லீனா மணிமேகலை:எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது

ஈழப்போரை தடுத்து நிறுத்தக்கோரி டெல்லியில் பிப்ரவரி 2009ல் ஈழத்தமிழர் தோழமைக்குரல் என்ற அடையாளத்துடன் நடத்தப்பட்ட போராட்டம் எந்த அரசியல் கட்சிப் பின்புலமும் இல்லாமல் உணர்வெழுச்சியின் அடிப்டையில் இணைந்த படைப்பாளிகள், மாணவர்கள்,திருநங்கைகள், மீனவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை போராளிகள் ஒருங்கிணைந்து நடத்தியது.leena

அதனால்தான் “உணர்வெழுச்சியில் கொதித்திருந்த போராளிக் குழுவினர் சென்னையில்ரயில் ஏறியதிலிருந்து டில்லியிலிருந்து திரும்பும் வரை தங்கள் போராட்ட உடைகளையோ,முழக்கங்களையோ, தட்டிகளையோ எதோ ஒரு பெரும் சக்தியால் உந்தப்பட்டது போல, அகற்றாமலேஇருந்தனர்.”அதே ஈழத் தமிழர் தோழமை அமைப்பினர்தான் ”டில்லியிலிருந்து திரும்பியும்தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வெவ்வேறு போராட்ட வடிவங்களில் பங்கு கொண்டும், கைதாகியும்,சிறை சென்றும் தங்கள் உணர்வுகளையும், எதிர்ப்பையும் காட்டியபடி இருந்தார்கள்”.

நாங்கள் எல்லோரும் உணர்வெழுச்சியும் மனத்துயரும் கொண்டு இதில் ஈடுபட்டிருந்தபோது இவை அனைத்தையும் முன்திட்டத்துடன் லீனா மணிமேகலை என்ற ஒருவர் தன் படத்தின் 30 நொடிக் காட்சியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதில் உள்ளது வன்முறை, அவமதிப்பு என்பதைச் சுட்டிக் காட்டினால் “ஈழத்தமிழர்தோழமைக் குரல் காட்சிகள் உட்பட எல்லாமும் நான் யூ-ட்யூபில் இருந்து டவுன்லோட் செய்தவையே!ஓபன் சோர்ஸ் காலத்தில், இதையெல்லாம் விளக்கமாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய” தேவை இல்லை எனத் திமிர்த்தனத்துடன் பதில் அளிக்கிறார்.

எங்களையெல்லாம் வெறும் செம்மறியாட்டு மந்தைகள் என நினைத்துக்கொண்டு இவர் செயல்பட்டதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன். அதற்கு அவர் “தான் அழைத்துச் சென்ற செம்மறிஆடுகள் போல” எங்களை நாங்களே சித்திரிப்பதாச் சொல்கிறார். இதுபற்றி தன்னைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை, அதில் உள்ளது “படைப்பாளிகளின் வன்மம்” என்கிறார், அதில் எங்கள் அறியாமை வெளிப்படுவதாகவும் அது வெட்கக்கேடானது என்றும் சொல்கிறார். தமிழின் அரசியல் சார்ந்த படைப்பாளிகளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படியும் பயன்படுத்தலாம் “திரைப்படத்துறையில் உள்ள எங்களை உங்களால் என்ன செய்ய முடியும்?”என்ற மதம் பிடித்த குரல்தான் இது.

இதனை முன் நின்று கேட்கும் படைப்பாளியான ஒரு களப்போராளியை “மனநோய் மருத்துவரிடம் அழைத்து” செல்ல வேண்டும் என்கிறார். இதுதான் இவரது உண்மையான குணம், இதில் உள்ளது ஆதிக்கச் சாதித்திமிர், வர்க்கத்திமிர் மட்டுமல்ல,விளிம்புநிலை அரசியல் சார்ந்தவர்களை பழிதீர்க்கும் அதிகாரத்திமிரும் கூட.

இது போன்ற ஆதிக்கக் கைக்கூலிகள் தங்களையும் கலைஞர்கள் என்று கூறிக்கொண்டு செய்து கொண்டிருக்கும் சதி வேலைகளை அனைவரும் புரிந்து கொள்ள சாட்சியாக உள்ளதுதான் டாடா பழங்குடியினரையும் பெண்களையும் ஒளிமயமான வாழ்வை நோக்கிக் கொண்டு செல்வதாகச் சொல்லி பிரச்சாரம் செய்யும் “தேஜஸ்வினி” 3 நிமிட விளம்பரம். இதில் டாடா என்ற முதலாளிக் குழுமம் தான் சொல்ல விரும்பியதைச் சொல்வது அல்ல பிரச்சினை,பெண்களின் குரலை ஒலிக்கிறேன் என்று கூறிக் கொண்டு ஒருவர் இதனைச் செய்து தருவதுதான் பச்சை ஏமாற்றுத் தனம். தனக்கான இந்த பிம்பத்தை பெண்கள் பற்றிய படம் எடுப்பதன் மூலம் உருவாக்கிக் கொண்டு அதனை விற்பதுதான் திட்டமிட்ட சதிவேலை.

