அரசின் இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவா பொறிக்குள் தப்புமா?

இலங்கை அரசு ஜெனி வாவில் 25ஆவது மனித உரிமைகள் மாநாட்டை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறது. தனக்கெதிராக மார்ச்சில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் பிரேரணையை இல்லாமற் செய்துவிடவேண்டும்

அல்லது பலமிழக்கச் செய்யவேண்டும் என்பதில் தீவிர கரிசனையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறது.

இந்த இராஜதந்திரத்தின் பாற்பட்டுப் பலநகர்வுகள் இலங்கையில் இடம் பெறத் தொடங்கியிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மக்களின் சொத்திழப்புகள், உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெகுவிரைவாகவே சேகரிக்கப்படுகின்றன. புள்ளிவிவரத்திணைக் களம் தனது அறிவாண்மையைப் பயன்படுத்தித்தான் தரவுசேகரிப்பில் ஈடுபட்டிருந்ததெனினும் மக்கள் மத்தியில் அது நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை.Rapp2

காணமற் போனோர் கணக்கெடுப்பு

முற்றாக அழிந்த குடும்பங்களின் இழப்புகள் தொடர்பான தகவல்கள் அரசவிதிகளின்கீழ் புத்திசாலித்தனமாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. உறவுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, வேறுநாடுகளுக்குச் சென்று உயிர்தப்பிவாழும் தமிழர்களின் இழப்புகள் சம்பந்தமான தகவல்களும் உள்வாங்கப்படாதிருப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தாயைப் பறிகொடுத்த மகள், மகன், வயதுவந்து திருமணம்செய்து விட்டால் அவர் வேறுகுடும்பமாகக் கருதப்பட்டு அவ்விழப்புகள் பதிவுக்குட்படாமல் தவிர்க்கப்படுகின்றன.

இதன்படி பார்த்தால் மூன்றிலொரு பங்கு இழப்புகள்கூட தரவுகளாக வரபோவதில்லை என்பது தெளிவாகிறது. பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ந்து பெரியவர்களானதால் சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டு வேறு குடும்பங்களாக்கப்பட்டு தமது இரத்த உறவுகளின் இழப்புகளைக்கூட பதியமுடியாதவாறு மெளனமாக்கப்பட்டிருக்கிறார்கள். இது உண்மையான கணக்கெடுப்பாகாது.

அவசரஅவசரமாகக் காணாமற் போனோர் தொடர்பாகவும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இதுபற்றி ஆராயப்புகுந்த குழுவுக்கு இதுவரை பதினோராயிரம் முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றிருக்கின்றன எனச் செய்திகள் தெரி விக்கின்றன. எவ்வாறெனினும், குழு வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

கரும்புத்தோட்டமும் காணிச்சுவீகரிப்பும்

இவை தமிழர்களுடைய இழப்புகள் பற்றிய தகவல்கள் சார்ந்தவை. அரசால் இன்னொரு நகர்வு தமிழர்களுக்கு எதிர்கால இழப்புகளை உருவாக்கும் உத்திகள் சார்ந்து மேற் கொள்ளப்படவிருக்கிறது. ஏற்கெனவே இராணுவ முகாம்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்று தமிழர்காணிகள் பறிபோவது போதாதெனக் கரும்புச் செய்கை என்ற பேரிலும் வடபகுதியில் பெருந்தொகையான காணிகளைச் சுருட்ட அரசு திட்டமிட்டு வருகிறது.

இவ்வாரமே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் நிலையிலிருக்கின்ற கரும்புப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் படி நாடுதழுவிய வகையில் ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்றேழு யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப்படவிருக்கிறது. இதில் வடக்கில் மாத்திரம் எழுபத்தோராயிரத்து எழுநூற்றுப் பதினாறு யஹக் ரேயர் காணி கரும்புத் தோட்டத்துக்காகக் கையகப்படுத்தும் திட்டமிருக்கிறது.

இது வெளிப்பார்வைக்குச் சீனி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் திட்டம் எனப் பேசப்பட்டாலும் தமிழர் காணியில் தமிழர்களுக்குரிய அதிகாரத்தை அகற்றுவதற்கான ஒரு திட்டமாகவே கொள்ளப்படவேண்டியிருக்கிறது. இக்காணிச் சுவீகரிப்பு நிகழ்ந்தவுடன் முற்றுமுழுதாக இக்காணிகள் அனைத்தும் மத்திய சீனி அமைச்சின் கீழேயே கொண்டு வரப்பட்டு மாகாணசபைக்குரிய பிடிமானங்கள் அனைத்தும் முற்றாக அறுத்தெறியப்படும்.

அபிவிருத்திகள் தமிழர்பகுதிகளில் இடம்பெறுவதைத் தமிழர்கள் விரும்பவில்லை என்பது இதன் கருத்தாகாது. அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள். ஒவ்வொரு வாய்ப்பிலும் தமிழ்ப் பிரதேசங்களைக் கபளீகரம் செய்யும் நோக்கில்தான் அரசு செயற் பட்டு வருகிறது. அதற்கான சட்ட ஏற்பாடுகள்தாம் கரும்புத்தோட்டமும், காணிச்சுவீகரிப்பும்.

அரசு எதிர்நோக்கும் சவால்கள்

இதேநேரத்தில் அரசின் திருகுதாளங்கள் சர்வதேசமட்டத்தில் எடுபடுவதாகவும் தெரியவில்லை. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அரசு தனது செயற்பாடுகளை வகுத்துக்கொண்டாலும், மார்ச்சில் ஜெனிவாவில் எழப்போகும் சிக்கல்களைக் கடந்துசெல்வதற்கான பலம் இலங்கையிடம் இருக்கிறதா என்பதே கேள்வி.கடந்த ஓகஸ்ட் இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையின் வருகை இலங்கை இராஜதந்திரத்தின் மிகப் பெரிய சரிவுக்கான ஆரம்பம் எனலாம். அதன்விளைவு வருகிற மார்ச்சில் எதிரொலிக்கவிருக்கிறது.

பொதுநலவாய மாநாட்டைக் கனடா புறக்கணித்ததும், மொரிஸியஸ் பங்கு பற்ற மறுத்ததும், இருபத்துமூன்று அரசதலைவர்கள் மட்டுமே பங்குபற்றிய நிகழ்வாக அது அமைந்ததும் இன்னொரு சரிவு. டேவிட் கமரூன் வடபகுதிக்குத் தன்முனைப்போடு சென்று மக்களுடன் உரையாடி, அதன் பின்னர் இலங்கைப் பற்றி விமர்சனம் செய்தது மூன்றாவது வீழ்ச்சி.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வருகைதர மனமிருந்தும், பொதுநல வாயத்தில் பங்குகொள்ள முடியாமல் தவித்து நின்றமை இலங்கைக்கான மிகப்பெரிய அவமான நிகழ்வு. இது தமிழக மக்களின் இலங்கை அரசுக் கெதிரான நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி.

அமெரிக்காவும் தன்பங்குக்கு இலங்கையை வாட்டி எடுத்துவருகிறது. இவற்றின் உச்சம் நிச்சயமாக ஜெனிவாவில் எதிரொலித்தே தீரும் என நம்பலாம். அதற்கேதுவாக ஐ.நாவின் அகதிகளுக்கான விசேடஅறிக்கையாளர் சலோகா பெயானியும் இலங்கை வந்து தமிழ்த் தலைவர்களுடனும் மக்களுடனும் நேரடியாக உரையாடித் தகவல்களைப் பெற்றுச்சென்றிருக்கிறார்.

ஐ.நாவின் வேண்டுகோளை இலங்கை அரசு எந்தளவுக்கு ஏற்றுநடந்திருக்கிறது என்பதை அறியவும், அவற்றில் எவையயவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதுபற்றிய அறிக்கை சமர்ப்பிக்கவுமென அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் வாரங்களில் இலங்கை வரவிருக்கிறார். இவரையடுத்து பெப்ரவரி முதல்வாரத்தில் நவநீதம்பிள்ளையின் அணியைச் சேர்ந்தவர்களும் இலங்கை வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க, இலங்கைமீது பொருளாதாரத்தடை கொண்டுவருவதுபற்றி ஆலோசிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரிட்டனும் தன்னோடு இணைந்த நாடுகள்மூலம் இலங்கை வாணிபத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பது பற்றிக் கவனம் செலுத்தி வருகிறது. இலங்கையின் அரசதலைவர்களினதும், இராணுவத் தலைவர்களினதும் வெளிநாட்டுப் பயணங்களை முடக்கும் திட்டமும் பிரிட்டனின் பரிசீலனையில் இருக்கிறதெனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றோடு புலம்பெயர்தமிழர் அமைப்புகளும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்தாவது இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றமுடிவுடன் தீவிரமான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கைக்கு எதிராகத் திரும்பியிருக்கும் சர்வதேச அபிப்பிராயங்களைச் சாதகமாக்கித் தமிழரின் அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்து விட வேண்டுமென்ற துடிப்பு புலம்பெயர் தமிழர்களிடமும் காணப்படுகிறது. ஜெனிவா மாநாட்டின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தங்களுடன் இணைந்துநின்றால் அதன் பயன் அதிகமாகலாமென இவர்கள் நம்புகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதனையேற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஜெனிவா சென்று மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேசப் பிரதிநிதிகளைத் தனித்தனியாகச் சந்தித்து உண்மை நிலையைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்த்துவதே சாலச்சிறந்ததென்று தாயகத் தமிழர்களும் விரும்புகிறார்கள்.

இதேவேளை உண்ணாட்டு நிலவரமும் அரசுக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிய வில்லை. ஈரானிய எண்ணெய்யைக் கொள்வனவு செய்யக்கூடாது என்ற அமெரிக்காவின் உத்தரவின்படி நடக்க வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது. பிரதமருக்கு எதிரான போதை மருந்துக் குற்றச்சாட்டும் வலுப்பெற்று வருகிறது.

இலங்கைப் பிரச்சினை ஐ.நா. செல்வதற்குக் காரணமாக இருந்தவர் இன்றைய ஜனாதிபதிதான். எனவே, ஐ.நாவின் அறிவுரைகளை அவர் நிறைவேற்றியேயாக வேண்டும். சர்வதேச சமூகத்துடன் பேசி ஒரு நல்லமுடிவை எட்டாவிட்டால் நாடு பிளவுபடுவது தவிர்க்கமுடியாததாகி விடும் என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசை எச்சரித்திருப்பது நிலைமையின் பாரதூரத்தைக் காட்டுகிறது.

இனிமேலும் போலி உத்திகள்மூலம் தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி விடலாமென அரசு கனவுகாண்பது நல்லதல்ல. வடக்கில் இராணுவக் குறைப்பு, கையகப்படுத்தப்பட்ட தமிழர் காணிகளின் மீள் ஒப்படைப்பு, தமிழ்ப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்களுக்கான முற்றுப்புள்ளி போன்ற ஒருவாரத்துக்குள்ளே செய்யக்கூடியவற்றையாவது உடனடியாகச் செய்வதன்மூலம் தமிழர்பால் அரசுதன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியும்.

உதயன்

Advertisements