மட்டக்களப்பு சிறை உடைப்பை படமாக எடுக்கவந்த பாலு மகேந்திரா

பிறக்கக் கிடைத்த ஒரு நாடு இறக்கக் கிடைக்கவில்லையே..


இயக்குநர், கமேராமேன் பாலு. மகேந்திரா இலங்கையின் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்று சொல்வதில் இலங்கைத் தமிழர்கள் எப்போதும் பெருமைப்படுகிறார்கள்.

இப்படியொரு உன்னதக் கலைஞர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அந்தநாட்டு அரசு அவரை ஏதாவது வழியில் மதிக்க முற்பட்டதா, இல்லை அந்த நாட்டுத் தலைவர்களில் யாராவது அவருடைய பெயரை உச்சரித்தார்களா என்றால் அப்படியொரு செய்தி இல்லை.

சிறீலங்கா இனவாத அரசுடன் யாதொரு தொடர்பும் இல்லாத கலைஞராக அவர் வாழ்ந்துள்ளார், மற்ற விடயங்களை அவர் பேசவில்லை அதற்கான சூழல் சிங்கள அரசின் நண்பனான இந்திய மண்ணில் அவருக்கு இல்லை.

இதற்குள் இருக்கும் நச்சு வளையம் புலம் பெயர் நாடுகளில் இருந்து பார்ப்போருக்கு தெரியாது… நாம் இங்கிருந்து இது செய்யவில்லை அது செய்யவில்லை என்று வாய்க்கு வந்தபடி கூறலாம்.. ஆனால் அங்குள்ள களம் பட்டறிவால் உணரப்பட வேண்டியது.

அவர் ஈழத் தமிழர்கள் பற்றி ஒரு திரைப்படம்கூட எடுக்கவில்லையென்று சொல்கிறார்கள், ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை அவருடைய ஒவ்வொரு கதைக்குள்ளும் இருந்திருக்கிறது.balu makendra

வெளிப்படையாகச் செய்ய முடியவில்லை ஏன்..?

மட்டக்களப்பு சிறையுடைப்பை திரைப்படமாக எடுக்கப் போகிறேன் என்று அவர் அறிவித்தல் கொடுத்ததும் இந்திய உளவுப் பிரிவு அவருடைய வீட்டுக்குப் போனது..

அப்படியொரு முயற்சியில் இறங்கக்கூடாதென்று அவரை எச்சரித்தது.. அத்துடன் அந்த முயற்சி நின்று போனது… இதை நாம் சொல்லவில்லை இது ஊடகங்களில் வெளியான பகிரங்கத்தகவல்.

இந்தியாவில் சென்று திரைப்பட முயற்சியில் ஈடுபடும் ஈழத் தமிழர்களில் பலர் சிறையிருந்து வந்ததுதான் வரலாறு, அதிலிருந்து தப்பி ஒரு கலைஞராக நீடித்ததுதான் அவர் புரிந்த முக்கிய சாதனை.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் எல்லோரும் கம்பி எண்ணினார்கள், இவர் மட்டும் தப்பினார்.

எனவேதான் ஒரு வெகுஜன கலைஞனுக்கு மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது அதை அவர் புரிந்து கொண்டார்.

அன்று அவருடைய முதல் படமான அழியாத கோலங்கள் இலங்கையில் சக்கை போட்டு ஓடியது.. திரைப்படங்களுக்கான பழைய இலக்கணங்களில் இருந்து அது வேறுபட்டிருந்தது..

சிறுவனாக இருந்த காலத்தில் மட்டக்களப்பு வாழ்வில் தன்னோடு நீச்சலடித்து இறந்துபோன சிறுவனை அழியாத கோலமாக அவர் கொண்டுவந்திருந்தார்.

சம்புப் புற்களிலும், தூரத்து பனைமரங்களிலும், சுடுகாடுகளிலும் அவர் வைக்கும் கமேரா கோணத்திற்குள் ஈழம் வாழ்ந்து கொண்டிருந்தது.

தமிழகத்தை கதைக்களமாக அவர் காட்டினாலும் மறைமுகமாக சொல்லப்படாத செய்தியாக ஈழத்தின் ஏக்கம் அவர் கதைகளில் இழையோடும்… காணாமல் போன மகனைத் தேடும் தந்தையின் கதை.. இதற்கு உதாரணம்.

வீடு படத்தை தமிழ் திரை வரலாற்றில் ஓர் அழியாத காவியம் என்கிறார்கள்.. அதன் தயாரிப்பாளர் கனடாவில் வாழும் ஓர் ஈழத்தமிழரே.

