எவரையும் தண்டிக்க விரும்பாத மூன்றாவது ஜெனிவாத் தீர்மானம்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்த பின்னரும் அதனைப் புறந்தள்ளி, போர்க்குற்ற விசாரணை என்று நோகாது அடிக்கின்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற மேற்குலகம் விரும்புகின்றது.Stephen Rapp was briefed on structural genocide at Bishop's House in Jaffna

போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாயினும், தமிழரின் எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து வெளிவருவது நிற்கவில்லை.

மன்னாரில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் தோண்டத் தோண்ட மனித எச்சங்களே வருகின்றன.

இதுவரை நாற்பதை எட்டிவிட்ட எண்ணிக்கையில், ஆறு வயதுப் பெண்பிள்ளையின் எலும்புக்கூடும் ஒன்று எனத் தெரியவந்துள்ளது.

சமகாலத்தில், வடக்கை மையப்படுத்தி மீண்டும் பல நகர்வுகள் ஆரம்பித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிமன்றங்களுக்குப் புதிய கட்டடங்கள் ஒரே நாளில் திறக்கப்பட்டுள்ளன.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும், பிரதம நீதியரசர் மொஹான் பீரிசும் பங்கேற்ற இந்த நிகழ்வுக்கு மக்களால் தெரிவான வட மாகாண முதலமைச்சருக்கு அழைப்பில்லை. ‘அரசியல்வாதிகளுக்கு இங்கு இடமில்லை‘என்று நீதியமைச்சு இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது.

ரவூப் ஹக்கீம் ஓர் அரசியல்வாதி. மொஹான் பீரிஸ் அலரி மாளிகையின் பின்கதவால் பிரதம நீதியரசரானவர். இவைகளை நீதியமைச்சு ஏனோ மறந்துவிட்டது.

குடாநாட்டுக்கு திடுதிப்பென விஜயம் செய்த கோதபாய ராஜபக்ச சில இராணுவ நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் போர் வெற்றிக்கான இராணுவ நினைவுக்கல் நாட்டினார்.அதனையடுத்து, ‘சிவப்புப் பறவைகள்‘என்ற புதிய இராணுவ அலகை ஆரம்பித்து வைத்தார். மூன்று மொழிகளிலும் பேசக்கூடிய இராணுவத்தினர் சைக்கிளில் சவாரி செய்து சுற்றித் திரியும் படையணி இது.

அடுத்து, யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பாதையருகே உள்ள மிருசுவில் என்ற இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52வது படைத் தலைமையகத்தைத் திறந்து வைத்தார்.

“வடக்கில் இராணுவம் குறைக்கப்பட்டு வருகின்றது. எஞ்சியிருக்கும் இராணுவம் குடிமக்கள் கடமைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளது“ என்று அரசாங்கம் கூறிவரும் வேளையில், அங்கு படையினரைப் பலப்படுத்தும் முனைப்பு வேகமடைவதை கோதபாய பங்குபற்றிய மூன்று நிகழ்வுகளும் சுட்டி நிற்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நிகழ்ச்சிகள் வடக்கே முன்னெடுக்கப்படுகையில், அமெரிக்காவின் இராஜதந்திரியொருவர் ‘தரவு சேகரிப்;பு‘விஜயத்தை மேற்கொண்டது முக்கியமானது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பூகோள குற்றவியல் பிரிவில் போர்க்குற்ற விசாரணையின் விசேட அதிகாரியாக இருப்பவர் ஸ்டீபன் ராப்.

இந்த மாதம் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு சென்ற இவர், முதலாவதாக கோதபாய ராஜபக்சவைச் சந்தித்தார்.

இச்சந்திப்பு அவ்வளவு சுமுகமாக இடம்பெறவில்லை.

முப்பது வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின், புனரமைப்பு நல்லிணக்க வேலைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகையில், அமெரிக்கா சில மேற்கு நாடுகளையும் இணைத்துக்கொண்டு இலங்கைமீது போர்க்குற்றம் சாட்டுவதாக ஸ்டீபன் ராப்பிடம் கோதபாய நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அமெரிக்க வெளியுறவுப் பேச்சாளர் ஊடகங்களுக்கு ஒரு கருத்தை வெளியிட்டார்.

போரின் இறுதிக்கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறுவதிலும், நல்லிணக்கம் எட்டுவதிலும் இலங்கை போதியளவு முன்னேற்றம் காட்டாதிருப்பது கவலை தருவதாக இந்த அறிக்கை தெரிவித்தது.

கோதபாயவுக்கு பதிலிறுக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்ததைப் பார்க்க முடியும்.

ஆனாலும், அமெரிக்க அறிக்கை வழக்கம்போல கவலையை மட்டுமே தெரிவித்தது பெரும் கவலைக்குரியது.

கொழும்பில் முதல் நாள் இரவு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகிய இருவரையும் ஸ்டீபன் ராப் சந்தித்து உரையாடினார்.

மார்ச் மாத ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக ஸ்டீபன் ராப்பை மேற்கோள் காட்டி சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

2012, 2013ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களின் தொடராக இது அமைகின்றது.

