திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா காலமானார்.

balu makendra

“கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா”


புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா இன்று வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 74.

கடந்த சிறிது காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த பாலு மகேந்திரா, இன்று காலை சென்னையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.

இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா, லண்டனில் படித்து, இந்தியாவின் பூனாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றவர்.

படங்கள், விருதுகள்

1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.

பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.

பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.

அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கலைப்படங்களை நோக்கிய நேர்த்தியான படங்களை உருவாக்குபவர் என்று பெயர் பெற்றிருந்த பாலு மகேந்திராவின் பெரும்பாலான படங்கள் வணிக ரீதியிலான முயற்சியே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அவரது திரைப்படமான ‘வீடு’, அவருக்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

கடைசிப் படம்

‘தலைமுறைகள்’ என்ற சமீபத்தில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம் ஆகும்.

இவரது மறைவிற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது திரைப்பட பள்ளிக்கூடமான ‘சினிமா பட்டறை’க்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகின்றது.

பிபிசி –ஒலி வடிவில்…


**

திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா இன்று காலமானார்

திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா இன்று காலமானார். மூச்சு திணறல் காரணமாக திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது(74). திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

பாலுமகேந்திரா தன்னுடைய கலைபயணத்தை முதன் முறையாக மலையாள திரையுலகில் துவக்கினார். அவர், மலையாளத்தில், ‘நெல்லு’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார்.

ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.

1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பின்னர் 1977ல் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். முதன் முறையாக இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. இந்தப் படம் 1978ல் வெளியானது. தொடர்ந்து, பாலுமகேந்திரா ‘மூன்றாம் பிறை’, ‘அழியாத கோலங்கள்’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘மறுபடியும்’, ’சதி லீலாவதி’, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தலைமுறைகள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குனர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களாக உள்ளனர். “சேது”, “நந்தா”, “பிதாமகன்” போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி உள்ளிட்டவர்களும் அவரின் உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி‎


**

ஈழவிடுதலையில் ஆர்வம் கொண்டிருந்த தமிழ் இனப்பற்றாளர் பாலு மகேந்திரா! – வைகோ, ராமதாஸ் இரங்கல்

பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் மறைவுக்கு, வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சினிமா மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் பாலுமகேந்திரா மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த மனிதாபிமானியான பாலுமகேந்திரா இன்று மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

ஈழத்தில் மட்டக்களப்பு அருகில் அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த இவர், தமிழ் உணர்வு மிக்கவர். இலண்டனில் தனது இளநிலை கல்வியை முடித்தபின், புனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றபோது, தங்கப்பதக்கம் பெற்றவர். இயற்கை அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டி பிரமிக்க வைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாலுமகேந்திரா ஆவார்.

நெல்லு மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து, அப்படத்துக்கு கேரள மாநில அரசின் விருதினைப் பெற்றார். இதுவரை பார்த்திராத கோணங்களில் காட்சிகளைத் தந்து கண்களுக்கு விருந்தளித்தார். மூன்றாம் பிறை, மூடுபனி திரைப்படங்களைத் தந்து புகழ்பெற்றார். டைரக்டரின் பெயரைப் பார்த்து சினிமாவுக்குச் செல்லும் இரசிகர்களின் பட்டியலில் பாலுமகேந்திரா முதலிடம் பெற்றிருந்தார்.

டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலுமகேந்திரா.

பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றவர் ஆவார். சினிமா மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் பாலுமகேந்திரா மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு ஆகும். பாலுமகேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சினிமா கலை உலகுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா மறைவுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், “தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தாங்க முடியாத துயரமும் அடைந்தேன்.பாலு மகேந்திரா திரையுலகில் இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும், படத் தொகுப்பாளராகவும் பல புதிய உச்சங்களைத் தொட்டவர்.

வன்முறையையும், மட்டமான ரசனைகளையும் நம்பாமல் உன்னதமான, புரட்சிகரமான கருத்துக்களை போதிக்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்கியவர்.

தாய்மொழி வழிக் கல்வியையும், குடும்ப உறவுமுறைகளையும் போற்றும் வகையில் அண்மையில் அவர் உருவாக்கிய தலைமுறைகள் படம் என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்றாகும்.எனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவரான பாலு மகேந்திரா ஓர் அற்புதமான மனிதர். என்னுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஈழத்தில் பிறந்து இந்தியாவில் படைப்பாளியாய் உருவெடுத்த அவர், ஈழத் தமிழர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்; தமிழீழ விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். பாலு மகேந்திராவின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி, தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisements