சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை அவசியம் – கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

சிறிலங்காத் தீவில் 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு தமிழ் கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் இமானுவேல் ஆகிய இரு தமிழ் ஆயர்களும் ஜனவரி ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பூகோள குற்றவியல் நீதிக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க் குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஜே. ராப்புடன் (Stephen J Rapp) மேற்கொண்ட சந்திப்பிலேயே சுயாதீனப் போர் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.Stephen Rapp was briefed on structural genocide at Bishop's House in Jaffna

“போரின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம்” என இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த கத்தோலிக்க ஆயர் இமானுவேல் கத்தோலிக்க செய்திகள் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்வதுடன், சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணைகளின் ஊடாக உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனவரி 12 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மே 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் இறுதியில் 40,000 இற்கும் மேற்பட்ட சிறுபான்மைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தமிழ் சிறுபான்மையினருக்கு தனிநாடு ஒன்றை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு 1983களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறைப் போராட்டத்தை மேற்கொண்டனர். சிறிலங்காவில் வாழும் 20 மில்லியன் மக்களில் 18 சதவீதமானவர்கள் தமிழர்களாவர். மொத்த சனத்தொகையில் 70 சதவீதமானவர்கள் சிங்கள மொழி பேசுகின்ற பௌத்தர்களாவர்.

“மக்களால் கூறப்படுகின்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளோம்” என ஆயர் இமானுவேல் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் றப்பிடம் இரண்டு தமிழ் ஆயர்களும் போர்க் குற்றங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து இவ்விரு கத்தோலிக்க ஆயர்களும் கைதுசெய்யப்பட வேண்டும் என சிங்கள தேசியக் குழுக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், தொடர்ந்தும் கத்தோலிக்க ஆயர்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதே.

“ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பல்வேறு மீறல்களை எதிர்த்து நாங்கள் எமது கருத்துக்களைக் கூறும்போது இது தொடர்பில் மிக மோசமான பிரதிபலிப்புக்கள் காண்பிக்கப்படுகின்றன” என கத்தோலிக்க ஆயர் இமானுவேல், கத்தோலிக்க செய்திகள் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

“எமது நிலைப்பாடுகளை அறிய வேண்டிய ஒருவராக திரு.ராப் உள்ளமையால் நாங்கள் அவரிடம் எமது நிலை தொடர்பாக விளக்கியிருந்தோம்” என கத்தோலிக்க ஆயர் ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காப் படைகளால் வைத்தியசாலைகள் கூட இலக்கு வைத்துத் தாக்கப்பட்டதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் தஞ்சம் புகுந்திருந்த இடங்களைக் குறிவைத்து கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதாகவும் இவை சிறிலங்கா இராணுவத்தின் போர்த் தந்திரோபாயமாகக் காணப்பட்டதாகவும், அமெரிக்கத் தூதர் ராப்புடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஆயர் ஜோசப் இவ்வாறு தெரிவித்தார்.

“பாதுகாப்பு வலயங்களில் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் பாதுகாப்பு வலயங்களில் இருந்தனர் என்பதைக் காரணங்காட்டி அங்கிருந்த பெருமளவான மக்களை நீங்கள் படுகொலை செய்திருக்கக் கூடாது. பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, நீங்கள் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது சரியானது என நியாயப்படுத்த முடியாது” என ஆயர் ஜோசப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களில் ‘திட்டமிட்ட இனப்படுகொலையானது’ தொடரப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களின் கீழ் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன” என ஆயர் ஜோசப் குற்றம் சுமத்தியுள்ளார்.

“உண்மையைக் கண்டறியும் நோக்குடன் அனைத்துலக சமூகம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் உள்ள எவரையும் பழிதீர்ப்பதை நோக்காகக் கொண்டு நாங்கள் இதனை வலியுறுத்தவில்லை. இந்த நாட்டின் சிறந்த எதிர்காலத்தை நோக்காகக் கொண்டே நாங்கள் இதனை வலியுறுத்துகிறோம்” என ஆயர் ஜோசப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements