இந்திய – சிறீலங்கா புலனாய்வு அமைப்புக்களின் பிடியில் ‘விகடன்’ ?

தமிழீழ விடுதலை என்பது களம், புலம், தமிழகம் என்று மூன்று தளங்களில் தங்கியிருக்கும் ஒரு அம்சம். அதுவும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்களுக்கு பிறகு தமிழகம்தான் ஏனைய இரு தளங்களுடனும் ஒப்பிடும்பொழுது பெரும் சுமையை தாங்கி நிற்கிறது. சட்டமன்ற தீர்மானங்கள், மாணவர் – மக்கள் போராட்டங்கள் என்று தமிழீழ விடுதலை சார்ந்து பிராந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்தளவு சாதனைகளை நிகழ்த்தியதும் –நிகழ்த்திக்கொண்டிருப்பதும் தமிழகம்தான்.vikatan fake story

களத்தில் எமது போரட்டத்தை முறியடித்த எதிரிகள் மே 18 இற்கு பிறகு தமிழகத்தின் கனதியை உணர்ந்து அதை உடைக்கவும் – போராட்டங்களை நீர்த்துப்போக செய்யவும் வெளிப்படையாகவும் , திரைமறைவிலும் பல புலனாய்வு சதிகளை முடுக்கிவிட்டிருந்தார்கள். ஆனால் எதுவுமே எடுபடவில்லை. படிப்படியாக முகிழ்த்த தமிழக ஆதரவு ஒருகட்டத்தில் மாணவர் புரட்சியாக வெடித்தது.

விளைவாக ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தமிழகம் உருவெடுத்தது. எதிரிகள் மட்டுமல்ல நாமே எதிர்பார்க்காத திருப்பம் இது. பலரது அரசியல் மதிப்பீடுகளையும் கணிப்பீடுகளையும் பொய்யாக்கி ‘ஐந்தாம் கட்ட ஈழப்போர்’ என்று எதிரிகள் சிலரே முணுமுணுக்கும் அளவிற்கு மாணவர் போராட்டம் மாறியது.

தொடரும் சிறுசிறு போரட்டங்கள் ஒரு கூட்டு விளைவாக உருத்திரண்டுகொண்டிருக்கிறது. எனவே தொடர்ந்து தமிழகத்தை உடைக்க எதிரிகள் களமிறக்கப்பட்டுகொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

அதில் விகடன் குழுமமும் ஒன்றா என்ற சந்தேகம் எமக்கு நீண்டகாலமாகவே உள்ளது. அதை உறுதிப்படுத்துவதுபோல் கடந்தவார இதழில் பல அம்சங்களைக் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த வருடம் ஒரு கற்பனைப்போராளியை உருவாக்கி அவரது நேர்காணல் என்ற போர்வையில் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலை மிகவும் கச்சிதமாகக் காவியது விகடன். ஆனால் ஒன்றுதிரண்டு எதிர்த்து பல தளங்களிலும் அது ஒரு கற்பனை பேட்டி என்று நிறுவப்பட்டதும் விகடன் மவுனமாகிவிட்டது. அந்த கற்பனை பேட்டியினூடாக விகடன் செய்ய முற்பட்டது தமிழகத்தையும் ஈழத்தையும் துண்டாடும் எதிரிகளின் நாசகார நிகழ்ச்சி நிரலைத்தான்..

ஆனால் அதன் பின்தான் மாணவர் போராட்டம் வெடித்து மாணவர்கள் விகடனின் முகத்தில் ஓங்கி அறைந்தது வரலாறு.

எனவே வன்மம் தீர்;க்கவும் தொடர்ந்து தமிழக போராட்டங்களை நீர்த்து போகச் செய்யவும் தற்போது வரலாற்று புரட்டுகளில் இறங்கியிருக்கிறது விகடன்.

வருடத்தின் முக்கிய பிரச்சினைகளை – நிகழ்வுகளை பதிவு செய்யப் புறப்பட்டிருக்கும் விகடன் இந்த வருடத்தின் மட்டுமல்ல தமிழக வரலாற்றின் ஒரு மைல்கல்லாக விளங்கக்கூடிய ஒரு நிகழ்வை மிகவும் நுட்பமாக சுருக்கிவிட்டிருக்கிறது. அதுகூட பரவாயில்லை.
தமிழக அரசியல்வாதிகள் சிலரால் தமக்கு சார்பாக திரிக்கப்பட்டிருந்த ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருந்த அமெரிக்க தீர்மானத்தை மாணவர்கள் எதிர்த்தும் – எரித்தும் நடாத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தை ‘இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமாறு மாணவர்கள் போராடினார்கள’; என்று வரலாற்றுபுரட்டில் இறங்கியிருக்கிறது.

