ஈழத்தமிழர் என்பதால் பாலுமகேந்திரா! குடியுரிமை இன்றி தீயுடன் சங்கமம்

ஈழத்தின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் தனி முத்திரை பதித்து மறைந்த திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் இறுதிச்சடங்கு இன்று வெள்ளிக்கிழமை பெருந்திரளான இயக்குனர்கள், கலைஞர்கள், ரசிகர்களின் கண்ணீர்க் கடலுக்கு மத்தியில் இடம்பெற்றது.74 வயதான பாலுமகேந்திராவுக்கு 13.02.2014 வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.balu makendra 2

அவரது உடல் சாலிக்கிராமத்தில் உள்ள அவரது சினிமா பட்டறையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாலு மகேந்திராவின் உடலுக்கு ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று ஏராளமான சினிமாத் துறையினர், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக பழ நெடுமாறன் ஐயா, காசி ஆனந்தன் ஐயா, ஓவியர் வீரசந்தானம் ஐயா ஆகியோர் நேரடியாக வந்து கதறியழுது அஞ்சலி செலுத்தினர். பாலுமகேந்திராவின் வளர்ப்பு மகன் என்று சொல்லப்படும் இயக்குனர் பாலா அவரின் கால்மாட்டில் அழுதபடி உட்கார்ந்திருந்தது மிகுந்த துயரமாக இருந்தது.

பாலுமகேந்திராவின் இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜா, மகேந்திரன், பாலா, அமீர், விக்ரமன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள், சினிமாத் துறையினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். சாலி கிராமத்திலிருந்து போரூர் மின் மயானம் வரை உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் கலைஞர்களும், பொதுமக்களும் நீண்ட நெடிய ஊர்வலமாக சென்றது பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.

போரூரில் உள்ள மின் மாயானத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

வயதானாலும் என்னுடைய மனசு இன்னும் அதே இளமை சுறுசுறுப்புடன்தான் இருக்கிறது என்று அடிக்கடி சொல்லி வந்தவர் பாலுமகேந்திரா.
பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘தலைமுறைகள்’. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தன்னை ஒரு நடிகராகவும் முன்னிறுத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமிராவில் ஒளிப்பதிவு செய்த படம் ‘தலைமுறைகள்’. தன்னுடைய இறுதி காலத்திலும் படத்தில் நடித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் என தனது பட வேலைகள் அனைத்தையும் தானே செய்தார்.

ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் ஈழ விடுதலைப் போராட்டமும், 2009 ஈழ விடுதலைப் போரில் நடந்த நிகழ்வுகளும் அவரைக் கடுமையாகப் பாதித்திருந்தன. தன் தாய்மண்ணின் மீதான ஏக்கத்தையும் தாய்மொழியின் மீதான பற்றுதலையும் ‘தலைமுறைகள்’ படத்தில் வெளிப்படுத்தவும் செய்திருந்தார்.

‘தலைமுறைகள்’ படத்தின் மூலமாக யாரும் தமிழை மறக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படத்தில் மரணம் அடையும் போது பேரனை அழைத்து “தமிழை மறந்துடாதீங்கப்பா…! இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா…!” என்பார். அதுவே அவர் தமிழ் திரையுலகிற்கு கூற விரும்பியது எனலாம்.

படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்த பாலு மகேந்திரா, “உண்மையில் கிராமத்தில் தான் தமிழ் இருக்கிறது. தமிழை யாரும் மறக்க கூடாது” என்று கண் கலங்கினார். காட்சி முடிந்தவுடன் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். சில நேரம் கழித்து, “ஏம்பா.. நான் சாக மாட்டேன். கவலைப்படாதீங்க.. இன்னும் 5 கதைகள் வைச்சிருக்கேன் இயக்குவதற்கு. ” என்றார். அவர் இயக்குவதாக வைத்திருந்த கதைகள் அனைத்துமே கண்டிப்பாக தமிழுக்காக மட்டுமே இருந்திருக்கும்.

நேற்று முன்தினம் தன்னுடைய உதவியாளர்களை அழைத்து அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி என தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது பட்டறையில் தொழில் கற்றவர்கள் தான். இது வரை பாலாவின் எல்லா படங்களின் இசையையும் வெளியிட்டது பாலு மகேந்திரா தான்.

இன்று பாலுமகேந்திரா மறைந்தாலும், ஒளிப்பதிவில் அவர் செய்த சாதனைகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் மறையாது. பல்வேறு ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருந்தாலும், இருக்கிற வெளிச்சத்தை வைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய தெரிந்த ஒரே ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. தற்போது, ஒரு குழந்தைக்கும் தீவிரவாதி ஒருவருக்கும் இடையிலான நட்பை அடிப்படையாக வைத்து தனது புதிய திரைப்படத்தின் திரைக்கதையையும் அவர் எழுதி வந்தார்.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவை வளர்த்து, ஏராளமான இயக்குனர்களையும், கலைஞர்களையும் உருவாக்கித் தந்து, எண்ணற்ற விருதுகளையும் பெற்ற பாலுமகேந்திரா கடைசி வரைக்கும் நாடற்றவனாக வாழ்ந்து இறந்தது தான் சோகத்தின் உச்சம். இந்தியாவில் எவ்வளவு நாள்தான் வாழ்ந்தாலும் ஈழத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதை தொடர்ந்து மறுத்து வரும் இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களை எப்படி நடாத்துகிறார்கள், நடாத்துவார்கள் என்பதற்கு பாலுமகேந்திராவே ஒரு சிறந்த உதாரணம்.

ஈழத்துக் கவிஞர் வ.ஐ.செ ஜெயபாலனினால் எழுதப்பட்டு படிக்கப்பட்ட கவிதை,

தென்னகத்து அழகியலை திரையில் உயிர்பித்த
எங்கள் ஈழத்துப் பொக்கிசத்தை
ஆழப் புதைத்தாலும் நீராய் விதைத்தாலும்
ஐந்திணையும் தோப்பாகி அழககழகாய் பூமலர்ந்து
பறவைகளாய் பாடி பசும்தரையாய் பாய்விரிக்கும்.

***

பாலுமகேந்திராவின் முள்ளும் மலரும் நினைவுகள்

பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.

பெரும்பாலனவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21-படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா-வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னட மொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் இசை இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு “அழியாத கோலங்கள்” என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்க்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.

கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம். அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.

எனவே எனது அழியாத கோலங்கள் படத்தை தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility) மிக அதிகமானது. ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக் கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.

இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது…

இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.

1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும் இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!

**

பாலுமகேந்திரா நினைவலைகள்: இளையராஜாவை தவிர்த்து ரஹ்மானை தேர்வு செய்த பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா மறைந்துவிட்டார். மறைந்தவரைப் பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில் எல்லோருக்குமே ஆர்வம். சன், கலைஞர், ஜெயா, விஜய்… எல்லா சேனல்களிலும் வேறு செய்திகள், நிகழ்ச்சிகள். செய்தி சேனலில் மட்டும் சில நொடிகள் பாலுமகேந்திராவை நினைவுகூர்ந்தார்கள்.

அப்படியே மலையாளம் பக்கம் வந்தால் டிடி மலையாள செய்தியில் பாலுமகேந்திரா குறித்த செய்தித் தொகுப்பு. மலையாளத்தில் ராமு காரியத், சேதுமாதவன், பரதன் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புனே திரைப்பட கல்லுhரியில் கோல்ட் மெடலுடன் வெளிவந்த இளைஞர் பாலுமகேந்திராவை அழைத்து முதல்பட வாய்ப்பு தந்தவர் தேசிய விருது பெற்ற செம்மீனை இயக்கிய ராமு காரியத். படம் நெல்லு. அதன் பிறகு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

ஓளங்கள், ஊமக்குயில், யாத்ரா என்று மூன்று படங்களை மலையாளத்தில் பாலுமகேந்திரா இயக்கினார். மலையாளத்தைப் பொறுத்தவரை பாலுமகேந்திராவின் பங்களிப்பு இத்துடன் முடிகிறது. அவர் கடைசியாக இயக்கிய யாத்ரா வெளிவந்தது 1985 ல். அதன் பிறகு பத்து தமிழ்ப் படங்களை பாலுமகேந்திரா இயக்கினார்.

ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயங்கிய கலைஞனை குறித்து விரிவான செய்தித் தொகுப்பை டிடி மலையாளம் ஒளிபரப்பியது. அப்படியே வந்தால் இன்னொரு மலையாளச் சேனலில் பாலுமகேந்திராவின் பேட்டி. பழையதுதான். ஷேnபா குறித்த கேள்வியில் பாலுமகேந்திராவிடம் தடுமாற்றம் தெரிந்தது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். ஷேnபாவின் பிரிவால் தான் அனுபவப்பட்ட வலியின் ஒருதுளிதான் மூன்றாம் பிறையின் கிளைமாக்ஸ் என்றும் ஷேnபாவின் நினைவுக்காக எடுத்ததுதான் அப்படம் எனவும் தெரிவித்தார்.

பாலுமகேந்திரா நினைவுகூரப்படுவது அவரது படங்களுக்காக. அவர் ஒழுக்கசீலர் என்பதற்காக அல்ல. அவரே பலமுறை வெளிப்படையாக தன்னை விமர்சித்திருக்கிறார். ஒரு பெண் அவரை அடைக்கலம் தேடி வருகையில் தகாது என்று விலகாமல் அதில் வழுக்கி விழுகிறவராகவே அவர் இருந்திருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவரது moral என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு, moral என்பது இரு தனி நபர்களுக்குரிய தனிப்பட்ட விஷயம், என்னுடைய moral உங்களுக்கு immoral ஆகத் தெரியலாம். அதேபோல் உங்களின் moral எனக்கு immoral ஆகத் தெரியலாம். எல்லோருக்கும் பொதுவான moral என்று ஒன்று கிடையாது என பதிலளித்தார்.

பாலுமகேந்திராவின் moral குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் அவருடன் பழகிய பெண்களே தவிர நாமல்ல. பாலுமகேந்திராவின் moral குறித்து பேசுகிறவர்கள் தற்சமயம் அதுகுறித்து கேட்க வேண்டியது அவரது மனைவி அகிலாவிடமும், துணைவி மவுனிகாவிடம். சமூகத்தின் பார்வையில் மவுனிகா இரண்டாம்தாரம். குழந்தைகள் இல்லை. பொருளாதாரா பின்புலமும் பாலுமகேந்திராவால் உறுதி செய்யப்படவில்லை. இருந்தும் பாலுமகேந்திரா மீது மவுனிகாவுக்கு வருத்தம் இல்லை. எனில் நாம் பொதுவில் முன் வைக்கும் moral லில் இருந்து அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த moral வேறுபட்டிருந்தது என்று தானே அர்த்தம், பாலுமகேந்திரா சொன்னது போல்?

அழியாத கோலங்களை தந்த ஒருவர் இத்தனை வருடங்களில் இன்னொரு சத்யஜித் ரேயாக பரிணமித்திருக்க வேண்டும். பெண் உறவு மீதான அவரின் இந்த ரொமான்டிஸ சிக்கல்தான் அவரது படங்களை ஒருகட்டத்துக்கு மேல் உயர பறக்கவிடாமல் தேங்கிப் போக வைத்தது.

பாலுமகேந்திராவின் பூர்வீகம் இலங்கை மட்டகளப்பில் உள்ள அமிர்தகழி. ஈழப்பிரச்சனை தீவிரத்தை எட்டும் முன் அவர் இந்தியா வந்தார். இங்கேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இலங்கை தமிழராக இருந்தும் ஈழப்பிரச்சனையை குறித்து படம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அது சென்சிடிவ்வான பிரச்சனை. அதில் சும்மா ஒரு படத்தை எடுக்க முடியாது என்பது பாலுமகேந்திராவின் பதில். ஈழம் என்றில்லை. அரசியல் பிரச்சனை எதையும் அவரது படங்கள் இடையீடு செய்ததில்லை. உறவுச் சிக்கல்களிலேயே – பெரும்பாலும் ஆண், பெண் – அவர் தேங்கிப் போனார். அதிலிருந்து விலகிய வீடு அவரின் ஆகச்சிறந்த படமாக அமைந்தது.

கட்சி சார்ந்த, சமூகம் சார்ந்த அரசியலை அவரின் படங்கள் அதிகம் பேசவில்லை என்றாலும் உடலரசியலை முன் வைத்தார். அவருக்குப் பிடிக்கும் என்பதைத் தாண்டி மாநிறமே நமது மண்ணுக்குரியது என்றவகையில் மாநிறமான நடிகைகளையே தனது படங்களில் நடிக்க வைத்தார். சிவப்பழகை துரத்தும் தமிழ் சினிமாவில் இது கவனிக்க வேண்டிய அணுகுமுறை. அதேபோல் பெண்களை அரைநிர்வாணமாகக் காட்டுகிற சினிமாவில் பாலுமகேந்திராவின் நாயகர்கள் மட்டும் மேல்சட்டையில்லாமல் தோன்றுவதுண்டு. அவரின் பெரும்பாலான நாயகர்கள் ஒரு காட்சியிலாவது இப்படி தோன்றுவது வழக்கம். அதேபோல் மேக்கப் போட அவர் அனுமதிப்பதில்லை.

பாலுமகேந்திராவின் திரைமொழி தனித்துவமானது. அவரது படத்தைப் பார்க்கிறோம் என்பதை இரண்டாவது காட்சியிலேயே உணர்ந்துவிடலாம். ஆரவாரமான நடைமுறை வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டவை அவரது படங்கள். தனிநபர்களின் உணர்வுசார்ந்தவை. அதனால் ஆரவாரமோ, கும்பலோ பெரும்பாலும் அவரது படங்களில் காண முடியாது. அவர் சித்தரிக்கும் விமானநிலையம்கூட லைப்ரரிக்குரிய நிசப்தத்துடன்தான் இருக்கும்.

பிற படங்களின், கதைகளின் தாக்கத்தில் பல படங்களை பாலுமகேந்திரா உருவாக்கியிருக்கிறார். 100 சதவீதம் ஒரிஜினல் என்று எதுவுமில்லை என்பது அவரின் உறுதியான நிலைப்பாடு. நான் எடுக்கிற படங்களில் நான் பார்த்த சத்யஜித் ரே, நான் ரசித்த அகிரா குரசோவா கண்டிப்பாக இருப்பார்கள் என்று கூறியிருக்கிறhர்.

அவர் இயக்கிய சில படங்கள் தவிர்த்து மற்றவை வணிகரீதியாக வெற்றிபெற்றவை. 1997 க்குப் பிறகு 2014 வரை அவர் மூன்று படங்களைதான் இயக்கினார். மூன்றுமே வணிகரீதியாக சுமாராகப் போனவை. இந்த காலகட்டங்களில் தமிழ் சினிமா மேடைகளில் அவருக்கு என்று ஒரு நிரந்தர நாற்காலி போடப்பட்டிருந்தது. அவரின் சமகாலத்தில் அவரைவிட அதிக வணிக வெற்றிகளைத் தந்த இயக்குனர்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருக்கையில் அவருக்கு மட்டும் எப்போதும் ஒரு நாற்காலி மேடையில் இருந்தது. வணிக வெற்றி என்பது தற்காலிகமானது என்பதை உணர்த்திய மூன்று இயக்குனர்களில் – மற்றவர்கள் மகேந்திரன், பாரதிராஜா – இவரும் ஒருவர்.

பேட்டிகாண சென்றால்கூட ஒரு புத்தகத்தை வாசித்து கதைச் சுருக்கம் எழுதித்தரச் சொல்வார். புத்தக வாசிப்பின் மீது அப்படியொரு வெறி. அவரிடம் உதவியாளராக இருப்பவர்கள் தினம் ஒரு கதையைப் படித்து அதன் கதைச் சுருக்கத்தை எழுதித் தந்தாக வேண்டும். தினம் ஒரு கதை என்பதில் எந்த காம்ப்ரமைஸும் கிடையாது. இயக்குனராக தொடர்ந்து இயங்க பரந்த வாசிப்பு வேண்டும் என்பதில் பாலுமகேந்திரா உறுதியாக இருந்தார். அவரின் மாணவர்கள் – பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி – இன்று தமிழின் முன்னணி இயக்குனர்களாக இருப்பதற்கான அடிப்படை பாதையை போட்டுத் தந்தவர் அவர்தான்.

