ராஜபக்சவின் பரப்புரையால் அடிக்கடி உயிர்த்தெழும் விடுதலைப்புலிகள்

mahinda hitlerராஜபக்ச சகோதரர்களுக்கு தேவைப்படுகின்ற போதெல்லாம் தோற்கடிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட புலிகள் மீண்டும் பிரசன்னமாகின்றனர். அதாவது புலிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ள உண்மையான காரணியாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது

இவ்வாறு Colombo Telegraph ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Tisaranee Gunasekara அண்மைய தனது பத்தியில் Tiger, Still Burning Bright?

குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதையும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்காக யூதத் தலைவர்களால் தீட்டப்பட்ட Elders of Zion என்கின்ற ‘இரகசியத் திட்டத்தின்’ வரைமுறைகள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலைத்தேய நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தத் திட்டமானது ரஸ்யாவின் இரகசியக் காவற்துறையின் மோசடி மிக்க செயல் என்கின்ற உண்மை வெளிப்படுத்தப்பட்ட பின்னரும், இது தொடர்ந்தும் நடைமுறையிலிருந்ததுடன், அடொல்ப் கிட்லர் மீது மிகப் பெரிய செல்வாக்குச் செலுத்துகின்ற காரணியாக மாறியது. எல்லா இடமும் அதாவது பூகோளரீதியாகவும் தற்காலிகமாகவும் நிலைபெற்றிருக்கும் ஒரு எதிரியானவன் எந்தவொரு தடைகளையும் மீறி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பான். இந்த எதிரி அச்சத்தையும் பயங்கரத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பான்.

இந்த வழியில் கருதினால் ஒவ்வொரு தமிழர்களாலும் புலிகள் மறக்கப்பட்டாலும் கூட, ராஜபக்சவின் பரப்புரையால் புலிகள் மறக்க முடியாதவர்களாக மாறிவிடுகின்றனர். அமெரிக்காவில் சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்ட பரப்புரை நடவடிக்கை ஏன் தோல்வியில் முடிவடைந்தது எனக் கேட்ட போது, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, ராஜபக்சவிற்கு நெருங்கியவர்கள் பணிபுரியும் வோசிங்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது இவ்வாறான நிதிச் செலவுமிக்க அரசியல் நோக்கத்தைக் கொண்ட ஒரு பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கொழும்பினுடைய முட்டாள்தனமான தீர்மானம் மீதோ பழிசுமத்தவில்லை.

ராஜபக்ச அரசாங்கத்தின் பரப்புரை அமெரிக்காவில் தோற்றுப் போனதற்கு தமிழ்ப் புலிகள் மீதே லலித் வீரதுங்க குற்றம் சுமத்துகிறார். அதாவது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் அரசியற் தலைவர்கள் அழிக்கப்பட்ட போதிலும், இந்தப் புலிகள் மீதே லலித் வீரதுங்க தற்போது தனது குற்றத்தை முன்வைக்கிறார். “மிகப் பலமானதும், வெள்ளை மாளிகையில் ஏற்கனவே செயற்படுகின்றதுமான பரப்புரை அமைப்பொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு நெருக்கமானவர் ஆவார். இதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான இந்த அமைப்பு வெள்ளை மாளிகையில் மிகச் சிறந்த இடத்தைத் தக்கவைத்துள்ளது. இந்த மட்டத்தை சிறிலங்கா அரசாங்கத்தால் எட்டமுடியாதுள்ளது” என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு அல்லது உயிருடன் பிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்ற நிலையில் புலி தற்போதும் உயிர்வாழ்கிறது.

