள்வோம்!

ராஜீவ் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்படாமல் விசாரணை அதிகாரிகளால் புனையப்பட்ட ஆவணங்களை கணக்கில்கொண்டு உச்சநீதிமன்றம் நிரபராதிகளான முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி எஸ். நளினி,எஸ். ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரா.பொ.இரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.ஜெயின் கமிஷன் அறிக்கையின் படி குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சாமி இதுவரையில் விசாரிக்கப்படவில்லை. நிரபராதிகளான இந்த ஏழ்வரும் 23 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் இருந்து வருகின்றனர். முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோர் தமக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நீக்க கருணை மனு அளிக்கப்பட்டு பதினோரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அந்த பதினோரு ஆண்டுகளும் எந்த நாளிலும் மரண தண்டனைக்கான அறிவிப்பு வரலாம் என்ற மன உளைச்சலோடு கழிந்தன. இந்நிலையில் இவ்வழக்கினை விசாரித்த முன்னாள் சிபி ஐ அதிகாரி தியாகராஜன் தாம் இவ்வழக்கில் பதியப்பட்ட வாக்குமூலத்தில் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது இந்த வாக்குமூலத்தில் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த தண்டனை என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

Rajiv Gandhi

அடுத்த கட்டமான இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, மேலும் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த ஏழு பேருக்கும் விடுதலை வழங்க சட்ட ரீதியாக வகைசெய்யும் வழிமுறைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் இந்த ஏழு போரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்.

இந்நிலையில் மத்திய அரசு, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.தமிழகத்திற்கு சட்டப்படி உள்ள உரிமைகளை கூட ஏற்க மறுத்து இந்த ஏழு நிரபராதிகளை விடுதலை செய்வதை தடுத்து வருகின்றது. இதில் மத்திய அரசோடு தேசிய கட்சிகளான காங்கிரஸ்,பாஜக,ஆம் ஆத்மி போன்றவையும் தமிழக அரசு அறிவித்த விடுதலையை எதிர்த்து வருகின்றன.மேலும் வட இந்திய மக்களிடம் தமிழர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்யும் விதமாக வட இந்திய ஊடகங்கள் நிரபராதி ஏழ் வரின் விடுதலையை கடுமையாக விமர்சித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும்,பதிதிரிகை செய்திகள் வெளியிட்டும் வருகின்றன.

இந்த நிலையில் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து தமிழக அரசு அறிவித்தது போல் இந்த ஏழ்வரையும் விடுவிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்.
தமிழகத்தின் உரிமையில் தலையிடாதே.

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் விரோத சுப்ரமணிய சாமியை கைது செய்து விசாரி…..

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 2-3-2014 அன்று மாலை 4 மணிக்கு ஒன்று கூடுவோம்.

ராஜீவ் பெயரில் நடக்கும் பச்சை படுகொலையை தடுத்து நிறுத்துவோம்.

**

ஐந்து ஆயுள் தண்டனைகளை அனுபவித்து விட்டார்கள்!- பளிச் ராம் ஜெத்மலானி

‘லாங் லிவ் ஜெத்மலானி ஜி… லாங் லிவ் ஜெத்மலானி ஜி…’ என்ற கோஷங்கள் சென்னை விமானநிலையத்தில் விண்ணைப் பிளந்தன. மூன்று பேரின் தூக்குக் கயிற்றை அறுத்தெறியக் காரணமாக இருந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு ம.தி.மு.க-வினர் ஏற்பாடுசெய்திருந்த பிரமாண்டமான வரவேற்பில்தான் இந்தக் காட்சி.

ஆள் உயர ரோஜாப்பூ மாலையை வைகோ அணிவிக்க மேளதாளங்கள் முழங்கின.

அதற்கு மத்தியில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அளித்த பேட்டி.

கேள்வி – மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?

பதில் – மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்குத்தான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும். சரியான நேரத்தில், தூக்குத் தண்டனையை நிறுத்தி, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியது சென்னை உயர் நீதிமன்றம். அதுதான் இந்த வழக்கில் நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. அதன் பிறகுதான், உச்ச நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. அது நமக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி!

கேள்வி – தூக்குத் தண்டனை ரத்தானவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வந்ததில், விதிமுறை மீறல் உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுள்ளதே?

பதில் – மத்திய அரசின் அட்டோர்னி ஜெனரல் அவருடைய மனுவில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. ஆனால், தமிழக அரசின் முடிவில் என்ன விதி மீறப்பட்டுள்ளது? எந்த விதியும் மீறப்படவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசின் முடிவை எதிர்ப்பவர்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டு உள்ளது என்று சொல்வார்களா?

இவை எதுவும் உணர்வுபூர்வமான நடவடிக்கைகள் அல்ல, சட்டப்படியான நடவடிக்கைகள். உச்ச நீதிமன்ற நீதிபதி சின்னப்ப ரெட்டி, ‘மொத்த வழக்கையும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அதில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கலாம் என்று ஒரு வழக்கின் தீர்ப்பில் கூறியிருக்கிறார். அதை கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. அதே அடிப்படையில்தான், உச்ச நீதிமன்றமும் தமிழக அரசும் இந்த வழக்கில் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

கேள்வி – இந்த முடிவு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதே…

பதில் – எந்த சர்ச்சையும் இல்லை. சில அரசியல் கட்சிகளும், வட நாட்டு ஊடகங்களும் அப்படி ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக்கொண்டு இருக்கின்றன. ஒரு குற்றத்துக்கு ஒரு தண்டனைதான் வழங்க முடியும். அதன்படி அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ஐந்து ஆயுள் தண்டனைகளை அனுபவிக்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 23 ஆண்டுகள் அவர்கள் சிறையில் கழித்துள்ளனர். ஒவ்வொரு நொடியையும் மரண அவஸ்தையுடன் கழித்திருக்கிறார்கள். ஆறுக்கு ஆறு அளவுள்ள தனிமைச் சிறையில் ஒரு மனிதன் 23 ஆண்டுகளைக் கழிப்பது எத்தனைக் கொடூரமான தண்டனை என்பதை நம்மால் உணர முடியாது. அதன்படி பார்த்தால், அவர்கள் ஐந்து ஆயுள் தண்டனைகளை அனுபவித்துவிட்டார்கள்.

இன்றைக்கு அவர்களின் விடுதலையை சர்ச்சைக்குள்ளாக்கும் நபர்களிடம், இந்த வழக்கில் இவ்வளவு கால தாமதம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்கிறேன்.

அதே சமயம் இவர்களுக்கு ஆரம்பத்திலேயே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கக் கூடாது. ஏனென்றால், முதலில் 26 பேரை குற்றவாளிகள் என்றனர். அதன் பிறகு அந்த எண்ணிக்கை ஏழாகக் குறைந்தது. 19 பேர் விடுதலையானார்கள். அந்த அளவுக்கு வழக்கு பலவீனமாக நடத்தப்பட்டு உள்ளது.

கொலை மற்றும் தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி வழக்கை நடத்தி, மரண தண்டனை விதித்துள்ளார்கள். தடா வழக்கில் விசாரித்ததே தவறு என்று முடிவுசெய்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது இவர்களுக்கும் தண்டனை குறைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால்தான் முதலில் தூக்குத் தண்டனை விதித்ததே தவறு என்கிறேன் நான்.

கேள்வி – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல் பிரதமர் பேசியுள்ளாரே?

பதில் – அவர் அப்படி பேசியதற்கான எதிர்ப்பை 2014 தேர்தலில் இந்த தேசம் அவருக்குக் காட்டும். என்னைப் பொறுத்தவரையில் நியாயமான யாரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கும் முடிவை எதிர்க்க மாட்டார்கள். வரவேற்கத்தான் செய்வார்கள்.என்றார் ராம் ஜெத்மலானி.

Advertisements