சர்வதேச விசாரணையும் விடுதலைப் போராட்டத்திற்கான அங்கீகாரமும்

இலங்கையில் சிங்கள மற்றும் இந்திய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சருவதேச விசாரணை இன்னமும் நிகழாத சூழலில் வடகிழக்கில் தமிழின அழிப்பு தொடரும் நிலையில் விடுதலைப் புலிகளது‚ தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான அரசியல் அங்கீகாரம் அவசியமாகின்றது. உலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்து பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தியமையே 2009 இல் தமிழின அழிப்பு – இனப்படுகொலை நிகழக் காரணமாகும்.Rapp1

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு தடை செய்யப்பட்டமையால் தமிழினப் படுகொலையை இந்திய மற்றும் இலங்கை அரசுகளால் ஐ.நா வின்‚ மேற்குலகின் மௌனத்துடன் செய்ய முடிந்தது. தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும்‚ இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தியும் உணவையும்‚ மருந்தையும் ஆயுதமாகப் பாவித்தும் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்தும் வைத்தியசாலைகள் மீது தொடர்ச்சியாக எறிகணைகளை ஏவியும் தமிழினத்தைப் பயங்கரவாதத்தின் பேரில்‚ மனிதாபிமான யுத்தம் என்று பெயரிட்டுக் கொன்றொழித்தார்கள்!

எத்தனை நாள் எமது பிள்ளைகள் பதுங்கு குழிக்குள்ளேயே இருந்தார்கள்; உணவுக்காவும் நீருக்காவும் அலைந்தார்கள். ஓயாமல் பொழிந்த ஆட்லறி செல்களாலும்‚ விமான எரிகுண்டுகளாலும் காயமடைந்து மருந்துவம் அளிக்க முடியாமல் கண்முன்னே மனிதர்கள்‚ குழந்தைகள் இறந்து கொண்டிருந்ததையும் இந்த உலகினால் சகித்துக் கொள்ள முடிந்தது! போரின் முடிவில் சரணடைந்த தமிழர்களை – 700 இற்கும் அதிகமான ஆண்களையும்‚ சிறுவர்களையும் சித்திரவதை செய்தும் 400 இற்கும் அதிகமான பெண்களையும்‚ சிறுமிகளையும் வன்புணர்ந்தும் கொல்ல முடிந்தது. கொல்லப்பட்ட அனைவருமே விலங்குகளைப் போல் வீசப்பட்டிருந்தார்கள்.

போர் முடிந்த கடந்த 4 வருடங்களில் வன்னியில் உள்ள தமிழின அழிப்பின் தடயங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன; இன்றும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று முல்லைத்தீவிற்கு கட்டளைத் தளபதியாக வெலிவேரியாவில் சுத்தமான தண்ணீர் கேட்டு ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த உத்ரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும் இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் நோக்கி படை நகர்த்தியவரும் போர்க் குற்றம் சாட்டப்பட்டவரும் இனப்படுகொலைக் குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச விசாரணை ஒருவேளை வந்தால் சாட்சியங்கள் இருந்தால் ஆபத்தாகிவிடலாம் என்பதற்காக மீதமுள்ள புதைகுழிகளைத் தோண்டி எலும்புகளை எடுத்து அழிக்கப் போகின்றார்!

2009 இல் தமிழின அழிப்புக்குப் பின் தமிழின மீட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் மிகவும் அவசியமானது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமது உரிமைக்காக ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் இனக்குழும அமைப்புக்களை பயங்கரவாதமாகத் திரிபுபடுத்துவது தவறானதாகும். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த ஜோர்ஜ் வாசிங்டனையோ‚ 1917 இல் சோவியத் ரஸ்யாவில் நிகழ்ந்த ஓக்டோபர் புரட்சியின் நாயகன் லெனினையோ‚ போல்செவிக்குகளையோ‚ செஞ் சீனப் புரட்சி நாயகன் மாவோ தே சுங்கையோ‚ கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவையோ – ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸையோ‚ பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகப் போராடிய யசீர் அரபாத்தையோ உலகம் பயங்கரவாதியாகக் கருதியதில்லை. அன்றைய காலச் சூழலும் அவர்கள் சந்தித்த எதிரிகளும் அடக்குமுறையின் வடிவங்களும் அவர்களுக்குரிய போராட்ட முறைகளைத் தீர்மானித்திருந்தன.

