நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நோ பயர் சோன்-(NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது.srilanka india partners

இலங்கையுடனான நட்புறவை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமக்கு காரணம் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கெலும் மக்ரே தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகவும் தவறான முடிவு என்றும் கெலும் மக்ரே கூறினார்.

இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற காரணத்தை அவர்கள் சொல்லியிருப்பது, குறுகிய கால அரசியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது, உண்மை நிலவரம் ஒன்றை மக்கள் தெரிந்துகொள்ள முடியாதபடி மறைக்கின்ற நடவடிக்கை’ என்றும் அவர் தெரிவித்தார்.

இது நிச்சயமாக இந்தியாவுக்கு பிரச்சனைக்குரிய, அசௌகரியத்துக்குரிய நிலைமை தான். நீதி கிடைப்பதற்கு உண்மையை நிலைநாட்டுவது அவசியம். அந்த நீதி தான் அரசியல் தீர்வொன்றையும் அமைதியான சூழலையும் எட்டுவதற்கு அடிப்படை ஆதாரமாக அமைய முடியும். இப்படி இந்தப் படம் மக்களை சென்றடைவதைத் தடுப்பதன் மூலம் இந்தியா தவறிழைக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது என்றும் கூறினார் இயக்குநர் கெலும் மக்ரே .

ஆனால், நோ பயர் சோன் படத்தில் வருகின்ற அனேகமான காட்சிகள் மனதை பெருமளவில் பாதிக்கக்கூடியவை என்று இந்திய திரைப்பட தணிக்கைச் சபை இன்னொரு காரணத்தையும் கூறியிருக்கிறதே’ என்று தமிழோசை அவரிடம் சுட்டிக்காட்டியது.

இணையதளத்தில் படம் வெளியாகிறது

போர்க்குற்றங்கள் என்பது மனதைப் பாதிக்கக்கூடிய, விரும்ப முடியாத சம்பவங்கள் தான். அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் அப்படியாகத் தான் இருக்க முடியும். அந்தப் படம் பிரித்தானிய தொலைக்காட்சிகள் காட்டப்படுவது தடுக்கப்படவில்லை. இவை துயரகரமான உண்மைகள். அவற்றுக்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டியிருக்கிறது’ என்று பதிலளித்தார் கெலும் மக்ரே.

மனதைப் பாதிக்கக்கூடிய காட்சிகள் என்பது ஒரு சாக்குபோக்கு காரணமே என்றும் இலங்கையுடனான உறவுகளை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் தீர்மானம் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்தியாவிலும் தடை ஏற்படக்கூடும் என்று கருதப்படும் மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் எல்லா மக்களும் இலகுவாக பார்க்கக்கூடிய விதத்தில் இணையத்தில் படம் வெளியிடப்படுவதாகவும் இயக்குநர் மேலும் கூறினார்.

மலேசியாவில் இந்தப் படத்தைக் காண்பித்தக் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை செல்லக்கூடிய வழக்கொன்றை உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் மெக்ரே தெரிவித்தார்.

தமது படம் திரையிடப்படுகின்றமை தடுக்கப்படுகின்ற சம்பவங்களின் பின்னணியில் இலங்கை அரசாங்கமே உள்ளதாகவும் நோ பயர் சோன் இயக்குநர் தெரிவித்தார்.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் கெலும் மக்ரே ஈடுபட்டு வருவதாகவும் அவரது படங்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பண உதவி அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து கெலும் மக்ரே தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்தார்.

இந்திய அரசின் தடைக்கு அரசியலே காரணம்

இலங்கைப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை காட்டும் நோ பயர் சோன் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளதற்கு அரசியலே காரணம் என்கிறார் திரைப்படத் தணிக்கைத்துறையின் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் வி பாலு.

இந்த திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் காட்ட அனுமதித்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை அது பாதிக்கும் என்று தணிக்கைத்துறையினால் கூறப்படும் காரணம் இந்திய தணிக்கைச் சட்டப்படி சரியானதே என்று கூறும் பாலு, ஆனால் இந்தமாதிரியான தடைகள் வெறும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் மட்டும் அளிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தண்டனை விதிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழுபேரின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் ஒரு அரசியல் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

இந்த பின்னணியில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் அனுமதித்தால் அதனால் அரசியல்ரீதியிலான பிரச்சினைகள் உருவாகலாம் என்று இந்திய அரசு நினைப்பதும் இந்த முடிவுக்கான காரணமாக இருக்கும் என்று கூறினார் பாலு.

