அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும்

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும். srilanka australia Genocide partners

இவ்வாறு அவுஸ்திரேலிய ஊடகமான The Age எழுதியுள்ள ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

1946ல் நியூறெம்பேர்க்கில் அனைத்துலக இராணுவ நீதிமன்றம் தனது விசாரணையை மேற்கொண்டது. போர்க் குற்றங்கள் மேற்கொள்வதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் அனைத்துலகச் சட்டத்தை மீறியிருந்தனரா என்பது தொடர்பாக இதில் ஆராயப்பட்டது. இந்த விசாரணையின் போது, நீதிமன்றம் மிக முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவித்திருந்தது: “அதாவது அனைத்துலகச் சட்டத்தை மீறிக் குற்றமிழைத்தவர்கள் எதிராக அவர்கள் தொடர்புபட்ட அமைப்பின் சார்பாக அல்லாது தனிப்பட்ட ரீதியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டது.

சிறிலங்காவில் பல்வேறு யுத்த மீறல்கள் மேற்கொள்ளப்பட்ட போது அதனைப் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை அதன் ஆளும் அரசாங்கம் அசட்டை செய்துள்ளது. அத்துடன் இவ்வாறான குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் கூறுகிறது. இந்த விடயத்தில் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் இதன்மூலம் இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படும் எனப் பயந்து அவுஸ்திரேலியா தனது கடமையைச் செய்யத் தவறக்கூடாது. சிறிலங்கா விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது எமது தார்மீகக் கடமையாகும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக ‘பொது நல ஆலோசனை மையம்’ [The Public Interest Advocacy Centre] அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான உண்மையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் படுகொலைகள், நிராயுதபாணிகளான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டமை, பரந்தளவிலான சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், பாலியல் சித்திரவதைகள், பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு விடயங்கள் இந்த ஆவணத்தில் சாட்சியமாக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான தடயங்களை சிறிலங்கா காவற்துறை மற்றும் இராணுவத்தினர் அழிக்க முயற்சித்த போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மே 2009ல் போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் போரில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் போன்றன ‘பொது நல ஆலோசனை மையத்தால்’ வெளியிடப்பட்ட அறிக்கையில் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தின் ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் இடம்பெற்ற பெரும்பாலான யுத்த மீறல்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டிலிருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்காவில் காணாமற் போதல்கள், பாலியல் வன்புணர்வுகள் போன்றன இடம்பெறுகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது குற்றவிலக்களிப்பு கலாசாரத்தைப் பேணிவருவதால் நாட்டில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அதாவது குற்றமிழைத்தவர்கள் எவ்வித தண்டனைகளுக்கும் உட்படுத்தாது சுதந்திரமாகத் திரிவதால் மேலும் மேலும் குற்றங்கள் தொடரப்படுகின்றன. இதன்காரணமாக அதிகளவான இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருகின்றனரா?

போரில் தோற்றவர்களால் வேண்டுமென்றே தமக்கெதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறுகிறார். இவர்கள் நாட்டில் சமாதானம், நீதி மற்றும் அமைதியை எட்ட விரும்பவில்லை எனவும் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மீள்நினைவூட்ட விரும்பவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். “கசப்பான நினைவுகள் விரைவில் எமது மனங்களை விட்டு அழியவேண்டும். எனவே இவை மண்ணில் எழுதப்பட வேண்டும்” என மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.

மகிந்த ராஜபக்சவின் இந்தப் பதிலானது, சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களை உறுதிப்படுத்துவதற்கான சாட்சியங்களாக உள்ள அதேவேளையில், ஒரு மேம்போக்கான, தட்டிக்கழிக்கின்ற, ஆபத்தான ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த விடயத்தில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் சிறிலங்காவுக்கான தனது ஆதரவைக் காட்டுவதென்பது நிச்சயமாக நியாயமான ஒன்றாக இருக்கமுடியாது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரு நாட்டை தனிமைப்படுத்துவதை விடுத்து அந்த நாட்டுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது சிறந்தது என ஒரு ஆண்டுக்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொப் கார் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்பின்னர் அவுஸ்திரேலியாவில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ரொனி அபோற் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் “கடினமான சூழலில் கடினமான சில சம்பவங்கள் இடம்பெறுவது சாதாரணமானது. இதுவே சிறிலங்கா விடயத்திலும் இடம்பெற்றுள்ளது” என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும். ராஜபக்ச அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற சில நாடுகள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன.

இந்த விடயத்தில் அவுஸ்திரேலியா ஓரங்கட்டப்படும் அபாயம் தென்படுகிறது. சிறிலங்காவானது சட்ட ஆட்சியை நிலைநாட்டாது, கண்மூடித்தனமாகச் செயற்பட்டால் அனைத்துலக சட்டத்தை மீறுவதாகக் கருதப்படும். இந்நிலையில் நாங்கள் சிறிலங்காவை எதிர்த்து நிற்காவிட்டால் குற்றங்களை மறைப்பதற்கு ஆதரவாக இருந்தோம் என குற்றம் சாட்டப்படுவோம். சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை ஒன்று இடம்பெறுவதற்கு அபோற் அரசாங்கம் ஆதரவாக இருக்கும் என நாங்கள் நம்பலாம். ஆனால் கெட்டவாய்ப்பாக இது இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கவில்லை என்பது வேதனைக்குரியது.

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements