தூக்குத்தண்டனை ரத்து! தொடரும் சிறைவாசம்! அரசியலா? நீதியா?

ராஜீவ் கொலை வழக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக அரசியலின் பிரதானமான இடத்திற்கு வந்துவிட்டது. நீண்ட காலமாக சிறையில் வாடும் மரண தண்டனை கைதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில அதிரடி முடிவுகளை கடந்த ஒரு மாதமாக எடுத்து வருகிறது.

murugan santhan perarivalan

குறிப்பாக கருணை மனுக்களின் மீது நீண்டகாலம் கிடப்பில் போட்டு வைத்திருந்ததன் மூலம் மரண தண்டனை கைதிகள் அடைந்த துன்பங்களை கணக்கில் கொண்டு அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்து வருகிறது. சமீபத்தில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உட்பட பலரது மரண தண்டனைகள் இந்த அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டன.

அந்த வகையில்தான் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 18ம் தேதி மூவரின் தூக்குத் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக உத்தரவிட்டது.

இந்தக் கைதிகள் சிறையில் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று மத்திய அரசு வைத்த வாதத்தை ஒதுக்கித் தள்ளிய உச்சநீதிமன்றம் 23 வருட சிறைவாசத்தின் கொடுமையை கணக்கில் கொண்டு இந்த தண்டனைக் குறைப்பை வழங்கியது. மேலும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமான ஒரு குறிப்பை விட்டுச் சென்றனர்.

ஆயுள் தண்டனை என்பது கைதிகள் மூவரும் தங்கள் வாழ்நாளை சிறையில் கழிக்கவேண்டியது என்பதாகும். அதேசமயம் குற்றவியல் சட்டம் 432,433ஏ ஆகிய பிரிவுகளின்படி அவர்களது நன்னடத்தை யில் திருப்தி ஏற்பட்டால் மூவரையும் சம் பந்தப்பட்ட அரசு சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிப்பது குறித்து தீர்மானிக்கலாம் என்பதுதான் அந்தப் பரிந்துரை.

உச்சநீதிமன்றம் மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியது தமிழக மக்க ளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் மரண தண்டனைக்கெதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் சக்திகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராடியிருக்கின்றன.

அவர்கள் தூக்குக் கயிற்றின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சமயத்தில் அதைத் தடுத்து நிறுத்துவதற்காக செங்கொடி என்ற பெண் தன்னைத்தானே எரித்துக்கொண்ட பெரும் தியாகமும் நடந்தது. எனவே தமிழர்களிடம் இந்த தண்டனைக் குறைப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மேலும் இந்த தண்டனைக் குறைப்பு என்பது பொதுவான இந்திய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படியே அளிக்கப்பட்டது. ஆயுள்தண்டனை கைதிகள் 14 வருடங்கள் சிறையில் இருந்து விட்டால் அவர்களது நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது இந்தியா முழுக்க இருந்து வரும் நடைமுறை. அந்த அடிப்படையில்தான் இந்த மூவரும் ஏற்கனவே 23 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டதால் அவர்களது நடத்தையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை விடுதலை செய்யலாம் என்கிற வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் அளித்தது.

தீர்ப்பு வந்த அடுத்தநாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனோடு சேர்த்து ஏற்கனவே இந்த வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் சேர்த்து விடுதலை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றினார்.

ராஜீவ் கொலைவழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பினால் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் தடா நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால் குற்ற விசா ரணை முறைச் சட்டம் 435ன்படி தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென்பதால் தமிழக அமைச்சரவையின் முடிவு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு தனது கருத்தை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்கா விட்டால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 432 மாநில அரசுக்கு அளித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரை தமிழக அரசே விடுதலை செய்துவிடும் என்று அறிவித்திருக்கிறார். இந்த முடிவு பல்வேறு எதிரொலிகளை தேசிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த முடிவை வரவேற்றிருக்கின்றன. ராஜீவ் கொலை வழக்கின்மூலம் ஜெயலலிதா விற்கு இரண்டாம் முறையாக பெரும் ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 1991-ல் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து நிலவிய சூழலில் ஜெயலலிதா அதிகாரத்திற்கு வந்தார். இப்போது இந்த ஏழுபேரை விடுதலை செய்ய முடிவெடுத்ததன் மூலம் இவர்களின் விடுதலைக்காக தமிழகத்தின் அனைத்து அரசியல் மற்றும் ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டத்தின் முழுபலனையும், தானே இப்போது எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்.