மூன்றாம் பிறை படத்தை இலங்கையில் இருந்து பார்த்தபோது அதற்குள் பாலு மகேந்திரா தெரிந்தார்.

பைத்தியமாக ஆதரவற்று இருக்கும்போது கதாநாயகனை அண்டி வாழும் நாயகியான சிறீதேவி, பித்தம் தெளிந்ததும் அவனை வேடிக்கையாப் பார்த்துக் கொண்டே உதறிவிட்டுப் போய்விடுவாள்.

நடந்ததை எல்லாம் நடித்துக் காட்டினாலும் அவள் நிராகரித்துவிட்டுப் போய்விடுவாள்..

அப்படித்தான் அவருடைய தாய்நாடும் அவரை கண்டுகொள்ளாத ரயில்வண்டியாகப் போய்விட்டது.. இப்போது அந்தக் கலைஞன் தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் தீயோடு சங்கமமாகப் போகிறார்..

மட்டக்களப்பில் ஒரு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் இரண்டும் எதற்கு இருக்கின்றன…

அந்தக் கலைஞனை ஒரு கௌரவ டாக்டராக அறிமுகம் செய்ய இவர்களுக்கு மனம் வந்ததா.. மனதில்கூட நமக்கு ஒரு வெளியில்லை.. இந்த நிலையில் இந்திய உளவுப்பிரிவை குறை சொல்லி என்ன பயன்…?

பாலு மகேந்திரா எத்தனை புகழைப் பெற்றாலும் இன்று அவன் தாய்நாட்டை இழந்த ஒரு கலைஞனாகவே இறுதியாக விடைபெறுகிறான்.

இன்று கூடப்பிறந்த உறவுகளாக தமிழக கலைஞர்கள் அவனுக்காக கண்ணீர்விடுகிறார்கள்.

ஆனால்..

வாழ இடம் கொடுத்த நன்றிக்கு பாலு மகேந்திரா எண்ணற்ற ஆற்றலாளர்களை தமிழக மண்ணில் உருவாக்கிவிட்டு விடைபெற்றுள்ளார்.

இந்த வாரீசுகளில் வரிசையில் யாராவது ஒரு ஈழத் தமிழன் இருக்கிறானா என்று தேடுகிறோம்.. அதற்கான களம்கூட அவருக்கு வாய்க்கவில்லை போலும்.

ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது, ஈழத் தமிழர்களை சினிமாவில் கொண்டுவர ஆதரவு வழங்க வேண்டிய கடமையே அது.

அவர்கள் வழமைபோல வாய்ச் சொல் வீரர்களாக இல்லாமல் செயலில் ஏதாவது செய்வதே பாலு மகேந்திராவுக்கு பெருமை.

மறுபுறம் பாலு மகேந்திராவின் மரணம் புலம் பெயர்ந்த ஒவ்வொரு ஈழத் தமிழ் கலைஞர்களுடைய வாழ்விற்கும் நல்லதோர் குறியீடாக இருக்கிறது.

பிறக்கக் கிடைத்த ஒரு நாடு இறக்கக் கிடைக்கவில்லையே என்ற மௌன ஒலி எல்லோர் இதயங்களையும் வருடிச் செல்கிறது.

நேர்கோடுகள் சித்திரங்களாகவோ கோலங்களாகவோ வருவதில்லை.. தாறுமாறான கோடுகளே கலை வடிவங்களாக மின்னுகின்றன…

அவருடைய தனிப்பட்ட வாழ்வு நேர்கோடாக இல்லையே என்று குறைகூற வேண்டியதில்லை…

நேர் கோடுகளால் ஓர் அழியாத கோலங்களை வரையமுடியாது என்பதை உணர்ந்தால் எல்லோர் இதயத்திலும் பாலு.. அழியாத இடத்தைப் பிடித்துவிடுவார்.

கி.செ.துரை 13.02.2014

**

பாலு மகேந்திரா… தமிழ் சினிமாவின் வீடு!- இயக்குநர் ராம்

எங்கள் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும்.

சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. ‘வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கிய போது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் ‘வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான்.

அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல… பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு. அங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்த போது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார்.

அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், ‘இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார்? இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்?

நான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலு மகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன்.

அப்போது ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ”சாப்பிட்டியா…?” என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார்.

இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். ‘இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா?’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார்.

நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் ‘கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன்.

இப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்து வந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார்.

கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்…’ என்று கேட்டேன். ‘பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா…’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார்.

கடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம்.

திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ”சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்” என்று உருக்கமாகச் சொன்னார்.

12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர் பிரிந்து விட்டது.

சினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று.

தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.