இந்நிலையில் புலிகள், ராஜபக்சவின் அரசியல் ஒளிப்படங்களில் முதலாவது கண்காட்சிப் பொருளாகக் காணப்படுகின்றனர். தாம் புலிகளை முற்றாக ஒழித்து இந்த நாட்டை அவர்களிடமிருந்து விடுவித்துள்ளதாக ராஜபக்சவின் சகோதரர்கள் அறிவித்திருந்தனர். இதன்மூலம் இலங்கையர்கள் ராஜபக்சவின் ஆட்சியை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை அடைந்தனர். அதாவது நாட்டை அதன் ஆபத்திலிருந்து மீட்டெடுத்த ராஜபக்சவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மக்கள் இந்த ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறான ஒரு நன்றிக்கடனானது போரை வென்றெடுத்த இராணுவத் தளபதிக்கு வழங்கப்படவில்லை. தேர்தலில் ராஜபக்சாக்களை எதிர்த்து இந்தப் போர்க் கட்டளைத் தளபதி போட்டியிட்ட போது இவர் ‘தேசத்துரோகி’ என அறிவிக்கப்பட்டார்.

ராஜபக்ச சகோதரர்களுக்கு தேவைப்படுகின்ற போதெல்லாம் தோற்கடிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட புலிகள் மீண்டும் பிரசன்னமாகின்றனர். அதாவது புலிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ள உண்மையான காரணியாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஒரு எதிரியாகவும் குழந்தைகளை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்பதமாகவும் ராஜபக்சவால் விவரிக்கப்படுகிறது. புலிகள் என்கின்ற இந்தத் தீயசக்தி முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் புலிகள் தொடர்பான அச்சுறுத்தல் ஒருபோதும் மறைந்துவிடாத ஒன்றாகவும் காணப்படுகிறது.

தோற்கடிக்கப்பட்ட புலிகள் பலமுள்ள, ஆளுமையுள்ள அதிக வளங்களைக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் போரில் வெற்றிபெற்ற ஆசியாவின் அதிசயமான சிறிலங்கா அரசாங்கத்தை விட வளமுள்ளவர்களாகவும் பலம் பெற்றவர்களாகவும் விளங்குவதாகவும் இவர்கள் உலகின் மிகச்சிறந்த பரப்புரை அமைப்பைத் தம்வசம் கொண்டுள்ளதாகவும் லலித் வீரதுங்கவின் அறிக்கையிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும். “தமிழீழ விடுதலைப் புலிகள் பொடெஸ்ரா குழுவைத் (Podesta Group) தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் பராக் ஒபாமாவின் ஆலோசகரான ஜோன் பொடெஸ்ரா, புலிகளின் பரப்புரைக் குழுவின் தலைவராக உள்ளார்” என லலித் வீரதுங்க குறிப்பிடுகிறார்.

தனது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பெருமளவு நிதியைச் செலவிடுகின்ற ராஜபக்ச அரசாங்கம், அமெரிக்காவில் தனது பரப்புரையை மேற்கொள்வதில் தோல்வியடைந்ததற்கு தற்போது அமைப்பு ஒன்றின் கீழ் செயற்பட முடியாத தமிழீழ விடுதலைப் புலிகளை விட நிதிவளம் சார்ந்த பற்றாக்குறையே காரணம் எனக் கூறுவதை நாங்கள் நம்பவேண்டுமா? ராஜபக்ச அரசாங்கத்தின் இந்த மிகப் பெரிய தோல்வியானது வோசிங்டனில் உள்ள சிறிலங்கத் தூதரகத்தின் போட்டியிட முடியாத நிலைமையே காரணம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது இந்தத் தூதரகத்தில் அரசியல் சார் நோக்கத்துடன் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் அமெரிக்காவில் தமது பரப்புரையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியவில்லை என்பதே உண்மையான காரணமாகும்.

சிறிலங்கா அரசை விட புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் நிதிவளத்தையும் அதிக திறனையும் கொண்டுள்ளன என்பதை நம்புவம் அளவுக்கு சிங்கள மக்கள் முட்டாள்கள் என ராஜபக்சாக்களும் அவர்களது அடியாட்களும் கருதுகிறார்களா? ராஜபக்சாக்கள் கருதுவது சரியா? நாங்கள் அவ்வளவு முட்டாள்களா?

