சிறிலங்காவில் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம்

சிறிலங்கன் எயர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சேவை தொடக்கம், சிறிலங்காவின் தலைநகரிலுள்ள சனத்தொகை நிரம்பிய தெருக்கள் வரை, தற்போது சிறிலங்காவில் பல்வேறு மாற்றங்களைக் காணமுடியும்.President Mahinda Rajapakse family

1975ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வரும்வரை சிறிலங்காவானது பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்தது.

ஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவின் நகரங்களைத் தாண்டி அதற்கப்பால் இலங்கையர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் வேறுபட்டவை.

‘நாங்கள் எமது சொந்த நாட்டை விட தமிழ்நாட்டில் அதிக சுதந்திரத்துடன் வாழ்கிறோம்’ என சென்னையில் விமானத்திற்காகக் காத்திருந்த 51 வயதான கனகபுஸ்பம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு அகதி முகாமில் தங்கியுள்ள கனகபுஸ்பத்தின் சகோதரியான மஞ்சரியின் மகனைச் சந்தித்துவிட்டு சிறிலங்காவுக்குத் திரும்புவதற்காக கனகபுஸ்பமும் மஞ்சரியும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

‘எனது மகன் 90களில் இங்கு வந்தார். அவர் மீண்டும் சிறிலங்காவுக்குத் திரும்ப முடியும். ஆனால் அங்கே ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாகும்.

நாங்கள் எமது நிலத்தை இழந்துவிட்டோம். எம்மிடம் வருமானம் ஈட்டுவதற்கு எவ்வித வழிகளும் இல்லை’ என மஞ்சரி தெரிவித்தார்.

சிறிலங்காவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த சிறிலங்கா தமிழர்கள் கூட கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது சிங்களத்தில் பேசத் தொடங்கினர்.

தமிழ் மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்திருந்த போதிலும், பெரும்பாலான மக்கள் சிங்களத்தில் பேசவிரும்பினர்.

‘எனக்கு தமிழ் தெரியும். ஆனால் நான் தமிழில் பேசமாட்டேன். நான் ஒரு பௌத்த சிங்களவன்’ என கொழும்பைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான சுனில் தெரிவித்தார்.

சிங்களவர்கள் மத்தியில் தமிழ் எதிர்ப்பு உணர்வு நிலவுகின்றது என்பதற்கான சாட்சியமாக இது விளங்குகிறது. ‘அவர்கள் சிறிலங்கா தமிழர்களைத் தமிழ்நாட்டுக்கும் முஸ்லீம்களை மத்திய கிழக்கிற்கும் குடிபெயர வேண்டும் என விரும்புகிறார்கள்.

சிங்களவர்களைப் பொறுத்தளவில் சிறிலங்கா என்பது ஒரு சிங்கள தேசமாகும்’ என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் மாற்றான் பிள்ளை மனப்பான்மையுடன் நடாத்தப்படுகின்றனர்.

‘தமிழ்நாட்டில் நான் ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியுமா?’ என கண்டியைச் சேர்ந்த 28 வயதான குமாரன் விஜயநாதன் கேட்டார். கொழும்பிலுள்ள சிறிய விடுதி ஒன்றில் பணியாளராகவுள்ள விஜயநாதன், கணிணியில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும் அவரால் சிறிலங்காவில் சிறந்த தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

பணிபுரியும் இடங்களில் சிங்கள மொழி முதன்மைப்படுத்தப்படுவதாக பெரும்பாலான தமிழர்கள் கூறுகின்றனர்.

தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களின் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. ‘கொழும்பில் பல்வேறு பாதுகாப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களுக்குப் போதியளவு பாதுகாப்புக் காணப்படவில்லை.

தமிழர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பலர் பௌத்தத்திற்கு மாறியுள்ளனர்’ என கொழும்பில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சி சேவையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் தமது உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனுப்பும் பணத்திலேயே சிறிலங்கா தமிழர்களில் அநேகமானவர்கள் தங்கியுள்ளனர்.

இரண்டு மில்லியன் வரையான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிலுள்ள தமது உறவுகளுக்கு அனுப்புகின்றனர்.

சிறிலங்கா பங்குச் சந்தைகளில் 20 பேருக்கு ஆறு பேர் தமிழர்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்றன கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்கிறது.

‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை நாங்கள் இட்டுள்ளோம். நாட்டில் தற்போது வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது பணவீக்கமானது மிகவும் குறைவடைந்துள்ளது. வேலையற்றோர் வீதமானது 4.2 சதவீதமாகக் காணப்படுகிறது. ஒரு கிலோ அரிசியின் விலை ரூ110 லிருந்து ரூ45-55 ஆகக் குறைவடைய வைத்துள்ளோம்’ என சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை சாதாரண மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறிலங்காவில் அரிசி மற்றும் மரக்கறிகள், சமைக்கும் எண்ணை, எரிவாயு போன்றன எப்பொழுதும் மிக அதிகமாகவே காணப்படுகின்றன. கொழும்பில் தற்போது ஒருகிலோ அரிசி ரூ70 இற்கு விற்கப்படுகிறது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் விதமாக 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது அதிகாரப் பகிர்வு தொடர்பில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.

நாட்டில் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ள போதிலும், இந்த அபிவிருத்திகள் நாட்டின் மேல் மற்றும் தென் பிராந்தியங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் இங்கு சிங்கள மக்கள் வாழ்வதால் இங்கு திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவதாகவும் பெரும்பாலான மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்காவானது வெளிநாட்டு முதலீட்டுக்கான வழிகளை ஆராய்கிறது.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் மீள்அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காகவும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காகவும் இந்தியா 800 மில்லியன் டொலர்களை இலகு கடன் வட்டியில் ஏற்கனவே வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 160,000 வரையான புதியவீடுகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் இவற்றுள் மூன்றில் ஒரு வீடுகள் இன்னமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா அறிவித்துள்ளது.

அண்மையில் 500மெகாவாட் சம்பூர் மின்சக்தித் திட்ட உடன்படிக்கையில் இந்தியாவும் சிறிலங்காவும் கைச்சாத்திட்டுள்ளன.

சிறிலங்காவில் புதிய துறைமுகங்கள், எரிசக்தி ஆலை, புதிய தொடரூந்துப் பாதை போன்றவற்றை அமைப்பதற்காக சீனா, 500 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

சிறிலங்காவைப் பார்வையிடச் செல்கின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொருளாதார ரீதியில் சிறிலங்காவானது மீண்டெழுகிற போதிலும், ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் குறித்து மக்கள் விசனம் கொள்கின்றனர்.

இது தமிழ் மக்களை மேலும் தனிமைப்படுத்துகின்ற, அந்நியப்படுத்துகின்ற ஒன்றாகவே கருதப்பட முடியும் என்பதற்கு காலம் மட்டுமே பதிலளிக்கும்.

யாழ்ப்பாணம், கொழும்பில் இருந்து லக்ஸ்மி சுப்ரமணியன்
ஆங்கில வழி மூலம் – The Week
மொழியாக்கம் – நித்தியபாரதி

Advertisements