இந்த மூன்றுநாள் கெடு என்பது மத்திய அரசை ஆத்திரமடையச் செய்யும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இது மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் சம்பந்தமான ஒரு போராட்டமாக மாற்றப் படுவதன் மூலம் மத்திய அரசு இதில் எதிரான நிலையை எடுக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். அதன்மூலமாக மத்திய அரசுக்கெதிராக ஏழுபேரின் விடுதலைக்கான ஒரு போராளியாக அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும்.

அதேசமயம் மத்திய அரசு இந்த ஏழு பேரை விடுதலை செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் என்பதையும் இதனால் காங்கிரசின் மீதான வெறுப்பு தமிழகத்தில் தீவிரமடையும் என்பதையும் நன்றாக உணர்ந்திருக்கும் ஜெயலலிதா அதன் விளைவாக தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் என்கிற ஒரு கூட்டணி தமிழகத்தில் உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நினைக்கக் கூடும். அவரது இந்த சாதுரியமான அரசியல் காய் நகர்த்தலில் காங்கிரஸ் வசமாக சிக்கிக்கொண்டது.

மத்திய அரசு இப்பொழுது ஏழுபேரின் விடுதலைக்கெதிராக தாக் கல் செய்துள்ள அவசர மனுமீது தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறை களைப் பின்பற்றவில்லையென்றும் எனவே தமிழக அரசின் முடிவிற்கு இரண்டு வார இடைக்கால தடை விதிக்கிறது என்றும், அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஒரு நீண்ட சட்டப் போராட்டத் திற்குள் இந்த ஏழுபேரின் வாழ்க்கை சிக்கிக்கொள்வதற்கும் இது வெறுமனே அரசியலாக மட்டும் மாற்றப்படுவதற்குமான சூழ்நிலைதான் தெரிகிறது.

இந்த ஏழுபேரையும் விடுதலை செய்யும் முடிவுக்கெதிராக தமிழக காங்கிரஸார் உணர்ச்சிகரமாக, அர்த்தமற்ற பேச்சுகளை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசி வருகின்றனர். ராஜீவ் கொலைக்கும் அவரோடு இறந்த 17 பேர்களுக்கும் என்ன நீதி என்று கேட்கின்றனர். குற்றவாளிகளை எந்த தண்ட னையும் இன்றி அவிழ்த்து விட்டுவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி “மக்கள் நலனுக்காக உழைத்த எனது தந்தையை கொன்ற கொலையாளிகள் விடுதலை செய்யப்பட இருப்பது வருத்தத்தைத் தருகிறது. நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த முன்னாள் பிரதமருக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் பாமர மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? இந்த நாட்டில் பிரதமருக்குக்கூட நீதி கிடைக்காது’’ என்று மிகவும் உணர்ச்சி கரமாகப் பேசியுள்ளார். பாரதீய ஜனதாவும் தமிழக அரசின் முடிவை கண்டித்துள்ளது.

இவர்கள் யாருக்கும் இந்த வழக்கு கடந்து வந்த பாதையைப் பற்றியோ இந்த வழக்கில் தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு இந்தக் குற்றத்தில் இருக்கும் பங்கு குறித்தோ எந்த அறிவும் இல்லை என்பதைத்தான் இந்த வாதங்கள் அனைத்தும் வெளிப்படுத்துகின்றன. ராஜீவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு துப்பு துலக்கிய தாக கார்த்திகேயன் போன்ற வர்கள் இன்றும் உரிமை கொண்டாடுகிறார்கள். இவர்கள் செய்த புலனாய்வின் அடிப்படையில்தான் பூந்தமல்லி தடா நீதிமன்றம் முதலில் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

பின்னர் மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றத்தில் பல்வேறு நிலைகளில் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரி தண்டனை விதிக்கப்பட்ட உலக அதிசயம் இந்த தடா நீதிமன்றத்தில்தான் நிகழ்ந்தது. மேலும் இதை சி.பி.ஐ. முதலில் தேசத்திற்கெதிரான பயங்கரவாத சதிச்செயலாக கருதித்தான் தடா நீதிமன்றத்தின் மூலம் விசாரித்தது.

ஆனால் பின்னர் உச்சநீதிமன்றம் “இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய அமைதிப்படை இலங்கையில் மேற்கொண்ட செயல்களுக்கு பழிவாங்கும் விதமாகவே இதில் ஈடுபட்டனர். எனவே இதற்கு பயங்கரவாத சட்டப்பிரிவுகள் பொருந்தாது’ என்றும் “தேசத்திற்கெதிராக துரோகம் செய்வதோ, பொது மக்களை கொல்வதோ அவர்களது நோக்கம் இல்லை’ யென்று கூறி இதை ஒரு சாதாரண குற்றவியல் வழக்காகத்தான் விசாரிக்க வேண்டுமென்று சொல்லி விட்டது.

இந்தக் கொலை சதி தனு, சிவராசன், சுபா ஆகியோரைத் தவிர கடைசிவரை யாருக்கும் தெரியாது என்று சிவராசன் 7.5.1991-ல் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லா தந்தி வழியாக அனுப்பிய சங்கேதச் செய்தி பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் அது கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லை. இப்படி ஒரு கொடூரமான சதி வலையில் அறியாமல் சிக்க வைக்கப் பட்டவர்களுக்கும் அந்த குற்றத்தை நேரடியாகச் செய்தவர்களுக்கும் வழங்கப்படக்கூடிய அதே தண்டனையை வழங்க வேண்டுமென்று கேட்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் சுப்ரமணியசுவாமி, மரகதம் சந்திரசேகர் போன்றவர் களின்மேல் வைக்கப்பட்ட சந்தேகங்களும் அவிழ்க்கப்படாத பல மர்மங்களும் இன்னும் அப்படியேதான் நீடித்துக்கொண்டி ருக்கின்றன. அந்தவகையில் குற்றவாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார்கள், வாகனம் கொடுத்தார்கள், வீடு வாடகைக்கு கொடுத்தார்கள் என்றெல்லாம் சொல்லி அவர்களை தூக்கிலிட வேண்டுமென்பதோ, வாழ்நாளெல்லாம் சிறையில் வைத்திருக்க வேண்டுமென்பதோ இந்திய சட்டத்திற்கு முரணானது.

அவர்கள் இந்தக் கொலைச்சதியில் நேரடியாக ஈடுபட்டார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை முன் வைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட சூழலில் அவர் கள் செய்த தாகச் சொல் லப்படும் குற் றங்களுக்கான தண்டனையை சட்டப்படி அனுபவித்து முடித்துவிட்டார்கள் என்கிற நிலையில் அவர்களை விடுதலை செய்வதுதானே நீதியாக இருக்க முடியும்?

ராஜீவ் கொலைவழக்கில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் அதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கமே முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஏழு பேரையும் வாழ்நாளெல்லாம் சிறையில் வைத்திருப்பதன் மூலம் இவர்கள் என்ன நீதியைப் பெற விரும்புகிறார்கள்?

23 வருடங்கள் கடும் சிறைவாசத்தை ஒருவர் அனுபவிப்பது என்பது தண்டனை இல்லையென்று இவர்கள் நினைக்கிறார்களா? உண்மையில் 100 மரண தண்டனையைவிட கொடுமையானது. ராஜபக்ச அரசாங்கம் நடத்திய மாபெரும் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசாங்கம் ராஜீவ் படுகொலையை முன்னிட்டுத்தானே துணை நின்றது? இதற்குப் பின்னுமா இவர்களது நீதிக்கான தாகம் அடங்கவில்லை?

