சரத் பொன்சேகா: சாத்தான் வேதம் ஓதுகின்றது

பொட்டம்மான், சீலன் பெயர்களை பாவித்து கோத்தா விளையாடுகிறார்!
Sri Lankan war criminals

சாத்தான் வேதம் ஓதுகின்றது‘ என்று பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கவுக்கு பொருந்தும்.

திடீரென தமிழீழ தேசியத் தலைவரின் புகழ்பாட ஆரம்பித்துவிட்டார். அதுமாத்திரமல்ல, ‘பிரபாகரன்‘ என்ற பெயரைக்கொண்டு மகிந்தவைத் தாக்குகிறார்.

பிரபாகரனின் ஒரு தலைமயிருக்குக்கூட நீங்கள் பெறுமதியற்றவர்“ என ராஜபக்ச குடும்பத்தையே சந்திக்கு இழுக்கின்றார். அதனால், சரத் பொன்சேகா மீது மகிந்தவும், கோதபாயவும் கடும் கோபம் கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

“பிரபாகரனுக்கு என்னோடுதான் பகை. ஆனால், அதற்காக அவர் என் மனைவி, பிள்ளைகளை பழிவாங்கவில்லை. ஆனால், ராஜபக்ச குடும்பம் என் மனைவி, பிள்ளைகளையும் பழிவாங்கிவிட்டார்கள். என் மருமகனைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள். அவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை“ என அலறுகின்றார் சரத் பொன்சேக்க. தனக்கு தனக்கு என்றதும் சுளகு படக்குப் படக்கு என அடித்துக்கொள்ளுமாம்‘.சரத் பொன்சேக்க எத்தனை தமிழ் இளைஞர்களை காணாமல்போகச் செய்தவர் என்பது தமிழர் வரலாறு அறியும். ஆனால் அவர் குடும்பமே இன்று அதனைச் சந்தித்துள்ளது.

அன்று‘பயங்கரவாதி‘ எனக் குறிப்பிட்ட பிரபாகரன், இன்று ‘கொள்கை வீரன்‘என சரத் பொன்சேக்க பாராட்டுகிறார். ஆனால், அதற்காக நாம் பொன்சேக்கவைப் பாராட்ட முடியாது.

தமிழீழத் தேசியத் தலைவர் உலகத் தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்துக்கொண்டவர். தமிழர்களை கொலைசெய்த சரத் பொன்சேக்க போன்றவர்களின் சந்தர்ப்பவாத பாராட்டுகள் அவருக்கு அவசியமில்லை.

சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தோம். அந்தச் செய்தியை அப்படியே சிங்களப் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த கோதபாய அந்தச் சிங்களப் பத்திரிகை மீது‘ஏறி விழுந்துள்ளார்‘. நீங்கள் எங்களுடன் கோபப்படுவதை விடுத்து,இந்தச் செய்தியை வெளியிட்ட ‘கனடா உலகத்தமிழர்‘ ஊடகத்தின் மீதும், அதனை எழுதியவர் மீதும் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள் என அந்த ஊடக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கோதபாய கைகளைப் பிசைந்துகொண்டார். வேறு என்ன அவரால் செய்ய முடியும்?

பல போர்க் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பரப்புரை. ஆனால், தோல்வி கண்டதாக வரலாறு உள்ளது. அப்படிப்பட்ட பரப்புரைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு. சிங்கள இணையத்தளமொன்று இதனை வெளியிட்டுள்ளது. அவையிரண்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபரப்புடன் வெளியான செய்திகள். பிரபலமான தமிழ் இணையத்தளங்களில்கூட முதன்மைச் செய்திகளாக வெளிவந்த தகவல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான். அவர் உலகின் பிரபலமான புலனாய்வுப் பிரிவிடம் அறுமுகம் மிக்கவர்.

போரின்போது அவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஒருசிலரும், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என ஒருசிலரும் கூறிவருகின்றனர்.

ஆனால், அவர் இப்போது ஆபிரிக்க நாடான கானா நாட்டில் மறைந்து வாழ்வதாகத் தகவல். இதனை பரப்புரை செய்தது இலங்கை அரசே என்கிறது அந்த இணையத்தளம். கோத்தாவின் விளையாட்டு.

ஆனால், கானா நாட்டின் தகவல் பிரிவு இதுகுறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. பொட்டம்மான் கானா நாட்டில் இல்லை என அது மறுத்துள்ளது.

