ஈழத் தமிழர் இன விடுதலை நோக்கிய போர் – A Gun A Ring

A-Gun-And-A-Ring-Movie-

முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத் தமிழர் இன விடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு சுடுகாடாய்க் கிடப்பதனை மிகவும் தத்ரூபமாக சொல்லியிருக்கும் திரைப்படம் A Gun A Ring.

அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம்.

போரிலிருந்து தப்பிப் பிழைத்து புலப்பெயர்வு கடந்தும் இந்தப் போரின் எச்சங்கள் எந்தவகையிலும் களைந்தெறிய முடியாத உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரினதும் தீர்க்கப்படாத கணக்கையும் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது இத்திரைப்படம்.

1999 என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர் லெனின் எம்.சிவம் அவர்கள் கனடாவாழ் புலம்பெயர்வு மக்களின் வலியை திரைப்படமாக்கியுள்ளார் அதுவே A Gun & A Ring. பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படம் லண்டன் Cineworld Wembley திரையரங்கில் எதிர்வரும் 22ம் திகதி அதாவது நாளை திரையிடப்படவுள்ளது.

மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற A Gun A Ring திரைப்படம் – கனடா, அவுஸ்திரேலியா, ஃபிரான்ஸ், சுவிஸ் என பல நாடுகளைத் தொடர்ந்து இப்போது பிரித்தானியாவுக்கு வருகிறது.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் பார்க்கவேண்டிய உணர்வுபூர்வமான படம் A Gun and A Ring.

இத் திரைப்படம் தொடர்பில் இப்படத்தின் இயக்குனர் லெனின், மற்றும் தயாரிப்பாளர் விஸ்ணு ஆகியோரின் கருத்துக்கள் அடங்கிய காணொளி.

‘ஒரு துப்பாக்கி ஒரு மோதிரம்’ (GUN & RING) திரைப்படம்

வார இறுதி நாள்கள் என்றால் பல்வேறு பணிகள்,பயணங்கள், நிகழ்ச்சிகள்,கொண்டாட்டங்கள் என்று எல்லாமே இருக்கும்.

அவற்றுக்குள் முக்கியமானவைகளை நீங்கள் நிறைவேற்றியே ஆவீர்கள்.

அதுபோல இன்று பரீஸ் மாநகரிலே தியைிடப்படுகின்ற கனடா தேசத்திலே ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட, பிரான்ஸ் – ஜேர்மனி வாழ் ஈழத்துக் கலைஞர்களும் நடித்திருக்கின்ற ‘ஒரு துப்பாக்கி ஒரு மோதிரம்’ திரைப்படத்தைப் பார்ப்பது உங்களின் முக்கிய விடயங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்.

நூற்றாண்டைக்கடந்து பயணிக்கும் தென்னிந்திய திரைப்படத்துறை எட்ட முடியாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஆறு தசாப்த – கால எல்லையைக் கொண்ட எங்கள் ஈழத்துத் திரைப்படத்துறை என்பது இருபத்தாறு திரைப்படங்களுடன் மட்டும் நின்று போய்விட்டது.

முயற்சிகள் பேசப்பட்டாலும், படத்தயாரிப்புகள் முடிவுற்று அவை வெளிவருவதாக இல்லை.

இந்தச் சந்தரப்பத்தில், கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஈழதேசத்தின் இளம் கலைஞர்கள் திரைப்படத்துறையில் அக்கறைகொண்டு, அந்தத்துறைசார்ந்து கற்றறிந்து, பெரும் பணச் செலவில் திரைப்படத்தயாரிப்புக்களை மேற்கொண்டுவருகிறார்கள்.

ஈழத்துத் திரைப்படத்துறையின் நீட்சியாக புலம்பெயர்தேசங்களின் ஈழத்தவர்களின் கலை வெளிப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பதிவாக்கம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் இயக்குநர் லெனின் அவர்கள் ஏற்கனவே 1999 என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றுள்ளார்.

இன்று பரீஸில் காட்சியளிக்கும் ‘ஒரு துப்பாக்கி ஒரு மோதிரம்’ (GUN & RING) திரைப்படம், சீனா தேசத்திலே சங்காய் நகரில் நடைபெற்ற திரைப்படவிழாவுக்குத் தேர்வாகியிருந்தது. எனவே, நாமும் ஒருமுறை இந்தத் திரைப்படத்தைப் பார்வையிட்டு கலைஞர்களுக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கிக்கொள்வோம்.

அலைகள்