தமிழ் மக்களது‚ விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம்‚ அவர்களது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் வரலாற்று எதிரிகளான சிங்கள மற்றும் இந்திய அடக்குமுறையாளர்களின் செயற்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டது. ஒருவர் மகாவம்ச மனோநிலையை‚ மகாவம்சக் கருத்தாக்கத்தில் ஊறிய சிங்கள ஆழ்மனதைப் விளங்கிக் கொள்ளாது சிங்கள ஆட்சியாளர்கள்‚ சிங்கள இராணுவம் தமிழர்களை மிருகங்களைப் போல் கொன்ற‚ கொல்கின்ற‚ அடிமைகளாக நடாத்தும் மனோநிலையைப் புரிந்து கொள்வது என்பது சாத்தியமற்றது. இதுவரை நிகழ்த்தபட்ட தமிழனப் படுகொலைகள் எதுவுக்குமே நீதியான விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. சாட்சியங்களும் தடயங்களுந் தான் அழிக்கப்பட்டன.

இது ஒரு மகாவம்ச மனநிலை. (துட்டகைமுனு மரணப்படுக்கையில் இருக்கையில் தான் தமிழர்களைக் கொன்றது குறித்து வருத்தமடைந்து கொண்டிருக்கிறான் அப்போது ஆகாயமார்க்கமாக வந்த பௌத்தத் துறவி ஒருவர் அரசனுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். தமிழர்கள் விலங்குகளைவிடக் கீழானவர்கள் அதற்காக வருந்த வேண்டியதில்லை என்று அரசனைத் தேற்றிச் செல்கின்றனர்.

– `O great king, fear not, ruler of men. Without conquering the foe sin the foe death is unconquerable. All that has come into (this transitory) existence must necessarily perish also, perishable is all that exists;6 thus did the Master teach. Mortality overcomes even the Buddhas, untouched by shame or fear; therefore think thou: all that exists is perishable, full of sorrow, and unreal. In thy last mortal existence7 thy love for the true doctrine was indeed great. Albeit the world of gods was within thy sight, yet didst thou, renouncing heavenly bliss, return to this world and didst many works of merit in manifold ways. Moreover, the setting up of sole sovereignty by thee did serve to bring glory to the doctrine. Oh thou who art rich in merit, think on all those works of merit accomplished by thee even to this present day, then will all be well with thee straightway!’ – Mahavamsa chapter 32. Mahanama, in his Mahavamsa justifies, and glorifies the murder by Dutugemunu, of thousands of Tamils he called “invaders”, by equating them with “sinners, and wild beasts”. So, where is Buddhism?)

1956‚1958‚1977‚1981‚1983 இல் நிராயுதபாணிகளான தமிழ்மக்கள் மீது சிங்கள அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக முகிழ்த் தெழுந்ததை வரலாற்றில் இருந்து எவருமே நீக்கிவிட முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் எனின் காலங்காலமாக 1956 முதல் 1983 வரை தமிழ்மக்களைப் படுகொலை செய்த சிங்கள ஆளும்வர்கக்ம் என்ன வகை? 2006 -2009 காலப்பகுதியில் வன்னியில் இந்த நுாற்றாண்டின் மறைக்கப்பட்ட இனப் படுகொலையைப் புரிந்த மகிந்த தலைமை தாங்கிய சிங்கள அரசசையும்‚ அதற்கு கொள்ளி எடுத்துக் கொடுத்தும் திட்டம் தீட்டிக் கொடுத்தும் சிங்கள அரசை சருவதேச விசாரணையில் இருந்து பாதுகாத்தும் வரும் இந்திய அரசையும் பயங்கரவாதிகள் என்று பிரகடனப் படுத்தி அணுகுண்டு வீசி அழித்தால் தான் தகுமோ? தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய மகாகவி பாரதி இந்தக் கொடுமைகளைக் கண்டு எப்படிப் பாடியிருப்பான்?…..

தமிழ்மக்கள் போராடுவதற்கான எல்லா வழிகளையும் தடுத்து உலக வல்லாதிக்க நலன்களுக்காக தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்திரித்து தடைசெய்து அவர்கள் போரடுவதற்கான உரிமைகளையும் வழிகளையும் தடுத்த பின்னர்‚ போராடுவதற்குகென்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய வழிகளை விட்டு வைத்தார்கள்? சிங்கள இனவாத அரசுக்கும் படைகளுக்கும் இருந்தது போல் பொதுமக்களை தாக்குவது விடுதலைப்புலிகளினது – பிரபாகரனது இலட்சியமாக இருந்ததில்லை. சிங்களவர்களை அழிப்பது பிரபாகரனின் – தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்காக என்றுமே இருந்ததில்லை.
1987
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும் 2002 இல் நோர்வே அரசினால் முன்னனெடுக்கப்பட்ட சமாதான ஒப்பந்தமும் (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரும் தமிழ்மக்களால் தேசியத் தலைவர் என அழைக்கப்படுபவருமான வே.பிரபாகரன் மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.) தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் வழங்கப்பட்ட சருவதேச அங்கீகாரமாகும்.