தமது நாட்டின் மீது இவ்வாறான கற்பனைக் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது. கானா நாட்டின் பக்கம் உலகின் கவனம் பதியப்படவேண்டும் என்பதனாலேயே இவ்வாறான தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

அதேபோன்று மற்றொரு தகவல். சீலன் என்பவர் தாய்லாந்தில் மறைந்து வாழ்ந்து வருபவராம். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவராம்.

அவர் சிறிய ரக விமானங்களைச் செலுத்தப் பயிற்சி பெற்றவராம். அவரை இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து அழைத்து வந்ததாக செய்தியொன்று பரப்பப்பட்டுள்ளது. கோத்தாவின் விளையாட்டு.

ஆனால், அவ்வாறு சீலன் என்பவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சீலன் என்பவரின் பெயரை அரசின் இரகசிய முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிப் போராளிகள் குறிப்பிட்டிருக்கலாம். அவர் இலகு ரக விமானப் பயிற்சி பெற்றவராகவும் இருக்கலாம்.

ஆனால், அவர் வெளிநாட்டில் கைதாகி இங்கு அழைத்துவரப்பட்டதென்பது சந்தேகத்துக்கிடமானது. பொட்டம்மான், சீலன் ஆகிய இருவர் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டதின் நோக்கம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வெளிநாடுகளுக்கு சிறிலங்கா அரசு உணர்த்த முற்படுவதாக அது சுட்டிக்காட்டுகின்றது.

இருப்பினும், புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் இவ்விரு செய்திகளையும் வெளியிடவில்லை. அதேபோன்று இணையத்தள செய்தியைப் பற்றி பொருட்படுத்தவும் இல்லை.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாடு பல விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கணிக்கப்படுகின்றது. இலங்கை, சிரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதில் ஆராயப்படவுள்ளன.

அதில் இலங்கை அரசாங்கத்துக்கெதிரான தீர்மானமொன்றும் நிறைவேற்றப்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. அதனால் இலங்கை அரசின் முழுக் கவனமும் தற்போது அதன் செயற்பாடுகளிலேயே பதிந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாகக் களமிறங்கியுள்ளார். ஆசிய ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேரில் சென்று தமது நாட்டுக்கு ஆதரவு தேடிவருகின்றார்.

அதேநேரத்தில் அவர் உள்நாட்டில் தமிழர்களின் நலன்களில் கூடிய‘அக்கறை‘ காட்டி வருகின்றார். தெல்லிப்பழைக்குச் சென்று புதிய புற்றுநோய் மருத்துவ விடுதியைத் திறந்து வைத்தார்.

காணாமற்போனோர் தொடர்பாக ஆணைக்குழுவொன்றை நிறுவியுள்ளார். அக்குழு கிளிநொச்சிக்குச் சென்று விசாரணை நடத்தியது.

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உதவிடும் திட்டமொன்றையும் அரசு வட மாகாணத்தில் நடத்திக் காட்டியுள்ளது. அரசு ஊடகங்களில் இவை பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. உலகை ஏமாற்ற முடியுமா?

வெளிநாட்டு ஊடகங்களிலும் அந்தச் செய்திகள் வெளியாகின. ஆனாலும் அவை வெளிநாடுகளின் கவனத்தைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.

ஏனெனில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் அறிக்கை அறிக்கைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதில் பிரித்தானியாவின் அறிக்கை சற்று காட்டமாகவே அமைந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல்

, உடனடி நடவடிக்கை எடுத்தல், குற்றவாளிகள் இனங்கண்டு தண்டிக்கப்படுதல் போன்ற நிலைப்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட பரிந்துரைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட மனித உரிமை, ஜனநாயகம் என்று தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுநலவாய அமைப்பின் மாநாடு இலங்கையில் நடைபெற்றபோதும் அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சனல்-4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன், அச்சந்தர்ப்பத்தில் பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க, நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பககும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அது குற்றம் சுமத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு தமிழின அழிப்பு என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இன அழிப்பில் எழுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான சாட்சியங்கள் தம்மிடம் உண்டு என்றும் அங்கு குறிப்பிடப்பட்டது. இதன்போது அரசியல்வாதிகள், மனித உரிமை அமைப்பினர், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் சமுகமளித்திருந்தனர்.

அதேநேரத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவுக்கென சட்டநிபுணரான சகிலா அனிமோட்டோ என்பவரை அமெரிக்கா நியமித்துள்ளது. ஜனாதிபதி ஒபாமாவின் நேரடிப் பணிப்பின்படி இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவர் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலுள்ள நாடுகளுடன் இதுபற்றி தற்போது ஆலோசித்து வருகிறார். இலங்கை அரசை கட்டுப்படுத்தும் ஒரு தீர்மானமாக அமெரிக்கத் தீர்மானம் அமைய வேண்டும் என்பதில் கூடிய அக்கறை காட்டப்படுவதாக ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்முடிந்ததின் பின் பிளவுபட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அனைத்தும் இவ்விடயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்துள்ளன. உலகத் தமிழர்களின் முழுப்பலத்துடன் இலங்கை அரசுக்கு எதிரான ஜனநாயகப்போரை அவை ஆரம்பித்துள்ளன.

பெரும் அவலத்தை சந்தித்த தாயகத் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கக் கோரி சர்வதேசத்தை நோக்கி அவை குரல் எழுப்புகின்றன. போர்முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை சர்வதேசம் இலங்கை அரசுக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் ஜனநாயத்தின் மீது தமிழ் மக்கள் தொடர்ந்தும் நம்புக்கை வைக்கவேண்டுமானால் அது இம்முறை நடைபெறும் பேரவை கூட்டத்தொடர்நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது. இதனை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சகல நாடுகளுக்கும் அறிவித்துள்ளன.

ஏற்கனவே ஐ.நா. பொதுச்செயலர்போரின் போது நாம் தவறிழைத்துவிட்டோம் எனத் தெரிவித்து விட்டார். எனவே, அந்தத் தவறினால் பாதிக்கப்பட்ட தாயகத் தமிழ் மக்களுக்கு பரிகாரம் காண ஐ.நா. நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கையாகும்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து கனடா வாழ் புலம்பெயர்தமிழ் மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கவனயிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள். அமெரிக்கா, இந்தியா,பிரித்தானியா தூதுவராலயங்களுக்கு எதிரில் இப்போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

கனடா மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை மார்ச் 9ம் திகதி நடாத்துகின்றது. இந்தப் பேரணியில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.

புலம்பெயர்தமிழ் மக்கள் நியாயம் கோரி சர்வதேசத்திற்கு வழங்கும் இறுதிச்சந்தர்ப்பம் இது என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு ஐ.நா. மனித உரிமை பேரவை மகாநாட்டை தமிழர்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஜெனிவா ஐ.நா. பணிமனைக்கு எதிரே மார்ச் மாதம் 10ம் திகதி மாபெரும் தமிழர்களின் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இப்பேரணி இடம்பெறுவதாக துண்டுப்பிரசுரம் மூலம் உலகத் தமிழர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நாடுகளிலிருந்து தொடரூந்துகளை வாடகைக்கு அமர்த்தி ஜெனிவா நோக்கிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் புலம்பெயர்அமைப்புகள் அதில் குறிப்பிட்டுள்ளன.

ஒரு பலம் வாய்ந்த சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழர்கள் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும் என தேசியத்தலைவர் குறிப்பிட்ட வரிகளும் இந்தத் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புலம்பெயர்தமிழ் ஊடகங்களில் புலம்பெயர் தமிழ் மக்களும் இது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தினமும் விவாதிக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை தேர்வாளர்கள், கணனித் தொடர்பாளர்கள் எனப்பலரும் இவற்றில் பங்குபற்றுகிறார்கள்.

புலம்பெயர்தமிழர்கள் ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்குபற்றுவது எப்படி என்பது குறித்து அவர்கள் விபரமாகத் தெரிவிக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் நாடுகளிலுள்ள அரசாங்கங்களை தமிழுக்கு நீதிகிடைக்க ஆதரவு கோருவது எப்படி என்பது குறித்தும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் தொலைக்காட்சி தமிழ் வானொலிகள் மூலம் மக்களின் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி. அவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துவருகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இலகு வழிமுறைகளையும் இதன்போது குறிப்பிடப்படுகின்றன.

எனவே, இம்முறை நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவை மகாநாட்டில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் யோசனையும் முன்வைக்கப்படலாம். போர்க்குற்ற விசாரணையுடன், இந்த யோசனையும் ஒரே நேரத்தில் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படலாம்.

சர்வதேச கண்காணிப்பு இரு விடயங்களும் ஒரே நேரத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை மகாநாட்டில் கொண்டுவரப்படுமா?

வீ.ஆர்.வரதராஜா