புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பிளவுபடுகின்றனவா?

லண்டனில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையிலிருந்து விலகி தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளமையானது புலம்பெயர் தமிழ்க் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய விரிசலாகும்.GTFBritish Tamils Forum (BTF)

இவ்வாறு  Cracks In Diaspora[ Sunday Leader ][ Jan 26 ]கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலத்திலும் அதற்குப் பின்னரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு வரும் புலம்பெயர் தமிழ்க் குழுக்களுக்கிடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. லண்டனில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையிலிருந்து [Global Tamil Forum – GTF] விலகி தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை [British Tamils Forum] தெரிவித்துள்ளமையானது புலம்பெயர் தமிழ்க் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய விரிசலாகும்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழர்களின் அரசியல் அவாக்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய தேவையேற்பட்டதாக பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் செயற்பட்ட அமைப்புக்களின் உதவியுடன் உலகத் தமிழர் பேரவையை உருவாக்குவதிலும் அதற்கான அனுசரணையைப் பெற்றுக் கொடுப்பதிலும் மிக முக்கிய பங்காற்றியதாக பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் நிறுவன அமைப்புக்களின் தூரநோக்கம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் மற்றும் தமிழ் மக்களுக்கு நீதி மற்றும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் எனக் குரல் கொடுத்த பிரதிநிதித்துவ அமைப்புக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய தேவையிருந்ததாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

“14 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் உதவியுடன் உலகத் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டது. இவை நிறுவுன உறுப்பு அமைப்புக்கள் என்ற வகையில் தமது பங்களிப்பை ஆற்றியுள்ளன. ஏனைய அமைப்புக்களும் உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து இந்தப் பேரவையையும் அனைத்துலகில் வாழும் புலம்பெயர் தமிழர்களையும் பலப்படுத்தும் எனக் கருதப்பட்டது. இந்த ரீதியில் உலகத் தமிழர் பேரவையானது அனைத்துலக அரங்கில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கக் கோரிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான கூட்டுத் தலைமைத்துவப் பொறுப்பில் அமர்த்தப்பட்டது” என பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

“அடிப்படையில் உலகத் தமிழர் பேரவையானது சில வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், இந்தப் பேரவையும் இதன் தலைமைத்துவமும் தமது நெறிமுறைகள், தூரநோக்கு போன்றவற்றிலிருந்து தவறியுள்ளன. பிரதானமாக உலகத் தமிழர் பேரவையானது கூட்டுத் தீர்மானம் இயற்றல், ஜனநாயக நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் ஒன்றுபடுத்தல் மற்றும் அடித்தட்டு மக்கள் மத்தியில் பணியாற்றுதல் போன்ற அடிப்படை விழுமியங்களை மதித்து நடக்கத் தவறியுள்ளது” என பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

“உலகத் தமிழர் பேரவைக்குள் அங்கம் வகிக்கும் இதனைத் நிறுவுவதற்குத் துணையாகக் காணப்படும் அமைப்புக்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான தலைமைத்துவப் பண்பை பேரவை கொண்டிருக்கவில்லை. அத்துடன் தமிழர்களைத் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்புக்களையும் உள்ளடக்கி தனது செயற்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைக் கூட உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவில்லை” என பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் ஆண்டுப் பொதுக் கூட்டமானது 2010ம் ஆண்டிலிருந்து குறித்த திகதியில் இடம்பெறாது கால தாமதமாகுவதாகவும், இதனால் பல நாடுகளில் இந்தப் பேரவைக்கான ஆதரவு கிடைக்காதுள்ளதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சிறிலங்காத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட படுகொலைகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையானது தனது எதிர்வாதங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகவும், தமிழர்களுக்கு நீதி மற்றும் சுதந்திரம் கிடைப்பதற்காக அனைத்துலக அரங்கில் தனது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய உலகத் தமிழர் பேரவையானது தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் அநீதிகள் தொடர்பில் கேள்வியெழுப்பத் தவறியுள்ளதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

“பிரித்தானியத் தமிழ் மக்களின் ஆதரவுடன் நாங்கள் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்களுக்கு நீதி மற்றும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் பேரவையானது தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் தொடர்பில் பொருத்தமற்ற ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கருத்துக்களை அனைத்துலக அரங்கில் முன்வைத்து வருவது எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது” என பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements