அமெரிக்காவின் அதிர்ச்சி வைத்தியம் தொடருமா?

போரின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை ஆதாரப்படுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் படங்கள் வெளியிடப்பட்டன. இதை ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகவும் குறிப்பிடலாம். அதிலும், முதல்முறையாக அமெரிக்கா ஒரு விடயத்தை தெளிவாகவே எடுத்துக் கூறியுள்ளது,

வடக்கு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவான பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற அனந்தி சசிதரனை இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் சந்தித்து, போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் பற்றிய சாட்சியங்களை திரட்டியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. உயிர்தப்பியோர், முன்னாள் போராளிகள், சாட்சிகளிடம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் தான் சென்.அன்ரனீஸ் மைதானத்தை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அடையாளப்படுத்தியுள்ளதாக அமெரிக்கத் தூதரக அதிகாரியும் கருத்து, வெளியிட்டுள்ளார். இதிலிருந்து ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.Sri Lanka pro-government political protest against USA

“அமெரிக்காவின் அதிர்ச்சி வைத்தியம் தொடருமா? ” என்ற,

தனது விரிவான ஆய்வில்,

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் தீவிரமான பனிப்போர் ஒன்றுக்கான கதவுகளை அகலத் திறந்து விட்டுள்ளது, இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பின் பயணம். கடந்த 6ம் திகதி ஆரம்பித்த அவரது பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்திருந்தாலும், அவரது பயணத்தினால் தொடங்கியுள்ள சர்ச்சைகள் இப்போதைக்கு ஓயப் போவதில்லை.

போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், கொழும்பு வந்தவுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட அரச தரப்பினரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிற தரப்பினரையும் சந்தித்து விட்டே யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கும் சிவில் சமூகத்தினரையும், வடக்கு மாகாண முதல்வர், ஆளுனர் போன்றோரையும் சந்தித்துப் பேசியிருந்தாலும், அவற்றுக்கெல்லாம் கொடுக்கப்படாத முக்கியத்துவம், உதயன் பணியகத்துக்கான பயணம், மாகாணசபை உறப்பினர் அனந்தி சசிதரனுடனான சந்திப்பு, புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதிக்கான பயணத்துக்கு அமெரிக்காவினால் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஸ்டீபன் ராப்பை நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி சிங்களத் தேசியவாத அமைப்புகளால் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்ட போது தான் இது தொடர்பான படங்களை அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டது.

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில், முதலில் உதயன் பணியகத்துக்குச் சென்று ஊடக சுதந்திம் குறித்து கலந்துரையாடிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது.

அதையடுத்து, காணாமற்போனோர் பிரச்சினை குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்த ஒளிப்படம் வெளியிடப்பட்டது.

அடுத்து புதுக்குடியிருப்பில் ஐ.நாவின் முன்னாள் வளாகத்தை ஸ்டீபன் ராப் பார்வையிடும் படம் இடம்பெற்றது.

அதையடுத்து, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட சென். அன்ரனீஸ் மைதானத்தில் ராப் நிற்கும் படம், வெளியிடப்பட்டது.

கடைசியாக, போர் தவிர்ப்பு வலயம் 2 இல் அமைந்திருந்த புதுமாத்தளன் பாடசாலை மற்றும் மருத்துவமனை என்பனவற்றை ஸ்டீபன் ராப் பார்வையிடும் படமும் வெளியிடப்பட்டது.Rapp3

ஸ்டீபன் ராப் இலங்கை வந்து, மூன்று நாட்கள் நடத்திய சந்திப்புகள் குறித்த படங்களையோ விபரங்களையோ அமெரிக்கத் தூதரகம் வெளியிடாத நிலையில், நான்காவது நாள் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் படங்கள் முக்கியத்துவம் பெற்றன.

சந்திப்புகளை விட சம்பவங்களுக்கே ஸ்டீபன் ராப்பின் பயணத்தின் முக்கிய நோக்கம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை ஆதாரப்படுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் படங்கள் வெளியிடப்பட்டன. இதை ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகவும் குறிப்பிடலாம். அதிலும், முதல்முறையாக அமெரிக்கா ஒரு விடயத்தை தெளிவாகவே எடுத்துக் கூறியுள்ளது,