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் பயங்கரவாதமாக சருவதேசத்திற்கு சித்திரித்தன. தமிழின அழிப்பு தடுக்கப்பட வேண்டுமெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழ்மக்களது விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஜேர்மனியில் நடைபெற்ற 11 நீதிபதிகள் கொண்ட சருவதேச தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்றும் 2009மே இற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் இனப்படுகொலையானது முன்னெடுக்கப்படுகிறது என்றும் குறிப்பாக சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டாயக் கருத்தடை இதன் ஒரு அம்சமே என்றும் தீர்ப்பளித்திருந்து.

இலங்கையில் 1956 முதல் காலங்காலமாக திட்மிட்ட முறையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்றால் அதனைத் தடுப்பதற்காக 1983 இற்குப் பின்னர் தீவிரம் பெற்ற விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எப்படிப் பயங்கரவாதமாகும். விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய எந்த அரசுக்குத் தான் தகுதியிருக்கிறது? தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட முடியாது என்று ஜேர்மனியில் நடைபெற்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு நோக்கத்தக்கது. தமிழீழ விடுதலைப் போராட்டமானது இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கானது; தமி்ழ் மக்களது வரலாற்று‚ கலாசார‚ பண்பாட்டுப் பொதுமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல் வழிமுறையே ஆயுதப் போராட்டமாகும். அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைமை தாங்கியமை வரலாற்று நிர்ப்பந்தமே.

ஒரு சில திட்டமிட்ட அழிவுகளை வைத்து ஒரு இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பினைத் தடைசெய்தமை தவறானதாகும். இனப்படுகொலை விசாரணைக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லை என்று வாதாடும் இலங்கை அரசு தமிழ்மக்களது விடுதலைப் போராட்டத்தை வெளிநாட்டு உதவியுடன் அழித்தமையும் தடைசெய்துள்ளமையும் மிகவும் கேவலமானது.

விடுதைலைப் புலிகளின் மீதான தடையை நீக்கினாலேயே இன்று இலங்கை மற்றும் இந்திய உளவு அமைப்புக்களால் புரியப்படும் அரசியல் மற்றும் மறைமுக வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும். விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் என்பது தமிழ் மக்களது போராட்டத்தில் சருவதேச நியதிகளை ஏற்கும் சமநிலையை ஏற்படுத்தும். இது தமிழினக் காப்பிற்கான சிறுபான்மை இனத்தின் பொறிமுறைக்கு உதவும். புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் உரிமைகளைப் பெறவும் வழியமைக்கும். விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவில் உள்ள 200000 இற்கும் மேற்பட்ட ஈழ அகதிகளை அரசியல் அநாதைகளாக்கியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழருக்கு சாதகமானதாகவோ தமிழீழ விடுதலைக்கு ஆதரவானதாக இருந்ததில்லை; இனிமேல் இருக்கப் போவதுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இராசதந்திர அந்தஸ்து கிடைத்து விட்டால் இந்திய நலன்கள் பாதிப்படையும் எனக்கருதி இந்தியா தமிழருக்கு எதிரான செயற்பாட்டையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. 2009 இல் தமிழன அழிப்புக்கு இந்தியா கூட்டுப் பங்காளியாக இருந்து தனது அயல்நாட்டு சிறுபான்மையின மக்களை இனப்படுகொலை செய்தமை மிகவும் கொடுமையானது. இக்குற்றங்களைத் துல்லியமாக எடுத்துக் காட்ட விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவது அவசியமானதாகும். இந்தியா விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டாண்டுகளுக்கு ஒரு தடைவை நீடித்து வருகின்றமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணம்.

நடைபெற்ற தமிழின அழிப்புக்கு சருவதேச நீதி கிடைக்காத நிலையில் தொடரும் இனவழிப்பும்‚ தமிழினத்தை தாயகத்தில் இருந்து பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக அப்புறப்படுத்துவதும் நிறுத்தப்படுவதற்கு வடகிழக்கில் ஐ.நா. வின் நேரடியான பிரசன்னம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை தாய்த்தமிழகத்திலும் உலககெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் உதவியுடனும் ஏனைய இனக்குழுமங்களின் உதவியுடனும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவார்கள். இலங்கை‚ இந்திய அரசுகளின் தொடர் செயற்பாடுகளும் ஐ.நா. வின் மௌனமும் தமிழனத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதை நோக்கியே தமிழ்மக்களைத் தள்ளி வருகின்றது.

இலங்கையரசு தமிழின அழிப்பைத் தொடர்ந்து கொண்டு தமிழர்களது அரசியல் உரிமைகளை வடகிழக்கில் மறுதலிக்கும் நிலையில் இலங்கையின் வடகிழக்கில் தமிழர்களது உரிமைகளை நிலைநிறுத்தவும் சனநாயகத்தையும் கலாசார சீரழிவுகளை தடுத்து நிறுத்தவும் தமிழ் மக்களது விடுலைப் போராட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழீழ விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.

இலங்கையில் 2009 இல் ஐ.நா. உட்பட சருவதேச சமூகம் தவறிழைத்தமை ஐ.நா. நிபுணர் குழுவின் உள்ளக – கறுப்புமையினால் மறைக்கப்பட்ட அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஐ.நா.வின் தோல்விக்குக் காரணம்: உலகம் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதமாகப் பார்த்தமை; இலங்கை‚ இந்திய அரசுகள் கூறும் இராசதந்திர மொழிகளை முழுமையாக நம்பியமை; இலங்கையில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகள் இலங்கையரசின் இலஞ்சம் பெற்றுக் கொண்டு உயிரிழப்புக்களை மறைத்தமை; அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள்‚ வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் மீள மீள நடத்தப்பட்ட போது ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட போதும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பின்றிச் செயற்பட்டமை – R2P (Responsibility to Protect) falsified; இலங்கையரசு அழிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பட்டியலிட்டமை முதலான பல காரணங்கள் அமைகின்றன.

ஐ.நா. இலங்கையில் பாடங் கற்றதாகக் கூறிக் கொண்டாலும் தொடர்ந்தும் திட்டமிட்ட முறையில் வடகிழக்கில் தமிழனம் அழிக்கப்படுவதை கண்டும் காணாதும் இருந்து வருகின்றது. எனவே தொடரும் இன அழிப்பில் இருந்து தமிழினத்தைக் காக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிமீழ விடுதலைக்கான போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகச் செயற்பட அனுமதியளிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலமே தமிழின அழிப்பைக் கணிசமானளவு தடுத்து நிறுத்தியிருந்தமையை போர் முடிவடைந்த பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் வடபகுதியில் பல்வேறு வழிகளில் தொடரும் தமிழின அழிப்பு நிரூபித்து வருகிறது.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை களநிலைகளில் இருந்து அகற்றியமை பாரிய தமிழின அழிவுக்கும் அவுஸ்திரேலியா நோக்கிய தமிழின நகர்வுக்கம் ஏதுவாக அமைந்துள்ளது. இன்று வடகிழக்கு சிங்கள மயமாகி வரும் நிலையில் தமிழினத்தைப் பாதுகாக்க ஐ.நா. வினாலும் உலக வல்லாதிக்க சக்திகளாலும் முடியாதுள்ளமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தமிழின அழிப்பை உள்நாட்டு விவகாரமாகக் கொள்ளுமாறு இலங்கையின் சிங்கள அரசியிற் கட்சிகள் யாவுமே வலியுறுத்தி வருகின்ற நிலையில் இலங்கையரசு தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை வழங்காது பின்வாங்குவதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தில் இருந்து அகற்றப்பட்டமையும் தமிழர்களது விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாக சித்திரிக்கப்பட்டு வருகின்றமையுமே ஆகும்.

தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை – தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாவேனும் அங்கீகரிக்காது தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குமாறு சருவதேசம் இலங்கையரசை வலியுறுத்துவது என்பது நகைப்பிற்குரியது. நேரடியான இனஅழிப்புப் போர் முடிவுக்கு வந்த 4 ஆண்டுகளில் இதனை சருவதேச நாடுகள் கண்டு கொள்ளத் தவறியதும்‚ ஏற்றுக் கொள்ளத் தயங்குதலும் ஐ.நா.வும் சருவதேச சமூகமும் மீளத் தவறிழைத்தமைக்கு ஒப்பானதாகும். எனவே சருவதேச இராசதந்திர அந்தஸ்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளது‚ தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

– யாதவன் நந்தகுமாரன்

Advertisements