இராணுவம் ஈ.பி.டி.பி. கருணா குழுவே எமது பிள்ளைகளை கடத்திச் சென்றனர்

இராணுவமும், ஈ.பி.டி.பி.யும், கருணா குழுவினருமே தமது பிள்ளைகளை யுத்த காலப்பகுதியில் கடத்திச் சென்றுள்ளனர் எனவும் ஆனால் அவர்களை தற்பொழுது வரை காணவில்லையெனவும் கூறி காணாமற்போனோரின் உறவுகள் நேற்று கோப்பாயில் அழுது குழறியதில் அப்பிரதேசமே சோகத்தில் உறைந்தது.Sri Lankan Tamil women hold up photographs of their missing sons during a protest against the Sri Lankan government in Colombo

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான குழுவினருடைய விசாரணைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணைகளில் கலந்து கொண்ட மக்கள் காணாமற்போனவர்கள் தொடர்பாக சாட்சியமளிக்கையிலேயே இராணுவத்தின் மீதும் ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழுவின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இராணுவமும் ஈ.பி.டி.பி.யுமே கடத்தினர்

முற்பகல் 10.15 மணியளவில் ஆரம்பமாகிய விசாரணைகளில் மக்கள் தமது காணாமற்போன உறவுகள் தொடர்பாகச் சாட்சியமளித்துடன் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அழுது புலம்பியதில் அப்பிரதேசம் எங்கும் சோகத்தில் உறைந்தது.

காணாமற்போன தனது மகனான கனகலிங்கம் ஜெயராஜ் என்ற தன்னுடைய மகன் சார்பில் செல்லத்துரை கனகலிங்கம் என்பவர் சாட்சியமளிக்கையில், கடந்த 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி அதிகாலை 3.45 மணியளவில் என்னுடைய வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி.யினுடைய நபர்கள் எனது மகனான ஜெயராஜ் என்பவரை அடித்து துன்புறுத்தியதுடன் எம்மையும் அச்சுறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் என்னுடைய மகனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர். ஆனால் தற்பொழுது வரை எனது மகன் தொடர்பாக எந்தவொரு தகவலையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்னுடைய மகன் வேண்டும். அவரை மீட்டுத் தாருங்கள் என்றார்.

கருணா குழுவினரே கடத்தினர்

அதன் பின்னர் காணாமற்போன பிரேமபாலன் திலீபன் சார்பில் அவருடைய தாயாரான உதயறஜனி சாட்சியமளிக்கையில், 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இரவு 12 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபொழுது நாம் குடியிருந்த வீட்டின் கதவுகளை தட்டுகின்ற ஓசையைக் கேட்டு நாங்கள் அச்சத்தில் நடுங்கிய பொழுது கதவுக்கு வெளியால் நின்றவாறு எம்மை அச்சுறுத்தி வீட்டின் கதவைத் திறக்க வைத்தனர். அதன் பின்னர் எனது மகனை விசாரணைகளுக்காக வருமாறும் அவரைத் தம்முடன் விடுமாறும் எமக்குத் தெரிவித்தனர். சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் எமது வீட்டிற்கு அன்றைய தினம் வந்திருந்தனர். நாம் எமது மகனை அழைத்துச் செல்ல வேண்டாம் கத்திக் குழறி அழுத பொழுதிலும் எனது மகனை அழைத்துச் சென்றனர். அப்பொழுது குறித்த நபர்கள் சிறிய கலண்டர் அளவுடைய அட்டை ஒன்றை எங்களிடம் தந்திருந்தனர். அப்பொழுது தாம் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என எமக்குத் தெரிவித்திருந்தனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது கடத்தினர்

