ராஜபக்­வின் அழைப்பும் தமிழ் தரப்பின் நிராகரிப்பும்

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது மாநாடு இலங்கை ஆட்சியாளர்களுக்கு பெரும் கவலையளிக்கும் தலையிடி நிகழ்வாக இருக்கப் போகின்றது.mahinda hitler

இது தமிழீழ விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு சுமார் நான்கரை ஆண்டின் பின் நிகழ்வதாகும். கடந்த மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கை அரசானது, இலங்கையிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தமது வரவு செலவுத் திட்டம் மீதான உரையை முடித்து வைக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த ஓர் அழைப்பில் அரசுடன் இணங்கிச் செயற்படுவதற்கு முன்வருமாறு கேட்டிருந்தார்.

அடுத்த நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது;

எமது ஒத்துழைப்பு எப்போதுமே கிடைக்கக்கூடியதாகவே இருக்கின்றது என்றார். இது இருதரப்புக்குமிடையிலான உறவுக்கு புதிய வழியயான்றை திறக்கப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த சமயம் அது கைகூட வில்லை. இரண்டு தரப்புகளுக்கும் தத்தமக்கென சொந்த அரசியல் பிடுங்குப்பாடுகள் இருப்பதே இதற்குக் காரணம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு 2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றது. பெளத்த அரசியல் சார்பில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டிருக்கும் அரசு அதனைக் குழப்பிக் கொள்ளும் விதத்தில் எந்தவித காரியத்திலும் இறங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அடுத்தவருடம், ஒன்றில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று இலங்கை சுதந்திரக் கட்சி நிறை வேற்றுக்குழுக் கூட்டத்தில் கடந்த வாரம் ஜனாதிபதி அறிவித்திருந்தமை தெரிந்ததே. மேற்கு மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அன்று தெரிவித்திருந்தார். என்றாலும் இவைகளுக்கான திட்டங்கள் சிறிதளவில் தாமதமடைய லாம் என்றும் தெரிகின்றது.

இதற்குக் காரணம் தலாவில சென். ஆன்ஸ் தேவாலயத் திருவிழா அந்தக் காலத்தில் நடைபெறவிருப்பதால் மேல் மாகாண சபைத் தேர்தல்கள் அவற்றை இடையூறுக்குள்ளாகலாம் என்று கத்தோலிக்க அமைச்சர்கள் தெரிவித்திருப்பதாகும்.

டிசெம்பர் 28 ஆம் திகதி இந்த மாகாண சபைகளைக் கலைப்பதற்கு ஜனாதிபதி முன்னர் திட்டமிட்டிருந்தார் என்று தெரிகின்றது. கத்தோலிக்க கர்தினால் அதிவண மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இதனை உறுதி செய்திருப்பதால் இந்த மாகாண சபைகளின் தேர்தல் ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என்று தெரிய வருகின்றது. அதற்குப் பொருத்தமான திகதியயான்றை நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதியின் சோதிடர் மும்முரமாக செயற்பட்டு வருவதாகத் தெரிகின்றது.

அரசின் யோசனை என்ன ? தெரிவித்த பின்னர் பேச்சு வார்த்தை

கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கூடி அரசுடன் பேச்சு வார்த்தை எதையும் வைத்துக் கொள்வதில்லையயன்று ஏகமனதாக தீர்மானித்திருக்கின்றனர். நல்லிணக்கம் தொடர்பான அரசின் ஆலோசனைகளை வெளியிடாதவரை இந்த நிலை நீடிக்கும். இதன்படி தற்பொழுது நடத்தப்பட்டுவரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளமாட்டாது.

இவைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டத்துக்குப் பின்னரான சபாநாயகரின் இரவு விருந்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி ராஜபக்­ சந்தித்துப் பேசினார். அப்பொழுது ஜனாதிபதி தமது அழைப்பை தமிழ்க் கூட்டமைப்புக்கு மீண்டும் விடுத்தார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தீவிரவாதம் தலைதூக்கியிருப்பதாகவும் எச்சரித்தார்.

சிலர் நாட்டுக்கு எதிராகப் பேசி வருகிறார்கள் என்றும் தேசத்துக்கு எதிரான செயல் களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார். இவைகள் அனுமதிக்கப்படலாகாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சம்பந்தன் எதுவித கருத்தும் வெளியிடாமல் அமைதி காத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் எந்தவித பேச்சுக்களையும் இப்போது நடத்துவதில்லையயன்ற மேற்கொண்ட தீர்மானம் காரணமாக தென்னாபிரிக்காவின் பிரபல்யமாக ஆணைக்குழுவின் மாதிரியில் இலங்கையிலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (TRC) ஒன்றை அமைப்பதற்கான எந்த வித அவசர நடவடிக்கையும் இப்போது எடுக்கப்படும் சாத்தியம் இல்லை.

அவ்வாறான ஆணைக்குழுவொன்றை இங்கே நிறுவுவதற்கான மறைமுக ராஜதந்திர முயற்சிகளில் தென்னாபிரிக்க அரசு ஈடுபட்டு வந்துள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகொப் சூமா, இலங்கை ஜனாதிபதியுடன் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் சந்தித்து தமது திட்டங்கள் பற்றி அவர்களுக்கு விளக்கியிருந்தார். இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை பிறிட்டோரியாவுக்கு அழைத்து ஆலோசனையை நடத்தவும் தென்னாபிரிக்கா விரும்பியது.

இதற்கிடையில் தென்னாபிரிக்க தேசிய சபைக்கும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கும் அடுத்த வருடம் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அதற்கு முன்னர் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் 101 ஆவது மாநாடும் நடைபெறவிருக்கின்றது. விடுதலை வீரர் மண்டேலா இறந்த பின் நடைபெறும் முதல் மாநாடு இது. இவைகளின் காரணமாக வரும் மே மாதத்துக்கு முன்னர் தென்னாபிரிக்க அனுசரணையில் எந்தவித முன்னெடுப்புகளும் இடம்பெறுவது சாத்தியமில்லை. ஆனால் ராஜதந்திர ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகின்றது.

கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கி யஸ்தர்கள் கூட்டத்தில் தலைவர் இரா.சம்பந்தன் விரிவான விளக்கம் ஒன்றை வழங்கியதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமான இன்னொன்று அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஏற்றுக் கொள்வ தில்லை என்பதாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரவியல் திணைக்களத்தினால் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகின்றது. 2009 மே மாதம் முடிவடைந்த போரின் இறுதிக் கட்டத்தில் காணாமற் போனவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மூன்றாம் நிலையிலுள்ள வர்களால் அல்லது உறவினர்களால் தாக்கல் செய்யப்படும் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். வழங்கப் படும் விண்ணப்பப் படிவங்களில் உறவினர்கள் பற்றிய விவரம் தெரிவிப்பதற்கான இடவசதி எதுவும் இல்லாமல் இருப்பது தொடர்பாக பல பேச்சாளர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். அப்படியானவர்களின் விவரங்கள் விடுபட்டுப் போகலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

அரசின் கணக்கெடுப்பை நிராகரித்ததுடன் உறுப்பினர்களையும் அதனை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள த.தே.கூட்டமைப்பு இது தொடர்பாகதன் முனைப்பாக செயலில் இறங்கவும் முடிவு செய்துள்ளது. கிராம சேவகர் பிரிவுகள் தோறும் சென்று இறந்தவர்கள் , காயமடைந்தவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் விவரங்களைச் சேகரிப்பதற்காக கட்சி தனது சொந்த முறையில் நிபுணர்களைக் கொண்ட குழுக்களை அமைக்கவும் தீர்மானித்துள்ளது. இந்த முயற்சியானது அரசின் செயற்பாட்டுக்கு எதிராக இருப்பதோடு எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பு பிரமுகர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் ஒரு தீர்மானத்தில் கிளிநொச்சியிலுள்ள இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் திருப்பு வதற்கான அரசின் திட்டத்தை எதிர்ப்ப தென்பதாகும். இந்தத் திட்டத்தை த.தே. கூட்டமைப்பு எதிர்த்தாலும் அதனை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.

உதயன்

Advertisements