சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் வடக்கைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் வாழும் வடக்கில் சுமூகமான சூழல் நிலவுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கூட இங்கு வாழும் மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுவதுடன், அச்சமான சூழலிலேயே தமது வாழ்வைத் தொடர்கின்றனர். சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தைத் தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு மிகக் குறைந்தளவு அதிகாரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் வியாழனன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போது வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.SL Army Jaffna

‘புலம்பெயர் இலங்கையர்களுடனான போருக்குப் பின்னான சமூக-பொருளாதார அபிவிருத்தி மற்றும் உறுதியான தொடர்புகள்’ என்கின்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதன்மை உரையாற்றியுள்ளார். இவர் தனது உரையின் போது, சிறிலங்கா இராணுவம் தமிழர் வாழும் வடக்கில் மக்களின் சொந்தக் காணிகளில் பெருமளவில் விவசாயம் மற்றும் வர்த்தக சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சுற்றுலா மையங்களை அமைத்து சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு சிறிலங்கா இராணுவம் பெரிதும் முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “ஏ-09 வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் தேநீர் விற்பனை நிலையங்களைக் கூடத் திறந்துள்ளனர். தமிழ் மக்களின் சொந்த இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் வர்த்தக சார் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் வடக்கில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்வில் தலையீடு செய்கின்றனர். இதனால் பெண்கள் பலவந்தமாக பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாகுகின்றனர்” என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபையின் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையீடு செய்வதாகவும் சிறிலங்கா இராணுவத்தினர் மக்களுக்குச் சொந்தமான 6000 ஏக்கர் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

“வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களின் வாழிடங்களை முற்றாக அழித்துள்ளதுடன் மிகப் பெரிய சொகுசுக் கட்டடங்கள், நீச்சல் தடாகங்கள் போன்றவற்றை அமைக்கத் தொடங்கியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத் தலைவர்கள் மற்றும் இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் வடக்கிற்கு வருகை தரும் போது அவர்கள் சொகுசாக தங்குவதற்காக இவ்வாறான கட்டடங்கள் சிறிலங்கா இராணுவத்தால் அமைக்கப்படுகின்றன. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவசாய நிலங்களில் சிறிலங்கா இராணுவம் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு உற்பத்திகளை விற்பனை செய்வதானது இந்த மக்களுக்கான ஒரு கெட்டவாய்ப்பாகும்” என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் உட்பட தமிழர் வாழும் இடங்களில் உள்ள நிலங்கள் மேலும் மேலும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தான் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இரண்டு இந்து ஆலயங்கள் மற்றும் ஒரு பாடசாலை என்பன மறுநாள் இராணுவத்தால் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் இது மிகவும் இழிவான செயலாக உள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“நான் சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிடுவதற்கு முதலமைச்சர் என்ற வகையில் சென்றபோது அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கவில்லை. யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் செயற்படும் Tal Sevana என்கின்ற விடுதிக்கு வருகைதந்த தென் சிறிலங்காவைச் சேர்ந்த எனது சிங்கள நண்பர்கள் எவ்வித முன்னனுமதியும் இன்றி இராணுவத்தின் எவ்வித தடைகளுமின்றி மிக இலகுவாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்ததை நான் நன்கு அறிவேன்” எனவும் தனது உரையின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

[ நித்தியபாரதி ]

Advertisements