கனடிய தமிழர் பேரவைக்கு றோகன் குணரத்தின இழப்பீடு வழங்க வேண்டும் – கனடிய நீதிமன்றம் உத்தரவு

2011ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில ‘லக்பீம’ என்னும் சிங்கள ஊடகம் ‘குணரத்தின இறுதிப் போரில் 1,400 பேர் மட்டுமே இறந்தார்கள், கனடா தமிழீழ விடுதலைப் புலிகளின் குகையாகத் தோற்றம் கொண்டுள்ளது என எச்சரிக்கிறார்’ எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.
Rohan Gunaratna ,gota

மேலும் லக்பீம குணரத்தினா சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி “தமிழீழ விடுதலைப் புலிகள் கனடிய தமிழ்க் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்குகிறது. இந்த அமைப்பு கனடாவில் உள்ள புலிகளது முக்கிய முகப்பு அமைப்பாகும்.” தொடர்ந்து குணரத்தின “கனடிய அரசுக்கு இது தெரியும். இப்போது கனடிய அரசு அதுபற்றிய விசாரணையை மேற்கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தது.

‘பயங்கரவாதம் பற்றிய நிபுணர்’ எனப் பெயரெடுத்த றோகன் குணரத்தின சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவராவர். இவர் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு மையத்தின் தலைவர் [Head of the International Centre for Political Violence and Terrorism Research at Nanyang Technological University in Singapore] ஆவர்.

இவரது அப்பட்டமான பொய்க் கூற்றுக்கள் பற்றி தெரியவந்தவுடன் கனடிய தமிழர் பேரவை றோகன் குணரத்தினவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட பின்னர் சனவரி 21, 2014ல் ஒன்ரேறியோ உயர் நீதிமன்ற நீதியரசர் Stephen E. Firestone கனடிய தமிழர் பேரவைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார். குணரத்தினா கனடிய தமிழர் பேரவைக்கு 37,000 டொலர் பொது இழப்பாகவும் 16,000 டொலர் வழக்குச் செலவாகவும் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

கனடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்றுள்ளார். அத்துடன் “நீதிமன்றத்தின் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவை அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரது நேர்மையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு இனக் குழுமத்தை அழிப்பதற்கு உள்ள சரியான வழி என்னவென்றால் அந்தக் குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எங்கே தங்களை பயங்கரவாதத்தின் அனுதாபிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ முத்திரையிடப்பட்டு விடுவோமா என அச்சப்பட வைப்பது ஆகும்” என பூபாலபிள்ளை தெரிவித்தார். “சிறிலங்கா அரசும் அதன் அனுதாபிகளும் நீண்ட காலமாக தமிழர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி வந்துள்ளார்கள். இப்போது கிடைத்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவைக்கு அல்ல தமிழ்மக்களுக்கே சொந்தமான வெற்றியாகும்”.

கனடிய தமிழர் பேரவையின் சட்ட வழக்கறிஞர் டானியல் இனி (Daniel Iny of Sack Goldblatt Mitchell LLP) பேசும் போது “ஆதாய நோக்கற்ற கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கு அதன் நற்பெயரும் நாணயமும்தான் உயிர்நாடி. கனடிய தமிழர் பேரவைக்கு அவமானம் தேடித்தருவதாக குணரத்தினாவின் கூற்றுக்கள் அமைந்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது கனடிய தமிழர் பேரவைக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஆறுதல் தருவதாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

Advertisements