முழித்திருக்க முழி தோண்டுவது என்பது இதுதான். என்ன ஒரு அயோக்கியத்தனம்? ஒரு கட்டுரையாளர் தவறாக ஒரு பதிவை செய்யலாம். ஆனால் வரலாற்றின் நினைவுகளில் நிற்கப்போகிற ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் ஒரு சமகாலவரலாற்றை திரிப்பது தவறல்ல, மோசடிதானே? ஏன் இந்த இழிநிலை விகடனுக்கு? யாருக்காக? ஏன்?

இது திட்டமிடப்பட்ட ஒரு சதிதான் என்பதற்கு இன்னொரு உதாரணம். தமிழகப்போராட்டத்தை இன்னொரு ஈழத்து எழுத்தாளர் என்பவரைக்கொண்டு வசைபாடி வைத்திருப்பதுதான்.

என்ன அளவுகோலின்படி அந்த எழுத்தராளரை அந்த பத்தியை எழுத விகடன் ஆசிரியர் குழு தேர்வுசெய்தது என்று தெரியவில்லை:. அவர் மே 18 இற்கு பிறகு ‘புலி அடிக்க’ கிளம்பியிருக்கிறவர். சமுகவலைத்தளங்களிலும் படைப்புகளினூடாகவும் களம்,புலம்,தமிழக போராட்டங்களை மிகவும் மலினமாகக் கொச்சைப்படுத்திவருபவர்.

சோபாசக்தி என்ற புலயெதிர்ப்பு எழுத்தாளர் எழுதும்போது ‘தேறாது’ என்று கசக்கி எறிந்த குப்பைகளை பொறுக்கி எடுத்துவந்து அதை நாவலாக மாற்றியவர். இவர் தனது நாவலை விளம்பரப்படுத்த பண்ணிய கூத்துக்களை எழுதினால் அதை ஒரு தனிப்புத்தமாகப் போடலாம். அது நமக்கு தேவையில்லை.

போதாததற்கு வருடந்தோறும் இனப்படுகொலை மண்ணிற்கு புலத்திலிருந்து சுற்றுலா சென்று வருபவர். தாயக மக்களின் மனநிலையிலிருந்து தமிழக போராட்டம் குறித்து நடுநிலமையுடன் கருத்து சொல்லக்கூடிய எந்த அருகதையும் அற்ற ஒருவரை வைத்து ‘ஈழப்போராட்டம் தமிழக கட்சிகளுக்கு கிடைத்த ஊறுகாய்’ என்று எழுத வைத்திருக்கிறது விகடன். நல்ல ஊடக அறம்.

பிராந்திய – பூகோள அறிவு குறித்த முதிர்ச்சியான ஒருவரிடம் தமிழகப்போராட்டம் குறித்த கருத்தை வாங்கி வெளியிடுவதே பொருத்தமும் அறமும் ஆகும். ஆனால் சேறடிப்பு என்று முடிவவானவுடன் ‘புனைவு’ எழுத்தாளரே போதும் என்று விகடன் முடிவெடுத்துவிட்டது போலும். விளைவு அவர் தன்பங்கிற்கு புனைந்திருக்கிறார்.

புலத்திலிருந்து நேர்மையாக கருத்து சொல்லும் யாரும் சிறீலங்காவிற்குள் நுழையமுடியாது. சமகாலத்தில் கவிஞர் ஜெயபாலன், மகா பிரபாகரன் கதைகளை அறிவோம். ஆனால் இவர் சிறீலங்கா போய் படம் பிடித்து பாட்டும் பாடிக்கொண்டு வருகிறார். இந்த மர்மத்தை அவர்தான் விளக்க வேண்டும்.

எனவே வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அரசியல் நிகழ்வு குறித்து கருத்து சொல்லும் ஒருவரை தேர்வு செய்யும்போது பக்கச்சார்பற்ற ஒருவரை தெரிவு செய்வதே அறம். எதிர்க்கருத்தாக இருந்தாலும் அந்த மண்ணிலிருந்து ஒருவரை தெரிவுசெய்திருந்தாலாவது ஒரளவு நேர்மையாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கு எல்லாம் தலைகீழ். இதிலிருந்து விகடனின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது.

அடுத்து மதிப்புக்குரிய எழுத்தாளர் செயப்பிரகாசம் அவர்களை கொண்டு எழுதுவித்து மாணவர் போராட்டம் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது விகடன். அதிலும் நிறைய தரவுப் பிழைகள் – தவறுகள். இதுவும் விகடனின் சதியா அல்லது செயப்பிரகாசம் அவர்களின் தவறா என்பதை சம்பந்தப்பட்டவர்களே விளக்க வேண்டும்.

தமிழக வெகுசனப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் விகடன். இதை யாரும் மறுக்க முடியாது. எமது இந்த எதிர்வினைக்கு காரணமும் அதுதான்.

எனவே வரலாற்றை திரிக்காமல் மக்கள் – மாணவர் போராட்டங்கள் குறித்த பொய்களை புனைவுகளை திரிக்காமல் நேர்மையுடனும் அறத்துடனும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தோடு விகடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் பெரு விருப்பமாகும்.

ஈழம்ஈநியூஸ்.

Advertisements