புலிகள் மீதான களங்கத்தைத் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை ?

மாற்றுவழி யுத்தத்தில் ஆயுதங்களும், யுக்திகளும் From Tigers Into Lamb

இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவை பற்றிய பன்னாட்டு விசாரணை என்று வரும் பொழுது இரு தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிடுவதை தமது நடைமுறையாக மேற்குலக இராசதந்திரிகளும், மனித உரிமைவாதிகளும் பின்பற்றி வருகின்றனர். அதாவது சிறீலங்கா அரசு மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் வாதத்தின் சாராம்சமாகும்.

ஒரு இனத்தை பூண்டோடு அழித்தொழிப்பதற்கான யுத்தத்தை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வரும் சிறீலங்கா அரசையும், தனது இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடிய ஒரு தேசிய விடுதலை இயக்கத்தையும் ஒரே தராசில் வைத்து நியாயம் தீர்ப்பதற்கான முயற்சியாக மட்டும் இதனை நாம் பார்க்க முடியாது. பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு நீதி மறுக்கப்பட்ட ஒரு தேசிய விடுதலை இயக்கத்திற்கு மேலும் அநீதி இழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகவே இதனை ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டும்.

இன்று இவ்வாறான நிலை காணப்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான களங்கத்தைத் துடைப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களில் பெரும்பாலானவை வளாவிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். தவிர தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை மேற்குலக இராசதந்திரிகளும், மனித உரிமைவாதிகளும் முன்வைக்கும் பொழுது அதனை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்வதைத் தவிர்த்து ‘நடுநிலைவாதம்’ எனும் பெயரில் எம்மவர்கள் அமைதி காப்பதும் இதற்கு இன்னொரு காரணமாகும்.

இவற்றைவிட எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு ஒப்பாக இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் – மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளில் சிறீலங்கா அரசு மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே தமது கருத்து என்ற தொனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பேச்சாளர்கள் சிலர் ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களும் இந்நிலைப்பாடு வலுவடைவதற்கு காலாக அமைகின்றது.

உதாரணமாக பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்பை 2010ஆம் ஆண்டு மனித உரிமைவாதிகள் முன்வைத்த பொழுது அதற்குப் பதலளித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பியை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே.பி.ரெஜி, பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதேபோன்று இவ்வாண்டு மாவீரர் நாளன்று பி.பி.சி தமிழோசைக்கு செவ்வி வழங்கிய பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரான கந்தையா இராஜமனோகரன் என்பவர், பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைகளில் சிறீலங்கா அரசு மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்ற அறிவித்தலை விடுத்தார்.

போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், இனவழிப்பு போன்ற சொற்பதங்களின் வரைவிலக்கணத்தைப் புரிந்து கொள்ளாது முன்வைக்கப்படும் இவ்வாறான அறிவித்தல்கள் ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குக் களங்கம் விளைவிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை நீண்ட காலப் பின்னடைவுக்கு ஆளாக்கக் கூடியவை.

மேற்குலக இராசதந்திரிகளும், மனித உரிமைவாதிகளும் வலியுறுத்துவது போன்று உண்மையில் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவற்றிற்கான விசாரணைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக நாடுகள் உட்படுத்துவதற்கு ஏதாவது அடிப்படைகள் உள்ளனவா? இதனை நாம் புரிந்து கொள்வதற்கு அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்ட இக்கோட்பாடுகளுக்கான வரைவிலக்கணத்தை இங்கு சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானது.

போர்க்குற்றம் என்ற சொற்பதம் முதன் முதலாக பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றிருந்தாலும் அதற்கான சட்டபூர்வ வரைவிலக்கணம் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பொழுது நாசிகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், இனவழிப்புக் குற்றங்கள் போன்றவற்றை விசாரணை செய்வதற்காக 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நியூரெம்பேர்க் நடுவர் மன்றத்தின் தோற்றுவாயுடனேயே நிறுவனமயப்படுத்தப்பட்டது. இதற்கான சமீபத்திய வரைவிலக்கணம் 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் சாசனத்தில் காணப்படுகின்றது. ‘றோம் ஸ்ரற்யூ’ என்று அழைக்கப்படும் இச்சாசனத்தில் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், இனவழிப்புக் குற்றம் போன்றவற்றிற்கான வரைவிலக்கணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இச்சாசனத்தின் எட்டாவது சரத்தின் இரண்டாவது உப பிரிவில் போர்க்குற்றம் என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றது:

‘1. திட்டமிட்ட கொலைகள்.

2. உயிரியல் ஆராய்ச்சிகள் உள்ளடங்கலான சித்திரவதைகளும், மனித நியதிக்கு ஒவ்வாத செய்கைகளும்.

3. திட்டமிட்ட வகையில் பெரும் துயரத்தை ஏற்படுத்துதல் அல்லது உடலுக்கும், உடல்நலத்திற்கும் பாரதூரமான தீங்கை விளைவித்தல்.

4. இராணுவத் தேவைகளால் நியாயப்படுத்த முடியாத சட்டவிரோதமானதும், கொடூரமானதுமான பெருமெடுப்பிலான உடமை அழிப்பும், உடமை சுவீகரிப்பும்.

5. போர்க் கைதி ஒருவரை அல்லது பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஒருவரை எதிரணியின் ஆயுதப் படையில் பணியாற்ற நிர்ப்பந்தித்தல்.

6. போர்க் கைதி ஒருவரின் அல்லது பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் நீதியானதும், வழமையானதுமான நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் உரிமையை திட்டமிட்டு மறுதலித்தல்.

7. சட்டவிரோதமான நாடுகடத்தல்கள் அல்லது சட்டவிரோதமான தடுப்புக் காவல்கள்.

8. பணயக் கைதிகளாகப் பிடித்தல்.’

இவை தவிர பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் இலக்குகள் அல்லது பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுதல், மக்களின் இருப்பிடங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்துதல், பொதுமக்களை பட்டினி போடுதல், பாலியல் வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம் போன்றவற்றில் ஈடுபடுத்துதல் அல்லது திட்டமிட்டுப் பெண்களைப் பலவந்தமாக கர்ப்பிணிகள் ஆக்குதல், விபச்சாரத்தில் ஈடுபட வைத்தல், கருக்கலைத்தல், ஆக்கிரமிக்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்களைப் பலவந்தமாக இன்னொரு பகுதிக்கு இடம்பெயர நிர்ப்பந்தித்தல், மருத்துவ மையங்களைத் தாக்குதல், மோதல் தவிர்ப்பு வலயங்களில் தாக்குதல்களில் ஈடுபடுதல், மனிதநேய அல்லது அமைதி காப்பு அணிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுதல், சரணடைந்த அல்லது நிராயுதபாணிகளான போர் வீரர்களைக் கொலை செய்தல், காயப்படுத்துதல், அல்லது எதிராளி வீரர்களை ஏமாற்றிக் கொலை செய்தல், வெள்ளைக் கொடியையும், எதிரியின் சீருடைகள் – சின்னங்கள் போன்றவற்றையும் தவறாகக் கையாளுதல், போர்த் தேவைகளுக்காக அல்லாது வேறு நோக்கங்களுடன் எதிரியின் உடமைகளை சுவீகரித்தல், எந்தவிதமான விட்டுக் கொடுப்பிற்கும் இடமளிக்க மறுத்தல், பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை தேசிய ஆயுதப் படைகளில் பலவந்தமாக அல்லது சுயவிருப்பின் பேரில் இணைத்தல் அல்லது மோதல்களில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் போன்வற்றையும் இச்சரத்து போர்க்குற்றங்களாக வரையறுக்கின்றது.

இதேபோன்று கொலைகள், ஆட்களை அழித்தல், அடிமைகளாக்குதல், பலவந்தமாக நாடுகடத்துதல் அல்லது வேறு இடத்திற்கு விரட்டுதல், பன்னாட்டு சட்டங்களுக்கு முரணாக ஆட்களைக் கைது செய்தல் அல்லது அவர்களின் சுதந்திரத்தை மறுதலித்தல், சித்திரவதைகள் அல்லது பாலியல் குற்றச்செயல்களை மேற்கொள்ளுதல், இன, மத, பால், பண்பாட்டு, தேசிய அடிப்படையில் அல்லது அரசியல் கருத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்தல், ஆட்களை காணாமல் போகச்செய்தல், நிறவெறியின் அடிப்படையில் குற்றச்செயல்களை மேற்கொள்ளுதல், மனித நியதிக்கு விரோதமான குற்றச்செயல்கள் போன்றவற்றை மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களாக இச்சாசனத்தின் ஏழாவது சரத்து வரையறுக்கின்றது.

தவிர தேசிய, இன, நிற, மத அடிப்படையிலான ஒரு மக்கள் சமூகத்தை முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் நோக்கத்துடன் அவர்களின் ஒரு பகுதியினரைக் கொலை செய்தல், உடல்ரீதியாக அல்லது மனோரீதியாக அவர்களுக்குப் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துதல், பிறப்புக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், சிறுவர்களை இன்னொரு இனத்திற்கு இனமாற்றம் செய்தல், ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் வகையிலான வாழ்வியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்தல் போன்றவற்றை இனவழிப்பு நடவடிக்கைகளாக இச்சாசனத்தின் ஆறாவது சரத்து வரையறுக்கின்றது.

இவ்வாறு றோம் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்தும் சிறீலங்கா அரசின் விடயத்தில் முற்றிலும் பொருந்தக் கூடியவை. இறுதிப் போரில் மட்டுமன்றி கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள அனைத்துக் கொடூரங்களும் சாராம்சத்தில் இச்சானம் வரையறுத்துள்ள குற்றச்செயல்களுக்கான வரைவிலக்கணத்திற்குள் உள்ளடங்குபவை. எனினும் 2002ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்த குற்றங்களை விசாரணை செய்யும் நியாயாதிக்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கொண்டிருக்காததால் இறுதிப் போரில் (2006ஆம் ஆண்டு நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததில் இருந்து) சிறீலங்கா அரசு இழைத்த குற்றச்செயல்கள் மட்டுமே பன்னாட்டு சட்டங்களின் கீழ் இச்சாசனத்திற்கு உட்பட்டவையாக அமைகின்றன.

அதேநேரத்தில் இச்சாசனத்தின் விதிகள் எவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்தில் எந்த விதத்திலும் பொருத்தமற்றவை. பொதுமக்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தார்கள், சிறுவர்களை ஆயுதப் படைகளில் இணைத்தார்கள், மனிதவெடிகுண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களைத் தவிர வேறெந்த குற்றச்சாட்டுக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்குலக நாடுகள் முன்வைப்பதில்லை. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே சாராம்சத்தில் அடிப்படையற்றவை.

வன்னியில் வாழ்ந்த மக்கள் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக இருக்கவில்லை என்பது ஒவ்வொரு தமிழரும் அறிந்த உண்மை. வன்னி மக்களில் கணிசமானவர்கள் மாவீரர் – போராளி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வகையில் வன்னி மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஒன்றித்தவர்களாவே இருந்தார்கள். இவ்வாறு மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கிய வன்னி மண்ணில் மக்களை மனிதக்கேடயங்களாக – அதாவது பணயக் கைதிகளாக – தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்தார்கள் என்று குற்றம் சுமத்துவது நகைப்புக்கிடமானது. இது விடயத்தில் வினைத்திறனுடனும், மண்டியிடாத உறுதியுடனும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இக் குற்றச்சாட்டைக் கருத்தியல் ரீதியாக நிச்சயம் முறியடிக்கலாம்.