இதனிடையே இந்தப் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இவர்களின் விடுதலைக்கு எதிரானவர் போலும், தான்தான் இவர்கள் விடுதலையை முன்னின்று நடத்தியது போன்றும் ஒரு தோற்றத்தை ஜெயலலிதா உருவாக்க விரும்புகிறார். 2000-ல் நளினியின் மரணதண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்க அப்போதைய தி.மு.க. அமைச்சரவை முடிவு செய்ததாகவும் மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்று ஆலோசனை வழங்கியதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

இதன் மூலமாக ஏதோ இவர்களின் விடுதலையை தான் உறுதியாக ஆதரித்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஆனால் நளினியின் தண்டனைக் குறைப்பை மிகக் கடுமையாக அன்று விமர்சித்தவர் ஜெயலலிதா. நமது எம்.ஜி.ஆர். இதழில் 23.10.2008-ல் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பது பற்றியும் நளினியை பிரியங்கா போய் பார்த்ததையும் கடுமையாக விமர்சிக்கிறார்.

2011-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரின் கருணை மனு தொடர் பான வழக்கில் கருணை காட்டுவதற்கான சூழல் எதுவும் உருவாகவில்லையென தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த பிப்ரவரி 11-ம் தேதி நளினி தனது நோயுற்ற தாயாரை போய்ப் பார்க்க அனுமதி கேட்டபோது சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு அந்தக் கோரிக்கையை மறுத்தது.

ஆனால் இப்போது சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காக ஜெயலலிதாவின் கருணை கட்டற்று பெருகுகிறது. கருணாநிதியை கண்மூடித்தனமாகத் தாக்கும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் கடந்த கால ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப் புலிகள் சார்ந்த நிலைப்பாடுகள் என்னவாக இருந்தன என்பதை மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.

கலைஞரைப் பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாக மரண தண்டனைக்கெதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்திருக்கிறார். கடந்தகால வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள், தியாகு, லெனின், ரங்கசாமி, குருமூர்த்தி போன்ற பலரது மரண தண்டனைகள் தி.மு.க. ஆட்சியின் பரிந்துரைகளாலேயே ரத்து செய்யப்பட்டன. மலேயா கணபதி தூக்கிலிடப் பட்டபோது அதைக் கண்டித்து “தூக்கில் தொங்கிய கணபதி’’என்ற நாடகத்தை எழுதி அதை எம்.ஆர்.ராதா மூலம் தமிழகமெங்கும் கலைஞர் அரங்கேற்றினார்.

அந்தக் காலந்தொட்டு இன்று வரை மரண தண்டனை எதிர்ப்பில் அவர் சம ரசமற்று குரல் கொடுத்து வந்திருக்கிறார். தி.மு.க. ஆட்சியிலிருந்த காலத்தில் சில முடிவுகளைத் துணிச்சலாக எடுக்க முடியாமல் போனதற்கான காரணம் தி.மு.க. அரசிற்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகள்தான். விடுதலைப்புலிகளை தி.மு.க. ஆதரிக்கிறது என்று சொல்லி 1991-ல் ஆட்சியே கலைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இது போன்ற விவகாரங்களில் தி.மு.க. என்ன முடி வெடுத்தாலும் புலிகளின் ஆதரவாளர் என்று கலைஞரை முத்திரை குத்தி நெருக்கடி கொடுக்க ஜெயலலிதா தயங்கியதே இல்லை. இன்னொரு புறம் ராஜீவ் கொலையை மனதில் கொண்டு காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மிகக்கடுமையான நிலைப்பாடுகளையே எடுத்து வந்திருக்கிறது.

தி.மு.க.வுக்கு இருந்த நெருக்கடிகள் எதுவும் ஜெய லலிதாவிற்கு கிடையாது. அரசியல் சூழலுக்கேற்ப அவர் விடுதலைப்புலிகளை ஒருநாள் ஆதரிப்பார். இன்னொருநாள் எதிர்ப்பார். மேலும் ஜெயலலிதா வின் அரசாங்கம் இப்போது எடுத்திருக்கும் முடிவை கலைஞர் மனமுவந்து வரவேற்றிருக்கிறார்.

இத்தகைய ஒரு முடிவை ஒருவேளை தி.மு.க. அரசாங்கம் எடுத்திருந்தால் ஜெயலலிதா என்ன சொல்லியிருப்பார் என்பதை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

வெறியூட்டும் உணர்ச்சிகரமான பேச்சுகளையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் தாண்டி நாம் மனித நீதியை தேடவேண்டிய சந்தர்ப்பம் இது.

மனுஷ்யபுத்திரன்

Advertisements