ஈழப்போராட்டத்தை நசுக்குவதற்கான பயிற்சிகளை 1980ம் ஆண்டுகளில் பிரித்தானியா சிறிலங்காவிற்கு வழங்கியது?

பிரித்தானிய அரசாங்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவண அறிக்கை ஒன்றில் 1980களில் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு பிரித்தானியாவின் முன்னாள் சிறப்பு விமானச் சேவை அதிகாரிகள் பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை பிரித்தானிய அரசாங்கம் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.WAR_CRIMINALS

1984 யூனில், சீக்கியர்களின் புனித வணக்கத் தலமான அமிரிஸ்ரார் பொற்கோவில் மீதான தாக்குதலின் போது இந்தியப் படைகளுக்கு பிரித்தானியாவின் சிறப்பு விமானச் சேவை அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்பட்டதை, இந்த ஆவணம் தெரிவிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியாவில் சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியப் படைகளால் பொற்கோவில் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியா தனது ஆதரவை வழங்கியிருந்ததுடன், முன்னாள் விமானச் சேவை அதிகாரிகள் இதில் ஈடுபட்டமை தொடர்பில் அரசாங்கம் மிகவும் மகிழ்வடைந்ததற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இது பிரித்தானியா மீதான இராஜதந்திர முரண்பாட்டை அதிகரிக்குச் செய்யும் எனக் கூறப்படுகிறது.

சிறிலங்காவில் பிரித்தானிய விமானப் படை அதிகாரிகளின் தொடர்புடன் பிரித்தானிய நிறுவனம் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்குமாறு 1984 செப்ரெம்பரில் அப்போதைய பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜோபெரி கோவேயின் தனிப்பட்ட செயலர் பீற்றர் றிக்கற்ஸ், அப்போதைய பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் தனிப்பட்ட செயலர் டேவிட் பார்க்கிளேக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1984 காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்ப் புலிகள் மற்றும் வடக்கு கிழக்கில் செயற்பட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

“தீவிரவாதக் குழுக்களுக்கான எதிரான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதில் பிரித்தானியாவின் பிறிதொரு நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பிலிருந்தது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சில முன்னாள் சிறப்பு விமானச் சேவை அதிகாரிகள் உட்பட இதன் பணியாளர்கள் இதனை மறுத்திருந்தனர். ஆனால்; இந்திய அரசாங்கம் குறித்த பிரித்தானிய நிறுவனம் இதில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக எமக்கு உறுதியாகத் தெரிவித்திருந்தது” என றிக்கற்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக இப்புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது முற்றிலும் ஒரு வர்த்தக நோக்கத்தைக் கொண்டது என்பதை எம்மால் அறியமுடிந்தது. இதில் பிரித்தானிய அரசாங்கம் எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை” என றிக்கற்சின் செய்திக் குறிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பிரித்தானிய நிறுவனம் தொடர்ந்தும் சிறிலங்காப் படைகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதில் ஈடுபட்டது. சீக்கியர்களின் புனித பொற்கோவில் மீதான தாக்குதலில் பிரித்தானியா எவ்வாறான பங்களிப்பை வழங்கியிருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்காக டேவிட் கமறூனால் வழங்கப்பட்ட கட்டளையின் அடிப்படையில் பிரித்தானிய அமைச்சரவையின் செயலர் சேர் ஜெரேமி கேவுட்டால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு பகுதியாக இப்புதிய ஆவணமும் அமைந்திருக்கும்.

யூன் 1984ல், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்ரிஸ்ரார் பொற்கோவில் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது படைகளை அனுப்பிய போது இதில் 400 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆறு நாட்கள் வரை நீடித்த இத்தாக்குதல் ‘நீல நட்சத்திரம்’ (blue star) என அழைக்கப்படுகிறது.

பொற்கோவில் படுகொலை முடிந்ததன் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்திற்கான இராணுவ ஆலோசனைகளை நிறுத்துமாறு இந்திரா காந்தி, பிரித்தானியப் பிரதமர் தச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக சிறிலங்காவுடன் தொடர்புபட்ட பிறிதொரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறிலங்கா அரசாங்கத்திற்கு நீங்கள் இராணுவ ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தனா அனைத்துக் கட்சி மாநாட்டில் மிகவும் உறுதியான கருத்துக்களைப் பெற்று இதன் மூலம் சாதகமான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நாம் நம்புகிறோம். இதனால் சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் இராணுவ ஆலோசனை நிறுத்தப்பட வேண்டும். எதிர்நோக்க வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய ஒரு அரசியல் பிரச்சினையை வெற்றி கொள்வதற்கு இராணுவ உதவியும், ஆயுதக் குழுக்களை எதிர்ப்பதற்கான உதவியும் போதுமானதல்ல” என பிரதமர் தச்சருக்கான தனது செய்தியில், இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டதாக ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1984ல் சிறிலங்கா இராணுவத்திற்கு பிரித்தானியாவின் முன்னாள் சிறப்பு விமானச் சேவை அதிகாரிகள் பயிற்சி வழங்கியிருந்ததை இந்திய அரசாங்கத்தின் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

பொற்கோவில் மீதான 1984 தாக்குதலுக்குப் பின்னர் இந்திரா காந்திக்கு, தச்சர் பிரித்தானியாவின் முழு ஆதரவையும் வழங்கியிருந்ததாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காலத்தில் இந்தியாவுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்ததது என்பதை வேறு ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

“1983ல் பிரித்தானியாவானது இந்தியாவுக்கு 800 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. 1975லிருந்து 1.25பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான பாதுகாப்பு ஆயுதங்களை பிரித்தானியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது” என இந்த ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற பொற்கோவில் தாக்குதலில் பிரித்தானியா எவ்வாறான பங்களிப்பை வழங்கியிருந்தது என்பதற்கான சாட்சியங்களை விசாரணை செய்வதற்காக கமறூன் புதனன்று ஈடுபட்டிருந்தார்.

அம்றிற்சார் மீதான தாக்குதலுக்கு இந்தியா 65மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வதில் பிரித்தானியா தனது பங்கை வழங்கியிருக்கலாம் என தொழிற்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ரொம் வற்சன் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : The Guardian-Britain allowed ex-SAS officers to train Sri Lankans as Tamil Tigers rebelled

மொழியாக்கம் : நித்தியபாரதி

Advertisements