இது போன்றதே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஏனைய குற்றச்சாட்டுக்களும். ஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த ஆரம்ப காலப் பகுதிகளிலும், 1980களிலும், 1990களின் முதற்கூறிலும் பதினேழு வயதுக்கு உட்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது உண்மைதான். ஏன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூட ஓர் சிறுவனாகவே ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

தவிர அக்காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்கள் பலர் சிறீலங்கா படைகளின் தாக்குதல்களில் பெற்றோர்களை இழந்து -அதிலும் தென்தமிழீழத்தில் – தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். 1990களில் இவர்களைப் பராமரிப்பதற்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளால் படைத்துறைப் பள்ளியன்றுகூட ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் 1998ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி ஒலாரா ஒட்டுணு அவர்கள் வன்னி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை சந்தித்ததை தொடர்ந்து பதினேழு வயதுக்கு உட்பட்டவர்களை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதில்லை என்ற நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளால் பின்பற்றப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதில் காலத்திற்குக் காலம் சிக்கல்கள் ஏற்பட்டாலும்கூட, இதுவிடயத்தில் கூடிய அளவு கவனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் செலுத்தி வந்தார். இதற்கென்று தமிழீழ அரசியல்துறையின் கீழ் சிறப்புப் பிரிவொன்று கூட உருவாக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தவிர றோம் சாசனத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட 2002ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியில் பதினைந்து அகவைக்கு உட்பட்ட சிறுவர்களை ஆயுத மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தியதாக – அதிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடிப் பணிப்பின் கீழ் – எவ்வித பதிவுகளும் இல்லை. இந்த வகையில் சிறுவர்களை ஆயுத மோதல்களில் பயன்படுத்திய போர்க்குற்றச்சாட்டிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளை உட்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற விடயம்.

இது போன்றதே தமிழீழ விடுதலைப் புலிகள் மீது முன்வைக்கப்படும் மனித வெடிகுண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை இலக்குவைத்து மனித வெடிகுண்டுத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்தியது கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டதாக சிறீலங்கா அரசால் குற்றம் சுமத்தப்படும் சில தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்திருந்தாலும்கூட இவை அனைத்தும் சிங்களப் படைத் தளபதிகளையும், அமைச்சர்களையும் இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தவிர இத்தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்தியதாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவையும் சிறீலங்கா அரசிடம் இல்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை வலுவான – வினைத்திறன் மிக்க திட்டமிட்ட பரப்புரை நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் முறியடிக்க முடியும். பன்னாட்டு விசாரணை ஆரம்பிக்கும் வரை இதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. இதற்கான நடவடிக்கைகளை இப்பொழுதே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஆரம்பிக்கலாம்.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, சிறீலங்கா அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பேச்சாளர்கள் அறிக்கை விடுவது அநாவசியமானது மட்டுமன்றி அரசியல் தற்கொலைக்கும் ஒப்பானது. எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது விடுதலை இயக்கத்தை அனைத்துலக அரங்கில் போர்க்குற்றச் சந்தேக நபராக நாமே முன்னிறுத்திக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முற்படுவது எமது தலையில் நாமே மண்ணை வாரிக் கொட்டும் செய்கையாகவே அமையும். இதற்கான முயற்சிகளை வேண்டுமானால் சிங்களம் முன்னெடுக்கட்டும். அல்லது அதற்கு முண்டுகொடுக்கும் நாடுகள் முன்னெடுக்கட்டும். ஆனால் இவற்றை நாம் தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டுமே தவிர இவற்றுக்கு ஒருபொழுது துணைபோக முடியாது. இவ்வாறு துணைபோவது ஒரு பொழுதும் அரசியல் சாணக்கியம் ஆகாது.

அரசியல் என்பது மாற்று வழிகளால் முன்னெடுக்கப்படும் யுத்தம் என்கிறார் பிரெஞ்சு தத்துவமேதை மிசேல் பூக்கோ. அப்படிப்பட்ட யுத்தத்தை ஆலயங்களில் பிரசங்கம் செய்வது போன்று முன்னெடுக்க முடியாது. நாம் நிகழ்த்தும் இந்த யுத்தத்தில் பன்னாட்டு சட்டங்களும், அரசறிவியல் கோட்பாடுகளுமே எமது ஆயுதங்கள். இவற்றைக் கையாண்டே எமது யுக்திகளையும், வியூகங்களையும் நாம் வகுக்க வேண்டும். இதனைப் புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் செயற்படுவது இன்றைய காலத்தின் தேவையாகும்.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு

Advertisements