ஸ்டீபன் ராப் திருமலைக்குச் சென்று தேக்கநிலையிலுள்ள ஐந்து மாணவர் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் தொண்டர் நிறுவன பணியாளர்கள் கொலைகள் தொடர்பாக பல தகவல்களைச் சேகரித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை செயற்படுத்த வேண்டும் என்பதே முதலிரு தீர்மானங்களினதும் பிரதான உள்ளடக்கம்.

இதுதொடர்பாக இலங்கையின் பதில் அறிக்கைகளில், “நடவடிக்கை தொடருகின்றது… தொடருகின்றது“ (on going… on going‚) என்று பல தடவைகள் கூறப்பட்டுள்ளதை இலங்கை அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டிய ஸ்டீபன் ராப், திரும்பவும்“தொடருகின்றது… தொடருகின்றது“ என்றால் அதன் அர்த்தம் என்ன என்று வினவியபோது எந்தவொரு அதிகாரியும் அதற்குப் பதிலளிக்க முடியாது மௌனித்திருந்தனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மைக்கல் சீசனுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஸ்டீபன் ராப் அரசாங்க தரப்பு, தமிழர் தரப்பு என்பவற்றுடனான சந்திப்புகளையடுத்து யாழ். ஆயர்,மன்னார் ஆயர் உட்பட்ட தமிழ்க் குடிசார் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பினை நடத்தினார்.

போர்க்கால புள்ளிவிபரங்களை ஆதாரபூர்வமாக முன்வைத்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை இலங்கைப் படையினர் விமானக் குண்டுகள் (Air Bombs),கொத்தணிக் குண்டுகள் (ClusterBombs), இரசாயனக் குண்டுகள் (Chemical Bombs‚) ஆகியவைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றதாகத் தெரிவித்தார்.

முக்கியமாக, போர் தவிர்ப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய இடத்தில் வகைதொகையின்றி மக்கள் கொல்லப்பட்டதை ஆயர் சுட்டிக்காட்டினார்.

மறுநாள் அமெரிக்க இராஜதந்திரிகள் இருவரும் போர் தவிர்ப்பு வலயமான புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்து பல விடயங்களை நேரில் பார்வையிட்டனர்.

இங்கு ஐ.நா. அலுவலகம் இயங்கிய இடம் , வைத்தியசாலை, பாடசாலை என்பவை அமைந்திருந்த இடம், புனித அந்தோனியார் திடல் என்பவை இவற்றுள் முக்கியமானவை.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது‘டுவிட்டர்‘சமூக வலைத்தளத்தில் சில ஒளிப்படங்களுடன் செய்தியொன்றை வெளியிட்டது.

“2009 ஜனவரி மாதத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலால் கொல்லப்பட்ட புனித அந்தோனியார் திடலை அமெரிக்க இராஜதந்திரிகள் பார்வையிட்டனர்“ என்று இங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியானது இலங்கையை ஆத்திரமடையச் செய்திருந்ததுடன், எப்போதும்போல இது பொய்யான செய்தியென்று அறிவிக்க வைத்தது.

ஸ்டீபன் ராப் அவர்களின் யாழ்ப்பாண விஜயமும் சந்திப்புகளும் சில கேள்விகளை தமிழ்க் குடிசார் பிரதிநிதிகளிடம் எழுப்பியுள்ளதைக் கவனிக்கலாம்.

1. ஆகக் கடுமையான தீர்மானத்துக்கு (Strong Resolution) உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவது கடினம். முக்கியமாக பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட மாட்டார்கள்.

2. எனவே, மன்னரிலும் பார்க்க சிறிது கடுந்தொனி தீர்மானமே ( slightly stronger resolution‚) சாத்தியமானது.

3. அடிப்படையில், இறுதி மாதங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்கவே தீர்மானம் தேவைப்படுகின்றது.

4. சர்வதேச சுயாதீன விசாரணையானது எந்த ஒருவரையும் தண்டிப்பதற்கானதாக இருக்கக்கூடாது

(not to punish any individual). ஆனால், இலங்கை அரசை அதன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி சுமுகமான சூழலுக்குள் உருவாக்க ஒரு தீர்மானம் தேவைப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தமிழ்க் குடிசார் பிரதிநிதிகளுடன் உரையாடுகையில் ஸ்டீபன் ராப்‘புரியும் வகையில்‘தெரிவித்த சில கருத்துகள் இவை.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்த பின்னரும் அதனைப் புறந்தள்ளி, போர்க்குற்ற விசாரணை என்று நோகாது அடிக்கின்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற மேற்குலகம் விரும்புகின்றது.

எவரையும் தண்டிக்க விரும்பாத சர்வதேச சுயாதீன விசாரணை என்றால் அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இனப்படுகொலையின் பங்காளிகள் ஒருபோதும் தங்களுக்குள் ஒருவரை தண்டிக்க விரும்பமாட்டார்கள் என்பதை ஜெனிவாத் தீர்மானம் வெளிக்கொணரப்போவதை நன்றாக உணர முடிகின்றது.

இதற்குப் பின்னர் தமிழர்கள் செய்யப்போவது என்ன?

பனங்காட்டான்