புலிகள் ஒரு அமைப்பு ரீதியாக செயற்படாததற்கு அப்பால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ள இந்நிலையில் பொடெஸ்ராக் குழுவைப் புலிகளோ அல்லது நாடு கடந்த தமிழீழ அரசாங்கமோ வாடகைக்கு அமர்த்தவில்லை என்பது நிச்சயமாகும். ஆனால் ‘அமெரிக்கத் தமிழர் அமைதி முயற்சி’ என்கின்ற அமைப்பு, பொடெஸ்ராக் குழுவை தனக்கு ஆதரவாக செயற்படுத்தலாம். இந்த அமைப்பானது பொடெஸ்ராக் குழுவுக்கு 2010ல் 90,000 அமெரிக்க டொலர்களையும் 2011ல் 80,000 டொலர்களையும் 2013ல் மீண்டும் 90,000 டொலர்களையும் வழங்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்ற திரு.வீரதுங்கவின் கருத்துப்படி பொடெஸ்ராக் குழுவானது பொடெஸ்ரா என்கின்ற ஒருவரால் தலைமை தாங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு குழுவை அமெரிக்கத் தமிழர் அமைதி முயற்சி அமைப்பானது தனக்கு ஆதரவாகச் செயற்பட வைப்பதற்காக மூன்று ஆண்டுகளில் 260,000 டொலர்களைச் செலவிட்டுள்ளது.

2013ல், அமெரிக்காவுடன் சிறிலங்காவானது உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதாவது அமெரிக்காவின் தோம்ப்சன் ஆலோசனை அமைப்பிற்கு சிறிலங்கா தனியொரு ஆண்டில் மட்டும் 792,000 அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதாக உடன்பட்டது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான றொனால்ட் றீகன் மற்றும் ஜோர்ஜ் புஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர் எனக் கூறப்படுகின்ற (உறுதியற்ற தகவல்) றொபேற் தோம்ப்ஸனால் தலைமை தாங்கப்படும் தோம்ப்ஸன் ஆலோசனை அமைப்புடன் சிறிலங்கா தனது பரப்புரையை விரிவுபடுத்துவதற்கான உடன்பாட்டை கடந்த ஆண்டில் மேற்கொண்டிருந்தது. இதேபோன்று சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமானவரும், அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதருமான ஜாலிய விக்ரமசூரிய Majority Group என்கின்ற பரப்புரை அமைப்பிற்கு 2013ல் மாதத்திற்கு 50,000 டொலர்களை வழங்கி வாடகைக்கு அமர்த்தியிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட இவ்விரு அமைப்பிற்கும் கடந்த ஆண்டில் மட்டும் 1.39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. இது புலிகளின் ஆதரவு அமைப்பு எனக் கூறப்படுகின்ற ‘பொடெஸ்ராக் குழுவுக்கு’ வழங்கியதை விட பலமடங்கு அதிகமானதாகும்.

பொடெஸ்ராக் குழுவுக்கு, பிரபலமற்ற மிகச் சிறிய தமிழ்க் குழுவானது மூன்று ஆண்டிலும் ஆகமொத்தம் 260,000 அமெரிக்க டொலர்களை மட்டுமே வழங்கி அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தால் இந்த நிலையை அடைவதற்கு நிதி வளங்கள் மற்றும் திறன் போன்றன போதியதற்றதாக உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமா? சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை அமெரிக்காவில் தோற்றுப் போனதற்கு இதுதான் காரணம் எனக் கூறுவது நியாயமானதா?

ராஜபக்சாக்கள் போருக்குப் பின்னர் சிறிலங்காவைப் பலப்படுத்த முனையவில்லை. அதாவது எதிர்கால சிறிலங்காவுக்குத் தேவையான தேசிய மீளிணக்கப்பாடு மற்றும் நிரந்தர அமைதி போன்றவற்றை நிலைநாட்டுவதற்கு போருக்குப் பின்னான இந்தச் சூழலை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கத்தை ராஜபக்ச என்ற குடும்பத்தின் ஆட்சி அதிகாரப்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவிய ஜனநாயகம் அழிக்கப்பட்டுள்ளது. இதுவே ராஜபக்சாக்கள் போருக்குப் பின்னர் செய்துள்ள பணியாகும்.

