2014: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரும் சிறிலங்காவின் எதிர்காலமும்

2014ம் ஆண்டானது சிறிலங்காவுக்கு மிகமுக்கியமான ஆண்டாகும். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சிறிலங்கா மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதில் கலந்துரையாடப்படவுள்ளதால் தற்போது பிறந்துள்ள புதிய ஆண்டானது சிறிலங்காவுக்கு மிகமுக்கியமான ஓர் ஆண்டாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜெனீவாவில் அழுத்தம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தாம் முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.jaffna_protestors_001

மார்ச்சில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்காவில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் தொடர்பாக அனைத்துலக இராஜதந்திரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான தேவையை கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் சந்திப்பில் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் முன்னைய கூட்டத்தொடர்களில் கலந்துகொள்வதற்காக ஜெனீவாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளை அனுப்பியிருந்ததாகவும், ஆனால் இந்தத் தடவை சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு மார்ச்சில் மனித உரிமைகள் பேரவையானது தனது 25வது கூட்டத்தொடரை நடாத்தும் போது, இப்பேரவை சிறிலங்கா மீது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் எனத் தான் நம்புவதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழ் சமூகம் அழுத்தத்தை வழங்கவுள்ளது. இவ்வாண்டு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமது குரல்களை ஒலிக்கவுள்ளதாக லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் முதன்மையான, புலம்பெயர் தமிழ் அமைப்பான உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தற்போது தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டதானது தமிழ் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் அனைத்துலக அரங்கில் முன்வைப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்குமான ஒரு வாய்ப்பாக காணப்படுவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

“கடந்த செப்ரெம்பரில் சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட மிகத் தெளிவான அரசியல் அங்கீகாரமானது எதிர்காலத்திற்கான எமது நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த மாபெரும் வெற்றியானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் ஒரு முக்கிய செய்தியை வழங்கியுள்ளது” என உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது தேர்தல் விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பையும் உரிமையையும் கொண்டுள்ளது. வடக்கு மாகாண சபைக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாகாண சபையானது மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை முன்னுரிமைப்படுத்துவதற்கான வாய்ப்பை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. சிறிலங்காவில் ஜனநாயக வழியில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து நாங்கள் எமது பணிகளை மேலும் பலப்படுத்தியுள்ளோம். நாங்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பொறுப்புடன் செயலாற்றுவோம். அத்துடன் 2014ல் அனைத்துலக அரங்கில் எமது கருத்துக்களைத் தெளிவாக முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நாங்கள் பலம் சேர்ப்போம்” என மின்னஞ்சல் ஒன்றில் உலகத் தமிழர் பேரவையால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு உண்மையும் நீதியும் கிடைப்பதையும், சிறிலங்காத் தீவில் மிகவுப் பிரகாசமான எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா கண்காணிப்பின் கீழ் அனைத்துலகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என உலகத் தமிழர் பேரவையின் மின்னஞ்சலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளையில், 2014 மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜெனீவாவில் தங்கியிருக்கும் போது, கூட்டமைப்பானது பேரவையின் உறுப்புநாடுகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை செய்வதற்கான அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஓபாமாவுக்கான தமிழர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திரத் தமிழீழம் ஒன்றை உருவாக்குவதற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்குமான அனைத்து அவசிய நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அனைத்துலக ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது பணியாற்றும் என டிசம்பர் 2013ல் இடம்பெற்ற நா.க.த.அரசாங்கத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றும் போதே இதன் பிரதமர் உருத்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளையில் தென்னாசியா மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிசா டேசாய் பிஸ்வல் இம்மாதம் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையின் செயலகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் அடுத்த மாதம் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு பிஸ்வல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் போது அவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்வோம் என கூட்டமைப்பு உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பிஸ்வல் வடக்கிற்கும் வருகைதருவார் எனவும் மனித உரிமை நிலவரம் தொடர்பாகவும் செய்திகள் சேகரிப்பார் எனவும் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற பின்னான வடக்கின் நிலவரம் தொடர்பாக இம்மாத முற்பகுதியில் சிறிலங்காவின் வருகை தந்திருந்த அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கூறியிருந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரின் இல்லத்தில் வைத்து சந்தித்து பேச்சுக்கள் நடாத்தினர். இந்தச் சந்திப்பின் போது, மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள பேரவையின் கூட்டத் தொடர் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவானது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துதல், மீறல்கள் தொடர்பில் பொறுப்பளித்தல், மனித உரிமை மீறல்கள் மற்றும் நாட்டில் இடம்பெறும் பல்வேறு அரசியற் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேவைகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது குறைவாக மதிப்பீடு செய்துள்ளதாக கடந்த மாதம் பிஸ்வல் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளையில், அடுத்து வரும் ஜெனீவாக் கூட்டத் தொடரில் தனக்கான ஆதரவைப் பலப்படுத்தும் பரப்புரைகளில் சிறிலங்கா அரசாங்கமானது ஈடுபட்டுள்ளது. சிறிலங்காவானது பேரவையின் உறுப்புநாடுகளிடமிருந்து குறிப்பாக ஆபிரிக்கர்களிடமிருந்து தனக்குப் போதியளவு ஆதரவு கிடைக்கும் என சிறிலங்கா நம்புகிறது.

இதற்கான இராஜதந்திரப் பரப்புரைகளை சிறிலங்காவானது இதன் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசின் தலைமையில் மேற்கொள்கிறது. பீரிஸ் தற்போது கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தனது இராஜதந்திரப் பரப்புரையை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதே.

கட்டுரை வழிமூலம் : The Sunday Leader- Countdown To Geneva  By Easwaran Rutnam

மொழியாக்கம் : நித்தியபாரதி