ஆட்சிக்கவிழ்ப்பு தான் அமெரிக்காவின் இலக்கா?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைப் பயணத்தின் முடிவில் வெளியிட்ட கருத்து அரசாங்கத்துக்குப் பெரும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.SL protest against usa

போர்க்குற்றங்கள், மற்றும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய அவரது குற்றச்சாட்டுகள் மட்டும் அரசாங்கத்தின் சினத்துக்குக் காரணமல்ல. அதற்கும் அப்பால், மனிதஉரிமைகளுக்கான மதிப்பு மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு – ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காத தன்மையும் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கிறது என்று அவர் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தை பெரிதும் யோசிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதாவது, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், மீறல்களை மட்டும் வைத்துக் கொண்டு, இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுக்கவில்லை. போருக்குப் பின்னரும் இலங்கையின் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தார் நிஷா பிஸ்வால். சர்வதேச சமூகம் பொறுமையிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜெனிவாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வுகள் குறித்து இப்போது அரசாங்கத்துக்கு இரண்டு அச்சங்கள் தோன்றியுள்ளன.

முதலாவது, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முந்திய போரின் போது நடந்த சம்பவங்கள், மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா காட்டும் உறுதி. இரண்டாவது, இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கப் போகிறதா என்ற கலக்கம்.

இதுவரைக்கும், தம்மை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல மேற்கு நாடுகள் நாடுகள் முனைவதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிவந்தார். அதுபோலவே, அமைச்சர்களும், சர்வதேச நீதிமன்றத்துக்கு அரசாங்கத்தையும் படையினரையும் இழுக்க முயற்சிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டி வந்தனர்.

இப்போது, இலங்கையை அடிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் புலம்பத் தொடங்கியுள்ளதைக் காணமுடிகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுதந்திர தின உரையில், இலங்கை மக்கள் பெற்ற சுதந்திரத்தை எவரும் அபகரித்துக் கொள்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், மக்களை காப்பாற்றுவதற்கு, மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கு, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு என்று கூறித் தான் பிற நாடுகளின் மீது அவர்கள் கை வைப்பார்கள் என்றும் அமெரிக்காவைச் சாட்டியிருக்கிறார்.

இப்போது அரசாங்கத்துக்கு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தோ, அதுசார்ந்த விசாரணைகள் குறித்தோ அதிகம் பயம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு, அடுத்த கட்டமாக, அமெரிக்கா ஆட்சிக்கவிழ்ப்புக்கான சூழலை உருவாக்கி விடுமோ என்ற கலக்கம் தான் அதிகரித்து வருகிறது.

போர்க்குற்றச்சாட்டுகள் மீது சர்வதேச விசாரணை நடத்துவதில் அமெரிக்க அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது உறுதி. நிஷா பிஸ்வால் கொழும்பில் இதனை தெளிவாக கூட்டிக்காட்டியிருந்தார்.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே, அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு அப்பால், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முனைவதில் உள்ள சிக்கல்களை அமெரிக்கா நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால், அத்தகைய சிக்கலுக்குள் நுழைய அமெரிக்கா விரும்பவில்லை.

அதற்காக, எந்த விசாரணைப் பொறிமுறைக்கும் இணங்க மறுக்கும் இலங்கை அரசாங்கத்தை இப்படியே விட்டு வைக்கவும் அமெரிக்கா தயாராக இல்லை. இலங்கை அரசாங்கத்தின் மூலம், உள்ளக விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு எப்போதோ போய் விட்டது.

அந்த நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டதென்பதை நிஷா பிஸ்வாலும் கூட கொழும்பில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், ஜெனிவாவில் கொண்டுவரப் போகும் தீர்மானத்தின் மூலம் இலங்கையை வழிக்குக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. அதேவேளை, இலங்கை மீது சர்வதேச விசாரணை, பொருளாதாரத் தடை என்று கடும் போக்கில் இறங்குவதிலும் அவ்வளவு விருப்பம் இருப்பதாகவும் தோன்றவில்லை.

ஏனென்றால், அவை அரசாங்கத்தைப் பலப்படுத்துவதாக அமைந்து விடும் என்று அமெரிக்கா கருதுவதாகத் தெரிகிறது.

அரசாங்கமும் கூட, இந்த ஜெனிவா தீர்மான நகர்வை தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கே பயன்படுத்தப் பார்க்கிறது. இத்தகைய நிலையில், அரசாங்கத்தின் திட்டத்துக்கு சாதகமான வகையில் – அதற்குத் துணை போகின்ற வகையில் காய்களை நகர்த்த அமெரிக்கா பின் நிற்கலாம்.

இந்த அரசாங்கத்தின் மூலம் தமது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வருமேயானால், அமெரிக்காவுக்கு உள்ள ஒரே தெரிவு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமேயாகும்.

அத்தகைய மாற்றத்தின் மூலம், தமது நிகழ்ச்சி நிரலை ஒழுங்காக நிறைவேற்ற முடியும் என்ற அமெரிக்கா கருதக் கூடும். அண்மைக்காலத்தில் அமெரிக்கா போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து வலியுறுத்துவதை விட, ஜனநாயகம், நீதி, ஊடக சுதந்திரம், ஊழல், சட்டத்தின் ஆட்சி பற்றியெல்லவாம் அதிகம் பேசுவதைக் காணலாம்.

இவை போர்க்கால மீறல்களுடன் தொடர்புபட்டவையல்ல. முற்றுமுழுதாக மனிதஉரிமை மீறல்களுடன் தொடர்புடைய விடயங்களும் அல்ல. இது தான், ஆட்சி மாற்றத்தை நோக்கி அமெரிக்கா காய்நகர்த்தல்களை செய்ய முனைகிறதா என்ற சந்தேகம் எழும்பக் காரணம்.

அரசியல் சட்டத்தின் மூலம், தமது ஆட்சியை வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாக விரிவுபடுத்திக் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, வழிக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுக்கு இப்போது மாற்று வியூகங்கள் கிடையாது.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம், பொறுப்புக்கூறல், மனிதஉரிமைகள் விவகாரங்களை கையாள அது முற்படலாம்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் போர்க்குற்றங்களுக்கு அப்பால் பேசத் தொடங்கியதும், நாட்டை அடிமைப்படுத்த மேற்கு நாடுகள் முனைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதும், இந்த சந்தேகத்துக்கு வலுச்சேர்க்கிறது.

போருக்குப் பிந்திய சம்பவங்களை முன்னிறுத்தி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா காய்களை நகர்த்தத் தொடங்கினால், அது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும். அத்தகையதொரு நிலை உருவாவதை அரசாங்கமும் விரும்பாது.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் தற்போதைய நகர்வுகள் அரசாங்கத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது போலவே தெரிகிறது.

அமெரிக்காவின் இலக்கு எது என்பதை தெளிவாக உறுதி செய்து கொண்டால் தான், ஜெனிவாவில் தகுந்த உபாயத்தை அரசாங்கத்தினால் வகுக்க முடியும்.

போர்க்கால குற்றங்களா, போருக்குப் பிந்திய மீறல்களா ஜெனிவாவில் முக்கியம் பெறப் போகிறது என்பதன் அடிப்படையில் தான், அரசாங்கம் மீதான அழுத்தத்தின் கனதி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

-கே.சஞ்சயன்

Advertisements