சிறிலங்காவால் முறைசாரா முறையில் முடித்து வைக்கப்பட்ட ஈழப்போரும் போரின் பின்னான வாழ்வும்

8884 சதுரகிலோமீற்றர் பரப்பளவான வடக்கு மாகாணத்தில் உள்ள 300 கிலோமீற்றர் நீளமுள்ள கிளிநொச்சி – முல்லைதீவு கரையோரத்தின் இரண்டு பக்கத்திலும் அரைவாசி எரிந்த நிலையிலுள்ள பனைமரங்கள், கூரைகளற்ற வீடுகள், குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற பல்வேறு காட்சிகளைக் காணமுடியும்.Rapp3

இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் The Week சஞ்சிகைக்காக Lakshmi Subramanian எழுதிய கட்டுரையில் தெரிவித்தள்ளார்.

நளாயினி பெரும்பாலான நாட்களில் வீறிட்டுக் கத்தியவாறே கண்விழிக்கிறார். இவரைப் பாதிக்கின்ற அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, நளாயினி பயங்கரக் கனவுகளால் பாதிக்கபட்டுள்ளார். இவரது தந்தையின் தலை துண்டிக்கப்பட்டு நளாயினியில் காலடியில் வீழ்ந்ததையும், தான் காயப்பட்டுத் துடித்ததையும், இவரது ஐந்து வயதான சகோதரன் மிகப் பலமாகக் காயமடைந்து இரத்தப் போக்கால் இறந்ததையும் நளாயினி தனது கண்களால் பார்த்தார். அத்துடன் வேறு குடும்ப உறுப்பினர்களின் உடலங்கள் ஆங்காங்கே பரவியிருந்ததையும் இவரது வீடு தரைமட்டமாக அழிக்கப்பட்டதையும் நளாயினி நேரில் பார்த்துள்ளார்.

நளாயினியின் இத்தகைய துன்பநிலையானது சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அனுபவித்த இன்னல்களாக உள்ளன. நளாயினியின் குடும்பத்தில் இவரது தாய் மற்றும் இவரது இரண்டு சகோதரர்கள் தவிர அனைவரும் போரின் போது படுகொலை செய்யப்பட்டனர். வன்னியைப் பூர்வீகமாகக் கொண்ட நளாயினியின் குடும்பத்தவர்கள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள பண்டத்தரிப்பு என்னும் இடத்தில் வசிக்கின்றனர்.

இரண்டு ஆண்டு கால இடைவெளியின் பின்னர் நளாயினி உயர்தரத்தில் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்றுள்ளார். “படிக்கவேணும். காசில்லை. பிழைக்க வழியும் கிடைக்கவில்லை” என்கிறார் நளாயினி.

நளாயினியின் தயாரான 38 வயதான மாலதி அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் பாடசாலை விடுதியில் தங்கிக் கல்விகற்கும் தனது இரண்டு மகன்களையும் பார்த்துவிட்டு திரும்பியிருந்தார். மாலதியின் காயங்கள் முற்றாகக் குணமடையவில்லை. இவரால் உதவியின்றி தனித்து வேலைகள் எதனையும் செய்யமுடியாது. “நான் எனது பிள்ளைகளுக்காக வாழ்கிறேன். நான் எனது மகளைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு எந்தவேலைக்காகவும் வெளியில் செல்ல முடியாது” என்கிறார் மாலதி.

“எங்களிடம் நல்ல உடைகள் இல்லை. எம்மிடம் விருந்தினர்கள் வருவது மிகவும் குறைவு. எனது கணவன் உயிருடனிருந்த போது நாங்கள் நன்றாக வாழ்ந்தோம்” என மாலதி கூறினார். நளாயினியும் மாலதியும் மூன்று வேளை உணவையும் ஒழுங்காக உட்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

சிறிலங்காவில் இறுதிக் கட்டப் போர் இடம்பெற்றபோது வன்னியிலிருந்து வெளியேறிய பல ஆயிரக்கணக்கான மக்களுள் மாலதியின் குடும்பமும் ஒன்றாகும். இந்தப் போரில் 70,000 வரையான உயிர்கள் பறிக்கப்பட்டன. மே 2009ல் தமிழ்ப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது ஆண்டாகும். முல்லைத்தீவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இயல்புவாழ்க்கை மீளக்கொண்டு வரப்பட்டாலும் கூட வன்னியில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