ராஜபக்சாக்கள் தமது சக உறவுகளான சிங்கள பௌத்தர்களுடன் கூட அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. போருக்குப் பின்னான நான்கு ஆண்டுகளில் ராஜபக்ச சகோதரர்கள் மாகாண ஆட்சி முறைமையையும் முழுமையான பயனுள்ள அரசியற் தீர்வையும் குழிதோண்டிப் புதைத்துள்ளனர். இனப்பிரச்சினை தற்போதும் நாட்டில் நீடித்துள்ளது என்பதை இவர்கள் நம்பவில்லை. நீதிச்சேவை உட்பட எந்தவொன்றும் தமது அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு ராஜபக்ச சகோதரர்கள் அனுமதி வழங்கவில்லை. இவர்கள் இராணுவமயமாக்கல் மற்றும் பேரினவாதம் மூலம் நாட்டை நிர்வகிக்க முனைகின்றனர்.

இவ்வாறான ஒரு அரசியல் ஆட்சியால் தமிழ் மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. போரால் முற்றிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மனிதாபிமான மற்றும் சமூகத் தேவைகள் என்பன புறக்கணிக்கப்படுகின்றன. இது சமூக-பொருளாதாரப் போக்குகளை ஆபத்திற்குள் கொண்டுசெல்வதற்கு வழிகோலுகின்றன. சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் நிதி மற்றும் பொருளாதாரக் காரணங்களால் மாணவர்கள் இடைவிலகுவதாக அதிகரிப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் துன்பங்களை எதிர்நோக்குகின்ற வறிய குடும்பங்களிலிருந்தே அதிகளவான மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போதியளவு தொழில் வாய்ப்பின்மை மற்றும் வாழ்வாதாரச் செலவு அதிகரித்தல் போன்றவற்றால் மாணவர்கள் இடைவிலகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சிறிலங்கா ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுக்காவிட்டால் அனைத்துலக அரங்கில் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். வடக்கு கிழக்கில் அதிகரித்து வரும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்கனவே அனைத்துலக தொழிலாளர் அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த சிறுவர் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதுடன் இவர்கள் பல்வேறு தொழில் நிபந்தனைகளால் பாதிக்கப்படுகின்றனர்” என அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வடக்கு கிழக்கு வாழ் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தோற்றுவாய் என்ன என்பதை அறிந்தும் அதனை ராஜபக்ச அரசாங்கம் தீர்க்க முன்வராததானது இன்று நிலவும் மிகப்பிரதானமான சவாலாகக் காணப்படுகிறது. ராஜபக்சாக்கள் நாட்டில் ஜனநாயகத்தை அழித்துள்ளனர். இவர்கள் இனப்பிரச்சினை மற்றும் அழிந்து போன ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டிய சவாலைக் கொண்டுள்ளனர். இவற்றை விடுத்து நாட்டில் நிலவும் யதார்த்தமற்ற நிலையை யதார்த்தமாக மாற்றுவதற்கு மிகவும் பிரபலமான பலமான பரப்புரை அமைப்பால் கூட முடியாது என்பதே உண்மையாகும். ராஜபக்சாவின் இத்தகைய இராஜதந்திரம் நாட்டை நிலைப்படுத்த ஒருபோதும் உதவாது.

“ஒரு எதிரியானவன் அங்கீகாரிக்கப்படுவதற்கும் அவன் தொடர்பில் அச்சப்படுவதற்கும் அவன் உங்களது வீட்டில் அல்லது உங்களது வீட்டு வாசலில் இருக்க வேண்டும்”
Umberto Eco (The Prague Cemetery)

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements