விடுதலைக்கான அந்த அற்புதத்தை பெற்ற தாயே! நன்றி உனக்கு!

paarvathy amma

அந்த மனிதன் மௌனித்து இன்று ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவன் போராடிய காலத்தில் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த தமிழீழ நிலம், மண் இன்று கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.

சிங்கள பேரினவாதம் தனது இனஅழிப்பை எந்தவொரு சலனமும் இன்றி அதே வேகத்துடன் தொடர்ந்தே வருகின்றது.

இதனை காப்பாற்றவோ, இதற்கு எதிராக எதையேனும் செய்வதற்கோ வக்கற்றவர்களாக அனைத்து தமிழர்களும் கூனிக்குறுகி நிற்கின்றனர்.

அந்த அதிமானுடன் இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் வகித்த வகிபாத்திரத்தின் லட்சத்தில் ஒரு பங்கினைகூட ஈடுசெய்ய முடியாத கையறு நிலையே இந்த பத்துகோடி மக்கள் தொகை கொண்ட இனத்துக்கு இன்றுள்ளது.

எந்த காலத்திலும் இல்லாத அளவில் அந்த ஒற்றை மனிதனின் வரலாற்று தேவையும், இந்த இனத்தால் ஒவ்வொரு கணமும் உணரப்பட்டு வருகின்றது.

வெறுமனே முகாம்களை கைப்பற்றியது, நிலத்தின் மூன்றில் இரண்டு பகுதியை மீட்டது என்ற போரியல் வெற்றிகளுக்கு அப்பால் இந்த இனத்தின் சிந்தனை முறையிலும் விழிப்புணர்விலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தலைவன் அவர்.

சாதீய சிக்கல்களுக்குள்ளும், மதமாச்சர்ய மூடத்தனங்களுக்குள்ளும் முகம் புதைத்தபடியே பல நூற்றாண்டுகளாக தூங்கிக் கிடந்த ஒரு இனத்தினை விடுதலைக்காக போர் புரியும் இனமாக எழ வைத்த அற்புத மனிதனை பெற்ற தாய் பார்வதிஅம்மாவின் மூன்றாம் நினைவு ஆண்டு கடந்து போயுள்ளது.

தேசத்தின் தலைமகனை ஈன்று எமக்களித்த அந்த தேசத்தின் தாயின் நினைவுகளை கொஞ்சம் மீட்டுவோம்.!

பார்வதிஅம்மா எல்லாவிதத்திலும் ஒரு சாதாரணத் தாய்தான்.

அவர் தலைவருக்கு வீரத்திலகம் இட்டு அனுப்பினார் என்றோ தலைவரை ஒரு போராளியாக வளர்த்து எடுத்தார் என்றுமோ புறநானூற்று வீரத்தாயாக விளங்கினார் என்றோ மிகைப்படுத்தி எதையும் கூறிவிட முடியாத வகையில் அவர் எளிய அம்மாவாகவே விளங்கினார்.

மார்க்சிம் கோர்க்கியின் உலகப்புகழ்பெற்ற தாய் நாவலின் நாயகன் பாவெலின் தாயார் போன்று புரட்சிக்கான முன்னெடுப்புகளிலும்,அதன் முன்னணியிலும் நின்ற தாய் போன்று பார்வதிஅம்மா இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்தின் மூச்சுக்காற்றை பிரசவித்தவர் அவர்.

ஆனால் தலைவரிடம் இருந்த எளிமைக்கும்,உண்மைத்தன்மைக்கும், அவருடைய தாயாரே மூலவேராக இருந்திருக்கிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகால ஒரு இனவரலாற்றின் மீது புதிய பரணியை எழுதிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை தன் கருவில் சுமந்தவர் அவர்.

அடக்கப்பட்டும், அடங்கியும், ஒடுங்கியும் கிடந்த ஒரு தேசிய இனத்தின் சிந்தனை முறைகளை முழுதாக திருத்தி எழுதிய ஒரு அற்புத போராளித் தலைவனை பத்து மாதம் தாங்கிப் பெற்றவர் அவர். இது ஒன்று போதும் அவரை தேசத்தின் அன்னையாக நாம் அஞ்சலிக்கவும், ஆராதிக்கவும். என்றென்றும் நன்றி தெரிவிக்கவும்.

1973ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் தேசத்துக்காக வீட்டைவிட்டு முழுதாக புறப்பட்ட பின்னர் அந்த தாய் நிறைய நாட்கள் மனதுக்குள் தனது மகனுக்காக ஏங்கி இருப்பார்.

ஒரு இயல்பான தாயின் குணத்துடன் தனது மகன் இந்த போராட்ட களத்தில் இருந்து வெளிவந்து சாதாரண வாழ்வு வாழ வேணும் என்று அந்த தாய் மனதுக்குள் வெம்மி இருக்கலாம்.1983ல் அந்த வீடு சிங்கள இராணுவ பேய்களால் எரிக்கப்படும் வரைக்கும் அந்த வீட்டை தாண்டி ஒவ்வொரு நாளும் பலமுறை சைக்கிளில் சென்றிருக்கிறேன்.

அந்த வீட்டின் வாசல் கேற்றின் மாலை வேளைகளில் அந்த தாய் பார்த்தபடியே தினமும் நின்றிருந்ததை இப்போது நினைத்து பார்க்கிறேன்.

வீட்டைவிட்டு தேசத்துக்காக என்று சென்ற மகன் ஏதோ ஒரு பொழுதில் திடீரென வந்து நின்று அம்மா என்று அழைக்கமாட்டானா என்ற ஏக்கத்துடனயே அவர் நின்றிருப்பார். (இப்போது பத்துக்கோடிக்கும் அதிகமான மக்கள்

தொகைகொண்ட தமிழ்இனம் அன்று அந்த தாய் நின்றது போலவே ஏதோ ஒரு குரலுடன் அந்த பெருந்தலைவன் வரமாட்டானா என்று எதிர்பார்த்து நிற்கின்றது)

ஆனால் ஒருநாளும் அவர் தனது மகனை எல்லாவற்றையும் விட்டுவா என்று அழைத்தது இல்லை. அப்படி அழைத்தாலும் அந்த மகன் வந்துவிடப் போவதில்லை என்பது எல்லாரையும்விட அவருக்குத்தானே தெரியும். அப்படிஒரு ஆழ்ந்த புரிதல் மகனின் பாதையின்மீது தாய்க்கும் இருந்தது.

தாய்க்கு மட்டுமல்ல அந்த மகனுக்கும் தாய்மீது மனதுக்குள் பாசமும், அன்பும், இருந்திருக்கும்.

ஆனால் அந்த பாசத்துக்காக எந்தக் கணத்திலும் அவர் தன் போராட்ட பாதையில் திரும்பிப் போனதில்லை.

இப்படியான சில சம்பவங்களின் காலச்சாட்சிகளாக நாம் யாரோ விளங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.1983ம் ஆண்டின் ஒருநாளில்,கோழைத்தனமான சிங்கள பேரினவாத இராணுவத்தால் தேசியத்தலைவரின் வீடும், வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்கு அண்மையில் இருந்த சில வீடுகளும் எரிக்கப்பட்டு விடுகிறது.

இரவு முழுதும் வீடெரித்து வெறியாட்டம் ஆடிய இராணுவம் நிலம் தெளியத் தொடங்கியதும் முகாம் திரும்பினர். அப்போது ஆயுதப் பொறுப்பாக இருந்த கப்டன் பண்டிதர்தான் (ரவீந்திரன்) ஆவணங்களுக்கும் பொறுப்பாக இருந்தான்.

அவனும் கப்டன் லாலாவும் (ஞானேந்திரமோகன்), கப்டன் வாசுவும் (சுதாகர்), சென்று எரிக்கப்பட்ட வீடுகளை, தலைவர் வீடு உட்பட படமெடுத்து திரும்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் தலைவர் பொலிகண்டி பாலாவிக் குடியேற்றத்திட்ட வீடு ஒன்றில் இருந்திருந்தார்.

அவரைப் பார்ப்பதற்காக போய்க்கொண்டு இருந்தபோது பொலிகண்டி கந்தவனக் கோயில் மடம் ஒன்றில் ஒருசிறு சாக்கு படங்கு போட்டு அதற்குள் வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகள் சின்ன சட்டிக்குள் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தனர்.

தலைவரிடம் சென்று நிலைமைகளைப் பற்றிக் கதைக்கும் போது ‘உங்கள் அப்பாவும் அம்மாவும் மடத்தில் இருக்கினம் ‘ என்று சொன்னபோது அந்த ஒப்பும் உவமையும் இல்லாத் தலைவர் சொன்னார் ‘அப்பா, அம்மா மடத்திலை…நான் ரோட்டிலை..நீங்கள் போய் உங்கடை வேலைகளை செய்யுங்கோ…’என்று.

ஒரு 200 மீற்றர் தூரத்தில் தனது அம்மா வீடு இல்லாமல் மடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தும் அவர்களை சென்றுபார்ப்பதிலும் பார்க்க விடுதலைக்காக உழைப்பதுதான் முக்கியம் என்று நினைத்த ஒரு உன்னத மனிதனை இந்த இனத்துக்கு தந்த ஒரு காரணத்துக்காக தன்னும் இந்த தாயை நன்றியுடன் நினைக்க வேண்டும்.

எத்தனையோ வீடுகள் அந்த இரவில் எரிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ உறவுகள் வீடுகளை இழந்து அந்த இரவில் வேறிடம் சென்றனர். அவர்களை சந்திக்காமல் தனது தாயை மட்டும் சந்திப்பதை விரும்பாதவர் அந்த மகத்தான தலைவன்.

இந்த ஒப்பற்ற அற்புதக்குணம் அவரின் தாயின் மனதிலும் இருந்ததை அறியக்கூடியதாக ஒரு சம்பவம் இருந்தது.1983 யூலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் பயிற்சித் தளங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்குவதற்காக தலைவரும் உறுப்பினர்களும் சென்றிருந்த நேரம்.

இரண்டு இலக்கங்களில் இருந்த இயக்க உறுப்பினர் தொகை மூன்று இலக்கத்தை தொட்டு நின்ற நேரமும் அதுதான். உறுப்பினர்களின் உணவுத் தேவை, போக்குவரத்து தேவை என்பனவும் வேறு தேவைகளும் இயக்கத்தை உலுப்பிய நேரம் அது.

நிதித் திரட்டலுக்காவும், போராட்ட விளக்கத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்பதற்காகவும் 1983 செப்டம்பரில் திருச்சி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளின் கண்காட்சி அரங்குகள் உருவாக்கப்பட்டிருந்தன.

அதில் மக்கள் அளிக்கும் உண்டியல் நிதியும், காசிஆனந்தனின் புத்தகம் விற்று வரும் நிதியும்தான் அந்த நேரத்து தமிழ்நாட்டில் இயங்கிய எமது அமைப்பின் அன்றாட தேவைகளுக்கான வருமானம்.

திருச்சி தேவர் மண்டபத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் கண்காட்சியில் மேஜர் கரன் (குமரப்பா, புலேந்தியுடன் வீரச்சாவடைந்தவர், கேணல் சங்கர் அண்ணாவின் இளைய சகோதரர்) நின்றிருந்தார். ஒரு மாலைப்பொழுதில் கண்காட்சி அலைமோதிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் ஒருவராக தேசியத்தலைவரின் தாயாரும் நின்றிருந்தார்.

கையினில் ஏந்திக் களித்த மகன் கைகளில் ஒரு தேசத்தின் விடுதலையை தாங்கிய புகைப்படங்களைப் பார்த்து மனதுக்குள் நிச்சயம் ‘ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும் தாயாகி’ இருந்திருப்பார். அதன் பின்னர் தினமும் அவர் திருச்சி கண்காட்சிக்கு வந்துகொண்டுதான் இருந்தார்.

எந்த நேரத்திலும் மகனை பார்க்க விரும்புவதாகவோ, மகனை வந்து தன்னை சந்திக்கவோ அந்தத் தாய் சொல்லவே இல்லை. இதுதான் அந்தத் தாயின் சிறப்பு. மகனின் பாதையில் ஒருபோதும் குறுக்கிட்டதே இல்லை. தலைவருக்கும் தனது தாய் திருச்சிக்கு வநது விட்டிருந்தது தெரிந்து விட்டிருந்தது.

அவரும் அமைப்பு வேலை சம்பந்தமாக திருச்சிக்கும், திருச்சிக்கு அருகில் உள்ள மதுரைக்கும் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் வந்து போய்க்கொண்டுதான் இருந்தார். அவர் நினைத்திருந்தால் தனது தாயை போய் பார்த்து இருக்கலாம்.

எத்தனை தாய்மார் இப்படி வீடுகளை இழந்து தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் இருந்த பொழுதில் தனது தாயை மட்டுமே பார்க்க வேணும் என்று தலைவர் விரும்பியது இல்லை.

பார்வதிஅம்மா தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு வருடங்களின் பின்னரே 1985ல் தான் தலைவர் தன் தாயை சந்தித்தார்.

போராட்டத் தலைவனின் பாதையில் குறுக்கிடாத தாயும் தாய்க்காக எதையும் விட்டு வராத மகனுமாக இருந்தாலும் தலைவருக்கு இருந்த மிகப்பெரிய ஆளுமைகளின் முதல் ஊற்றாக அவரின் தாயே இருந்திருக்கிறார்.

தன் அனைத்தையும் தொப்புள் கொடிக்குள்ளாக ஊட்டி வளர்த்த அந்த தாய் எரிந்து முடிந்து விட்டார்.

அவரின் சாம்பலைக்கூட காட்டுமிராண்டிச் சிங்களப் பேரினவாதம் எடுத்து எறிகிறது என்றால் அது எந்தளவுக்கு அந்த தாயின் இருப்பிலும், இறப்பிலும்,எரிந்து முடிந்த சாம்பலிலும் பயம் கொண்டு இருக்கிறது.

பார்வதிஅம்மாவின் சாம்பலை கடலில் கரைத்து ஒழிக்கலாம். அவரின் எஞ்சிய எலும்புச்சிறு துண்டுகளை எங்காவது வீசிவிடலாம். ஆனால் அந்த தாய் பெற்ற மகனின் நேர்மையும், உண்மையும், உறுதியும் யாரால் எடுத்து வீசிவிட முடியும்.

விடுதலைக்கான அந்த அற்புதத்தை பெற்ற தாயே நன்றி உனக்கு

ச.ச.முத்து

Advertisements