இதேபோல் காணாமற்போன பரமசாமி விவகரன் சார்பில் அவருடைய தந்தையாரான செல்லத்துரை பரமசாமி சாட்சியமளிக்கையில், கடந்த 2007ஆம் ஆண்டு யூன் மாதம் 11ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருந்த பொழுது எமக்கு முன்பின் தெரியாத நான்கு மர்ம நபர்கள் வெள்ளை வான் ஒன்றில் தங்களுடைய முகத்தை கறுப்புத் துணியால் கட்டியவாறு என்னுடைய வீட்டிற்குள் மதிலின் மேலாக ஏறிப்பாய்ந்து உள்நுழைந்தனர். எனக்கும் எனது மனைவிக்கும் கடுமையாகத் தாக்கிவிட்டு எனது மகனை கைவிலங்கு பூட்டி இழுத்துச் சென்றனர். எமது வீட்டில் அதிகாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை குறித்த நபர்கள் எம்மீது தாக்குதல் நடத்தி எம்மைத் துன்புறுத்தியபோது நாங்கள் எழுப்பிய அழுகுரலைக் கேட்டு அயலில் உள்ளவர்களும் இவர்கள் எமது வீட்டில் இருந்து சென்ற பின்னர் எனது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனால் எனது மகனை இன்னமும் காணவில்லை. நான் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சகலரிடமும் முறையிட்டுள்ளேன். ஆனால் எனது மகன் தொடர்பான எந்தவொரு தகவலும் இன்னமும் கிடைக்கவில்லை. எனவே என்னுடைய மகனை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள் என்றுகூறி அழுது கூக்குரலிட்டனர்.

இராணுவமுகாமில் வைத்து கடத்தியுள்ளனர்

இதேவேளை காணாமற்போன அல்பேட் அருள்நேசன் என்பர் சார்பில் அவருடைய தாயார் சாட்சியமளிக்கையில், கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி யாழ்.உரும்பிராய்ப் பகுதியில் உள்ள எனது வீட்டில் இருந்து என்னுடைய மகன் வேலைக்காக நல்லூர்ப் பகுதிக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு பெயின்டிங் வேலை செய்பவராவார். நல்லூரில் உள்ள வீடு ஒன்றில் அவர் வேலை செய்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக கடைக்குச் சென்ற பொழுது அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அப்பகுதியில் சுற்றுவளைப்புத் தேடுதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். எனது மகன் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட விபரத்தை அப்பகுதியில் உள்ள கடைகளில் பணியாற்றியவர்கள் தாம் கண்டதாக என்னிடம் தெரிவித்தனர்.

இதேபோல் காணமற்போனவரான சிவபாக்கியன் ஜெயதர்சன் சார்பில் அவருடைய தந்தையார் சாட்சியமளிக்கையில், எனது மகன் எமது குடும்ப வறுமை காரணமாகவும் தனது கல்விச் செலவிற்காகவும் இரவு வேளைகளில் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதியன்று என்னுடைய வீட்டிலிருந்து உரும்பிராயில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு வேலைக்குச் சென்றிருந்தார். அவர் வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில் ஊரெழு இராணுவ முகாமில் வைத்து எனது மகனை கைது செய்துள்ளனர். அதனை அப்பகுதிகளில் சிலர் கண்டுள்ளனர். ஆனால் அன்றிருந்த சூழலில் அவர்களால் அத்தகவலை எமக்குத் தெரியப்படுத்த முடியாத நிலையில் ஓரிரு நாட்களின் பின்னர் எமக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். இதற்கிடையில் நாம் குறித்த பேக்கரிக்குச் சென்று மகனைக் காணவில்லை என விசாரித்தோம். ஆனால் பேக்கரி உரிமையாளர் என்னுடைய மகன் அன்றிரவு தமது பேக்கரியில் வேலை செய்ததாகவும் அவர் அன்று அதிகாலை அன்றையை நாளுக்குரிய சம்பளமாகிய 500 ரூபாவையும் வேண்டிக் கொண்டு வீடு திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். நாம் ஊரேழு இராணுவ முகாமிற்குச் சென்று எனது மகன் தொடர்காக விசாரித்திருந்தோம். ஆனால் அவர்கள் தாம் கைது செய்யவில்லை என எமக்குத் தெரிவித்தனர். எனது மகனை அன்றிலிருந்து இன்று வரை காணவில்லை. எனவே தயவு செய்து எனது மகனை மீட்டுத் தாருங்கள் என்றார்.

கோப்பாயே சோகத்தில் உறைந்தது

இவ்வாறு காணாமற்போனவர்களின் உறவுகள் தமது கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளுடன் சமூகமளித்து கணவனை, பிள்ளைகளை, சகோதரர்களை மீட்டுத் தாருங்கள் அழுது குழறினர். சிலர் தமது குழந்தைகளை பிரிந்த சோகத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தம்மை மறந்து அழுதுபுலம்பியதில் அங்கு சமூகமளித்திருந்த அனைவரும் கண்ணீருடன் காணப்பட்டனர்.

இதேவேளை நேற்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குள் வசித்து போர் நடைபெற்ற காலப்பகுதியில் வேறு பிரதேசங்களில் காணாமற்போனவர்களின் உறவுகளும் சமூகமளித்திருந்தனர். இவர்களிடம் குறித்த குழுவினர் முறைப்பாடுகளை நேற்றைய தினம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

**

வட்டுவாகலில் கணவனை ஒப்படைத்த படைஅதிகாரியை அடையாளம் காட்டுவேன் – மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகாவின் மனைவி சாட்சியம்.

போரின் இறுதிக்கட்டத்தில், வட்டவாகலில் வைத்து தனது கணவரான விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவுப் பொறுப்பாளர் ரேகாவை (றேகான்) ஒப்படைத்த சிறிலங்கா இராணுவ அதிகாரியை தன்னால் அடையாளம் காட்டு முடியும் என்று, அவரது மனைவி துளசிகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட, காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அமர்வு இன்று யாழ்ப்பாணத்தில், கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் சாட்சியமளித்த போது,

“போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சரணடையுமாறு சிறிலங்காப் படையினர் அறிவித்து வந்தனர்.

இதையடுத்து. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் நாள், வட்டுவாகல் பகுதியில் நானும் எனது கணவரும் (ரேகா) பிள்ளைகளும், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தோம்.எனது கணவரைத் தனியாகவும், என்னை தனியாகவும் விசாரித்த சிறிலங்காப் படையினர், எனது கணவரை மருத்துவர் சிவபாலன் மற்றும் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு துணைப் பொறுப்பாளராக இருந்த மனோஜ் ஆகியோருடன் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

நாம் தனியாக ஒமந்தைச் சோதனைச் சாவடிக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு ஒரு வாகனத்தில் எனது கணவர், உள்ளிட்ட அந்த மூவரும் அமர்ந்திருப்பதை நான் அவதானித்தேன்.அப்போது, விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் தம்மிடம் சரணடைந்திருப்பதாகவும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அதுபோலச் சரணடையுமாறும் ஒலிபெருக்கி மூலம் சிறிலங்கா படையினர் அறிவித்தனர்.

அப்போது, எனது கணவர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு உயரதிகாரி ஒருவரால், விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நான் கண்டேன்.என்னை வட்டுவாகல் பிரதேசத்தில் விசாரணை நடத்திய படை அதிகாரியும், எனது கணவர் அங்கே இருக்கிறார் என்று காட்டினார்.

எனது கணவருடன் கதைத்துக் கொண்டிருந்த படை அதிகாரியை என்னால் அடையாளம் காட்ட முடியாது.ஆனால் வட்டுவாகலில் வைத்து எனது கணவரை ஒப்படைத்த, சிறிலங்கா படை அதிகாரியை என்னால் அடையாளம் காட்ட முடியும்.  எனது கணவர் காணாமற்போனதில் இருந்து நான் பல துன்பங்களை எதிர்நோக்கி வருவதுடன் மனஉளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளேன்.

ஒருமுறை தற்கொலை முயற்சியும் மேற்கொண்டுள்ளேன்.எனது அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தான், நான் தற்போது வாழ்ந்து வருகின்றேன்.எனது கணவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.அவரை சட்டத்திற்கு முன்பாக நிறுத்துமாறு நான் கோருகின்றேன்.

இதுவரை நான் எனது கணவர் தொடர்பாக, எவரிடமும் முறைப்பாடு செய்யவில்லை.சிறலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட உங்கள் முன்னால் நான் முதற்தடவையாக சாட்சியமளிக்கின்றேன்.இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த ஆணைக்குழு எனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements