போர் முடிந்து ஆண்டுகள் பலவாயினும் இன்னமும் கூடாரங்களில் வாழும் மன்னார் மக்கள்

மன்னார் மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மடுப் பிரதேசத்தின் எல்லையில் கன்னாதிட்டி கல்லுமலை என்கின்ற கிராமம் அமைந்துள்ளது. வவுனியா-மன்னார் வீதியிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இக்கிராம மக்கள் போரின் போது இடம்பெயர்ந்து தற்போது மீளக்குடியேறியுள்ளனர். tamil people still live in shacks

இந்தக் கிராமத்தில் இதுவரை 30 குடும்பங்கள் தற்போது மீளக்குடியேறியுள்ளனர். இன்னும் பல குடும்பங்கள் இங்கு மீளக்குடியேறுகின்ற விருப்பத்தில் உள்ள போதிலும் இங்கு அடிப்படை வசதிகள் காணப்படவில்லை என்பதே இவர்கள் பின்னடிப்பதற்கான காரணமாகும். “இந்தக் கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாததால் ஏனைய மக்கள் இங்கு மீளக்குடியேறுவதில் தயக்கம் காண்பிக்கிறார்கள்” என கன்னாதிட்டி கல்லுமலை கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஜெயமணி கூறுகிறார்.

தாம் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறியதிலிருந்து பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வருவதாக கன்னாதிட்டி கல்லுமலைக் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். போர் ஆரம்பத்திலிருந்து மடுக் காட்டுப் பகுதியின் எல்லைப்புறத்தில் தமிழ்ப் புலிகள் முகாங்கள் அமைத்திருந்தனர் என்கின்றார் ஆர்.விஜயகுமார்.

“சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் அடிக்கடி யுத்தம் இடம்பெறும். இதனால் நாங்கள் இந்தக் கிராமத்தில் அமைதியுடன் வாழமுடியவில்லை. இந்நிலையில் நாங்கள் வவுனியா மற்றும் மடுவிலிருந்த அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தோம். கிராமத்துவாசிகள் சிலர் வவுனியா, நெலுங்குளம் மற்றும் செட்டிக்குளம் போன்ற இடங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர். சிலர் மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகச் சென்றுவிட்டனர்” என விஜயகுமார் தெரிவித்தார்.

“சில கிராமவாசிகள் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் சென்னையிலுள்ள அகதி முகாங்களில் வாழ்ந்தனர். இவர்களில் சிலர் தொடர்ந்தும் அங்கேயே உள்ளனர். தற்போது எமது கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் போதியளவு வசதி வாய்ப்புக்கள் இன்றி துன்பப்படுவதை அறிந்து சென்னை அகதி முகாங்களில் வாழ்கின்ற எமது கிராமத்தவர்கள் இங்கு வரவிருப்பமில்லாது உள்ளனர். போரின் போது எமது கிராமத்தவர்கள் பலர் இறந்துள்ளனர். பலர் காணாமற்போயுள்ளனர்” என விஜயகுமார் மேலும் கூறினார்.

“2010ன் ஆரம்பத்தில் நாங்கள் எமது கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டோம். நாங்கள் தற்போதும் பொலித்தீனால் மூடப்பட்ட வீடுகளிலேயே வசிக்கிறோம். முதல் ஆறு மாதங்களும் அரசாங்கத்தால் எமக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இது தவிர வேறெந்த உதவிகளும் வழங்கப்படவில்லை. சில கிராமங்களில் அரசாங்கமானது வீடுகளைப் புதிதாக நிர்மாணிக்க உதவியுள்ளது. ஆனால் நாங்கள் இவ்வாறான எந்த உதவிகளையும் பெறவில்லை. இந்தக் கிராமத்தில் மலசலகூடங்கள் கூட அமைக்கப்படவில்லை. மக்கள் தமது காலைக் கடன்களை நிறைவுசெய்வதற்காக அயலிலுள்ள காடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. நாங்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறோம்” என முனியாண்டி தனது கிராம நிலை தொடர்பாக விபரிக்கிறார்.

“இதற்கும் மேலாக காட்டு யானைகள் எமது கிராமத்திற்குள் புகுந்து எமது பயிர்களையும் உடமைகளையும் அழிக்கின்றன. இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையீடு செய்த போதிலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலையே உள்ளது” என்கிறார் முனியாண்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கணேசபுரம் எனும் இடத்திலுள்ள பாடசாலைக்கு நான்கு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து செல்லவேண்டியுள்ளனர் என ஜெயந்தினி குறிப்பிட்டார்.

“இதேபோன்று நாங்கள் கோயிலை வணங்குவதற்குக் கூட கணேசபுரத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. பூவரசங்குளம் கோயில் 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. இதனால் நாங்கள் தீபாவளி போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் மட்டுமே பூவரசங்குளக் கோயிலுக்குச் செல்வோம். நாங்கள் நாளாந்தக் கூலிவேலைக்குச் சென்றே எமது வாழ்நாளைக் கழிக்கிறோம். இடிந்துபோன எமது கோயிலைக் கட்டுவதற்குக் கூட எமது கிராமத்தவர்களிடம் நிதியில்லை” என்கிறார் ஜெயந்தினி.

தமது நிலைப்பாடு தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதிலும், அவர்கள் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என சங்கரலிங்கம் தெரிவித்தார். அரசியற் தலைவர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், செட்டிக்குளம் பிரதேச செயலர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு தமது நிலைப்பாடு தொடர்பாக இக்கிராமத்தவர்கள் அறிவித்துள்ளனர். “அவர்கள் எமது துன்பங்களைக் கருத்திற் கொள்ளவில்லை. வசதிவாய்ப்புக்கள் உருவாக்கித் தரப்படும் என அவர்கள் சாதாரணமாகக் கூறுகிறார்கள். ஆனால் இதுவரையில் எவ்வித நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை” என சங்கரலிங்கம் குறிப்பிட்டார்.

நாங்கள் கன்னாதிட்டி கல்லுமலைக் கிராமத்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக செட்டிக்குளம் பிரதேச செயலர் என்.கமலதாசனிடம் வினவினோம். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த மக்களுக்கான நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். “வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்படும் போது மலசலகூடங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும். நாங்கள் இந்தக் கிராமத்தின் கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வோம். மீள்குடியேற்றப்பட்ட கிராமத்தவர்களுக்கு ஏற்கனவே மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன” என செட்டிக்குளம் பிரதேச செயலர் தெரிவித்தார்.

“நாங்கள் இந்தக் கிராமத்தை தொடர்ச்சியாக அழித்து வரும் காட்டு யானைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவில் காட்டு யானைகளின் தொல்லைகள் பொதுவாக அதிகமாகக் காணப்படுவதால் இதற்கான தீர்வை எட்டுமாறு நாம் அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்” என பிரதேச செயலர் மேலும் குறிப்பிட்டார்.

கட்டுரை வழிமூலம் : The war ended many years ago, but people still live in shacks -Ceylon Today By Madawa Kulasekara.

மொழியாக்கம் : நித்தியபாரதி

Advertisements