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படையினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென். அன்ரனீஸ் மைதானத்தை அமெரிக்கத் தூதரகம் அடையாளப்படுத்தியும் இருந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்தியுள்ளது இதுவே முதல்முறை. இது பொதுமக்களை பெருமளவில் படையினர் கொன்று குவித்தனர் என்பதை நேரடியாகவே சுட்டிக்காட்டுகின்ற ஒன்றாகவும் அமைந்துள்ளது. இதனை அரசாங்கமும், சரி படைத்தரப்பும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று இராணுவத் தலைமையகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்காவிடம் விளக்கம் கோரப்போவதாக வெளிவிவகார அமைச்சும் பொங்கியெழுந்தது. ஆனால், தாம் இந்தக் கருத்தை அதிகாரபூர்வமாகவே பதிவு செய்ததாக அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவங்களையும், அதில் உயிர் தப்பிய சாட்சிகள், முன்னாள் போராளிகளின் சாட்சியங்களின் அடிப்படையில் தான் அந்த கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும், உயிர்தப்பிய பொதுமக்கள், நேரடிச்சாட்சிகளின் பதிவுகள் தம்மிடம் உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். எதற்காக நம்பகமான விசாரணை கோருகிறோம் என்பதை வெளிப்படுத்தவே இது என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்பகமான விசாரணை ஒன்று அவசியம் என்பதை விளக்குவதற்காக மட்டுமன்றி, அதுபற்றி ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதான எச்சரிக்கையை விடுக்கும் நோக்கிலும் தான் டுவிட்டரில் இந்தப் பதிவுகளை இட்டுள்ளது அமெரிக்கா. கடந்த வியாழக்கிழமை டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் படங்களும், அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பதிவே என்பது குறிப்பிடத்தக்கது.

பலமுறை தாக்குதலுக்குள்ளான உதயன், போரின் இறுதியில் சரணடைந்து காணாமற்போன தனது கணவனைத் தேடும் அனந்தி சசிதரன், மற்றும் இறுதிப் போர் நடந்த பகுதிகள் எல்லாமே, அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் தான் என்பது கவனிக்கத்தக்கது.

வடக்கு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவான பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற அனந்தி சசிதரனை இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் சந்தித்து, போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் பற்றிய சாட்சியங்களை திரட்டியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. உயிர்தப்பியோர், முன்னாள் போராளிகள், சாட்சிகளிடம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் தான் சென்.அன்ரனீஸ் மைதானத்தை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அடையாளப்படுத்தியுள்ளதாக அமெரிக்கத் தூதரக அதிகாரியும் கருத்து, வெளியிட்டுள்ளார். இதிலிருந்து ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.Rapp1

போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்குத் தேவையான ஆதாரங்களை அமெரிக்கா திரட்டி வைத்துள்ளது என்பதே அது. இவை மட்டுமன்றி, அமெரிக்காவிடம் மேலும் பல செய்மதிப்பட ஆதாரங்களும் இருப்பதாகவே நம்பப்படுகிறது.

இறுதிக்கட்ட போர் நடந்த பகுதிகளை அமெரிக்காவும் ஐ.நாவும் செய்மதிகளின் மூலம் படம்பிடித்திருந்தன.

அவற்றில் சில படங்கள், போர் தவிர்ப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை வெளிப்படுத்துவனவாக இருந்தன. அத்தகைய படங்கள் சில 2009ம் ஆண்டிலேயே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அவை தவிர மேலும் பல ஆதாரங்கள், அமெரிக்காவிடம் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. போரின் முடிவில் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர்கள், சனல்-4 போன்ற ஊடகங்கள் மட்டும் இறங்கவில்லை.அமெரிக்காவே தீவிரமாக இறங்கியிருந்தது. எனவே அதிகளவு ஆதாரங்கள் அமெரிக்கா வசமே இருக்க வேண்டும், இவற்றை வைத்துக் கொண்டே அமெரிக்கா அடுத்த கட்டப்பாய்ச்சலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ள விவகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அத்தகைய எந்த தாக்குதலையும் தாம் நடத்தவில்லை என்றே அரசாங்கம் கூறி வருகிறது. இந்த நிலையில் அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் மேலும் தீவிரமாகும் அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. அதன் முதற்கட்டம் தான், கொழும்பில் ஸ்டீபன் ராப்பிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம். அதற்கும் அரசாங்கத்தின் பின்னணி இருப்பதாகவே பலமான சந்தேகங்கள் உள்ளன. இதுபோன்ற போராட்டங்கள் அடுத்த மார்ச் மாதத்துக்கு இடையில் மேலும் தீவிரமடையலாம்.

அதேவேளை,

எதற்காக அமெரிக்கா இங்கு பொறுப்புக்கூறலில் அக்கறை காட்டுகிறது என்று புரியவேயில்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவரது கருத்தும் அமெரிக்கத் துதரகத்தின் முன்பாக போராட்டம் நடத்தியவர்களின் கருத்தும் ஒரே விதமாகவே உள்ளன.

ஆக,

அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை அரசாங்கமே தூண்டி விட்டு குளிர்காய முனைகிறது.

ஆனால்,

இத்தகைய போராட்டங்கள் மூலம் அமெரிக்காவின் நகர்வுகளை இடைநிறுத்தி விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கையிடம் இருந்து தெளிவானதொரு பதில் நடவடிக்கையை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அது நிறைவேறும் வரை அமெரிக்கா இன்னும் பல அதிர்ச்சி வைத்தியங்களை அரசாங்கத்துக்கு கொடுக்கலாம்.

சுபத்ரா

Advertisements