இணையத்தில் முழுமையாக கிடைக்கும் இந்த ஆவணபடம் ஏற்கெனவே பல மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அரசின் திரைப்படத் தணிக்கைத்துறையின் இதுபோன்ற சான்றிதழ் மறுப்புக்கள் எந்தவிதத்திலும் இந்த ஆவணப்படத்தை தடுத்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

[ பி.பி.சி ]

*********
இலங்கைக்கு எதிராக தீர்மானம்! இந்தியாவுக்கு தமிழக மாணவர்கள் அழுத்தம் கொடுக்க மக்ரே வலியுறுத்தல்!

ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இந்தியாவுக்கு தமிழக மாணவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே வலியுறுத்தியுள்ளார்.

புதிய உள்ளடக்கத்துடன் கூடிய இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் நேற்று மாலை சென்னை கோயம்பேடு காய், கனி அங்காடி எதிரில் உள்ள ராயல் பிளாஸா ஓட்டலில் தமிழக மாணவர்களால் திரையிடப்பட்டது.

ஏற்கனவே வெளிவந்திருந்த குறித்த ஆவணப் படத்தில் ஆறு நிமிடங்கள் புதிய காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று ஏராளமானோரால் ஓட்டலின் கீழ்த் தளப் பகுதி நிரம்பி வழிந்தது.

காணொளி மூலமான சனல் 4 ஹெலம் மக்ரே இன் அறிமுக உரையுடன் ஆவணப்படம் திரையிடப்பட்டது. திரையிடல் முடிந்ததன் பிற்பாடு, லண்டனில் இருந்து கெலம் மக்ரே காணொளி மூலம் நேரடியாக மாணவர்களிடம் உரையாடினார்.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விரிவாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார்.

மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

அமெரிக்கா இந்த தீர்மானத்தினை கடந்த முறை பல நாடுகளின் உதவிகளோடும் கொண்டுவர முயற்சி செய்தும், அவர்களால் அந்த தீர்மானத்தினை ஓரளவுக்கு மேல் கொண்டு செல்ல முடியவில்லை. காத்திரமான தீர்மானத்தினை அவர்களால் கொண்டு வர முடியாமல் இருந்தது.

ஆனால், இந்த முறை அப்படியான காத்திரமான தீர்மானத்தினை கொண்டு வருவது எல்லோருடைய எண்ணமாகவும் இருக்கின்றது. அதை நோக்கி அவர்கள் செய்வார்கள். அதற்கான வேலைகளை நாங்கள் செய்ய வேண்டும்.

கடந்த முறை ஐ.நா கூட்டத் தொடர் நடந்த போது, மாணவர்களின் போராட்டம் முழுக்க முழுக்க இந்திய அரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கச் செய்தது போன்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்தியது.

இம்முறையும் சர்வதேச அளவில் இப்படியான அழுத்தங்கள் இருக்க வேண்டும். அதனை நோக்கியதாக மாணவர்களாகிய உங்களுடைய பணிகளும் இருக்க வேண்டும்.

மார்ச் மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் பன்னாட்டு விசாரணை நடைபெற அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பங்கு மட்டுமல்ல அவர்களையும் உடன் அழைத்துச் செல்லுதல் என்பது மிக முக்கியமானது என்றும் கூறினார்.

உலக அரங்கில் அதுவும் தெற்காசியப் பிராந்தியத்தில் பிராந்திய அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கின்றது. ஆனால், இந்தியா தான் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க முடியாதவாறு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் இம்முறை ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்க மாணவர்களாகிய நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையில் இருக்கக் கூடிய சிங்கள மனித உரிமை ஆர்வலர்களும் அங்கு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பதிவு செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே, ஒரு ஊடகவியலாளனாக அங்கு நடந்த அநீதிகளை பதிவு செய்வது தான் எனது வேலை. ஏற்கனவே என்னை புலிகள் இயக்க ஆதரவாளனாக இலங்கை அரச தரப்பினரும், இன்னும் பலரும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், இலங்கையில் தமிழ் மக்களினுடைய போர் 2009 உடன் முடிந்து விடவில்லை. நீங்கள் எல்லாம் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிற்பாடும் நீதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் மட்டுமே பேசுகின்றீர்கள். ஏறக்குறைய ராஜபக்ச சொல்வது இதனைத் தான். அவரின் மொழியும் இதைப் போலத் தான் இருக்கின்றது.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது இன்னும் இதனைப் பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். எனவே, ராஜபக்சவின் வலையில் விழுவதைப் போல நீங்கள் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

எப்போதும் நியாயவான்களாக உண்மைக்கும் நீதிக்குமான செயல்களை மாணவர்களாகிய நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதியாக இலங்கையை இம்முறை ஐ.நா.வில் உலக நாடுகள் தண்டிக்க தம்மாலான முயற்சிகளை செய்வோம் என மாணவர்கள் உறுதி கூறினர்.

திரையிடல் நிகழ்ந்த அரங்கின் பின் வரிசையில் புலனாய்வுத் துறையினர் அமர்ந்திருந்து பல விடயங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

Advertisements