8884 சதுரகிலோமீற்றர் பரப்பளவான வடக்கு மாகாணத்தில் உள்ள 300 கிலோமீற்றர் நீளமுள்ள கிளிநொச்சி – முல்லைதீவு கரையோரத்தின் இரண்டு பக்கத்திலும் அரைவாசி எரிந்த நிலையிலுள்ள பனைமரங்கள், கூரைகளற்ற வீடுகள், குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற பல்வேறு காட்சிகளைக் காணமுடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வன்னிக் கிராமங்களுக்கு மக்கள் மீள்குடியேறிய போது இந்த மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டிருந்தன. மக்கள் தமது உடமைகளை இழந்திருந்தனர்.

போரின் போது முள்ளிவாய்க்காலிலிருந்த தமது வீடானது அழிக்கப்பட்டதன் பின்னர் 56 வயதான கிளின்ஞம்மா மற்றும் இவரது கணவரான 58 வயதான காசிபதி ஆகியோர் தமது உறவினர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்;தனர். போரின் போது இவர்கள் தமது மகனையும் மருமகளையும் இழந்திருந்தனர். தற்போது இவர்கள் ஆறுவயதான பேரன் ஜனகனைப் பராமரித்து வருகின்றனர். “இந்த வாழ்க்கை நகர்ந்து செல்லவேண்டியுள்ளது” என தனது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட கிளின்ஞம்மா கூறுகிறார்.

காசிபதி வீதி திருத்தும் பணியில் நாளொன்றுக்குப் பெறும் ரூபா 200ல் இவர்கள் தமது குடும்பச்செலவைச் சமாளிக்க வேண்டியுள்ளனர். ஜனகன் இன்னமும் பேசத் தொடங்கவில்லை. கிளின்ஞம்மா வெளியில் எங்கும் செல்வதில்லை. இவர் எந்தவொரு சமூக நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை. “நான் தற்போது எனது வாழ்க்கையில் எதை வைத்திருக்கிறேன்? நான் எப்படி எனது பேரனை வளர்க்கப் போகிறேன்?” என கிளின்ஞம்மா வினவினார்.

கிளின்ஞம்மாவைப் போன்று முல்லைத்தீவு மற்றும் முள்ளிவாய்க்காலில் வாழும் பெரும்பாலான பெண்கள் பல்வேறு துன்பங்களைச் சுமந்து வாழ்கின்றனர். இந்தப் பெண்களின் கண்கள் களைப்படைந்து காணப்படுகிறன. இவர்களில் பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தக் கிராமத்து ஆண்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கு மிகவும் கடினப்படுகின்றனர். இவர்களில் சிலர் கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். இந்தக் கிராமத்தில் அதிகளவான பெண்கள் தமது கணவன்மாரை இழந்து வாழ்கின்றனர். இவர்கள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த 105 வரையான இளம் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தால் பணிக்காக இணைக்கப்பட்டனர்.

“என்னால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாது. இதனால் இராணுவத்தால் வழங்கப்படும் நிவாரணத்தைப் பெற்று மனநலம் பாதிக்கப்பட்ட எனது தாயார் மற்றும் மாற்றுவலுவுடைய எனது சகோதரி ஆகியோருக்கு உணவு வழங்கிவருகிறேன்” என வன்னியிலுள்ள பரந்தன் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த இராசையா கண்ணகி கூறுகிறார். கண்ணகிக்கு தற்போது 28 வயதாக உள்ளபோதிலும், இவரது பற்கள் எல்லாம் விழுந்துள்ளதால் இவர் பார்ப்பதற்கு வயது அதிகமான பெண் போல் தெரிகிறார். போரின் போது இவரது சகோதரி தனது கால்களை இழந்தார்.

“எனது உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். இவர்கள் போர் ஆரம்பிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டைவிட்டுப் புறப்பட்டனர். ஆனால் இவர்களிடமிருந்து என்னால் எந்த உதவியையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் இவர்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் என்னிடம் விசாரணைசெய்து அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் என நான் அச்சப்படுகிறேன்” என யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த பத்மநாதன் ஞானசீலன் தெரிவித்தார்.

அண்மையில், போரால் பாதிக்கப்பட்ட 7000 வரையான மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இலங்கை வங்கியில் சேமிப்புக் கணக்குகளைத் திறந்து அதன்மூலம் இந்த மக்கள் வெளிநாடுகளில் வாழும் தமது உறவுகளிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான உதவியை வழங்கியிருந்தது. “மக்கள் இதனால் மிகவும் மகிழ்வடைந்தனர். ஆனால் இராணுவத்தினர் இவர்களுக்கு எவ்வாறு நிதி வருகிறது என்பது தொடர்பாக விசாரித்தனர். வெளிநாடுகளிலுள்ளவர்களைக் கூட சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணை செய்திருந்தனர். இதன் காரணமாக தற்போது 3000 கணக்குகள் மட்டுமே நடைமுறையிலுள்ளன” என வடக்கு மாகாண சபைக்காக தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த த.தே.கூ உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் அழிக்கப்பட்ட கையோடு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியேற்றுவதற்காகவும் அவர்களுக்கு சிறந்த வசதிகளையும் வாழ்வாதார வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுப்பதற்காக மே 07, 2009ல் ‘வடக்கின் வசந்தம்’ என்கின்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் தாங்கள் எந்தவொரு உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை மக்கள் முறையிடுகின்ற அதேவேளையில், ராஜபக்ச அரசாங்கமானது இத்திட்டமானது மிக வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதாக பரப்புரை செய்துவருகிறது. 1485 சதுரகிலோமீற்றர் பரப்புடைய நிலப்பகுதி மட்டுமே நிலக்கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து வருகிறது. அத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது 321 கிலோமீற்றர் நீளமான கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கின்ற ஏ-09 நெடுஞ்சாலையை நிர்மாணித்துள்ளது. சிறிலங்காவின் வடக்கில் தற்போது வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விரைவில் தொடரூந்துப் பாதைகள் புனரமைக்கப்படும்.

“வடக்கின் அபிவிருத்திக்காக நாங்கள் மூன்று பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் நான்கு ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் 80 சதவீதமான உத்தியோகபூர்வ அபிவிருத்திகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன” என பசில் குறிப்பிட்டுள்ளார்.

பௌதீக சார் இவ்வாறான அபிவிருத்திகள் மட்டும் மக்களின் மனங்களைத் திருப்திப்படுத்தப் போதுமானதா? இவ்வாறான பௌதீகக் கட்டுமானங்கள் மட்டும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டையோ, மதிப்பையோ அல்லது நிலையான சமாதானத்தையோ கொண்டு வராது என கடந்த ஆகஸ்ட்டில் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் இவர்கள் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் 75 சதவீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படையில், சிறிலங்கா இராணுவமானது வடக்கில் தேநீர்க் கடைகள், பலசரக்குக் கடைகள், விடுதிகள் மற்றும் சிகையலங்கரிப்பு நிலையங்கள் போன்றவற்றை நடாத்திவருகிறது.

“எமது தலைகளில் எந்தநேரமும் எறிகணைகளோ அல்லது குண்டுகளோ வந்துவிழுந்துவிடும் என்கின்ற அச்சம் நீங்கி நாங்கள் தற்போது அமைதியாக வாழ்கிறோம். ஆனால் எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை” என வன்னியைச் சேர்ந்த 26 வயதான கனகசபாபதி கூறுகிறார். முன்னாள் போராளிகள் தற்போது மீளவும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 100 பெரிய மற்றும் சிறிய இராணுவ முகாங்கள் உள்ளன.

“நாங்கள் எங்களது வீட்டை மீளக்கட்டியெழுப்ப முடியுமா என்பது எமக்குத் தெரியாது. நாங்கள் இந்தக் கடையைத் திறந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன. வாழ்வைக் கழிக்க வேண்டியுள்ளது” என கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராஞ்சியில் கூரையற்ற தனது வீட்டின் முன் பலசரக்குக் கடையொன்றை அமைத்துள்ள 48 வயதான பரமநாதன் இவ்வாறு கூறினார். இவரது மனைவியான றஞ்சினி தனது கணவர் மேலும் கதைப்பதைத் தடுத்தவாறு “சிறிலங்காவில் அமைதி நிலவுகிறது” எனத் தெரிவித்தார். ஆனால் இவர்களின் கூரையற்ற வீடு மற்றும் தகரத்தாலான சிறு குடிசை போன்றன இவர்கள் தொடர்பான வித்தியாசமான கதையைக் கூறியது.

றஞ்சினி போன்று பெரும்பாலான பெண்கள் தமது சூழல் தொடர்பாக அதிகம் அச்சமடைகின்றனர். “ஏனெனில் இவர்கள் தற்போதும் இராணுவத்திற்குப் பயப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் தாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுவிடலாம் என அச்சப்படுகின்றனர்” என யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். இவர் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.

வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு நீரை வழங்குகின்ற பிரதான ஊடகமான கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக் குளமானது தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் குளத்தின் அணைக்கட்டானது முன்னர் புலிகள் அமைப்பின் பயிற்சி மையமாக அமைந்திருந்தது.

ஜனவரி 2009ல் சிறிலங்கா இராணுவத்தால் மூன்று கிலோமீற்றர் நீளமான இரணைமடுக் குளக்கட்டானது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இரணைமடுக்குளத்துடன் மகாவலி ஆற்றை இணைப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் எனக் கூறப்படுகிறது. கண்டியிலிருந்து ஊற்றெடுக்கும் மகாவலி கங்கையானது கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையின் ஊடாகப் பாய்கிறது. “மகாவலி ஆறானது திருகோணமலையிலிருந்து வடக்கிற்குத் திசைதிருப்பப்பட்டால் இரணைமடுக்குளம் சிறிலங்கா மத்திய அரசாங்கத்தின் சொத்தாக மாறிவிடும். இதனால் வடக்கில் வாழும் விவசாயிகள் இரணைமடுக் குளநீரைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடமுடியாது” என கிளிநொச்சிக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

முன்னர் புலிகளால் பயன்படுத்தப்பட்ட காங்கேசன்துறைத் துறைமுகமும் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. வலிகாமம் வடக்கில் உள்ள காங்கேசன்துறையில் சிறிலங்கா இராணுவம் 6400 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத் தேவைக்காக அபகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. “இவ்வாறான மிகப் பெரிய நிலப்பரப்பானது இராணுவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுத்துவதன் மூலம் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்கின்ற அச்சம் எழுப்பப்படுகிறது” என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அனைத்து இடங்களிலும் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. “இவை சிங்கள கொலனித்துவத்தின் அடையாளங்களாகும்” என யாழ்ப்பாணத்திலிருந்து தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபைக்காகத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.றஜீவன் தெரிவித்தார்.

முன்னர் புலிகளின் விமானத் தளமாகக் காணப்பட்ட 4000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பலாலி விமான நிலையமானது தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. இங்கு பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

“எனது காணி பலாலியில் உள்ளது. நான் தற்போது அரசாங்கப் பிரதிநிதியாக உள்ளேன். இருந்தபோதிலும் நான் அங்கு செல்லமுடியாது” என வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்தில் சரணடைந்த எழிலன் என்கின்ற புலிகள் உறுப்பினர் ஒருவரின் மனைவியே அனந்தி. சிறிலங்கா அரசாங்கத்தால் நடாத்தப்படுகின்ற தடுப்பு வதை முகாங்களில் தனது கணவரான எழிலன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அனந்தி கூறுகிறார்.

போரின் போது காணாமற் போன உறவுகளின் வழிகாட்டியாக அனந்தி செயற்படுகிறார். புலிகள் அமைப்பைச் சேர்ந்த மற்றும் பொதுமக்கள் ஆகிய இருதரப்புக்களிலும் 12,000 வரையானவர்கள் சிறிலங்காவின் பல்வேறு தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றனர். மட்டக்களப்புக்கு அருகிலுள்ள கந்தக்கடுவ முகாம், திருகோணமலை சேனன்குடா முகாம், பூநகரி, இரணைமடு முகாம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கம்பாபூசா முகாம் போன்ற பல்வேறு தடுப்பு முகாங்கள் காணப்படுகின்றன.

“நாங்கள் இந்த முகாங்கள் எவற்றுக்கும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை” என்கிறார் அனந்தி சசிதரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்பதில் பெரும்பாலான மக்கள் மகிழ்வடைகின்ற அதேவேளையில், வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது இலட்சியத்தையும் நேசிக்கின்ற பலர் இன்றும் உள்ளனர். “எவராலும் அவரைக் கொல்ல முடியாது. அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தெய்வம்” என 28 வயதான, போரின் போது தனது கால்களை இழந்த செல்வதாசன் தெரிவித்தார்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் கூட பிரபாகரனையும் அவரது வீரர்களையும் மாவீரர்களாக மதிக்கின்றனர். “சிங்கள சுற்றுலாப்பயணிகள் இங்கிருந்து கையளவு மண்ணை எடுத்துச் செல்வார்கள். இந்த மண்ணில் வீரம், சுயமதிப்பு, துணிச்சல் போன்றவற்றை அவர்கள் மதிக்கிறார்கள்” என வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் சொந்த வீட்டுக்கு அருகில் வாழும் 56 வயதான சிவலிங்கம் தெரிவித்தார். இராணுவத்தினர் பிரபாகரனின் வீட்டை அழித்துவிட்டனர். “வீட்டின் எச்சசொச்சங்கள் கூட அகற்றப்பட்டுவிட்டன. சிங்கள சுற்றுலாப்பயணிகள் இங்கு வணக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்காகவே இராணுவத்தினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டனர்” என சிவலிங்கள் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் பதுங்குகுழி காணப்பட்ட புதுக்குடியிருப்பில் இதனைப் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. “நிலக்கண்ணி வெடிகள் தற்போது அகற்றப்படுவதால் அந்த இடத்திற்குச் செல்ல முடியாது” என இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்தார். பிரபாகரனின் பதுங்குகுழியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் காவற் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரன் இவ்வாறு தெரிவித்தார். சிங்கள சுற்றுலாப்பயணிகள் இதனைப் பார்வையிடுவதைத் தடுப்பதற்காக இராணுவத்தினர் இந்தப் பதுங்குகுழியை குண்டுவைத்து தகர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் உறவினர்கள் பிரபாகரன் தொடர்பாகப் பேசுவதற்கு தயங்கினர். “நாங்கள் அவரது உறவினர்கள். ஆனால் நாங்கள் தற்போது ஏன் அவரைப் பற்றிப் பேசவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என பிரபாகரனின் உறவினர்களுள் ஒருவரான உசாந்தினி தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படுவதாக ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றபோதிலும், இதனை அனைத்துலக சமூகமானது இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

உலகின் முன் சிறிலங்காவானது தன்மீது சாதகமான பார்வையை உருவாக்க முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் நவம்பரில் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டை நடாத்தியது. இந்தியா மற்றும் கனடா உட்பட சில நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்தனர். .இதில் 23 நாடுகள் மட்டுமே பங்குபற்றின.

அனைத்துலக அழுத்தமானது அதிகரித்த நிலையில் ராஜபக்ச அரசாங்கம், போரின் போது படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போன மற்றும் இழக்கப்பட்ட உடைமைகள் தொடர்பாக மிகக் குறைவாக மதிப்பிட்டது. ஆறு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் போரால் பாதிக்கப்பட்டமை தொடர்பான மதிப்பீடானது தற்போது 14,000 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் 16,000 வரையான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

“அனைத்துலக விசாரணை ஒன்றுக்கோ அல்லது எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைத்துலகத் தலையீடு மேற்கொள்ளப்படுவதற்கோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்தால் நாடானது பல்வேறு முரண்பாடுகளிலிருந்து அப்பாற் சென்று முன்னேறுவதற்கு உதவும். நாங்கள் போரின் போது ஏற்பட்ட பல்வேறு மீறல்களுக்கு இதயசுத்தியுடன் உண்மையுடன் பொறுப்பளிக்காவிட்டால் இது ஒருபோதும் முடிவுக்கு வராது” என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவானது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நம்பகமான விசாரணையை மேற்கொள்ளத் தவறினால் இதன் மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என சிறிலங்காவில் பொதுநலவாய உச்சி மாநாடு இடம்பெற்ற போது யாழ்ப்பாணத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூனால் காலக்கெடு முன்வைக்கப்பட்டதால் சிறிலங்கா அரசாங்கமானது இது தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய நிலையிலுள்ளது.

எதுஎவ்வாறெனினும், சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புள்ளிவிபரமானது பிறிதொரு ஏமாற்று வேலை என அவதானிகள் தெரிவித்துள்ளனர். “சிறிலங்கா அரசாங்கத்தின் விசாரணைகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. இங்கு அரசாங்கமானது பொறுப்பளிக்க முன்வரவில்லை. ஆகவே புதிய விசாரணையில் எவ்வித பயனும் இருக்காது” என புதுடில்லியிலுள்ள மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் இயக்குனர் சுகாஸ் சக்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்ச் சுற்றுலாத்துறை:

வடக்கு மாகாணமானது தற்போது சுற்றுலா மையமாக மாறியுள்ளது. போர் தொடர்பான வரலாறுகளைப் பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகம் வடக்கு நோக்கிச் செல்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிலர் வடக்கு நோக்கிச் சென்று அங்கே மரணித்த தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

போர்ச் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு போர் நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளது. புலிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட கிளிநொச்சியில் உள்ள நீர்த்தாங்கி, புதுக்குடியிருப்பிலுள்ள போர் அருங்காட்சியகம் போன்றன போர்ச் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நினைவுச் சின்னங்களாக உள்ளன.

புதுக்குடியிருப்பு போர் அருங்காட்சியகத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் எவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு போரில் தோற்கடிக்கப்பட்டனர் என்பதைக் காண்பிக்கின்ற வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போரில் இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றிகளை நினைவூட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்திற்கு அருகில் பிறிதொரு மிகப்பெரிய போர் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி ஒன்றை ஒரு கையிலும், அதற்கு அடுத்ததாக புறாவும், நாட்டின் தேசியக் கொடி மறுகையிலும் வைத்திருக்கிறார். நான்கு சிங்கங்கள் முகாமின் மூலைகளில் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன என்பது இதில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கின்ற வீதியானது நன்கு செப்பனிடப்பட்டுள்ளது. ஆனையிறவு உட்பட முக்கிய தரைத்தோற்றங்கள் இங்கு காணப்படுகின்றன.

புலிகளின் மரணித்தவர்களுக்கான வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம், மாநாட்டு மண்டபம், இரண்டு மாடி நிலக்கீழ் கட்டங்கள், தொடர்பாடல் கோபுரம் மற்றும் பிரபாகரனால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு வசதிகளைக் கொண்ட பிரபாகரனின் இல்லமானது அண்மையில் இராணுவத்தால் குண்டுவைக்கத் தகர்க்கப்பட்டுள்ளதால் அதனைப் பார்ப்பதற்காகச் செல்கின்ற சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் திரும்புகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட, முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஜோர்தானிய கப்பலான ‘Farah’ இராணுவத்தால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. பிரபாகரன் உட்பட எஞ்சியிருந்த புலித் தலைவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு சிறிலங்கா இராணுவத்தால் போர் வெற்றி பிரகடனப்படுத்தப்பட்ட முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சுற்றுலா விடுதி ஒன்றை நடாத்திவருகின்றனர்.

குறிப்புக்கள்:

• சிறிலங்காவின் 18 சதவீத மக்கள் தமிழ் மொழி பேசும் மக்களாவார்.

• சிறிலங்காவின் 22 மில்லியன் மொத்த சனத்தொகையில் 10 தொடக்கம் 15 சதவீதமான மக்கள் தமிழர்களாவர்.

• 2013ல் 25 வயதிற்கு மேற்பட்ட 4,01,000 வரையான மக்கள் தொழிலற்றவர்களாக உள்ளனர். இத்தொகையானது 2012ல் 3,24,000 ஆகும்.

• 1,50,408 சிறிலங்கர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர்.

• 2012ல் 6,000 வரையான சிறிலங்காத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

• போரின் போது 1,06,000 பேர் காணாமற் போயுள்ளனர்.

• 50,000 தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.

• 12,000 வரையான சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

• வடக்கு மாகாணத்தில் 4,00,000 வரையான இடம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.

• தமிழ்க் குடும்பம் ஒன்றின் மாதாந்த வீட்டு வருமானம் சராசரி 150 டொலர்களாகும்.

• 23 சதவீதமான தமிழர்கள் மாதாந்தம் 25 டொலர்கள் மட்டுமே சம்பாதிக்கின்றனர். இவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

• வடக்கு மாகாணத்தில் 1,50,000 சிங்கள இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.

• 2013ல் ‘எல்லைகளற்ற ஊடக அமைப்பால்’ வெளியிடப்பட்ட உலக ஊடக சுதந்திரச் சுட்டியின் பிரகாரம் 179 நாடுகளில் சிறிலங்காவானது ஊடக சுதந்திரத்தில் 162வது இடத்தில் உள்ளது.

புதினப்பலகை-நித்தியபாதி.