செங்கடல் படத்திற்காக மீனவச் சமூகத்தைப் பயன்படுத்திக் கொண்டதுடன் அதில் அவர்களின் வாழ்வை இழிவாகப் பதிவு செய்து, ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சியை இணைத்து அது யுடியூபில் கிடைத்தது என்பது எல்லாம் இந்த டாட்டாவின் “தேஜஸ்வினி”கலிங்காநகர் விளம்பரப் படத்தின் மூலம் திட்டமிட்ட சுரண்டலாக, ஏமாற்று வேலைகளாகமாறுகின்றன. தான் செய்வது விளம்பரம் செய்து ஊதியம் பெறுவதுதான் என்பது போன்ற சித்தரிப்பை இவர் உருவாக்க நினைக்கிறார். தற்பொழுது இந்திய கடல்சார் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வும் வாழ்வாதாரம் அழிக்கப்படும் சூழலில் இது ஒரு எரியும் பிரச்சினை.

இதனை எதிர்த்து உயிர்களைப் பணயம் வைத்து மக்கள் போராடி வருகின்றனர். வங்காளத்தின் சிங்கூர்,நந்திகிராம் மக்கள் டாடா தொழிற்சாலை தங்கள் மண்ணைப் பறித்துக் கொண்டதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர். இந்தச் சூழலில்தான் இவர் செய்தது பச்சைத் துரோகம் என்றும் பழங்குடிப் பெண்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வைப்பது கேடுகெட்ட தந்திரம் என்றும் சொல்கிறோம். அதே கோபத்துடன்தான் ஈழத்தமிழர் தோழமைக் குரல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஆட்டு மந்தைகள் என நினைத்துக் கொண்டு தன் படத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதையும் கண்டிக்கிறோம்.அதனால்தான் “உன் திரைப்படத்தை அங்கு திரையிட்டாயா? அந்த மக்களுக்கு காண்பித்தாயா? என்றகேள்விகள்” இவர் திரித்துக் காட்டுவதுபோல சிறுபிள்ளைத் தனமானவை அல்ல.

“நானும் கலைஞர்தான், கவிஞர்தான்” என்று சொல்லிக் கொண்டு எங்கள் மக்களையும் அவர்களின் போராட்டங்களையும் இழிவு படுத்துவதை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான கண்டனக்குரல். கானக உயிர்களைப் படம் பிடிப்பது போல செங்கடல் “ஆவண மற்றும் திரைப்படத்துக்கு” மீனவ மக்களைப் பயன்படுத்திவிட்டு நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் காட்ட வேண்டுமா எனக் கேட்கும் திமிர்தனத்தை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான எதிப்புக் குரல்.

இதுபோல் ஈழத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களை வைத்து எடுக்கப்பட்ட”வெள்ளைவேன் கதைகள்” ஆவணப்படத்தில் பேட்டியளித்தவர்களின் முகங்களை மறைக்காமல் திரையிட்டதற்கும் அவர்களின் அனுமதி பெறாமலேயே இலங்கைக்கு வெளியே திரையிடப்பட்டதற்கு புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.கனடாவில் புலம்பெயர்ந்த பெண் படைப்பாளிகள் வெள்ளைவேன் திரையிடலுக்கான ஸ்பான்ஸரையும் TVI தொலைக்காட்சியின் லீனாவின் நேர்க்காணலின் நேரடி ஒளிப்பரப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதற்குப் பழித்தீர்க்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 3.4ல் நடைப்பெற்ற பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த மற்றும் ஈழப்படைப்பாளிகள் செயல்பாட்டாளர்களை குறிவைத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் லீனா திட்டமிட்ட வன்முறைகளை நிகழ்த்தினார். இந்த மரண வியாபாரி எங்களைப் பார்த்து நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு என்கிறார். இன்று நீதி கேட்க குரலற்ற ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் தன்மீது வழக்குத் தொடுக்க இயலாத நிலையில் உள்ளனர் என்ற ஏளனம் இந்த விளம்பரப்பட முதலாளியிடம் பொங்கி வழிகிறது.

பூகோள, அரசியல், பொருளாதார, இன, மொழி அடிப்படையில் அனாதையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை வைத்து ஆவணப்படம் எடுத்து விற்ற ரத்தப் பணத்தில் கொழிக்கும் லீனா மணிமேகலை அந்த மக்களைப்பொருட்படுத்தி படத்தைப் போட்டு காண்பித்து அனுமதி பெற வேண்டிய தேவை தனக்கு இல்லை என ஆணவத்துடன் கூவுகிறார். எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் ஆவணப்படுத்தலின் போது பங்களிப்பவர்களின் அனுமதி பெற வேண்டும் என்பது அடிப்படை அறம் மற்றும் நியதி. அவை திரிக்கப்பட்டு பயன்படுத்துவது அதைவிட கடுமையான மனித உரிமை மீறல். உலக கார்ப்ரேட் முதலாளிகளின் கைகூலிகளும் உளவு நிறுவனங்களும் மட்டும்தான் இந்த விதியை மீறிச் செயல்பட்டு வருகின்றன.

இனி இது போன்ற அரசியல் அதிகாரச் சதித்திட்டம் கொண்ட கைக்கூலிகள் கேமராவுடன் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம்அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியுள்ளது.

பின் வரும் கண்டனத்தில் உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்லீனா மணிமேகலை ஈழத்தமிழர் தோழமைக் குரல், ஈழத்தமிழர், மீனவச் சமூகம், மற்றும் பழங்குடியினரின் போராட்டங்களை அவமதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதனை வெளிப்படுத்தி அவரது உண்மை உருவத்தையும் ஆதிக்க அரசியல் குணத்தையும் புலப்படுத்தியதற்காக பெண்ணுரிமைப் போராட்டத்தை தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு படைப்பாளியை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் எனத் திமிர்த்தனத்துடன் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாலதி மைத்ரி

Advertisements