பாலுமகேந்திராவுக்கு மம்முட்டி பிடித்தமான நடிகர். மோகன்லாலுடன் ஒரு படம் செய்ய விரும்பினார். சென்னையில் அதற்கான பேச்சுவார்த்தைகூட நடந்தது. ஆனால் கைகூடவில்லை. கமல் சினிமாவுக்கான நடிப்பை குறைவாகவே தந்திருக்கிறார் என்பது அவரது அபிப்ராயம். ஆனாலும் அனாயாசமான கலைஞன் என்றே அவரை குறிப்பிடுவார்.

மறுபடியும் படம் முடிந்து பண நெருக்கடியில் இருந்த நேரம். பலரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. கமலிடம் கேட்கலாம் என அவரைத் தேடிப் போகிறார். கமல் பணத்தைத் தவிர வேறு அனைத்தைப் பற்றியும் பாலுமகேந்திராவிடம் உரையாடுகிறார். சரி, இங்கேயும் கிடைக்காது என்று கிளம்புகிற நேரம், பாலுமகேந்திரா கேட்டதைவிட பல மடங்கு அதிக தொகையை அவரிடம் தந்து, இது அட்வான்ஸ், எனக்கொரு படம் நீங்க பண்ணித் தரணும் என்று சொல்லியிருக்கிறார் கமல். அப்படி உருவானதுதான் சதிலீலாவதி. உதவி பெறுகிறோம் என்ற எண்ணம் வராதபடி அன்று கமல் நடந்து கொண்டார் என நெகிழ்ச்சியுடன் அந்த நிகழ்வை பாலுமகேந்திரா குறிப்பிட்டார்.

பாலுமகேந்திராவின் இளையராஜா மோகம் உலகப்பிரசித்தம். பக்தர் என்றுகூட சொல்லலாம். அவரைத் தவிர வேறு யாரையும் எனது படத்தில் பயன்படுத்த மாட்டேன் என்று சூளுரைத்தவர். மணிரத்னம், பாலசந்தர் எல்லாம் இளையராஜாவைவிட்டு ரஹ்மானுக்கு மாறிய பிறகும் நீங்கள் மட்டும் ஏன் மாறவில்லை? ரஹ்மானின் இசையில் உங்களுக்கு உடன்பாடில்லையா?

இந்த கேள்விக்கு பாலுமகேந்திரா சொன்ன பதில் முக்கியமானது. எனக்கு இளையராஜாவை இப்போதும் பிடிக்கிறது. எம்.விஸ்வநாதனை இப்போதும் பிடிக்கிறது. அதேபோல் சலீல் சௌத்ரி. எனக்கு இது போதும் என்று பதிலளித்தார். அதேநேரம் ரஹ்மானை அவருக்கு பிடிக்குமா இல்லையா என்பதற்கு இன்னொரு நிகழ்வை சொல்ல வேண்டும்.

ரோஜா வெளியான நேரம் தேசிய விருது தேர்வு கமிட்டியின் தலைவர் பாலுமகேந்திரா. சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இரண்டு பேர் சமஓட்டு வாங்கியிருக்கிறார்கள். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ரஹ்மான். தேர்வுக்குழுவின் தலைவர் என்ற முறையில் பாலுமகேந்திராவுக்கு இரண்டு ஓட்டுகள். இரண்டாவது டிசைடிங் ஓட்டு. இருவரும் சமஓட்டு வாங்கிய நிலையில் பாலுமகேந்திரா யாருக்கு ஓட்டளிக்கிறாரோ அவருக்கே தேசிய விருது.

இரண்டுமே சிறந்த இசை. ஆனால் நான் யாருக்கு ஓட்டளிப்பது? இளையராஜா ஒரு லெஜென்ட். அவருக்கு சரிசமமாக வந்து நிற்கிறான் ஒரு 22 வயது பையன். அவன் இனி எவ்வளவோ விருது வாங்கலாம். ஆஸ்கர்கூட வாங்கலாம். ஆனால் முதல் படத்துக்கு கிடைக்கிற அங்கீகாரம் தனியானது. நான் ரஹ்மானுக்கு ஓட்டளித்தேன்.

சென்னை வந்ததும் இதனை இளையராஜாவிடம் பாலுமகேந்திரா சொல்கிறார். அவரது கையை பற்றி குலுக்கியபடி சரியா செய்தீங்க என்கிறார் இளையராஜா.

பாலுமகேந்திராவின் இந்த moral ஐ தான் நாம் நினைவுகூர்கிறோம்.

வெப்துனியா ‎

Advertisements